
WRITTEN BY S NAGARAJAN
Post No.7517
Date uploaded in London – 31 January 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
திருநெல்வேலியிலிருந்து வெளிவரும் ஹெல்த்கேர் தமிழ் மருத்துவ மாத இதழில் ஜனவரி 2020 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை (ஹெல்த்கேர் ஆசிரியர் R.C.ராஜா, 10, வையாபுரி நகர், திருநெல்வேலி டவுன் 627006, தமிழ்நாடு, இந்தியா)
புத்தகச் சுருக்கம் : Perfect Digestion by Deepak Chopra
நல்ல ஜீரணத்திற்கான அருமையான அறிவுரைகள்! – 1
(தீபக் சோப்ரா எழுதியுள்ள ‘பெர்ஃபெக்ட் டைஜெஸ்ஷன்”)
ச.நாகராஜன்
உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர், யோகா மாஸ்டர், வாழ்க்கை முறை நெறியாளர் தீபக் சோப்ரா அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.
ஏராளமான நல்ல புத்தகங்களை எழுதியுள்ளவர் அவர்; அவரது புத்தகங்கள் உலகெங்கும் லட்சக் கணக்கில் விற்று சாதனை படைத்திருக்கின்றன.
நல்ல ஜீரணத்தை அடைவதற்கான வழிகள் என்ற அவரது புத்தகம் அருமையான புத்தகம். 127 பக்கங்கள் கொண்ட இந்த நூல் 10 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.
மனிதன் ஆரோக்கியமாக வாழ அவன் எடுத்துக் கொள்ளும் உணவு மிக முக்கியமானது. குடல், இரைப்பை, குடல் நாளம் ஆகியவை எப்படிப்பட்ட உணவை ஏற்கும், எவற்றை எடுத்துக் கொண்டால் உடலில் பிரச்சினைகள் தோன்றும் என்ற அடிப்படை அறிவை அறியாததால் தான் உலகில் பெரும்பாலானோருக்கு ஜீரணம் சார்ந்த பிரச்சினைகள் உருவாகின்றன.
அந்த வகையில் நல்ல அறிவுரைகளைத் தந்து ஜீரணம் பற்றிய முழு விவரங்களைத் தொகுத்து விளக்கி ஆயுர்வேத அடிப்படையிலான ஆலோசனைகளை வழங்குகிறார் இந்தப் புத்தகத்தில் தீபக் சோப்ரா.
செரிமானக் குடல் தடம் சிக்கலான ஒரு உறுப்பு.
மாறிக் கொண்டே இருக்கும் உடல் அமைப்பில் 98 சதவிகிதம் அணுக்கள் சென்ற வருடம் உடலில் இல்லாதவை,
இந்த ஒரு உண்மையே உடல் அமைப்பு மாறிக் கொண்டே இருக்கிறது என்பதைக் காண்பிக்கிறது. இதை முதலில் உணர வேண்டும்.
ஒரு ஆச்சரியாமான உண்மை, உங்களின் உடல் எலும்புகள் ஒவ்வொரு மூன்று மாதமும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்பது தான்!
இர்ரிடபில் பவல் சிண்ட் ரோம் (Irritable Bowel Syndrome – IBS) எனப்படும் குடல் பதற்றப் பிணிக்கூட்டு நோய் ஒரு ‘வில்லங்கமான’ வியாதி.
எதையும் சாப்பிட விடாது; சாப்பிட்டவுடன் டாய்லெட்டை நோக்கி ஓட வேண்டும் போன்ற உணர்வை ஏற்படுத்தும் வியாதி.
வெளியில் சாப்பிட முடியாது; பயணம் போக முடியாது; விருந்தில் கலந்து கொள்ள முடியாது, ஏன் அண்டை அயலார் உறவினர் வீட்டிற்குக் கூட சகஜமாகப் போக முடியாது; எதையாவது கொடுத்துச் சாப்பிடச் சொன்னால்…” – என்ன செய்வது என்ற இடைவிடாது தொற்றிக் கொண்டிருக்கும் பயமே காரணம்!
இந்த வியாதி பற்றிய முழு விவரத்தையும் நோய்க்கான தீர்வையும் விளக்கமாகத் தருகிறது இந்த நூல்.
