தமிழர்களின் மணல் ஜோதிடம்; அப்பர் தரும் அதிசயத் தகவல் (Post No.4279)

Written by London Swaminathan

 

Date: 7 October 2017

 

Time uploaded in London- 11-50 am

 

Post No. 4279

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தேவாரம் என்பது சிவனின் புகழ்பாடும் கீதங்கள் மட்டும் அடங்கியது அல்ல. தமிழர்களின் பண்பாடு, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் அடங்கிய என்சைக்ளோபீடியா/ கலைக் களஞ்சியம். பல அற்புத நிகழ்ச்சிகளும் வரலாற்று விஷயங்களும் அடங்கிய பாடல் தொகுப்பு. சங்க இலக்கியத்தில் பரணர் என்னும் பார்ப்பனப் புலவர் எப்படி எண்பதுக்கும் மேலான வரலாற்று நிகழ்ச்சிகளைப் பாடல் தோறும் வைக்கிறாரோ அப்படி அப்பர் என்னும் திரு நாவுக்கரசர் பாடிய தேவாரத்தில் நாம் ஏராளமான புதுப்புது தகவ ல்களை அறிகிறோம்.

பாட்டன், பூட்டி உறவு முறை பற்றி அப்பர் பாடியதை எழுதினேன். இதன் மூலம் உறவு முறைச் சொற்களை அறிந்தோம். மாணிக்கவாசகர் அப்பருக்கும், சம்பந்தருக்கும் முன்னர் வாழ்ந்தவர் என்பதை நரி-பரி பாடல் மூலம் அப்பர் நமக்கு அறிவித்தார். தர்மி என்ற பார்ப்பனசொனுக்கு சிவபெருமான் கவிதை எழுதித் தந்த திருவிளையாடலையும் அப்பர் கூறியமையால் அறிந்தோம்.  தமிழ் சங்கம் அவர் காலத்துக்கு முன் இருந்ததை அறிந்தோம். சோழ மன்னர்கள், அவருக்கு முந்தைய நாயன்மார்கள், சமணர்களின் ரஹசியங்கள் முதலியவற்றை நமக்குத் தெரிவிப்பதும் அப்பரே.

 

அவர் ஒரு நாயன்மார் மட்டுமல்ல; வரலாற்றுப் பேரறிஞர்.

பாடலிபுத்திரம் வரை சென்று நாட்டை அறிந்தவர். கங்கை-காவிரி, கங்கை- கோதாவரி பற்றிப் பாடுகிறார். அவர் பாட்டில் வரும் பூகோள விஷயங்களை தனி ஆராய்ச்சிக் கட் டுரையில் தருகிறேன். கங்கை நதி வங்காளத்தில் நுழைந்தவுடன் ஆயிரம் கிளைகளாகப் பிரியும் அற்புத விஷயத்தை ‘ஆயிரம் மாமுக கங்கை’ என்ற வரிகளில் நமக்குச் செப்புவார்

 

 

இன்றைய கட்டுரையில் அவர் சொல்லும் அதிசய சுழி- மணற் சுழி சோதிடம் பற்றிக் காண்போம்.

 

திருப்பழனம் என்னும் ஊரில் சிவனை ஏத்திப் பாடும் ஒரு பாடலில் அவர் புகல்வது யாதோ?

வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே யாயிடினும்

பஞ்சிற்கார் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான்

அஞ்சிபோய்க் கலி மெலிய அழலோம்பும் அப்பூதி

குஞ்சிபூ வாய் நின்ற சேவடியாய் கோடியையே

 

-நாலாம் திருமுறை, அப்பர் தேவாரம்

பொருள்

ஈசன் என்னைக் கவர்ந்து ஆட்கொண்டு வளை கொண்ட நிலையில் ஏங்கவைத்து வாராமல் இருக்கிறார். ஆயினும் மென் சிறகுகளை உடைய அன்னப்பறவை பறந்தோடும் திருப்பழனத்தில் அவர் இருக்கிறார். அது மட்டுமா? கலியுகத்தின் கொடுமையைக் குறைப்பதற்காக

நாள் தோறும் யாக யக்ஞங்கள் செய்யும் அப்பூதி அடிகளின் தலைமுடி மீது வழங்கும் பூப்போல அவரது திருவடிகள் உள்ளன. கோடிழைத்துப் பார்ப்பேன்.

