அற்புதமான பக்த மீராபாய் சரித்திரம் (Post No.9762)

அற்புதமான பக்த மீராபாய் சரித்திரம் (Post No.9762)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9762

Date uploaded in London – –  –22 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

அற்புதமான பக்த மீராபாய் சரித்திரம்

லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 21-6-2021 அன்று ஒளிபரப்பான உரை!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.

பிருந்தாவனம், கிரிதர கோபாலன், பக்த மீராபாய் – ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த சொற்கள் இவை. பக்திக்கான இலக்கணமாக வாழ்ந்தவர் பக்த மீராபாய். அவரது சரித்திரம் அற்புதமான ஒன்று!

அந்த நாளும் வந்திடாதோ, பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ என்று இன்றும் கூட நாம் கேட்கும் அருமையான பாடலை பாரத ரத்னா திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரலில் கேட்கும் போது எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது.

காற்றினிலே வரும் கீதம்! கண்கள் பனித்திட பொங்கும் கீதம்!! கல்லும் கனியும் கீதம்! பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம், பண்ணொளி பொங்கிடும் கீதம்! காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் மதுர மோகன கீதம், நெஞ்சினிலே, நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி நினைவழிக்கும் கீதம், சுனை வண்டுடன் சோலைக் குயிலும் மனங்குவிந்திடவும் வானவெளிதனில் தாரா கணங்கள் தயங்கி நின்றிடவும், ஆ.. என் சொல்வேன் மாயப்பிள்ளை வேய்ங்குழல் பொழி கீதம், நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில் நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான், காலமெல்லாம், காலமெல்லாம், அவன் காதலை எண்ணி உருகுமோ என் உள்ளம், காற்றினிலே வரும் கீதம்!

அருமையான இந்தப் பாடல் 1945ஆம் ஆண்டு வெளி வந்த பக்த மீரா படத்தில் வரும் பாடல். எம்.எஸ். சுப்புலட்சுமியின் இனிய குரல் ஒரு புறம் இருக்க, இதை அருமையாக எழுதியவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.இசை அமைத்தவர் டி.எஸ்.வெங்கட்ராமன் அவர்கள்.

பக்த மீராவின் அற்புதமான உணர்வுகளை நம்மிடையேயும் எழுப்பிய அமர வரிகள் இவை. கிருஷ்ண பக்தியில் தோய்ந்து தனது பாடல்களால் நம்மையும் அதில் தோயச் செய்யும் பக்த மீராபாயின் 1500க்கும் மேற்பட்ட பாடல்கள் பக்தி இலக்கியத்தில் தனி ஒரு சிறப்பான இடத்தைப் பெறுபவையாகும்.

ஜோத்பூர் அரசை நிர்மாணித்தவர் ராவ் ஜோதா. அவரது மகன் ராவ்தூதா. அவரது இளைய மகன் தான் ரத்தன் சிங் ரதோர். அவருக்கும் வீரகுமாரிக்கும்

1498ஆம் ஆண்டு குர்கி என்ற கிராமத்தில் ராஜபுதனத்து இளவரசியான மீராபாய் பிறந்தார். மிஹிரா (மீரா) என்ற சொல்லுக்கு சூரிய சந்திர தேஜஸ் கொண்டவர் என்று பொருள். மீராபாயின் சரியான வரலாறு நமக்குக் கிடைக்காத நிலையில், மீராவின் இளமைப் பருவம் பற்றியும் அந்தப் பருவத்தில் அவருக்கு எப்படி கிருஷ்ணரிடம் ஈர்ப்பு ஏற்பட்டது என்பது பற்றியும் ஏராளமான செய்திகள் உண்டு. முதல் செய்தி அவரது இளமைப் பருவத்தில் அவருக்குக் கிடைத்த கிருஷ்ணர் பொம்மையை வைத்து அவர் விளையாடும் போது அவரது அம்மா அது தெய்வீகத் தோற்றம் என்றும் அதைக் கண்டபடி வைத்து விளையாடக் கூடாது என்றும் சொல்ல உடனே அளப்பரிய மதிப்பும் அன்பும் அவருக்கு கிருஷ்ணர் பால் ஏற்பட்டது என்று கூறுகிறது.

