காளிதாசன் நாடகத்தில் வியத்தகு விண்வெளி விஞ்ஞானம்!!

IndiaNameplate

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1286; தேதி: 13 செப்டம்பர் 2014

உலகப் புகழ்பெற்ற சம்ஸ்கிருதக் கவிஞனின் உலகப் புகழ்பெற்ற நாடகம் சாகுந்தலம். இயற்கைக் காட்சிகளின் வருணனை ஒரு புறம். மான்களையும் மாதவிப் பூங்கொடிகளையும் மனிதனுக்கு நிகராக நேசிக்கும் சகுந்தலையும் கண்வ மகரிஷியும் மறுபுறம்.

மனிதனின் சிந்தனையை இமயமலை அளவுக்கு உயர்த்தும் காளிதாசனின் உவமை நயம் ஒருபக்கம். அவனது சம்ஸ்கிருத மொழி நடை என்னும் அழகு மறுபக்கம். இப்படித் திரும்பிய இடமெல்லாம் சுவைதரும் காவியத்தில் ஒரு அரிய பெரிய விஞ்ஞான உண்மையையும் புதைத்து வைத்துள்ளான் கவி காளிதாசன்.

சாலைப் போக்குவரத்து

முதல் காட்சியில் சாலைப் போக்குவரத்து பற்றி ஒரு அரிய காட்சி வருகிறது. மன்னன் துஷ்யந்தனின் ரதம் செல்லும் வேகம் பற்றியது அந்தக் காட்சி. அதைப் படிக்கும்போது அந்தக் காலத்தில் ‘’சூப்பர் Fஆஸ்ட்’’ எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு நிகரான வேகத்தில் செல்லும் வண்டிகள் இருந்ததோ என்று எண்ண வைக்கிறான். எங்கள் பிரிட்டனின் மோட்டர்வேயில் கார்கள் செல்லும் வேகம் மணிக்கு 70 மைல். இங்கு ரயில்கள் 130 மைல் வேகம் வரை செல்ல முடியும். ஆகையால நமக்கு காளிதாசன் வருணிக்கும் காட்சி எதுவும் புதுமை இல்லை. ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன் இவ்வளவு வேகமாகச் செல்லும் ரதங்கள் இருந்ததா? அப்படிப்பட்ட வேகத்தில் செல்ல கான்க்ரீட் அல்லது ரப்பர் ரோடு அல்லவா வேண்டும். அப்படிப்பட்ட சிறந்த சாலைகள் இருந்தனவா?

இதோ அவனது ஸ்லோகம்

Yad aaloke suuksmam vrajati sahasaa tad vipulataam
Yad ardhe vicchinnam bhavati krtasamdhaanam iva tat
Prakrtyaa yad vakram tad api samarekham nayanayor
Name duure kimcit ksanam api na parsve rathajavaat
Sakuntalam Act 1—9

(வடமொழியில் ஸ்லோகம் கிடைத்தால் சரியான உச்சரிப்புடன் தமிழில் எழுதி இருப்பேன். கிடைக்காததால் எனது ஆங்கிலக் கட்டுரையில் இருந்ததை அப்படியே தருகிறேன்; பொறுத்தருள்க)

chandrayaan-1

விண்வெளிப் பயணம்
சாகுந்தலம் நாடகத்தின் ஏழாவது காட்சியில் விண்வெளிப் பயணம் பற்றி வரும் காட்சிதான் வியப்பானது. மஹாபாரத வன பர்வத்தில் வரும் அர்ஜுனனின் ஐந்து ஆண்டு விண்வெளிப் பயணம் குறித்து ஏற்கனவே எழுதி விட்டேன். அங்கு இந்திரனின் ரதத்தைச் செலுத்திய அதே டிரைவர் மாதலிதான் இங்கும் துஷ்யந்தனுக்கும் டிரைவர்.

இங்கு ரதம், டிரைவர் என்பதெல்லாம் சங்கேத மொழிச் சொற்கள் இந்திரன் ரதம் என்பது விண்வெளிக் கப்பல், டிரைவர்/சாரதி என்பது விண்வெளி வீரர். இப்போது அமெரிக்கா பயன்படுத்தும் கொலம்பியா, அட்லாண்டிஸ் முதலிய ‘’ஸ்பேஸ் ஷட்டில்’’ வாகனங்களைவிட அதி நவீன ‘’ஸ்பேஸ் ஷட்டில்’’ இந்திரனிடம் இருந்தது என்பது அதன் வருணனையில் இருந்து தெரிகிறது.
மன்னன் வாய் வழியாக காளிதாசன் கூறுகிறான்:

தூசி கிளப்பவில்லை
சத்தம் போடவில்லை
இறங்கிய இடத்தில் தடயம் ஏதும் விடவில்லை.

