திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி- சிவப்பிரகாச சுவாமிகள்! (Post.9629)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9629

Date uploaded in London – –  –21 May   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதியை இயற்றிய துறைமங்கலம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள்!

ச.நாகராஜன்

தமிழில் உள்ள பல சிறப்புக்களில் ஒன்று நிரோட்டக யமக அந்தாதி. நிரோட்டகம் என்றால் நிர் + ஒட்டகம் அதாவது உதடு ஒட்டாமல் இருப்பது. (நிரோஷ்டம் என்ற வடமொழிச் சொல்லுக்கு நிர் + ஒஷ்டம் என்று பொருள்; ஒஷ்டம் என்றால் உதடு) இப்படிப் பட்ட உதடு ஒட்டா எழுத்துக்கள் கொண்ட சொற்களை பொருள் வருமாறு இணைத்துப் பாடுவது நிரோட்டகச் செய்யுள் ஆகும்.

திருக்குறளில் இப்படி பல குறட்பாக்கள் நிரோட்டகமாக உள்ளன. எடுத்துக்காட்டாக ஒன்றை இங்குச் சுட்டிக் காட்டலாம்.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன் (குறள் எண் 341)

இப்படிப்பட்ட நிரோட்டகச் செய்யுளுடன் யமக வடிவைச் சேர்ப்பது நிரோட்டக யமகம் ஆகும். யமகம் என்றால் செய்யுளின் ஒவ்வொரு அடியிலும் முதல் சில எழுத்துக்கள் அல்லது சொற்றொடர் திருப்பித் திருப்பி வரவேண்டும், ஆனால் வெவ்வேறு பொருளில் வர வேண்டும். இப்படி வந்தால் யமகம் ஆகும்.

அந்தாதி என்றால் ஒரு செய்யுளின் இறுதி அடியில் வரும் இறுதிச் சொல்லோ அல்லது எழுத்தோ அடுத்த செய்யுளின் முதல் அடியின் முதல் சொல்லாக அமைந்து பாடல்களைத் தொடுக்க வேண்டும்.

இப்படி நிரோட்டகமாகவும் யமகமாகவும் அந்தாதியாகவும் அமைந்திருக்கும் ஒன்றையே நிரோட்டக யமக அந்தாதி என்று சொல்வோம்.

இப்படிப்பட்ட அபூர்வமான ஒரு நிரோட்டக யமக அந்தாதியை, திருச்செந்தில் முருகனைப் பாடிப் பரவி திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதியை அருளியவர் துறைமங்கலம் ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் ஆவார்.

ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் வேளாள  மரபினைச் சேர்ந்தவர். ஒரு முறை திருச்செந்தூரில்  முருகனை தரிசித்து பிரகாரத்தில் வலம் வந்த போது அங்கிருந்த புலவர் ஒருவர் அவரை வாதுக்கழைத்தார்.

அவர் சிவப்பிரகாச சுவாமிகள் திருநெல்வேலி சிந்து பூந்துறையில் இருக்கும் தர்மபுர ஆதீனத்து வெள்ளியம்பல சுவாமிகளிடம் பாடம் கேட்டவர் என்பதை அறிந்து அவரை தூஷணை செய்யவே சிவப்பிரகாச சுவாமிகள் அது பொறுக்காது வாதுக்கு வர ஒப்புக் கொண்டார்.

யார் ஒருவர் முதலில் நிரோட்டக யமக அந்தாதி ஒன்றை முதலில் பாடுகிறாரோ அவரே வென்றவர் என்பது தீர்மானிக்கப்பட்டது.

முருகனை வணங்கிய சிவப்பிரகாச சுவாமிகள் உடனே 30 பாடல்கள் அடங்கிய திருச்செந்தூர் நிரோட்டக யமக அந்தாதியைப் பாடி முடித்தார். வாதுக்கழைத்த புலவரோ ஒரு பாடலும் பாட முடியாமல் திகைத்திருந்தார்.

வாதில் தோற்ற அவர், சிவப்பிரகாச சுவாமிகளுக்கு அடிமையாக ஆனார், அவரை வெள்ளியம்பல சுவாமிகளிடம் அழைத்துச் சென்று ஒப்படைத்தார் சிவப்பிரகாச சுவாமிகள்.

நிரோட்டகத்தில் ப, ம,வ, உ, ஒ ஆகிய எழுத்துக்கள் வராமல் செய்யுள்களை அமைக்க வேண்டும்.

