
Picture of Famous Bharata Natyam Dancer Dr Janaki Rengarajan
Research Article written by London swaminathan
Post No. 1777; Date 5th April 2015
Uploaded from London at 14-00
This is already published in English in two parts
உலகிலேயே மிகப் பழமையான நூல் ரிக்வேதம். அதிலுள்ள பல சம்ஸ்கிருதச் சொற்களை தமிழர்களாகிய நாம் இன்றும் அன்றாடம் பேசும் உரையாடலில் பயன்படுத்துகிறோம். இன்றும் அந்த வேதம் கோவில்களிலும் யாகங்களிலும், திருமணச் சடங்குகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதில் நாட்டியம் பற்றியும், சங்கீதம் பற்றியும் ஏராளமான குறிப்புகள் உள்ளன. வேதத்தில் வரும் இசைக் கருவிகள், ஆபரணங்கள், தங்க நகைகள், நாட்டியம் – சங்கீதம் ஆகிய எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக வைத்துப் பார்க்கையில் அவர்கள் எவ்வளவு நாகரீகம் படைத்தவர்கள் என்பதை எண்ணி வியக்கிறோம்.
ஒரு நாட்டில், மக்களின் அடிப்படைத் தேவைகள் – உணவு, உடைகள், உறைவிடம் – ரோட்டி கப்டா அவர் மகான் – நிறைவடையும் போதுதான் கவலைகள் மறையும்; கலைகள் மலரும். அவைகள் பரிணமிக்க மேலும் சிறிது காலம் பிடிக்கும். ரிக் வேத காலத்தில் பெண்கள் நகை அணிந்து சபைகளுக்குச் செல்லும் மந்திரங்களைப் பார்க்கையில் அவர்கள் நாகரீகத்தில் மிகவும் முன்னேறியவர்கள் என்று தெரிகிறது.
குஜராத்தி பெண்கள் இன்று ‘கர்பா’ நடனம் ஆடுவது போல— மேலை நாட்டில் கம்பத்தைச் சுற்றி ‘மே போல் டான்ஸ்’ ஆடியது போல— வேத காலப் பெண்கள் வட்டமாக நின்று ஆடிய குறிப்புகளும் உள.
இந்திரனை நாட்டியக்காரன் என்று ரிக்வேத மந்திரங்கள் துதிபாடுகின்றன. இந்திரன் ஆடியதோடு மற்றவர்களை ஆடவைத்ததையும், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆடியதையும் காண்கிறோம்.
பிற்கால புராணக் கதைகளில் இதன் முழு விவரங்களும் கிடைக்கின்றன. தேவ லோகத்தில் அரம்பையர்கள் ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமா – ஆடியதை நாம் அறிவோம். கந்தர்வர்கள் என்பவர்களை இசையுடன் இணைத்து கந்தர்வ கானம் என்று புகழ்வதையும் நாம் கேட்கிறோம். இதற்கெல்லாம் வேதத்தில் மூலம் (வேர்) இருக்கிறது.
ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிஹாசங்களில் இதுபற்றி கூடுதலாகத் தகவல் கிடைக்கிறது. அர்ஜுனன், அலி வேடம் தரித்து உத்தரை என்ற ராஜ குமாரிக்கு சங்கீதம் நடனம் பயிற்றுவித்ததை அறிவோம். தமிழில் சிலப்பதிகாரத்திலும் அதன் உரைகளிலும் நாட்டியம் பற்றிய முழு விவரங்களும் உள்ளன. (இது பற்றி நான் எழுதிய முந்தைய கட்டுரைகளைக் காண்க). இந்தப் பிண்ணனியில்தான் சம்ஸ்கிருதத்தில் பரதர் எழுதிய பரத நாட்டிய சாஸ்திரமும் புகழ் பெற்றது.

வேதத்தில் வரும் நாட்டிய விஷயங்கள்
தொல்பொருட் துறை அறிஞர் டாக்டர் இரா நாகசாமி 25-2-1989-ல் பம்பாய் ஷண்முகாநந்தா நுண்கலை – இசை சங்கத்திலும் 16-12-1989 ல் சென்னை நாரத கான சபையிலும் ஆற்றிய ஆங்கிலச் சொற்பொழிவுகளில் குறிப்பிடுவதாவது: ரிக் வேதத்தில் சரியான பாத அசைவுகளோடு ஆடும் மருத்துகளை ந்ருதவ: (நடனமாடுவோன்) என்று அழைக்கின்றனர்.