 

இந்தப் பாட்டில் இரண்டு முக்கியச் செய்திகள் உள.

அப்பூதி அடிகள் என்னும் பார்ப்பனர், திருநாவுக்கரசர் மீது பேரன்பு பூண்டவர். நாயன்மார்களில் ஒருவர். அவர் தினமும் ஹோமம் செய்வது எதற்காகத் தெரியுமா? தனக்காக அல்ல. கலியுகத்தினை அடக்கி ஒடுக்கி மெலியச் செய்வதற்காக. அவர் த லை  மீது ஈசன் எப்போதும் ஆசீர்வாதம் செய்து கொண்டே இருக்கிறான். ஆக ஒருவர் யாகம் செய்தால் கலியுகம் மாறும் என்ற செய்தியையும் அப்பூதி அடிகள் போன்றோர் செய்யும் யாகங்கள் சுயநலம் கருதி செய்யப்பட்டது அல்ல என்றும் அப்பர் அடித்துப் பேசுகிறார்.

 

நமக்கு வேண்டியது கோடியையே என்ற கடைசி சொல்லாகும். இது தமிழர்களின் விநோத சோதிடம். “காரியம் கைகூடுமா?” என்பதற்கும் பல பொருள்கள் உண்டு. இது பற்றி தமிழர்களின் கயிறு சோதிடம் என்ற கட்டுரையில் சொன்னேன்.

 

இப்போது கோடிழைத்தல் பற்றிப் பார்ப்போம்.

1.ஒரு பெண் தனது கணவன் அல்லது காதலன் விரைவில் தன்னிடம் வருவானா என்று பார்க்க இரண்டு கோடு இழைப்பாள் கண்ணை மூடிக்கொண்டு. இரண்டும் சேர்ந்தால் காரியம் கை கூடும் ஒரு வேளை இரண்டு கைகளால் கோடு போடுவர் போலும்!

  1. இதற்கு மற்றொரு விளக்கமும் உண்டு. ஒரு வட்டத்தை கண்களை மூடிக்கொண்டு வரைவர். அந்த வட்டம் இணைந்து வட்டமாக இருந்தால் அந்தக் காரியம் அல்லது நினைத்தது நிறைவேறும்; இதைச் சுழி இடுதல் என்றும் உரைப்பர்.

 

இதை அப்பரே பல பாடல்களில் சொல்கிறார்:—

பாடலாக்கிடும் பண்ணொடு பெண்ணிவள்

கூடலாக்கிடும் குன்றின் மணற்கொடு

கோடல் பூத்தளலர் கோழம்பத்துள்மகிழ்ந்

தாடுங் கூத்தனுக்கன்பு  பட்டாளன்றே 5-64-4

 

நீடு நெஞ்சுள் நினைந்து கண்ணீர் மல்கும்

ஓடு மாலினோ டொண்கொடி மாதராள்

மாட நீள்மரு கற்பெருமான்வரில்

கூடுநீ என்று கூடலிழைக்குமே -5-88-8

 

இரண்டு பாடல்களும் அப்பரின் ஐந்தாம் திருமுறையில் உள்ளவை

 

இரண்டு பாடல்களில் வரும் “கூடலாக்கிடும் குன்றின் மணற்கொடு”, “கூடு நீ என்று கூடலிழைக்குமே” என்ற வரிகளின் பொருள் என்ன?