இன்னொரு செய்தி, அவரது இளமைப் பருவத்தில் அவரது இல்லத்திற்கு வந்த ரூப கோஸ்வாமி என்ற சாது அவருக்கு ஒரு சிறிய கிருஷ்ண விக்ரஹத்தை அளிக்க அதன் பால் பக்தியும் பிரேமையும் அவருக்கு ஏற்பட்டது என்று கூறுகிறது. குழந்தை வளர்ந்த போது ஒரு கல்யாண ஊர்வலம் வர, அதை மாடத்திலிருந்து பார்த்த மீரா குதிரை மீது அமர்ந்து வரும் மாப்பிள்ளையைப் பார்த்துப் பின்னர், எனக்கு மாப்பிள்ளை யார் என்று அவரது அம்மாவிடம் கேட்க அவரோ, உனக்கு கிருஷ்ண பகவானே தான் மணமகன் என்று கூற, மீரா தனக்கு கிருஷ்ணனையே மணாளனாக வரித்தாள் என்று ஒரு வரலாறும் உண்டு.

துரதிர்ஷ்டவசமாக மீராவின் தாயார் அவரது இளம் வயதிலேயே இறந்தார். அவரது தந்தையோ காலத்தின் நிர்பந்தத்தால் மகத்தான போர்களில் ஈடுபட வேண்டியதாயிற்று. ஆகவே இளம் ராஜகுமாரியான மீரா, தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் வளர்க்கப்படுவதற்காக ஜெய்பூரிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேட்தா (Medta) என்ற இடத்திற்கு அனுப்பப்பட்டார். 1516ஆம் ஆண்டு அவருக்கு 18 வயது ஆனது. சிசோதயா வம்சத்தைச் சேர்ந்த சித்தோர்கர் இளவரசனுடன் அவரது திருமணம் நிச்சயிக்கப்பட்டது.. அப்போது முஸ்லீம் படையெடுப்பு ஆரம்பித்திருந்தது. ஆகவே அவர்களை வலுவாக எதிர்க்க ராஜபுதனத்தின் இரு வம்சங்கள் இணைவதற்குச் சாதகமாக இரு வமிசத்தாரும் கூடி இந்த முடிவை எடுத்தனர். வரலாற்றுச் செய்தியின் படி இந்த திருமணத்திற்கு முன்னம் மீரா தனது கிருஷ்ண பொம்மையை மணக்கும் சடங்குகளைச் செய்து கொண்டார். அவரது கணவரின் பெயர் ராணா கும்பா எனப்படும் போஜராஜன் (Bhojaraj).  மீரா அரசவம்சத்தின் குல தெய்வமான துளஜ பவானியையோ சிவபிரானையோ வணங்க மறுத்தார். இதனால் புகுந்த வீட்டில் ஒரு பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

ஒரு நாள் மீராவின் அறையில் அவரது பேச்சுக் குரலும் உற்சாகமான சிரிப்பலையும் எழ அவரது கணவன் சந்தேகம் மொண்டு அறையை வலிமையுடன் தள்ளித் திறந்து பார்க்க, உள்ளே மீரா தனது கிருஷ்ண விக்ரஹத்தின் முன்னர் கிரிதர கோபாலனுடன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து திகைத்தான். இந்தத் திருமணம் மூன்று ஆண்டுகள் தான் நிலைத்தது. தனது உண்மையான கணவன் கிருஷ்ணரே என்பதை அவர் வலியுறுத்திக் கூறினார். அவரது புகுந்த வீட்டார் அவரை பயத்துடன் பார்த்தனர். ஏனெனில் ராஜபுத்திர பழக்க வழக்கங்கள் எதையும் அவர் பின்பற்றவில்லை; மறுத்து விட்டார். மாறாக கோவில்களுக்குச் செல்வது, பாடுவது, ஆடுவது என்று இருந்ததோடு அந்தஸ்து, ஜாதி வேறுபாடின்றி அனைவருடனும் சர்வ சாதாரணமாகப் பழகி வந்தார். தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த ரவிதாஸ் என்பவரை அவர் குருவாகவும் கொண்டார். இதனால் வெறுப்புற்ற அவரது புகுந்த வீட்டார் அவரைக் கொல்ல பல முயற்சிகள் எடுத்தனர். அவரது மைத்துனரும் நாத்தனாரும் அவருக்கு எதிராகக் கிளம்பினர்.

முதல் முயற்சியாக அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதை கிருஷ்ண நிவேதனம் செய்யப்பட்ட அமிர்தமாக அவர் அருந்த அவரை அந்த விஷம் ஒன்றும் செய்யவில்லை. அடுத்து ஒரு நஞ்சு கக்கும் பாம்பை மலர்க்கூடையில் வைத்து அவரிடம் தந்தனர். அவர் கூடையைத் திறந்த போது பாம்புக்கு பதிலாக மலர் மாலை ஒன்று இருந்தது. பின்னர் ஒரு முள் படுக்கையை அவருக்குத் தர அதிலும் அவர் படுத்தார். ஆனால் முட்கள் ரோஜா மலர்களாக மாறி இருந்தன. அவருக்குத் தீங்கு எதுவும் ஏற்படவில்லை. அவரது தந்தையும் இறந்து விட 1527ஆம் ஆண்டு வாக்கில் மீராபாய் தனது அரண்மனையை விட்டு வெளியேறினார். ஸ்தலம் ஸ்தலமாகச் சென்றார்.  அங்கெல்லாம் இறைவனின் நாமத்தை விரஜ மொழியில் இனிய பாடல்களால் பாடி நர்த்தனம் செய்து பக்திப் பரவசத்தை அனைவருக்கும் ஊட்டினார்.