மார்பில் தங்க நகைகளோடு ஆடும் நடனக்காரர்களே! உங்கள் சகோதரத்துவத்தை நாடி மானுடப் பிறவிகளும் ஓடி வருகின்றனர். எங்களையும் பார்த்துக் கொள்வாயாக – என்று ரிக் வேத துதி கூறுகிறது (8-20-22)
மருத்துக்கள் தாளத்துக் கேற்ப ஆடுவதோடு மட்டும் நில்லாமல், பாடவும் செய்கின்றனர். மருத்துக்கள் ஆண்கள். பெண்களில் மிகச் சிறந்த நடனம் ஆடும் உஷை (அதிகாலைப் பொழுது) பற்றிய அழகிய பாடலும் உண்டு. அவள் பகட்டான ஆடை அணிந்து வரும் காட்சியை ரிக் வேத ரிஷி வருணிக்கிறார்.
“அதிகாலைப் பொழுது — உஷா— கிழக்கு வானத்தில் அழகிய வண்ணங்களில் தோன்றிவிட்டாள். பறவைகள் சிறகடித்துப் பாடுகின்றன (புள்ளும் சிலம்பின காண் – ஆண்டாள் திருப்பாவை)). மனிதர்கள் எழுந்து சுறுசுறுப்பான வேலைகளில் இறங்கிவிட்டனர். உஷத் காலம், ஒரு நடனக்காரி போல, எல்லோருக்கும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறாள்”.
உவமை பற்றிய விதிகள், மக்களுக்கு நன்கு தெரிந்த விஷயங்களையே, உயர்ந்த விஷயங்களையே உவமைகளாக்க வேண்டும் என்று சொல்லுகின்றன. வேத காலத்தில் நாட்டியம் என்பது மிகவும் பிரபலமாக இருந்ததால்தான் புலவர் இந்த உவமையைக் கையாளுகிறார்.
நாட்டியக் கலை மிகவும் உன்னத நிலைக்குச் சென்றதைக் காட்டும் – மிகவும் வளர்ச்சி பெற்றதைக் காட்டும் — பல உவமானங்கள் ரிக் வேதத்தில் வருகின்றன. நாட்டியக்காரிகள், சமூகத்தில் முக்கிய இடம் பெறுகின்றனர். அவர்கள் இல்லாமல் எந்தப் புனிதச் சடங்கும் நடைபெறமுடியாது. புனிதத்துவத்துக்கும், பூரனத்துவத்துக்கும் சின்னமாக விளங்குவது பூரண கும்பம். “ஓ! அழகிய பெண்மணியே, நெய்யும் தேனும் நிறைந்த அந்த பூரண கும்பத்தை எடுத்து வா” என்று இன்னும் ஒரு துதி கூறும்.
அமரகோசம் என்னும் அற்புத சம்ஸ்கிருத நிகண்டில் நாட்டியம் பற்றிப் பல சொற்கள் இருப்பதையும் நாகசாமி எடுத்துரைத்தார்:
தாண்டவம் நடனம் நாட்யம் லாஸ்யம் ந்ருத்யம் ச நர்த்தனே
தன்யத்த்ரிகம் ந்ருத்ய கீத வாத்யம் நாட்யம் இதம் த்ரயம்
(ஆங்கிலச் சொற்பொழிவில் இருந்து நான் மொழி பெயர்த்ததில் பிழைகள் இருந்தால் அவை என்னுடையவை என்று அறிக)
இனி சந்திரா ராஜன் எழுதிய காளிதாசன் எற ஆங்கில நூலில் சொல்லும் சில கருத்துக்களைக் காண்போம்:–
பரத மாமுனி, சம்ஸ்கிருதத்தில் எழுதிய நாட்டிய சாஸ்திரம் என்ற நூல்தான் உலகில் நாடகம், நாடகவியல் கோட்பாடுகள் பற்றிய மிகப் பழைய நூல் (பழங்காலத்தில் நாடகமும் நடனமும் இணைந்தே மக்கள் முன் வைக்கப்பட்டன).
