
Compiled by London swaminathan
Article No.1840 Date: 1 May 2015
Uploaded at London time: 18-26
தமிழில் மேலும் ஒரு அதிசயம்
எதுகைத் தமிழ் அகராதி
தமிழ் இலக்கியத்தில் எவ்வளவோ அதிசயங்கள் உள்ளன. இது வரை எனது ஆயிரத்துக்கும் மேலான கட்டுரைகளில் அவைகளைக் கொடுத்து வந்துள்ளேன். லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ள ஒவ்வொரு தமிழ் புத்தகமாகப் புரட்டிப் பார்த்து வருகையில் ஊத்தங்கரை பி ஆர் அப்பாய் செட்டியார் 1938 ஆம் ஆண்டில் வெளியிட்ட எதுகை அகராதியைக் கண்டேன். அது ஒரு அற்புதமான நூலாகும். தர்மபுரி ஸ்ரீ ராமலிங்கா பிரிண்டிங் ஒர்க்ஸில் அது அச்சிடப்பது. (தற்பொழுது சில பதிப்பகங்கள் இதை மறுபதிப்பு செய்துள்ளன).
“பல அகராதிகள் ஏற்கனவே இருந்தபோதிலும் தமிழ்க் கலைக்கு என்னாலியன்ற தொண்டாற்ற வெண்ணங்கொண்டு நூதன முறையில் அகர முதலாகவும் கடையெழுத்தொன்றியும் வார்த்தை களைத் தொகுத்து எதுகை அகராதி என்ற பெயரால் இதனை வெளியிடலாயினேன்” – என்று செட்டியார் முன்னுரையில் எழுதியுள்ளார்.
தமிழில் ஓரெழுத்துக்கு உள்ள அர்த்தங்களைப் படிக்கையில் வியப்பு மேலிடும். ஆனால் முன் காலத்தவர் தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் இரு விழிகள் போல எண்ணியதால், செட்டியார் தமிழ் சொற்கள் போலவே சம்ஸ்கிருதச் சொற்களையும் அகராதியில் சேர்த்துக் கொடுத்துள்ளார். 70 க்கும் மேல் ஓரெழுத்துக்கள் அகராதியில் உள்ளன.
எல்லாப் பொருட்களையும் கொடுக்காமல் ஒவ்வொரு எழுத்துக்கும் சில பொருளைத் தருகிறேன்.

அ
தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்து, சிவன், விஷ்ணு, பிரமன், பெயர், வினை முற்று விகுதி, சுட்டிடைச் சொல், அன்மை, இன்மை, மறுதலை, குறைவு, சம்மதி, சுட்டு, தடை, பிறிது, வியப்பு, ஆறாம் வேற்றுமை யுருப்பிடைச் சொல், சாரியை இடைச் சொல், சுக்கு, திப்பிலி, எட்டு
க
ஆகாயம், பிரமன், தலை, ஓரெழுத்து, அரசன், ஆன்மா, உடல், கந்தருவ சாதி, காமன், காற்று, சூரியன், செல்வன், திருமால், தீ, தொனி, நமன் மயில், மணம், விநாயகன், ஒன்று எண்ணும் எண், சரீரம், சுகம், நீர், நனைத்தல், பொருத்து, மேகம், விட்டுணு, மயிர், வியாதி, வாயு, பட்சி
ங
குருணிக்குறி
ச
கூடிய (உதாரணம்- சோமாக்கந்தர், சோமன்)