 

மாணிக்கவாசகரின் திருக்கோவையாரிலும் (பாடல் 186) உளது

 

ஆழி திருத்தும் புலியூர் உடையான் அருளின் அளித்து

ஆழி திருத்தும் மணற்குன்றின் நீத்து அகன்றார் வருக என்று

ஆழி திருத்திச் சுழிக்கணக்கு ஓதி நையாமல் ஐய

ஆழி திருத்தித் தாக்கிற்றி யோஉள்ளம் வள்ளலையே

— திருக்கோவையார் 186

ஆழி= வட்டம், சுழி

 

“கூடல் இழைத்தல் என்பது தலைமகள், இம்மணற்குன்றின் கண் நீத்து அகன்ற வள்ளலை உள்ளத்தை நெகிழ்த்து இவ்விடத்தே தரவல்லையோ எனக் கூடற்றெய்வத்தை வாழ்த்திக் கூடலிழைத்து வருந்தா நிற்றல்- திருக்கோவையார் உரை-186

 

கூடல் இழைப்பது எப்படி?

பெரியதொரு வட்டமாகக் கோடு கீறி, அதன் உள்ளே சிறு சுழிகளை அளவிடாது சுழித்து, அவற்றை இரட்டைப்பட எண்ணி, ஒற்றைபடாதுளதோ என்று நோக்கல்; மிஞ்சாதேல் தலைவன் வருவான் என்பது மரபு.

 

அதாவது வட்டம், முழு வட்டமாக இருக்கும் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் குறைவட்டம், நிறை வட்டம் ஆகியவற்றை எண்ணி எது அதிகமாக இருக்கிறது என்று காண்டல்.

 

தலைவன் பிரிவாற்றாமையால் வருந்தும் காதலி அல்லது மனைவி இப்படிப் பார்ப்பது தமிழர் வழக்கம். இதை ஆண்டாளின் நாச்சியார் திருமொழிக்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளையும் விளக்குவார்:– கூடலாவது வட்டமாகக் கோட்டைக்கீறி அதுக்குள்ளே சுழிசுழியாகச் சுற்றும் சுழித்து, இவ்விரண்டு சுழியாகக் கூட்டினால் இரட்டைப்பட்டால் கூடுகை, ஒற்றைப்பட்டால் கூடாமை என்று சங்கேதம்”

 

இவ்வாறன்றிக் கண்ணை மூடிக்கொண்டு கீறிய கோடு, எழுவாய், இறுவாயிரண்டும் கூடியிருப்பின், வந்து கூடுவன், விலகின் வாரான் என்பதுமுண்டு.

பிற்காலத்தில் வந்த ‘கைலை பாதி காளத்திபாதி’, ‘நான்முகன் திருவந்தாதி’, ‘ஐந்திணை ஐம் பது’, சீவக சிந்தாமணி, ‘கலிங்கத்துப் பரணி’ முதலிய நூல்களில் இந்த வழக்கு குறிப்பிடப்படுகிறது.

 

இதுகாறும் படித்தவற்றில் இருந்து நாம் அறிவது யாதெனில், கூடல் இழைத்தல் சிற்சில மாறுபாடுகளுடன் வழங்கப்பட்டது.

 

மிகவும் சுலபமான வழி- கண்ணை மூடிக்கொண்டு பெரிய வட்டம் கீற வேண்டும்; இணைந்தால் காரியம் கைகூடும்

பெரிய வட்டத்துக்குள் பல சுழிகளைப் போடுதல் ; அவைகளில் நிறைவான வட்டங்கள் இரட்டைப் படை எண்ணில் வந்தால் காரியம் வெற்றி; காதலன் வருவான்.

 

மூன்றாவது முறை:- கண்களை மூடிக்கொண்டு இரு கோடுகளை இரண்டு கைகளாலும் வரைதல் அவை சேர்ந்தால், காரியம் நிறைவேறும்.

 

இது தவிர கோவில் முதலியவற்றில் துவஜஸ்தம்பம் அருகில் பெரிய தாமரை மலர் போன்ற வட்டப் பூ வரையப்பட்டிருக்கும். அதில் சம்பந்தப்பட்டவர்கள் கைகளை வைப்பர். இதழ் போன்ற பகுதிகளில் நாம் வைக்கும் கைகள் நம்மை அறியாமலேயே நடுப்பகுதிக்கு, மொட்டு போன்ற பகுதிக்கு வந்து இணைந்தால் காரிய ம் கைகூடும்; இதை எனது நண்பர்கள் மதுரை மீனாட்சி கோவிலில் செய்வதைப் பார்த்து இருக்கிறேன்.