இப்போது ரஷ்யா, அமெரிக்காவிடம் உள்ள விண்வெளி ஓடங்கள் இதை மூன்றும் செய்தே தரை இறங்க முடியும். ஆனால் துஷ்யந்தன் வந்த விண்வெளி வாகனம் இதை மூன்றும் செய்யாதது துஷ்யந்தனுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

space_shuttle_4

காளிதாசன் சொல்லுவதைப் படிக்கையில் அவனே விண்வெளி வாகனத்தில் பயணம் செய்தானோ என்றே வியக்க வேண்டி இருக்கிறது. விமானி அறையில் (காக்பிட்) உட்கார்ந்திருப்போருக்கு அல்லது ராக்கெட்டில் பயணம் செய்வோருக்கு மட்டும் தெரியும் காட்சியை வருணிக்கும் ஸ்லோகம் இதோ:

Sailanaanaam avarohatiiva sikharaad unmajjataam medinii
Parnaabhyanataraliinataam vijahati skandhodayaat paadapaah
Samtaanais tanubhaavanastasalilaa vyaktim bhajanty aapaghaah
Kenaapy utksipateva pasya bhuvanam matpaarsvam aaniiyate

மாதலி: மன்னர் மன்னவா! இன்னும் ஒரு நொடியில் நாம் பூமியில் இறங்கப் போகிறோம்.

மன்னன்: (ரதத்தில் இருந்து கீழே பார்த்தவாறு): அம்மாடியோவ்! என்ன வேகத்தில் கீழ் நோகிச் செல்லுகிறோம். பூலோகவாசிகளின் தோற்றம் அற்புதமாக இருக்கிறதே!

மலைகளின் முகடுகள் மேல் நோக்கி எழுவது போலவும், பூமி கீழ் நோக்கி விழுவது போலவும் தெரிகிறதே.

இலைகள் போர்த்திய மரங்கள் எல்லாம் இப்போது அடிமரத்தோடு பெரிதாகத் தெரிகின்றன.

மேலேயிருந்து பார்க்கையில் மெல்லிய கோடாகப் பார்வையில் தெரிந்தும் தெரியாமலுமிருந்த நதிகள், பரந்த நீர்ப்பெருக்காகத் தோன்றுகின்றன.

அடடா, பூமியை யாரோ என்மீது எறிந்ததுபோல என்னருகே வருகிறதே (காட்சி 7-8)

shuttle3

மாதலி: மன்னவா! சரியாகச் சொன்னீர்கள் என்ன அற்புதமான பூமி இது!
இந்த சம்பாஷனைக்குப் பின் இருவரும் ஹேமகூட பர்வத ‘’கிம்புருஷர்கள்’’ பற்றி விவாதிக்கிறார்கள். ‘’கிம் புருஷன்’’ என்றால் “என்ன மனிதன்?” என்று பொருள். வெளி கிரக வாசிகளைப் பார்த்தாலோ, விண்வெளிவீரர் போல பூதாகார உடை (ஸ்பேஸ் ஸூட்) அணிந்து வந்தாலோ அவரைப் பார்த்து நாமும் கிம் புருஷ:? என்று வியப்போம். இப்படிப்பட்டவர்கள் ஹேமகூட பர்வதத்தில் வசிப்பதாக மதாலி கூறுகிறான்.

மன்னன் ( மிகவும் ஆச்சர்யம் கலந்த தொனியில்):
சக்கரங்கள் சத்தம் போடாமல் வழுக்கிச் செல்லுகின்றன!
சூறாவளித் தூசி எதுவும் எழும்பவில்லை!!
பூமியைத் தொடாமலேயே நிற்கிறது!!!
இறங்கிய இடத்தில் ஒரு தடயமுமே இல்லையே!!!!

மாதலி: மன்னர் மன்னா! இதுதான் உங்கள் இகலோக தேருக்கும் இந்திரனுடைய ரதத்துக்கும் உள்ள வித்தியாசம் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?

இப்படி இருவரும் அற்புதமாக பேசியதைக் காளிதாசன் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதி இருக்கிறான். ஒரு காலத்தில் அமெரிக்காவோ ரஷ்யாவோ இந்திரனுடைய விண்வெளி ரதம் போல ஒரு ஷட்டிலைக் கண்டுபிடித்தால் அதற்கு ‘’இந்திர ரதம்’’ என்று பெயர் சூட்ட வேண்டும் ஏனெனில் இப்போதுள்ள எல்லா விண்வெளி வாகனங்களையும் விட மிக Advanced Technology “அட்வான்ஸ்டு டெக்னாலஜி” — பற்றி காளிதாசன் பேசுகிறான்!!!

shuttle 1

–சுபம்–