பிரான்ஸ் வெளியிட்ட பிரம்மா தபால் தலை
த
குபேரன், பிரமன்
ந
இன்மை, அன்மை, எதிர்மறை (உதாரணம்- அரூபம், அத்துவிதம், அதன்மம்)
ப
இருபதிலோர் பாகத்தைக் காட்டும் ஓர் கீழ்வாய் இலக்கக் குறி, ஆற்று, சாபம், காவல் செய்தல், குடித்தல்
ம
இயமன் இறந்தகால இடை நிலை (உ.ம்.-என்மர், ஒரு மந்திரம், காலம், சந்திரன், சிவன், நஞ்சு, நேரம், பிரமன், விட்டுணு
ய
இறந்தகால இடை நிலை (உ.ம்.போயது)
ய
இறந்தகால இடை நிலை
ஆ
ஆச்சாமரம், இசை, இரக்கம், பெண் பசு, வினா விடைச் சொல், அந்தம், ஆக என்பதன் குறுக்கம்,இச்சை, ஆத்மா,வியப்பு, விலங்கின் பெண் பொது, ஆவது, பெண் எருமை
கா
அசைச் சொல், காத்தல் , காவடி, சோலை, துலை, பூந்தோட்டம், வருத்தம், வலி, பாதுகாப்பு, நிறை, சரசுவதி, கள், காலடித் தண்டு
சா
சாதல், சாவெனல், பேய், மரணம், தேயிலைச் செடி, இற, காய்ந்து போ
ஞா
கட்டு, பொருந்து
தா
கேடு, தாண்டுதல், கொடு, பகை, வருத்தம், வலி, அழிவு, கொடியன், பாய்தல், பிரமன், தாண்டு, படை

நா
நடு, நாக்கு, அயலார், சுவாலை, திறப்பு, மணி முதலியவற்றின் நா, அயலார், சுவாலை, பொலிவு, பூட்டின் தாள், வார்த்தை, தாரை, நாதசுரத்தின் ஊதுவாய்
பா
வெண்பா முதலிய பாட்டு, பஞ்சு நூல், பிரபை, நெசவு பா, அழகு, கடிகார ஊசி, கிழங்குப்பா, நிழல், பரப்பு, பஞ்சி நூல், பருகுதல், பாம்பு, தமிழ், தூக்கு, யாப்பு, காத்தல், சுத்தம், கப்பு, கை மரம்
மா
ஆண் குதிரை, அழகு, ஆண் பன்றி ஆண் யானை, இலக்குமி, கறுப்பு, சீலை, செல்வம், பெருமை, மாமரம், வண்டு, வயல், அறிவு, ஆணி, மாவு, நிறம், பரி, பிரபை, கட்டு, பெருமை, சரசுவதி, வலி, விலங்கின் பொது, வெறுப்பு, அருப்பம், மிகுதி, பிட்டம், பிண்டி, நுவனை
யா
ஒரு வகை மரம், வினாச்சொல், சந்தேகம், இல்லை
ரா
இராப் பொழுது, இரவு
வா
வருக எனல்

இ
ஆண்பால், பெண்பால் பெயர் விகுதி (உ.ம்.பிறைசூடி, கண்ணி), முன்னிலை ஒருமை வினைமுற்று, அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி, அரை என்னும் எண்ணின் குறி
நி
அதிகம், இன்மை, உறுதி, எதிர்மறை, ஐயம், அமீபம், நிச்சயம், நிலை, பேறு, பூரணம், மிகுதி, வன்மை, விருப்பம்
பி
அழகு, பிரிவினை விகுதி
ஈ
ஈ, கள், இலக்குமி, தேனீ, குகை, தாமரை இதழ், பாம்பு, அம்பு, அரை நாண், பார்வதி, தேனீ, சிறகு
கீ
கிளிக்குரல்
சீ
இகழ்ச்சிக் குறிப்பு, அடக்கம், பெண்,இலக்குமி, வியப்பு,சரஸ்வதி, பார்வதி, நித்திரை, பிரகாசம், விடம், விந்து, சளி, ஒளி, சிரீ, சிகரம், சீகம், தமரத்தை, புனல், திரை, கவிரி, சீதல், காந்தி, சம்பத்து
நீ
நீ என்னும் முன்னிலைப் பெயர், நீங்குதல், விடு, உலகத்தை மறு, தள்ளு
தீ
நெருப்பு, தீமை,அறிவு, நரகம், இனிமை, கோபம், விடம், ஞானம், விளக்கு, அங்காரகன், ஆரல், ஒளி, முளரி, வசு, வடவை, சிகி
பீ
அச்சம், மலம், தொண்டி, பெருமாரம்பவ்வி
மீ
ஆகாயம், உயர்வு, மேல், மகிமை, மேற்புரம்