Merrabai temple at Chittorgarh
Merta in Rajasthan, where Meera lived.

கொலை முயற்சியிலிருந்து மீள்வதற்காக தனது  சொந்த ஊருக்குத் திரும்பி வந்த அவர் அங்கு சில காலம் வாழ்ந்தார். சதுர்புஜி (Chaterbhuji) ஆலயத்திற்குச் செல்ல ஆரம்பித்தார். அந்த ஆலயத்தில் இன்றும் மீராபாயின் பெயர் சொல்லப்படுகிறது. பின்னர் அவர் பிருந்தாவனம் சென்றார். கௌடிய வைஷ்ணவ பிரிவைச் சேர்ந்த, தனக்கு சிறுமியாக இருந்த போது கிருஷ்ண விக்ரஹத்தைத் தந்த ரூப கோஸ்வாமியை சந்திக்க அவர் முயன்றார். ரூப கோஸ்வாமியோ அவர் ஒரு பெண் என்பதால் அவரைச் சநதிக்க மறுத்தார். மீராவோ கிருஷ்ணர் ஒருவரே ஆண் மகன் என்றும் இதர அனைவரும் கோபியரே என்றும் வாதிட்டார். ரூப கோஸ்வாமி தனது தவறை உணர்ந்து அவரைச் சந்தித்தார்.

பின்னர் மீராபாய் குஜராத் மாநிலத்தில் உள்ள த்வாரகாவிற்குச் சென்றார். அங்கு ராணாசோர் (Ranachor) கோவிலில் இறைவனை தரிசித்தார். ஆனால் இடைவிடாது தொடர்ந்த இந்து-முஸ்லீம் போர்களினால் அவருக்கு ஏராளமான தொந்தரவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தன. 1535இல் சித்தூர் தோற்கடிக்கப்பட்டது. ஆகவே அரச குலத்தில் பிறந்த மகளிர் எரியும் நெருப்பில் கும்பல் கும்பலாக நுழைந்தனர். மீராவோ தான் கிரிதர கோபாலனுக்கு ஆட்பட்டு விட்டதால் நெருப்பில் புக வேண்டியதில்லை என்று தனது நிலையைத் தெளிவாக எடுத்துரைத்தார். இந்த நிலையில் மேவார் அரச குடும்பத்தினர் மீராபாயை மீண்டும் வருமாறு ஒரு விசேஷ தூதரை அனுப்பி வேண்டினர். அவர் மறுத்தார். தங்களின் முந்தைய செயலுக்கு வருத்தம் கொண்டிருந்த அரச குடும்பத்தினர் மீராபாய் திரும்பி வரும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தனர்.

நிலைமை சிக்கலானது. மீராபாய் தர்மசங்கடத்திற்கு உள்ளானார். அவருக்கு அங்கு செல்லப் பிடிக்கவில்லை. அவர் திரும்பிச் செல்லவில்லை என்றால் அனைவரின் இறப்பிற்கும் அவரே காரணம் ஆவார். இதற்குத் தீர்வு தான் என்ன? கிருஷ்ணரையே கேட்டு விடலாம் என்று அவர் கிருஷ்ண விக்ரஹத்திடம் சென்று முறையிட்டார். இதற்கு அருமையான தீர்வு ஒன்றை  கிருஷ்ணர் அருளினார். ஆம், அவர் மீராவைத் தன்னுள் ஐக்கியம் செய்து கொண்டார். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒளிப்பிழம்பாக மாறிய மீரா அவர் போற்றி வந்த கிரிதர கோபாலனுடன் ஒன்றினார். அதற்கு அடையாளமாக அவர் அணிந்திருந்த புடவை மட்டும் கிருஷ்ண விக்ரஹத்தைச் சுற்றிப் படர்ந்திருந்தது! 1547ஆம் ஆண்டு வாக்கில் இது நிகழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. அதாவது அப்போது மீராபாய்க்கு வயது 49. மீரா ஸ்ம்ருதி ஸன்ஸ்தான் என்ற அமைப்பு சித்தோர்கரில் இப்போது இயங்கி வருகிறது. ஆண்டு தோறும் மீராபாய் பிறந்த சரத் பூர்ணிமா அன்று மீரா மஹோத்ஸவத்தை விமரிசையாகக் கொண்டாடி வருகிறது.