கட்டளைக் கலித்துறையில் அமைக்கப்பட்ட நூல் இது. காப்பு மற்றும் முதல் ஐந்து பாடல்களைக் கீழே காணலாம்.

கட்டளைக் கலித்துறை

காப்பு


கொற்ற வருணனை நின்றன் றுழக்கிய கொக்குருவைச்
செற்ற வருணனை யன்னசெவ் வேற்படைச் செந்திலர்க்கு
முற்ற வருணனை யந்தாதி யென்று முதிர்மதப்பேர்
பெற்ற வருணனை யானனத் தாதியைப் பேசுவனே.

நூல்


யானைக்கண் டங்கரி சென்றேத் தெழிற்செந்தி லின்றடைந்தே
யானைக்கண் டங்கரி யங்கங் கயிலையை யேய்ந்ததகை
யானைக்கண் டங்கரி சேரெண்டிக் காக்கினற் கீநலிசை
யானைக்கண் டங்கரி தாகிய சீர்க்கதி யெய்தினனே. 1

தினகர னந்த நனியிலங் காநின்ற செய்யநற்செந்
தினகர னந்த நிதியா யினனடற் சீரயிலேந்
தினகர னந்த கனைச்செற்ற தாளர் திகழ்கனகா
தினகர னந்த நடனர் தனயனென் சிந்தையனே. 2

சிந்தனை யாகத் திசையந் தணர்க்கிறை சேரகங்க
சிந்தனை யாகத் தரையளித் தாடரை சென்றிரந்த
சிந்தனை யாகத் திடையிடைந் தான்றந்த சேயளியாற்
சிந்தனை யாகத்த நற்செந்தி லாய்நினைச் சேர்ந்தனனே. 3

தனத்தலங் கார நிறைநா ரியரந் தரத்தசைகே
தனத்தலங் கார நிகழரங் காடச்செய் தன்னினயத்
தனத்தலங் கார தராயியங் கத்தக்க தண்செந்திற்கந்
தனத்தலங் காரனை யானய னேத்திடத் தங்கினனே. 4

தங்கந் தனங்க ளடையத் தனியெனைத் தள்ளியங்கே
தங்கந் தனங்க டரச்சென் றனரறிந் தாரிலைகா
தங்கந் தனங்க ளலர்காக்க ணாரெழிற் றண்செந்திலார்
தங்கந் தனங்க நிகர்செக்கர் செய்சஞ் சலத்தினையே. 5

28வது பாடலாக அமைவது இது:-

கணக்காக நாய்கடின் காய நிலையெனக் கண்ணியென்ன
கணக்காக நானலைந் தெய்த்தே னெழிற்செந்திற் கந்தநெற்றிக்
கணக்காக னார்தந்த நின்றனை யேயினிக் காதலினாற்
கணக்காக னாநிகர்த் தேயழி யங்கத்தின் காதலற்றே. (பாடல் எண் :28)

இதன் பொருளைப் பார்ப்போம்:-

கணம் என்றால் கூட்டம். காயம் என்றால் உடல். கண்ணி என்றால் நினைத்து என்று பொருள்.நெற்றிக் கண் அக்கு ஆகனார் என்றால்  எலும்பினை உடலில் அணிந்த நெற்றிக்கண்ணன் -சிவபிரான் ஆனவர் என்று பொருள். கண+ கா என்றால், நினைக்க காப்பாயாக என்று பொருள்.

பாடலின் திரண்ட பொருள்:

கூட்டமான காக்கை மற்றும் நாய்கள் தின்னும்படியான இந்த உடலை நிலையாக நிற்பது என்று நினைத்து என்ன கணக்காக நான் அலைந்து திரிந்து இளைத்தேன்! எழில் செந்தில் கந்த பிரானே! உடலில் எலும்பணிந்த நெற்றிக்கண் பிரானாகிய சிவபிரான் தந்த நின்னையே இனிமேல் காதலினால் அன்பு கலந்து நினைக்க நீ (எமக்கு வரம் தந்து), கனவு நிகர்த்த, அழிகின்ற இந்த அங்கத்தின் மீது தேகாபிமானம் இல்லாமல் செய்து, காத்தருள்வாயாக!

