பகுத்தறிவாளர்களுக்கு சவால்! (Post No.3966)

Written by S NAGARAJAN

 

Date: 3 June 2017

 

Time uploaded in London:-  6-29  am

 

 

Post No.3966

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

திருக்குறள் மர்மம்

பகுத்தறிவாளர்களுக்கு சவால் விடும் குறள்பாக்கள்!

 

ச.நாகராஜன்

 

 

வள்ளுவர் தமிழ் சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கையாளும் மஹாகவி. மஹரிஷி.

 

அவரது குறளில் பகுத்தறிவு என்ற ஒரு அறிவைப் பற்றிச் சொல்லவே இல்லை.

பகுத்து என்ற வார்த்தை,

 

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” (குறள் 322)

 

என்ற ஒரே ஒரு குறளில் மட்டுமே வருகிறது. பகுத்து உண் என்பதில் மட்டுமே பகுத்து என்ற வார்த்தை வருகிறது.

பகுத்தறிவு என்பதைச் சொல்லாத வள்ளுவர் அறிவை அற்புதமாக மூன்று விதமாகச் சுட்டிக் காட்டுகிறார்.

கார் அறிவு (குறள் 287)

களவென்னும் காரறிவாண்மை அளவென்னும்

ஆற்றல் புரிந்தார் கண் இல்

 

இங்கு கார் அறிவு என்பது குறுமதி அல்லது இருண்ட அறிவு என்பதைக் குறிப்பிடுகிறது.

ஆக அறிவில் கீழ்த்தரமான கீழ் மக்களது அறிவு கார் அறிவு.

அடுத்து பேரறிவு (குறள் 215)

 

ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்

பேரறிவாளன் திரு

 

பொது சேவையில் ஈடுபடும் ஒருவனது பேரறிவை இக்குறள் சுட்டிக் காட்டுகிறது.

 

ஆக கார் அறிவு மற்றும் பேரறிவைச் சொல்லிய வள்ளுவர் இன்னொரு அறிவைச் சொல்கிறார்.

வால் அறிவு (குறள் 2)

 

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

 

வால் அறிவு இறைவனது அறிவு. தூய அறிவு.

ஆக இப்படி கார் அறிவு, பேரறிவு, வாலறிவு ஆக மூன்று விதமாக நுண்ணறிவைப் பிரிக்கிறார் வள்ளுவர்.

பகுத்தறிவாளர்கள் என்ற ஒரு புது வித இனத்தைச் சேர்ந்தவர்கள் வள்ளுவரைப் படிக்க ஆர்வப்படலாமா?

 

பகுத்தறிவாளர்களுக்கு சவால் விடும் குறள்கள் ஏராளமாக திருக்குறளில் உள்ளன.

 

எடுத்துக்காட்டிற்காக சில குறள்களை மட்டும் கீழே காணலாம்:

  • தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)

தெய்வத்தைத் தொழாமல் தன் கணவனைத் தொழுது எழுகின்ற ஒரு பெண் பெய் என்றால் மழை பெய்யும்.

கேள்வி: பெண்ணியத்திற்குத் துணை போகும் ஒருவரா வள்ளுவர். அது எப்படி பெய் என்று ஒரு பெண்மணி சொன்னால் மழை பெய்யும்? உலகத்தில் வாழ்கின்ற தாய்க்குலத்தில் பத்தினிகளே இல்லையா? யாருமே பெய் என்று சொல்லி மழை பெய்ததைப் பார்க்க முடியவில்லையே!

  • வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீ ர் என்று (குறள் 1317)

3) தும்முச் செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்

எம்மை மறைத்தீரோ என்று (குறள் 1318)

 

தும்மல் என்பது இயற்கையில் மனிதருக்கு ஏற்படும் ஒன்று. இதற்கும் காதலி நினைப்பதற்கு என்ன, ஐயா சம்பந்தம்? காதலனை நோக்கிக் காதலி யாரை நினைத்து தும்மினாய் என்று கேட்பது பகுத்தறிவுக்கு ஒத்ததா?

 

  • அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொற்த்தானோடு ஊர்ந்தான் இடை (குறள் 37)

சிவிகையை ஒருவன் சுமக்கிறான். அதனுள் ஒருவன் உட்கார்ந்திருக்கிறான். ஆயிரக்கணக்கில் கார்கள் போகின்றன. டிரைவர் ஓட்டுகிறார். முதலாளி அமர்கிறான்.

இது உலகியல்பு. இதையும் வினையையும் எப்படி முடிச்சு போடலாம். எங்கள் பகுத்தறிவுக்கு இது ஒத்ததல்ல.

  • மலர்மிசை மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார் (குறள் 3) நீண்ட ஆயுளுக்கும் இறைவனுக்கும் என்ன சம்ப்ந்தம்?
  • கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும் (குறள் 260)

கொலை செய்யப்பட உள்ள உயிர் வேண்டுமானால் ஒரு வேளை மனதிற்குள் தப்பித்தேன் என்று நினைக்கலாம். ஆனால் எல்லா உயிரும் எப்படித் தொழும்?

  • மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை

எந்நோற்றான் கொல் எனும் சொல்

தந்தை நோன்புக்கும் மகனுக்கும் என்ன தொடர்பு? அவனவன் வாய்ப்பு, அறிவு, பணம் போன்றவற்றிற்குத் தக முன்னேறுகிறான். தந்தை உதவி செய்யாவிட்டாலும் கூட பலர் முன்னேறவில்லையா, என்ன?

  • ஊழிற் பெருவலி யா உள? மற்றொன்று

சூழினும் தான் முந்துறும் (குறள் 380)

விதி எப்படியும் தான் செய்வதைச் செய்தே தீரும் என்பது பொருந்தாத ஒன்று.

விதியின் மீதே பகுத்தறிவாளருக்கு நம்பிக்கை இல்லை. ஆக வள்ளுவரின் இந்தக் குறள் பகுத்தறிவுக்குப் பொருந்துமா?

  • ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து (குறள் 398)

இந்தப் பிறவியில் தான் கற்ற கல்வி ஒருவனுக்கு ஏழு பிறவிகளில் பயன் தரும்.

மனிதனுக்கு ஒரு பிறவி மட்டுமே உண்டு. அதில் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்க வேண்டியது தான். எங்கிருந்து வந்தது ஏழு பிறவி? இது இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்குப் பொருந்தாதே. அவர்கள் ஒரு பிறவி நம்பிக்கை உடையவர்கள் அல்லவா? ஹிந்துக்கள், புத்த மதத்தினர், ஜைன மதத்தினருக்கு மட்டுமே இது பொருந்தும்.

 

 

இப்படிப் பல குறள்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஐயன் வள்ளுவனுக்கு விழா எடுப்பதாகச் சொல்லிக் கொண்டு தனக்கு விழாவைத் தவறாமல் எடுத்துக் கொள்ளும் பகுத்தறிவுத் தலைவருக்கும் அவரது அன்புத் தம்பிகளுக்கும் இந்த வள்ளுவர் சரிப்பட்டு வருவாரா?

ஒன்று தங்கத் தம்பிகள் தவறாக வழி சொல்லும் தலைவனைக் கைவிட வேண்டும். அல்லது வள்ளுவரைக் கைவிட வேண்டும்.

 

 

சற்று சிந்தித்தால் ஒரே ஒரு விஷயம் புலப்படும்.

வள்ளுவரின் குறள்கள் ஆழ்ந்த தத்துவங்களின் அடிப்படையில் எழுந்தவை. காலம் காலமாக நிற்பவை. காலத்தை வென்றும் நிலைப்பவை.

 

எளிதில் மேலெழுந்தவாரியாகச் சொல்லப்படும் பொருளுக்கும் அப்பாற்பட்டு ஆழ்ந்த உட்கருத்தைக் கொண்டவை.

 

அதனால் தான் வேதங்களுக்குச் சொல்லப்படும் புகழ்மொழியான மறை என்று இதற்கு பெயர் சூட்டப்பட்டிருக்கிறது தமிழில் இருப்பதால் தமிழ் மறை.

 

 

அதி மானுடவியல் என்னும் சைக்கிக், அதற்கும அப்பாற்ப்ட்ட வால் அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே இவற்றின் உட்பொருளை ஒருவர் அறிய முடியும்.

புண்ணிய பாவங்கள் பிறப்பைத் தரும்.

 

அதற்கேற்ப இன்றைய வாழ்வு அமையும்.

நல்லதைச் செய்து நல்ல பிறவியை எடு.

பின்னர் பிறவிச் சுழலிலிருந்து இறைவனை வேண்டி அவன் அருள் பெற்று விடுபடு.

 

கற்பில் சிறந்தவள் கடவுளே. அவள் ஆணைக்கு பஞ்ச பூதங்களும் அடி பணியும்.

 

நோன்பு அல்லது தவம் செய்தால் நன் மக்களைப் பெறலாம்.

எண்ணம் என்பது சக்தி வாய்ந்தது. ஒருவர் நினைக்கும் போது அதே லயத்தைக் கொண்டவர்க்கு எண்ண சக்தியின் ஓட்டம் தெரியும்.

 

இப்படி அதிமானுடவியல், ஹிந்து தத்துவம், சாஸ்திரங்கள் அல்லது அறநூல்களின் அடிப்படையில் மட்டுமே வள்ளுவரைப் புரிந்து கொள்ள முடியும்.

இன்றைய பகுத்தறிவின் அடிப்படைக்கு அப்பாற்பட்டவர் வள்ளுவர்.

 

 

தமிழ் மக்கள் செய்த தவத்தால் வந்தவர் வள்ளுவ.ர்

கார் அறிவை (இன்றைய பகுத்தறிவு) விட்டு விட்டு பேரறிவை ஈட்டி, அடைந்து, வாலறிவனை அறியும் முயற்சியில் ஈடுபடும் போது வள்ளுவம் புரியும்; வாழ்க்கையும் சிறக்கும்!

****