ஆயுர் வேத வைத்திய முறை உடலை வாதம், பித்தம், கபம் என மூன்று வகையாகப் பிரிக்கிறது.
முதலில் இந்த மூன்றில் நாம் எந்த வகை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதற்குத் தக்கபடி நமது உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதற்காக மூன்று வினாத்தாள்கள் 20 கேள்விகளுடன் தரப்பட்டுள்ளன. அதற்கு விடையளித்த பின்னர் கொடுக்கப்பட்ட சரியான விடைகளுடன் ஒத்துப் பார்த்து நீங்கள் எந்த டைப் என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.

முதலாவது வகையினர்
வாத வகையினர் (Characteristics of Vada Type)
ஒல்லியான உடல்வாகு, எடை குறைவு
சுறுசுறுப்பாகச் செயல் புரிவர்
ஒழுங்கற்ற பசி எடுக்கும் தன்மையும் சீரற்ற ஜீரணமும்
விட்டு விட்டுத் தூங்குதல், இன்சோம்னியா நிலை போல இருத்தல்
சுறுசுறுப்பு, நல்ல கற்பனா திறன், குதூகலமான தன்மை
உணர்ச்சிவயப்படக்கூடியவர், அடிக்கடி மனநிலை மாறும் தன்மை (Changing moods)
ஒரு விஷயத்தை உடனே கிரஹிப்பவர், அதே போல மறந்தும் போய்விடுவர்
கவலைப்படும் சுபாவம்
மலச்சிக்கல் வரும் தன்மை
சுலபமாக களைப்படைவர், அதிக வேலை செய்வர்
மன மற்றும் உடல் ஆற்றல் பொங்கிப் பொங்கி வரும் (Mental and physical Energy comes in bursts)
இரண்டாவது வகையினர்
பித்த வகையினர் (Characteristics of Pitta Type)
நடுத்தர உடல் வாகு கொண்டவர்
நடுத்தர வலிமை அதே போன்ற தாங்கும் சக்தி கொண்டவர்
நல்ல பசியும் தாகமும் கொண்டவர், நல்ல ஜீரண சக்தி உண்டு.
கோபம் கொள்பவர், மன அழுத்தத்தில் எரிச்சல் அடைபவர்
சிவப்பான தோற்றம், மச்சம் உள்ளவர்
சூரிய வெளிச்சம் ஆகாது, வெப்பம் அதிகமாக இருப்பின் தாங்க மாட்டார்
ஊக்கமுடையவர், சவால்களை எதிர்கொண்டு சமாளிப்பவர்
கூரிய புத்தி
துல்லியமானவர், நல்ல குரலுடன் பேசுபவர்
அந்தந்த வேளை உணவை விட்டுக் கொடுக்கவே முடியாதவர்.
பொன் நிறம்/பழுப்பு/ சிவப்பு முடியினர்
மூன்றாவது வகையினர்
கப வகையினர் (Characteristics of Kapha Type)
திடமான உடல்வாகு கொண்டவர்,வலிமையானவார், நல்ல உடல் வலிமை, தாங்கும் சக்தி அதிகம் கொண்டவர்
சீரான சக்தி; மெதுவாகவும் நளினமாகவும் செயல் புரிபவர்
அமைதியானவர், பதற்றமில்லாத ஆளுமை கொண்டவர், கோபம் மெதுவாகத் தான் வரும்
அமைதியானவர், மிருதுவானவர், வெளுத்தவர், எண்ணெய்ப்பசை கொண்ட தோல் கொண்டவர்
புதிய விஷயங்களை மெதுவாகப் புரிந்து கொள்வர், ஆனால் தீர்க்கமான நினைவாற்றல் இருக்கும்
நல்ல, நீண்ட தூக்கம்
சற்று உடல் பருமன் உண்டு
மெதுவான ஜீரண சக்தி, நிதானமான பசி
அன்பானவர், பொறுமையானவர், மன்னிக்கும் மனப்பான்மை கொண்டவர்
தன்னுடையது என்ற குணம் உண்டு,திருப்தியான சுபாவம் கொண்டவர்
ஒரு ஆயுர்வேத மருத்துவர் ஒருவரைப் பார்த்தவுடன் அவர் எந்த வகை என்பதைச் சுலபமாக நிர்ணயித்து விடுவார்.