அருமையாக இப்படி ஒரு அந்தாதி அமைத்துப் பாடிய ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள வாழ்வு செம்மையான வாழ்வு! அவரைப் பற்றி நன்கு அறிவோமாக! (இன்னொரு கட்டுரை தொடரும்)

***

tags- திருச்செந்தில், நிரோட்டக, யமக அந்தாதி, சிவப்பிரகாச சுவாமிகள்,

யமகவந்தாதியின் பட்டியல்! (Post No.4439)

Written by S.NAGARAJAN

 

 

Date: 28 NOVEMBER 2017

 

Time uploaded in London- 5-36 am

 

 

 

Post No. 4439

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

தமிழ் இலக்கிய இன்பம்

யமகம் பற்றிய என்னுடைய முந்தைய கட்டுரைகளைப் படிக்க வேண்டுகிறேன். அதில் யமகம் பற்றி விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

 

யமகவந்தாதியின் பட்டியல்!

ச.நாகராஜன்

1

தமிழின் ஏராளமான சிறப்புகளில் ஒன்று மடக்கு அல்லது யமக அணியாகும்.

நூற்றுக் கணக்கான யமகப் பாடல்களைத் தமிழ் இலக்கியம் கொண்டுள்ளது.

இது சாதாரண விஷயமல்ல.

ஆழ்ந்த பொருள் தரும் அகன்ற சொல் வளம் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

இதைக் கொண்டுள்ள தமிழ் மொழி உண்மையிலேயே உலகின் அதிச்ய மொழி.

சம்ஸ்கிருதத்திலும் ஏராளமான யமகப் பாடல்கள் உள்ளன.தெலுங்கிலும் உண்டு.

 

 

2

2014ஆம் ஆண்டில் ஏப்ரல் 30ஆம் தேதி. இடம் : சென்னை.

சிற்றிலக்கியத்தில் மடக்கணி என்ற அருமையான ஒரு நூலைக் கண்டேன்.படித்தேன்.

முனைவர் பா. முனியமுத்து அவர்களின் ஆய்வு நூல் இது.

அவருக்கு உவமைப் பித்தன் என்ற புனைப்பெயரும் உண்டு.

நூலைப் படித்த மகிழ்ச்சியில் எனது இயல்பான வழக்கத்தையொட்டி அவரைப் பாராட்ட விழைந்தேன். தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அவரைத் தொடர்பு கொண்டேன்.

“முனியமுத்து அவர்கள் இருக்கிறாரா?”

ஒரு பெண்மணி பதில் அளித்தார்: “இல்லீங்க”

“எப்ப வருவார்?”

“என்ன விஷயங்க?”

“அவரது அருமையான் நூலான ‘சிற்றிலக்கியத்தில் மடக்கணி’ என்ற நூலைப் படித்தேன். அவரைப் பாராட்டுவதற்காகத் தான் இந்த போன். அவர் எப்ப வருவார்?”

“ஓ. ரொம்ப சந்தோஷங்க. அவர் இப்ப இல்லீங்க. இப்படி யாராவது பாராட்ட மாட்டார்களா என்று அவர் ரொம்ப எதிர்பார்த்திருந்தாருங்க.”

ஒரு சின்ன மௌனம்.

அந்த அம்மையார் முதலில் சொன்ன ‘இல்லீங்க’ என்பதற்கும் இரண்டாவது தரம் சொன்ன ”இப்ப இல்லீங்க” என்பதற்கும் பெரிய வேறுபாடு இருந்தது.

என் மனம் கனத்தது. சோகம் இழையோட, “அவரைப் பாராட்டத் தான் இந்த போன்” என்று சொன்னேன்.

“ரொம்ப தேங்க்ஸ்ங்க”

போன் உரையாடல் முடிந்தது.

சற்று நேரம் ஒன்றுமே ஒடவில்லை. அந்தப் புத்தகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். தமிழுக்கு அரிய சேவை செய்த நல்ல மனிதர்.

முனியமுத்து அவர்களின் புகழ் வாழ்க!

 

 

3

தனது ஆய்வு நூலில் அவர், மடக்கு (யமக) அந்தாதி இலக்கியங்களின் பட்டியலை மிகுந்த சிரமத்தின் பேரில் தொகுத்துத் தந்துள்ளார். அதில் நூல்கள் இயற்றப்பட்ட காலமும் இருக்கிறது.

