
Post No. 9756
Date uploaded in London – – –21 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பழமொழிகள் காலத்தின் பொக்கிஷம்!
ச.நாகராஜன்
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு இனத்திலும் ஒவ்வொரு மொழியிலும் பழமொழிகள் உண்டு. இவை காலத்தின் பொக்கிஷம். இவை தரும் விவரங்கள் ஏராளம், ஏராளம்!
தமிழ் மொழியில் பழமொழிகள் பல்லாயிரக் கணக்கில் உண்டு. கடந்த பல்லாயிரம் வருடமாக வாழ்ந்து வரும் மூத்த குடியான தமிழ்க் குடி தனது அனுபவத்தையும், அறிவையும் இந்தப் பழமொழிகளில் கொட்டி வைத்திருக்கிறது.
இவற்றைத் தொகுக்கப் பல முயற்சிகள் கடந்த பல நூறு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இன்று வரை இந்த நல்ல முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வளரட்டும் இந்த முயற்சி.
10760 பழமொழிகளைத் தொகுத்து அனவரத விநாயகம் பிள்ளை என்பவர் 1912இல் ‘பழமொழி அகராதி’ என்ற நூலை வெளியிட்டார்.
1887இல் ஹெர்மன் ஜென்சன் என்பவர் 3644 பழமொழிகள் கொண்ட ஒரு நூலை வெளியிட்டார். இதில் தனது ஆங்கில மொழிபெயர்ப்பையும் சில அரிய விவரங்களையும் அவர் தொகுத்துத் தந்தார்.
1842இல் முதன் முதலாக பழமொழி தொகுப்பு நூல் வெளியானது. இதை யாழ்ப்பாணத்தில் இருந்த பெர்சிவல் தொகுத்து ‘பழமொழித் திரட்டு’ என்ற பெயரில் வெளியிட்டார்.
தமிழ் அறிஞரான கி.வா.ஜ. ஒவ்வொரு ஊருக்கும் செல்லும் போது அந்த வட்டாரத்தில் வழங்கி வந்த பழமொழிகளைத் தொகுக்க ஆரம்பித்தார்.
பின்னர் அவற்றை தொகுதிவாரியாக வெளியிட ஆரம்பித்தார்.
தமிழ்ப் பழமொழிகள் தொகுதி – 1இல் 5838 பழமொழிகள் இடம் பெற்றன. ‘அ’ முதல் ‘ஐ’ வரை அகர வரிசைப்படி இவை அமைக்கப்பட்டுள்ளன.
அடுத்து தொகுதி – 2இல் 5839 முதல் 11207 முடிய உள்ள பழமொழிகள் இடம் பெற்றன. ‘ஒ’ முதல் ‘சூ’ வரை அகர வரிசைப்படி இவை அமைக்கப்பட்டுள்ளன.
அடுத்து தொகுதி – 3இல் 11208 முதல் 16967 முடிய உள்ள பழமொழிகள் இடம் பெற்றன. ‘செ’ முதல் ‘பூ’ வரை அகர வரிசைப்படி இவை அமைக்கப்பட்டுள்ளன.
அடுத்து தொகுதி – 4இல் 16968 முதல் 21355 முடிய உள்ள பழமொழிகள் இடம் பெற்றன. ‘பெ’ முதல் ‘ஸ’ வரை அகர வரிசைப்படி இவை அமைக்கப்பட்டுள்ளன.
நான்காம் தொகுதியில் விடுபட்டுப் போன இன்னொரு 207 பழமொழிகள் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளன. இது தவிர அருஞ்சொற்பொருள் அகராதி ஒன்றும் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளது.
மார்ஜாலம் என்ற சொல் பழமொழியில் வருகிறது. இதற்கான பொருள் என்ன? இந்த அருஞ்சொற்பொருள் அகராதியைப் பார்த்தால் பூனை என்று தெரிந்து கொள்ளலாம்.
சங்க இலக்கிய நூல்களுள் ஏராளமான பழமொழிகள் இடம் பெறுகின்றன.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாக அமைகிறது பழமொழி நானூறு. 400 பாடல்களும் சிறப்புப் பாயிரம், கடவுள் வணக்கத்தையும் சேர்த்தால் ஆக மொத்தம் 401 பாடல்களை இந்த நூல் கொண்டுள்ளது. மூன்றுரை அரையனார் என்ற சமண முனிவர் இயற்றிய அற்புதமான இந்த நூல் 34 தலைப்புகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் பழமொழி சார்ந்த ஒரு பேருண்மை இருக்கும் படி உள்ள சிறப்பான நூல் இது.
அப்பர் பெருமான் பழமொழியை அமைத்து ஒரு பழமொழி பதிகத்தையே அருளியுள்ளார்.
இன்றைய திரைப்படப் பாடல்களிலும் பழமொழிகள் இடம் பெற்றுள்ளன.
இன்னும் ஏராளமான பழமொழி சார்ந்த பாடல்கள், நூல்கள் தமிழில் உண்டு.
தமிழில் மட்டும் அல்ல பழமொழிகள். சம்ஸ்கிருதத்திலும் உள்ளன. இந்த சம்ஸ்கிருத நூல்களின் தொகுப்போ விரிவானது; பெரியது.
இதர நாட்டு மொழிகளில் உள்ள பழமொழிகளின் தொகுப்புகள் அந்தந்த நாட்டில் உள்ள பழமொழி ஆர்வலர்களாலும், அறிஞர்களாலும் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
சான்ஃபிரான்ஸிஸ்கோ நூல் நிலையத்திற்கு (அங்கு இருக்கும் போதெல்லாம்).அடிக்கடி செல்லும் வழக்கத்தைக் கொண்டவன் நான்.
அங்கு இப்படிப்பட்ட தொகுப்பு நூல்களைப் பார்த்தால் பிரமிப்பையே தரும்.
தமிழிலும் இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள பழமொழிகளின் தொகுப்பு நூல்கள் வெளியிடப்பட வேண்டும். இது ஒரு அரிய பெரிய முயற்சி. ஆனால் காலத்தின் கட்டாயத் தேவை இது. பொறுத்திருந்து பார்ப்போம் – யார் முயற்சியை எடுக்கிறார்கள் என்று!
****
TAGS- பழமொழிகள், கி.வா.ஜ.