மீராவின் கீதங்கள் இன்று வரை நாடெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. ராதையின் மறு அவதாரமாகவே மக்கள் மீராபாயைப் போற்றி வருகின்றனர்.

மீராவின் வாழ்க்கை நாரத பக்தி சூத்திரம் சொல்லும் பக்தி இலக்கணத்திற்கு ஒரு அழகான சான்றாகும்.

பக்தி என்பது என்ன, அது சாதகரை எங்கு கொண்டு விடும்  என்பதைச் சொல்கையில் நாரதர் தத் சிந்தனம், தத் வாக்யம், தத் அவலோக்யம், தத் பரம் என்ற சூத்திரத்தை அருள்கிறார்.

முதலில் தத் சிந்தனம் -அதைப் பற்றியே சிந்திக்க வேண்டும்; பின்னர் தத் வாக்யம் – அதைப் பற்றியே பேச வேண்டும், பின்னர் தத் அவலோக்யம் – அதைச் சொல்லும் சத்சங்கத்தினருடையே மட்டும் தொடர்பு கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் தத் பரம் -அதுவாகவே ஆகி விடலாம்! இதுவே நாரதர் அருளும் பக்தி சூத்ரம்!

மீரா கிரிதரனையே சிந்தித்தாள்; அவனைப் பற்றி மட்டுமே அல்லும் பகலும் பேசினாள்; அவனைப் போற்றுபவருடனேயே ஆடினாள், பாடினாள், சகவாசம் கொண்டாள், இதனால் இறுதியில் அவனாகவே ஆனாள். ஜோதியாக மாறி அவனுள்ளேயே புகுந்தாள்!

விஷத்திலிருந்து தப்பித்தது, சதிக்கு உடன்படாமல் இருந்தது உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கான அகச்சான்றுகள் அவரது கீதங்களிலிருந்தே நமக்குக் கிடைத்துள்ளன.

ஒரு இரு வரிப் பாடல் இது. தோஹா என்று இதைச் சொல்வது வழக்கம்

மீரா ஜன்மி மேட்தே, பரநாயீ சித்தோட்!

ஹரி பஜன் ப்ரதா பசே, பயி சகல சீதீ சிர மோர்!

மீரா தான் தனியாக இருப்பதை கிரிதர கோபாலனுக்கு உணர்த்தி அவனை அழைக்கும் கீதம்:

மோஹன் ஆவோ தோ சரீ!

மாரா ரே மந்திர் மே, மீரா அகேலீ கடீ, அகேலீ கடி வோ மீரா அகேலி கடீ!

கண்ணனுக்கு எனது நமஸ்காரங்கள் மயிலிறகு கொண்ட மகுடம் சூடியவன் அவன்! நெற்றியிலே அழகுத் திலகம். காதைச் சுற்றிச் சுருண்டோடும் கேசம், மதுர உதடுகள்! அடடா!

அவன் தனது வேய்ங்குழலைக் கரத்தில் ஏந்துகிறான். வாயில் வைத்து புல்லாங்குழலை இசைக்கிறான்! அவனது ராதையை மயக்குகிறான். இதோ இந்தக் காட்சி மீராவைக் கொள்ளை கொள்கிறதே! இதோ மோஹனக் காட்சி, அவன் கோவர்த்தன கிரியைத் தூக்கிய காட்சி!

இப்படி ஏராளமானவை மீராபாய் பாடிய பாடல்கள்!

பாரத ரத்னா திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி உள்ளிட்ட ஏராளமான அருமையான இசைக் கலைஞர்களின் வாயிலாக இந்தப் பாடல்களை யூ டியூப் உள்ளிட்ட சாதனங்கள் மூலம் தினமும் கேட்கலாம். மெய் மறக்கலாம். கிருஷ்ண பக்தியில் திளைக்கலாம்.

மீராவின் நாமம் போற்றுவோம்; அவர் வழியில் கிருஷ்ண பக்தியில் திளைப்போம்; கிருஷ்ணரையே அடைவோமாக. நன்றி, வணக்கம்!

***

கேட்க வேண்டிய பாடல்கள் :-

கிரிதர கோபாலா (2 நிமி 47 விநாடி)

பிருந்தாவனத்தில் கண்ணன்  4 நிமிடம்   56 விநாடி    

Index

பக்த மீரா :- பிறப்பு, மறைவு, ராஜபுதன இளவரசி, கிருஷ்ண பக்தி ஏற்பட காரணங்கள், திருமணம், ரூப கோஸ்வாமி சந்திப்பு, துவாரகையில் கிருஷ்ணனுடன் ஒளி மயமாக ஒன்றுதல், மீரா கீதங்கள்    

-SUBHAM-

tags- -மீராபாய் ,சரித்திரம்,