Post No. 15,328
Date uploaded in London – 1 January 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆண்களிடம் பெண்கள் சேட்டை செய்தால் மூக்கினை அறுத்து விடுவார்கள் ; எடுத்துக் காட்டு- சூர்ப்பனகை கதை.. பெண்களிடம் ஆண்கள் , சேட்டை செய்தால் உடம்பு முழுதும் அசிங்கமான குறிகளை பச்சை குத்தி விடுவார்கள்; உதாரணம் – இந்திரன் உடம்பில் ஆயிரம் கண்கள் – கண்ணாயிரம் .
பொதுவான சேட்டைகளுக்கு தலையைச் சிரைத்து மொட்டையடித்து எண்ணெய் தடவி கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுத்தை மீது வைத்து ஊர்வலம் விடுவார்கள்; எடுத்துக்காட்டு – சேர மன்னன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், யவனர்களைப்பிடித்து மொட்டையடித்து கைகளைப் பின்னால் கட்டி எண்ணெய் தடவினான் ; இது பதிற்றுப்பத்து என்னும் சங்க நூலில் உளது
****
3.9.3 உருப்பிணி நங்கையைத் தேர்
உருப்பிணி நங்கையைத் தேர் ஏற்றிக் கொண்டு,
விருப்புற்று அங்கே விரைந்து எதிர் வந்து,
செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச்
சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப்பற
தேவகி சிங்கத்தைப் பாடிப்பற.
பெரியாழ்வார் திருமொழி 3.9.3
ருக்மிணிப்பிராட்டியை தேரிலே ஏற்றிக்கொண்டு போகும்பொது, எதிர் நின்ற ருக்மனுடைய வீரியம் அழியும்படி தலையைச் சிரைத்து விட்டவனுடைய வன்மையை பாடிப்பற, தேவகி வயிற்றில் பிறந்து சிங்கம் போன்ற வீரம் உடையவனை பாடிப்பற
விதர்ப்ப தேசத்தில் குண்டினி என்கிற பட்டணத்தில் பீஷ்மகன் என்கிற ஒரு அரசனுக்கு ருக்மன் முதலிய ஐந்து பிள்ளைகளும் ருக்மிணி என்கிற ஒரு பெண்ணும் இருந்தனர். அந்த ருக்மிணி ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அவதாரம்; அவள் திருமண வயது வந்தவுடன், கண்ணன் அங்கு சென்று இந்த பெண்ணை எனக்குத் திருமணம் செய்து கொடுங்கள் என்று கேட்டான்; ருக்மன் என்ற அவளது சகோதரன் அவளைச் சிசுபாலனுக்குக் கொடுக்க நினைத்துக் கண்ணனுக்குக் கொடுக்க முடியாதென்று சொன்னான். சிலநாள் கழிந்தபின் ருக்மிணியின் கல்யாணத்துக்காக சுயம்வரம் என்று முடிவு செய்து எல்லா தேசத்து அரசர்களையும் வரவழைத்தான்.
இதன் இடையில் ருக்மிணி “தன்னை எவ்வகையினாலும் மணந்து செல்லும்படி கண்ணனிடத்து ஒர் அந்தணனைத் தூது விட்டிருந்தாள். கண்ணனும் அப்படியே பலராமன் முதலியோரைக் கூட்டிக் கொண்டு அந்த பட்டணத்திற்கு எழுந்தருளினான். கல்யாண முஹுர்த்த தினத்துக்கு முதல்நாள் ருக்மிணியைத் எடுத்துத் தேரில் ஏற்றிக் கொண்டு ஊர் நோக்கிப் புறப்பட்டான். சிசுபாலன் முதலிய சில அரசர்கள் கண்ணனை எதிர்த்துப் போர் செய்ய முயல பலராமனும் தானுமாக அவர்களை அடக்கி வென்று ஓட்டி விட்டான்.