அந்தப் பட்டியல் அப்படியே கீழே தரப்பட்டிருக்கிறது. பிராக்கட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண் எந்த நூற்றாண்டில் நூல் இயற்றப்பட்டது என்பதைக் குறிக்கிறது.

அகர வரிசைப் பட்டியலில் இறுதியில் உள்ள இரண்டு நூல்கள் எனது ஆய்வின் விளைவாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

முனியமுத்து போன்றோரின் ஆய்வைத் தமிழ் உலகம் நல்ல முறையில் அங்கீகரிக்கவில்லையே என்ற ஏக்கம் அனைவருக்கும் வரவேண்டும். இனியேனும் நல்லோரை இனம் கண்டு உரிய முறையில் அவர்கள் வாழ்கின்ற காலத்திலேயே பாராட்டுவோம்.

4

இதோ பட்டியல்:

மடக்கு (யமக) அந்தாதி இலக்கியங்கள் – அகர வரிசை

1) அழகர் யமகவந்தாதி –

2) இரத்தினகிரியமகவந்தாதி – கந்தசாமி சுவாமிகள் – (19)

3) கடம்பர் யமகவந்தாதி – பேரம்பலப் புலவர் – (19)

4) கணபதி யமகவந்தாதி – கந்தசாமி சுவாமிகள் – (19)

5) கந்தர் யமகவந்தாதி – அருணகிரிநாதர் – (15)

6) கல்வளை யமகவந்தாதி – சின்னத்தம்பிப் புலவர் – (19)

7) கூடல் திருவிளையாடல் யமகவந்தாதி -சுப்பையா-(19)

8) சித்திர யமகவந்தாதி – தொழுவூர் வேலாயுத முதலியார் – (19)

9) சிவகிரி யமகவந்தாதி -பழநி மாம்பழக் கவிச்சிங்க நாவலர்-(19)

10) தன்னை யமகவந்தாதி – கார்த்திகேயப் புலவர்- (19)

11) தன்னை யமகவந்தாதி – திரிகூட ராசப்பக் கவிராயர்- (19)

12) தன்னை யமகவந்தாதி  முருகேசையர்-(19)

13) திரிச்சிராமலை யமகவந்தாதி -மீனாட்சிசுந்தரம் பிள்ளை -(19)

14) திருக்கடவூர் யமகவந்தாதி – தலைமலை கண்ட தேவர்-(19)

 

15) திருக்குருகூர் யமகவந்தாதி – வேலாமூர் கிருட்டிணமாச்சாரியார்-(20)

16) திருக்குற்றால யமகவந்தாதி -திரிகூட ராசப்பக் கவிராயர்-(18)

17) திருக்கோட்டற்றுப் பதிற்றுப் பத்து யமகவந்தாதி – செய்குத்தம்பி பாவலர் – (20)

18) திருச்சிற்றம்பல யமகவந்தாதி -சபாபதிப் பிள்ளை நாவலர்(19)

19) திருச்செங்காட்டங்குடி யமகவந்தாதி – நல்லூர்த்தியாகன்

20) திருச்செந்தில் யமகவந்தாதி – தண்டபாணி அடிகளார்-(19)

21) திருச்செந்தில் யமகவந்தாதி -சிவச்சம்பு புலவர்(இலங்கை)(19)

22) திருச்செந்தில் யமகவந்தாதி – இராமசாமி ஐயர்-(19)

23) திருச்செந்தூர் கரித்துறை யமகவந்தாதி – அருணாசலப் பிள்ளை-(19)

 

24) திருத்தணிகை யமகவந்தாதி – சொக்கலிங்க தேசிகர்-(19)

25) திருத்தில்லை யமகவந்தாதி – மீனாட்சிசுந்தரம் பிள்ளை-(19)

26) திருப்புடை மருதீசர் யமகவந்தாதி – தலைமலை கண்ட தேவர்-(19)

27) திருநெல்வேலி யமகவந்தாதி – தண்டபாணி அடிகளார்-(19)

28) திருப்போரூர் யமகவந்தாதி – புரசை சபாபதி முதலியார்-(19)

29) திருப்பெருந்துறை ஆத்மநாதர் யமகவந்தாதி – மிதிலைப்பட்டி சிற்றம்பலக் கவிராயர் – (17)

30) திருமீதினத்துப் பதிற்றுப்பத்து யமகவந்தாதி – அ.கா.பிச்சை இபுராகீம் புலவர்-(19)