வீ
விருப்பம், கர்ப்பந்தரித்தல், பறவை, பூ, சிவன், நீக்கம், கேடு, ஒழிவு
உ
அகச் சுட்டு, புறச்சுட்டு, ஆச்சரியம், உருக்கம், கட்டளை, கோபம், சின, பிரமன், சிவ சக்தி பிள்ளையார் சுழி, எண் 2
கு
பூமி,குற்றம், சாரியை, சிறுமை, தடை, தொனி, நான்காம் உருபு, நிந்தை, பாவம், இனமை, நீக்க, நிறம்
சு
நன்மை (சுபுத்தி), சொந்தம் (சுதேசம்), அதட்டும் ஓசை, சுவ, சுய, வியப்புக் குறிப்பு
து
துவ்வென்னேவல், அசைத்தல், அனுபவம்,எரித்தல், கெடுத்தல், கசத்தல், பிரிவு, சுத்தம்
நு
தியானம், தோணி, நிந்தை, நேரம், புகழ்
ஊ
ஊன், உணவு,சந்திர, சதை, தசை, சிவன், சமாக்கிய கலை, இறைச்சி
கூ
பூமி, கூக்குரல், மலங்கழித்தல், கூவுதல், கூச்சல்
சூ
விலங்குகளையோட்டும் குறிப்பு, சுளுந்து, வியப்புச் சொல்
தூ
சுத்தம், தூவென்னேவல், பகை,பற்றுக்கோடு, புள்ளிறகு, வெண்மை, தசை, மாமிசம், வலிமை, தூவு, இகழ்ச்சிக் குறிப்பு

நூ
ஆபரணம்,எள், யானை
பூ
மலர், அழகு, இடம், இந்துப்பு, இருக்குத்ல், இலை, ஓமாக்கினி, கண்ணோய், நரகம், தாமரை, தீப்பொறி, பிறப்பு, பூமி, நீலநிறம், மென்மை, தேங்காய்த் துருவல், நுண்பொடி, அரைக்கால், மகளிர் சூதகம், நிரம், பூப்பு, மூப்பு, அலரி, இணர், குசுமம், தாமம், போது, வீ
எ
எழு, வினாவெழுத்து
ஏ
சிவன், விஷ்ணு, செலுத்துதல், அடே, அம்பு, எண்ணின் குறிப்பு, அடுக்கு, பாணம், இகழ்ச்சிக் குறிப்பு, பெருக்கம், இறுமாப்பு, உயர்ச்சி, வலியுறுத்தல் (உ.ம்.அவனே வந்தான், நானே செய்தேன்)
சே
அழிஞ்சில் மரம், இடப ராசி, சிவப்பு, சேரான் மரம், காளை, வெருட்டுங் குறி, வெறுப்புக் குறி, புல்வாய், குதிரை, சேரான்
தே
கடவுள், கிருபை, கொள்ளுகை,நாயகன், மாடு துரத்தும் குறிப்பு
நே
அன்பு, ஈரம், நேசம்,உழை, நெகு
பே
நுரை, மேகம், பேகடம்- ஒருவகை மீன், இல்லை, பேகம்-தவளை, முகில்
மே
அன்பு
வே
வேவு

குலோத்துங்க சோழன்
ஐ
அரசன், அழகு, ஆசான், இரண்டாம் வேற்றுமை உருபு, கடவுள், கோழை, சாரியை, சுவாமி, நுண்மை, யானையைப் பாகன் ஓட்டும் ஓசை, கடுகு, கடவுள், குரு, வியப்பு, வீரம், கணவன், சுவாமி, பிதா, யசமானன்
சை
சீ, கைப்பொருள்
நை
நொந்து போ, இகழ்ழ்சிக் உறிப்பு, நையென்னேவல்
ஔ
அழைத்தல், வியப்பு, அனந்தம், கடித்தல், பூமி
கௌ
கொள்ளு, தீங்கு, மனஸ்தாபம், கிருத்தியம், கௌவென்னேவல்
கை
ஒப்பனை, ஒழுக்கம், கை, சிறுமை, வகுப்பு, இடம், உடனே, கட்சி, கைமரம், சேனை, ஆள், காந்தப்பூ, தங்கை, ஊட்டு, அலங்கரி, தோள், பாணி, சயம், விற்பிடி, முகுளம், சதுரம், இலதை, மான் தலை, சங்கு, வண்டு, அஞ்சலி, கற்கடகம், மகரம், கபோதம், விற்பிடி
தை
மாதம், பூச நாள்
பை
அழகு, பச்சை நிறம், பாம்பின் படம்
மை
அஞ்சனம், கருப்பு, பூமி, திசை, மலை, வச்சிராயுதம்
வை
கூர்மை, வைக்கோல், கீழெ வை என்னேவல்