பின்பு ருக்மிணியின் தமையனான ருக்மன் மிகவும் ஆத்திரப்பட்டு கண்ணனைக் கொல்ல வந்தபோது, அவனைக் கண்ணன் ருக்மினியின் வேண்டுதலின் படி உயிர்க் கொலை செய்யாமல் அவனது மீசையையும், குடுமியையும் சிரைத்து அவமானப் படுத்திவிட்டான்

My Old Article
மொட்டையும் குடுமியும்
எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண். 835 தேதி 12-02-14
ஆதி காலத்தில் இந்து, புத்த, சமண மதத்தில் மிகுந்த ஈடுபாடுடையோர் வெளிச் சின்னங்கள் மூலம் அதைக் காட்டினர். காவி உடை, மஞ்சள் உடை, வெள்ளாடை இப்படி வெளிப்புறத்திலும் நெற்றியில் விபூதி, குங்குமம், சந்தனம், கோபி, நாமம் இப்படிப் பல சின்னங்களாலும் யார் என்பதைக் காட்டினர். இது போலவே தலை முடி விஷயத்திலும் பல பாணிகள் (ஸ்டைல்) நிலவின. முன் குடுமி, பின் குடுமி, மொட்டை (பௌத்தர்), மயிர் ஒவ்வொன்றாக பறித்து மொட்டையாகுதல் (சமணர்) என்று பல வகைகள் இருந்தன. முற்றிலும் உணர்ந்த ஞானிகள் இந்த வெளி வேஷத்தைப் பொருட்படுத்தாமல் தத்துவங்களில் மட்டுமே நம்பிக்கை வைத்தனர். ஏனெனில் காலப்போக்கில் இது எல்லாம் ஏமாற்றும் பேர்வழிகளுக்கு வசதியாகப் போயின.
வள்ளுவர், ஆதிசங்கரர், புத்தர், திருமூலர் ஆகிய எல்லோரும் இதில் ஒருமித்த கருத்து வைத்திருப்பது வியப்பளிக்கிறது.இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு காலகட்டங்களில், இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வசித்தவர்கள்.
***
1400 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட மஹேந்திர பல்லவ மன்னன் சம்ஸ்கிருதத்தில் ஒரு நகைச்சுவை நாடகம் எழுதி இருக்கிறான். மத்தவிலாசப்ரஹசனம் என்ற அந்த நாடகத்தில் இந்து, புத்த, ஜைன (சமண) மத போலி சந்யாசிகளைக் கிண்டல் செய்துள்ளான். சங்க்ரரின் பஜகோவிந்தத்தில் சொல்லும் விஷயம், மஹேந்திர வர்மன் நேரில் கண்ட காட்சியுடன் இணைகிறது!
முடி விஷயத்தில் பல வகையான ‘ஸ்டைல்கள்’ வேத காலம் முதலே இருந்திருக்கின்றன. ஏதோ இந்தக் காலத்தில் ரவிவர்மா வரைந்த படங்களில்தான் சிவனுக்கு மீசை, விஷ்ணுவுக்கு மீசை இல்லை என்று நினைத்துவிட வேண்டாம். சிவபெருமானை வருணிக்கும் யஜூர் வேத ருத்ரம்/சமகத்தில் சிவனை மொட்டையன் என்றும் நீண்ட சடையன் என்றும் போற்றுகின்றனர்.
நீண்ட சடையன் (கபர்தீன்)
வ்யுப்தகேச (முண்டம்/ மழித்த) – ருத்ரம் (யஜூர் வேதம்)
வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை என்ற தமிழ்ப் பழமொழி இந்த ருத்ர மந்திரத்தில் இருந்துதான் வந்ததோ என்னவோ!
***
வள்ளுவர் கூறுகிறார்:
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்துவிடின் – (குறள் 280)
பொருள்: தவம் செய்வாருக்கு மொட்டை அடித்துக் கொள்வதும் சடை முடி வளர்த்தலும் தேவை இல்லை உலகத்தார் எதையெல்லாம் பழிக்கிறார்களோ அத்தகைய தீய வழக்கங்களை விட்டாலே போதும்.
