Date: 28 DECEMBER 2017
Time uploaded in London- 6-04 am
Written by S NAGARAJAN
Post No. 4555
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
ஸ்ரீ ஜோஸியம் (ஞான ஆலய குழுமத்திலிருந்து வெளியாகும் மாதப் பத்திரிகை) டிசம்பர் 2017இல் வெளியாகியுள்ள கட்டுரை
அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளுக்கு ஜோதிடரைக் கலந்து ஆலோசி!
ச.நாகராஜன்
ஹிந்து வாழ்க்கை முறையில் ஜோதிடத்தின் இடம் தனி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று குழந்தை மனதில் பதியும் படி அவ்வை பிராட்டி அருளினார். அதே போல ஜோதிடர் இல்லாத ஊரில் ஒரு தினமும் கூட வாழாதே என்று முதுமொழி கூறுகிறது.
ருணதாதா ச தேவக்ஞ: ஸ்ரோத்ரிய: சுஜலா நதி
யத்ர ஹோதே ந வித்யந்தே ந தத்ர திவஸம் வஸேத்
பழைய காலம் தொட்டு வழங்கி வரும் இந்த சுபாஷித ஸ்லோகத்தின் பொருள்: கடன் தந்து ஆதரிக்காத ஒருவர், ஜோதிடர், வேதங்களை அறிந்த குருக்கள், நல்ல நீரைக் கொண்டு ஓடும் நதி – இவையெல்லாம் எங்கு இல்லையோ அங்கு ஒருவன் ஒரு நாள் கூட வசிக்கக் கூடாது.
அன்றாட வாழ்விற்கு ஜோதிடரைக் கலந்து ஆலோசிக்காமல் ஒரு நல்ல காரியத்தைக் கூடத் தொடங்காத பண்புடைய வாழ்வு ஹிந்துத்வ வாழ்வு.
புத்தாடைகளை எந்த நட்சத்திரத்தில் அணிய வேண்டும்?
அவிட்டம், புனர்பூசம்,ஹஸ்தம், சித்ரா, ஸ்வாதி, விசாகம், அனுராதா (அனுஷம்), பூசம், அஸ்வினி ஆகிய நட்சத்திர தினங்களில் புத்தாடைகளை அணிய வேண்டும் என்று முகூர்த்த மார்த்தாண்டம் என்ற நூல் விளக்குகிறது.
புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் புத்தாடை அணிய முகூர்த்த மார்த்தாண்டம் அறிவுறுத்துகிறது.
கடனை வாங்க வேண்டி இருந்தால் எந்த நாளில் வாங்க வேண்டும்?
வீட்டு லோன், படிப்பு லோன், கல்யாண லோன் என்று இன்று லோன் இல்லாத வாழ்க்கையே கிடையாது. வங்கிக் கடன் இன்று சர்வ சாதாரணமாக ஆகி விட்டது. கடனை வாங்குவதற்குக் கூட நமது நூல்களில் வழிகாட்டுதல்கள் உண்டு.
புதன்கிழமைகளில் ஒரு போதும் கடன் வாங்காதே என்று ராமாசார்ய டீகா அறிவுறுத்துகிறது.
வாங்கிய கடனைத் திருப்பித் தர உகந்த நாள் செவ்வாய்க்கிழமை.
ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, ஹஸ்த நட்சத்திரம் வரும் நாளில் கடனை ஒரு போதும் வாங்கக் கூடாது
.
திதிகளில் கொண்டாட்டமும், விலக்க வேண்டியவையும்
ஹிந்து வாழ்க்கையும் முறையில் திதிகளுக்கு ஒரு தனி மகத்துவம் உண்டு.
அக்ஷய திருதியை – திருதியை
விநாயக சதுர்த்தி – சதுர்த்தி
வஸந்த பஞ்சமி – பஞ்சமி
ஸ்கந்த ஷஷ்டி – ஷஷ்டி
ரத சப்தமி – சப்தமி
கிருஷ்ண ஜயந்தி – ஜன்மாஷ்டமி – அஷ்டமி
ராம நவமி – நவமி
மஹா சிவராத்திரி – மஹா சதுர்த்தசி – சதுர்த்தசி
சித்ரா பௌர்ணமி – பௌர்ணமி
மஹாளய அமாவாசை – அமாவாசை
இப்படி திதிகளை வைத்தே பல முக்கிய தினங்களை நாம் சுட்டிக் காட்டுகிறோம்.
எந்த திதியில் எதை விலக்க வேண்டும் என்பதற்கும் கூட நம் சாஸ்திரங்கள் தீர்க்கமான வழிகாட்டுதலைத் தருகின்றன.
ஷஷ்டி, அஷ்டமி, அமாவாசை, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய தினங்களில் எண்ணெய் மற்றும் மாமிசத்தை விலக்க வேண்டும் என்று மனு ஸ்மிருதியும் விஷ்ணு புராணமும் கூறுகின்றன
ஆக இப்படிப் பல்வேறு விதிகளை நமது நலன் கருதி இதனால் ஏற்படும் நன்மை தீமைகளைக் கால ஓட்டத்தில் பரீட்சித்ததாலும், உள்ளுணர்வாலும் கண்ட நம் முன்னோர்கள் அவற்றைப் பல்வேறு சாஸ்திர நூல்களில் கூறியுள்ளார்கள்.
இவை அனைத்தையும் படித்துத் தேர்ந்தவரே ஜோதிடர். ஆகவே தான் அவரிடம் ஒரு காரியத்தைத் தொடங்கு முன் அதை என்று செய்யலாம் என்பதைக் கேட்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்தது.
அவரும் நல்ல நாளைக் குறிப்பதோடு எதை எதைச் சேர்க்க வேண்டும், எதை எதை விலக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்.
ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கும் கூட விதிமுறைகளை வகுத்திருக்கும் மதம் ஹிந்து மதம் என்பது ஆச்சரியமான விஷயம்.
***
You must be logged in to post a comment.