ஒ
ஒற்றுமையுடன் இரு, ஒன்றுபடு, ஒழிதல், ஒவ்வுதல்
ஓ
இழிவு சிறப்பு, அடிசயவிரக்கச் சொல், எதிர்மறை, ஒழிபிசை, , வினா, நீக்க, மதகு நீர் தாங்கும் பலகை, மகிழ்ச்சிக் குறிப்பு, இரக்கக் குறிப்பு, மடையடைக்கும் கதவு
நொ
துன்பப்படு, நோய், வருத்தம், நொய்ம்மை
ஓ
அதிசய விரக்கச் சொல், இரக்கம், வினா விடைச் சொல் (உ.ம்.சாத்தனோ)
கொ
ஒலிக்குறிப்பு
கோ
அம்பு, அரசன், ஆண்மகன், எருது, ஆகாயம், கண், கிரணம், சந்திரன், சூரியன், பசு, மலை, மாதா, மேன்மை, வாணி, குசவன், சுவர்க்கம், வெந்நீர், தொடு, தறி, தடு, பொறி, தேவலோகம், கோமேத யாகம்,வச்சிராயுதம்
சோ
அரண், வியப்புச் சொல், வாணாசுரன் நகர்,உமை
நோதல், துக்கம், துன்பம், பலஹீனம், வியாதி
தோ
தோ- நாயைக் கூப்பிடும் ஒலி
நோ
இன்னம், சிதைவு, துக்கம், துன்பம், பலவீனம், வியாதி, வலி, வேதனைப் படு, நொந்து பேசு, துக்கப்படு, இன்மை
போ
அசைநிலை, போவென்னுதல்
சௌ
சௌபாக்கியவதி என்பதன் சுருக்கம், சிறுமி, சுமங்கலி
நௌ
மரக்கலம்

ஸ்ரீ
லெட்சுமி, பாக்கியம்
அப்பாய் செட்டியார் நிறைய சம்ஸ்கிருதச் சொற்களையும் சேர்த்திருக்கிறார். அதை நினைவிற் கொள்ளல் வேண்டும். அவர் மட்டுமின்றி அந்தக் காலத்திலும், இந்தக் காலத்திலும் வெளியாகும் எல்லா அகராதிகளிலும், நிகண்டுகளிலும் சம்ஸ்கிருதச் சொற்களையும் சேர்த்து தமிழாகக் கொடுத்திருப்பதிலிருந்து இரு மொழிகளையும் அவர்கள் இரு கண்கள் போல பாவித்ததும், இரு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து வந்தவை என்று அவர்கள் நம்பினர் என்பதும் வெள்ளிடை மலை. சுருங்கச் சொல்லின் வெள்ளைக்காரன் புகுத்திய ஆரிய-திராவிட இனவெறி வாதம் என்னும் விஷம் கலக்கும் வரை, தொல்காப்பியன் முதல் பாரதியார் வரை எல்லாக் கவிஞர்களும் அச்சமின்றி, கூச்சமின்றி சம்ஸ்கிருதத்தைக் கலந்தே எழுதினர். திரைப்படப் பாடல்களில் பிற மொழிக் கலப்பில்லாத படல்களைக் காண்பதும் அரிதே.

பாபநாசம் சிவன் எதுகை அகராதி
பாபநாசம் சிவன் சம்ஸ்கிருத எதுகை அகராதி ஒன்று தயாரித்து வெளியிட்டுள்ளார் அதைப்பற்றி தனி கட்டுரையில் தருகிறேன். அதைத் தயாரிக்க அவருக்கு ஆகிய காலம் எட்டு ஆண்டுகள். இதே போல அப்பாய் செட்டியார், அபிதான சிந்தாமணி வெளியிட்ட சிங்காரவேலு முதலியார் ஆகியோரும் பல்லாண்டுக் காலம் உழைத்ததன் பேரிலேயே நமக்கு அற்புத அகராதிகள், கலைக் களஞ்சியங்கள் கிடைத்தன.
–சுபம்–
You must be logged in to post a comment.