 

என் கருத்து:

இரண்டு கோடுகள் போடல், பெரிய வட்டம் ஒன்று மட்டும் வரைதல் ஆகியவற்றில் நம்மை அறியாமலேயே தவறு (மோசடி) செய்யமுடியும்; அதாவது பல முறை இப்படி வரைந்து பழகிவிட்டால் செய்ய முடியும். ஆனால் பெரிய வட்டத்துள் நிறைய சுழிகளைப் போட்டுவிட்டு வட்டத்துக்குள் உள்ள சுழிகளை மட்டும் கணக்கிட்டு, அதில் முழுச் சுழியாக இருப்பவை இரட்டைப் படை எண்ணில் இருந்தால் காதலன் வருவான் அல்லது நினைத்த காரியம் நிறைவேறும் என்பதே பொருத்தம்.

ஆய்வுக்கட்டுரைக்கு உதவிய நூல்கள்

1.நாலாம் திருமுறை- தருமபுர ஆதீனம்

2.நாலாம் திருமுறை- வர்த்தமானன் பதிப்பகம்

3.திருக்கோவையார்

 

More ASTROLOGY Articles in my blog

 

  1. ஜோதிடம்| Tamil and Vedas

tamilandvedas.com/tag/ஜோதிடம்

Posts about ஜோதிடம் written … ஒரு கயிறு அல்லது நூலை … go to tamilandvedas.com OR …

  1. வேதத்தில்ஜோதிடம் | Tamil and Vedas

tamilandvedas.com/tag/வேதத்தில்…

Posts about வேதத்தில் ஜோதிடம் written by Tamil and Vedas

  1. நாடிஜோதிடம் | Tamil and Vedas

tamilandvedas.com/tag/நாடி…

Posts about நாடி ஜோதிடம் written by Tamil and Vedas

 

 

Tamil Astrology: Rope Trick for Predictions! | Swami’s …

swamiindology.blogspot.com/2013/02/tamil-astrology-rope…

Today’s article is about a Rope Trick. It is not a magic like the famous Indian Rope Trick by the magicians. Actually it is a thread trick. What they do is they use …

 

Tamil Astrology: Rope Trick for Predictions! | Tamil and Vedas

tamilandvedas.com/2013/02/27/tamil-astrology…

Tamil Astrology: Rope Trick for Predictions! Tamils have novel ways of predicting your future. They listen to lizards and predict what is going to happen. They watch …

 

நேபாள ஜோதிடர்–புது பத்ததியை வகுத்த ஸ்ரீபதி | Tamil and Vedas

tamilandvedas.com/2012/12/20/நேபாள…

Tamil and Vedas A blog exploring themes in Tamil and vedic literature. நேபாள ஜோதிடர்–புது பத்ததியை …

 

ஜோதிட மேதைகள் | Tamil and Vedas

tamilandvedas.com/tag/ஜோதிட…

Posts about ஜோதிட மேதைகள் written by Tamil and Vedas

 

புத்திசாலி ஜோதிடர் | Tamil and Vedas

tamilandvedas.com/tag…

Posts about புத்திசாலி ஜோதிடர் written by Tamil and Vedas

 

திருடர்கள் இரண்டு வகை! ஜோதிடர்கள் மீது மனு தாக்குதல்! (Post …

tamilandvedas.com/2016/08/05…

Written by london swaminathan Date: 5th August 2016 Post No. 3036 Time uploaded in London :– 7-52 AM ( Thanks for the Pictures) DON’T REBLOG IT AT LEAST FOR …

 

 

TAGS: கூடல் இழைத்தல், மணல் ஜோதிடம், தமிழர், அப்பர்

–SUBHAM–