***
சங்கரரும் சாடுகிறார்
தத்துவ வித்தகர் ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் என்ற அருமையான துதிப்பாடலில் இதை அழகாக வருணிக்கிறார். இந்தப் பாட்டை அவரது சீடர் தோடகர் பாடியதாகச் சொல்லுவர்.:
“ஜடிலோ முண்டி லுஞ்சித கேச :
காஷாயாம்(அ)ம்பர பஹுக்ருத வேஷ :
பஸ்யன் அபி ச ந பஸ்யதி மூட:
ஹ்யுதரநிமித்தம் பஹுக்ருத வேஷ :”
—பஜகோவிந்தம்
( : இவ்வாறு இரண்டு புள்ளி இருக்கும் இடத்தில் ஹ என்று உச்சரிக்கவும்.எ.கா. வேஷஹ, கேசஹ, மூடஹ).
பொருள்: ஒருவன் சடை முடியுடன் இருக்கிறான். மற்றொருவனோ மொட்டைத் தலையன். இன்னும் ஒருவன் ஒவ்வொரு முடியாகப் பிடுங்கிவிட்டான். இன்னொருவன் காவி உடையில் வலம் வருகிறான். இந்த மூடர்கள் கண் இருந்தும் குருடர்கள். இந்த வெளி வேஷம் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்குத்தான்.
எவ்வளவு பெரிய உண்மையை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார் தோடகர்.
***
திருமூலரின் திருமந்திரம்
நூலும் சிகையும் நுவலில் பிரமமோ
நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலது அந்தணர் காணும் நுவலிலே
பூணூலும் உச்சுக்குடுமியும் தரித்திருக்கும் எல்லா பிராமணர்களையும் பிரம்மத்தை அறிந்தவர்கள் என்று எண்ண முடியுமா? நூல் என்பது வெறும் பருத்தி நூல்தானே, சிகை என்பது வெறும் முடிதானே. உண்மையில் நூல் என்பது வேதாந்த நூலறிவு. நுண் சிகை ஞானம் என்பது இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய 3 நாடிகளின் தன்மை அறிந்து, பிரம நாடி சிறக்க தலை உச்சியில் ஞானம் உண்டாவதே. இதுவே அந்தணர் கடைப்பிடிக்க வேண்டிய முறை—என்பார் திருமூலர்.
புத்தர் பேருரை
நீண்ட முடியும் சிகையும் வைத்திருப்பதாலோ, பிராமண குடும்பத்தில் பிறந்ததாலோ ஒருவன் பிராமணன் ஆகிவிடமாட்டான். எவனிடத்தில் சத்யமும் புனிதமும் இருக்கிறதோ அவனே பிராமணன். அவன் ஆனந்தக் கடலில் மிதப்பான் என்று தம்மபதத்தில் (393) புத்தபிரானும் கூறுகிறார்.
புத்தரும் தனது மதத்தினரின் வெளி வேஷங்களை அபோழுதே கண்டித்துள்ளார். அவரது மதம் எப்படித் தேய்ந்துபோகும் என்பதை அவர் பிரதம சீடரான ஆனந்தனுடன் நடத்திய சம்பாஷணையில் கூறினார். அவர் இறந்தவுடன் நடந்த மூன்று மஹா நாடுகளில் வாதப் பிரதிவாதங்கள் விண்ணைப் பிளந்தன. பெண்களைக் கட்டாயம் புத்த மதத்தில் சேர்க்கவேண்டும் என்று ஆனந்தன் மன்றாடியபோது, 1000 ஆண்டுகள் நிலைக்கக்கூடிய என்னுடைய மதம், பெண்களை (புத்த பிட்சுணிகளாக) அனுமதித்தால், 500 ஆண்டுகளே இருக்கும் என்றார் புத்த பிரான்
—Subham—
Tags- தலை, சிரைக்கும், தண்டனைகள், ஆழ்வார் தரும் சுவையான செய்தி


.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)