வேத மந்திரங்களைப் பல்ர் பாடியதற்கான சான்றுகளைப் பார்க்கையில் அவை கோஷ்டி கானம் என்பது தெளிவாகிறது. மேலும் அதில் திரும்பத் திரும்ப வரும் பல்லவிகலையும் காண்கிறோம். மேலும் பெண்கள் அழகிய ஆடைகளையும் அணிகலன்களையும் அணிந்து கைகளில் நீர்க்குடங்களுடன் யாக மேடைகளைச் சுற்றி ஆடிப் பாடி நடன மாடிய காட்சிகளும் மந்திரங்களில் வருகின்றன. இந்தப் பல்லவி, ஆடல், பாடல் ஆகியன அக்காலத்தில் நாடகத்தின் ஆதி வடிவம் ஆகும்.
எங்களுக்கு வரம்பிலா மகிழ்ச்சியை அருள்வாயாக என்ற வரிகள் மீண்டும் மீண்டும் வருகின்றன ( ரிக் 10-100); மாட்சிமை பொருந்திய அன்னை உன்னை ஈன்றெடுத்தாள். அருள் பெற்ற அன்னை உன்னைப் பெற்றெடுத்தாள்– என்ற வரிகள் மீண்டும் மீண்டும் வருகின்றன ( ரிக் 10-134).
இந்திரனை நாட்டியக் காரன் என்று சொல்லும் ரிக்வேத மந்திரங்கள் வசந்த காலத்தில் நடனமாடும் மருத்துக்கலைப் பற்றியும் பாடுகின்றன (ரிக். 5—52; 6—63). அஸ்வினி தேவர்களும் இவ்வாறு போற்றப்படுகின்றனர்.

காளிதாசனில் நாட்டியம்
உலகப் புகழ் பெற்ற சம்ஸ்கிருதக் கவிஞன் கி.மு. முதல் நூற்றாண்டில் வசித்தான் என்னும் பல அறிஞர்களின் கருதை சங்க காலப் பாடல்களும் உறுதி செய்வதைப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் இதே பிளாக்கி- கடந்த ஐந்தாண்டுகளாக எழுதி வருகிறேன். அவனும் பல இடங்களில் நாட்டியம் பற்றிக் குறிப்பிடுகிறான். அவனுக்கு 500 ஆண்டுகளுக்குப் பின்னர் வாழ்ந்த வராஹமிகிரரும் பிருஹத் சம்ஹிதாவில் கிரகணமும், கிரகங்களும் நாட்டியப் பெண்களைப் பாதிப்பது பற்றி மூன்று இடங்களில் குறிப்பிடுவான்.
காளிதாசன் எழுதிய நடனக் குறிப்புகலைத் டனிக் கட்டுரையில் தருவேன்.
ரிக்வேதத்திலும் அதர்வ வேதத்திலும் நடனம் பற்றி வரும் இடங்கள் பின்வருமாறு:
ரி.வே.:–
1-130-7; 2—22-4; 5-52-12; 6-63-5; 7-33-9, 7-33-12, 7-10-95; 8-20-22, 8-24-9, 8-24-12, 8-92-2; 10-100, 10-123-5, 10-134, 10-132-6
அ.வே.
4-37-1, 4-37-4, 4-37-5, 7-12-2, 12-1-1, 12-1-41
ரிக் வேதத்தில் கந்தர்வர், அப்சரஸ் பற்றிய பாடல்களும் கூர்ந்து நோக்கப்படவேண்டியவை.
அதர்வவேதத்தில் பூமி பற்றிய பாடல் மக்கள் எப்படி ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர் என்று காட்டுகிறது.
இருபதுக்கும் மேலான இசைக் கருவிகள், இருபதுக்கும் மேலான ஆபரணங்கள், இருபதுக்கும் மேலான நடனக் குறிப்புகள் முதலியன் 3700 ஆண்டுகளுக்கு முந்தைய, உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் இருப்பது — ரோடி-கப்டா அவ்ர் மகான்—பற்றிய கவலையே இல்லாத ஒரு செழிப்பான நாகரீகத்தைக் காட்டுகிறது என்பதில் இனியும் ஐயம் உண்டோ!!

You must be logged in to post a comment.