சில அடிப்படை விதிகள்
நல்ல ஜீரண சக்தி அடைய சில அடிப்படையான விதிகள் உண்டு. அவையாவன:
நல்ல அமைதியான இடத்தில் உண்ணுதல் வேண்டும்.
உட்கார்ந்து உணவை உண்ண வேண்டும்.
மன அழுத்தம், சோர்வு,கவலையுடன் சாப்பிடக் கூடாது
அதிகமாக உண்ணக் கூடாது
ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட குளிர்ந்த உணவை உண்ணக் கூடாது. ஐஸ் போட்ட திரவ வகைகளை உட்கொள்ளக் கூடாது
மென்று உண்ண வேண்டும்; பேசியவாறே சாப்பிடக் கூடாது
நிதானமாக உண்ண வேண்டும்.
உணவு உண்டபின் அது நன்கு ஜீரணமான பின்னரே அடுத்த வேளை உணவு உண்ணல் வேண்டும்.
அவ்வப்பொழுது சமைக்கப்பட்ட உணவு வகைகளை உண்ணுங்கள்.
எளிய நடைமுறைகள் தாம் இவை.
இவற்றைச் சரியாகக் கடைப்பிடிக்கவில்லையெனில் ஜீரண சக்தி குறைந்து சாப்பிட்ட உணவு வகைகள் அப்படியே இரைப்பையில் தங்கும்.
இதன் ஒரு விளைவாக ஏற்படுவது தான் ஆயுர்வேதம் குறிக்கும் ஆமா (Ama)
இதனால் ஏராளமான கோளாறுகள் உடலில் ஏற்படும். வாயில் வெள்ளைப் படலமாகத் தோன்றுவது இதன் ஒரு அறிகுறி.
இந்த அஜீரணக் கோளாறை நீக்க ஒரு எளிய சின்ன வழி உள்ளது.
முதல் வழி வாரத்தில் ஒரு நாள் எளிய கஞ்சி உணவு போன்ற திரவ உணவை மேற்கொள்வது.
அடுத்த இன்னும் ஒரு எளிய வழி.சாப்பிட்ட பின்னர் கொதிக்க வைத்த வெந்நீரை குடிக்கக் கூடிய பொறுக்கும் சூட்டுடன் அவ்வப்பொழுது நாள் முழுவதும் இரண்டு அல்லது மூன்று மடக்கு குடிக்க வேண்டியது தான்.
ஒரு பிளாஸ்கை வாங்கி வைத்துக் கொண்டு அவ்வப்பொழுது இந்த வெந்நீரை அருந்தி வந்தால் ஆமா போய் விடும்.
ஒரு முறை அல்லது இரண்டு முறை இப்படிச் செய்தால் போகாது; பல முறை இந்த வெந்நீர் குடிப்பதை மேற்கொள்ள வேண்டும்.
இதன் விளைவாக முதல் சில வாரங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஏனெனில் உடலில் சேர்ந்துள்ள ‘ஆமாவை’ உடல் சிறுகச் சிறுக வெளியேற்றுவதால் இது ஏற்படும். சில வாரங்களில் பழையபடி சில முறை மட்டுமே சிறுநீர் கழிக்கும் நிலை திரும்பி விடும்.ஆனால் ஜீரணத்திற்கு தீங்கு பயக்கும் ‘ஆமா’ பொயே போய் விடும்.
ஜீரணத்திற்காக ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் சில மூலிகைகளும் உண்டு. இவற்றை அன்றாடம் உணவில் நாம் சேர்த்துக் கொள்ளலாம்.
நெல்லிக்காய்: இரைப்பையில் தோன்றும் எரிச்சலை நீக்குவது இது. இரத்தத்தில் உள்ள இனிப்பையும் இது சமனப்படுத்தும் (
கொத்துமல்லி : பித்த தோஷத்தை நீக்கும்.
லவங்கம் மற்றும் கிராம்பு : ஜீரணத்தை ஊக்குவிக்கும்.
(அடுத்த பகுதியுடன் இந்த புத்தகச் சுருக்கம் முடியும்)
***