31) திருமதீனத்து யமகவந்தாதி – (19)

32) திருமயிலை யமகவந்தாதி – தாண்டவராயக் கவிராயர்

33) திருமயிலை யமகவந்தாதி – நெல்லையப்பக் கவிராச பண்டிதர்

34) திருவரங்கத்து யமகவந்தாதி-பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் (17)

 

35) திருவல்லிக்கேணி யமகவந்தாதி –

36) திருவல்லிக்கேணி யமகவந்தாதி- தண்டபாணி அடிகளார்-(19)

37) திருவாமாத்தூர் யமகவந்தாதி – தண்டபாணி அடிகளார்-(19)

38) திருவாலவாய் யமகவந்தாதி – சொக்கலிங்கச் செட்டியார்-(20)

39) திருவானைக்கா யமகவந்தாதி – தண்டபாணி அடிகளார்-(19)

40) திருவானைக்கா யமகவந்தாதி – சிங்காரவடிவேல் வ்ண்ணியமுண்டார்

41) திருவேகம்பர் யமகவந்தாதி – சிவஞான முனிவர்

42) திருவேரகம் யமகவந்தாதி – வேலையர் (20)

43) திருவேரக யமகவந்தாதி – சிவச்சம்புப் புலவர்-(19)

44) திருவேரக யமகவந்தாதி – மீனாட்சிசுந்தரம் பிள்ளை-(19)

45) தில்லைகற்பக வினாயகர் யமகவந்தாதி – சிதம்பரம் செட்டியார்-(19)

46) தில்லை யமகவந்தாதி – மீனாட்சிசுந்தரம் பிள்ளை-(19)

 

47) துறைசை யமகவந்தாதி – மீனாட்சிசுந்தரம் பிள்ளை-(19)

48) நகுலேசர் யமகவந்தாதி -அப்துல் காதர் நயினார் அலீம் -(19)

49) நெல்லை யமகவந்தாதி –

50) பட்டீச்சுர யமகவந்தாதி – அப்பாப்பிள்ளை-(19)

51) பத்மநாபப்பெருமாள் யமகவந்தாதி-தண்டபாணி அடிகளார்-(19)

52) பழநி யமகவந்தாதி – தண்டபாணி அடிகளார்-(19)

53) பழநி யமகவந்தாதி – பாலசுப்பிரமணியன்

54) புலியூர் யமகவந்தாதி – மயில்வாகனப் புலவர்-(18)

55) புலியூர் யமகவந்தாதி – கணபதி ஐயர், இலங்கை

56) புல்லை யமகவந்தாதி – ரா.இராகவையங்கார்-(20)

57) மதுரை யமகவந்தாதி – இராமநாதன் செட்டியார் அ. வயினாகரம் – (19-20)

58) மதுரை யமகவந்தாதி – சொக்கநாதக் கவிராயர்-(17)

59) மதுரை யமகவந்தாதி – பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

60) மதுரை  யமகவந்தாதி – ஆறுமுகம் பிள்ளை-(19)

 

61) மருதாசலக் கடவுள் யமகவந்தாதி – கந்தசாமி சுவாமிகள்-(19)

62) மருதூர் யமகவந்தாதி – தலைமலைக் கண்ட தேவர்-(19)

63) மாவை யமகவந்தாதி -பொன்னம்பலம் பிள்ளை,இலங்கை(19)

64) யமகவந்தாதி – மழலை சுப்பிரமணிய பாரதியார்-(19)

65) திருச்செந்தில் நீரோட்டக யமகவந்தாதி – சிவப்பிரகாச சுவாமிகள்

66) திருவாவடுதுறை யமகவந்தாதி -மீனாட்சிசுந்தரம் பிள்ளை(19)

 

5

எத்தனை அற்புதமான பாடல்களை தமிழ் கொண்டிருக்கிறது என்று எண்ணி எண்ணிப் பெருமைப்படலாம்.

இந்தப் பட்டியலில் அபிராமி அந்தாதி, கைலை பாதி, காளத்தி பாதி அந்தாதி போன்ற அந்தாதி நூல்கள் சேர்க்கப்படவில்லை.

யமக அந்தாதி இல்லாத அந்த அந்தாதி நூல்களுக்கு ஒரு தனிப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். அதைத் தயாரித்துக்  கொண்டிருக்கிறேன்.

***