WRITTEN BY S NAGARAJAN, BANGALORE
Date: 7 January 2016
Post No. 2466
Time uploaded in London :– 5-54 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
இந்திய சங்கீதம்
ராக தேவதைகளின் அருள் பெற்ற தான்ஸேன்!
ச.நாகராஜன்
ஹரிதாஸரின் சீடர்
இந்திய சரித்திரத்தில் பாடகர்களின் வரிசையில் இணையிலா இடத்தை வகிப்பவர் தான்ஸேன்.
இவரைப் பற்றி ஏராளமான சுவையான சம்பவங்கள் பல்வேறு நூல்களில் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவையெல்லாம் உண்மையா பொய்யா என்பதை அறிவது முடியாத காரியம்.
தான்ஸேனின் தந்தையின் பெயர் முகுந்த மிஸ்ரா.
ஐந்து வயதிலேயே சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவராக ஆகி இருந்தார் தான்ஸேன். அவரது இளமைக்காலப் பெயர் ராமதனு.
அவரது குருநாதர் பிருந்தாவனத்தில் வாழ்ந்து வந்த பெரிய மகானான ஸ்வாமி ஹரிதாஸ்.
காடு வழியே சென்று கொண்டிருந்த குருநாதர் புலி போல குரல் (மிமிக்ரி) கொடுத்த ராமதனுவின் திறமையை மெச்சி அவருக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுத்ததாக ஒரு கதை.
அவரது தந்தையின் ஏற்பாட்டின் படி குருகுலவாஸம் செய்து தான்ஸேன் சங்கீதம் கற்றுக் கொண்டதாக இன்னொரு கதை.
எது எப்படியானாலும் ஹரிதாஸர் தனக்கு இணையாகப் பாடும்படி தான்ஸேனுக்கு அருளைப் பொழிந்தது வரலாற்று உண்மை. அனைத்து ராக தேவதைகளும் தான்ஸேன் மீது அருளைப் பொழிந்ததும் உண்மை!
அக்பரின் அழைப்பு
தான்ஸேனின் புகழைக் கேட்ட அக்பர் எப்படியும் அவரைத் தன் அரசவைக்கு அழைத்து வர விரும்பினார். அப்போது அக்பருக்கு வயது 20.
ரேவாவின் மஹாராஜாவான ராமச்சந்திராவின் அரசவையில் இருந்த தான்ஸேன் ஒருவாறாக அக்பர் அரசவைக்குச் சென்று தன் முதல் கச்சேரியை நிகழ்த்தினார். அப்போது அவருக்கு வயது 57.
அடுத்த 27 வருடங்களுக்கு அக்பர் தான்ஸேனை விடவே இல்லை. (1589ஆம் ஆண்டு வாக்கில் தான்ஸேன் மறைந்தார்)
அப்படி ஒரு மோகம், மரியாதை அக்பருக்கு தான்ஸேன் மேல் ஏற்பட்டது.
முதல் கச்சேரிக்கு ஒரு லட்சம் தங்க நாணயங்களை அக்பர் தான்ஸேனுக்கு வழங்கியதாக கர்ண பரம்பரைச் செய்தி தெரிவிக்கிறது.
தனது நவரத்தினங்களில் முக்கியமான இடத்தை அக்பர் தான்ஸேனுக்கு அளித்தார்.
நரபதியும் தான்பதியும்
தன்னை புலவர்கள் நரபதி என்று அழைத்த போது தான்ஸேனை தான்பதி என்று அழைக்க வைத்தார் அக்பர்.
பாரத சாம்ராட் என்று கவிஞர்கள் அக்பரைப் புகழ்ந்த போது தான்ஸேனை சங்கீத சாம்ராட் என்று அவர் அழைத்தார்.
அவர் மேக மல்ஹார் ராகத்தைப் பாடினால் மழை பொழியும்!
(தான்ஸேன் தீபக் ராகம் பாடிய போது தீ ஜுவாலை எழுந்ததையும் குருநாதர் ஹரிதாஸைப் பார்க்க அக்பர் விரும்ப அவரை அழைத்துச் சென்ற போது நடந்த சுவையான சம்பவங்களையும் ஏற்கனவே கட்டுரைகளில் எழுதி இருப்பதால் அவற்றை இங்கு மீண்டும் எழுதவில்லை)
ஒரு அழகிய பாடல் நரபதி-தான்பதி விஷயத்தை விளக்குகிறது.
முராரே த்ரிபுவநபதே, இந்த்ர சுரபதே,, சேஷநாக் ஹை ஃபநபதே |
(முராரி மூன்று உலகங்களுக்கும் அதிபதி
இந்திரன் தேவலோகத்திற்கு அதிபதி
ஆதிசேஷன் நாகங்களுக்கு அதிபதி)
க்ஷீர உததி சலிலபதே, கௌஸ்துப மணி ரத்னபதே தினகர் தீனனபதே, கமலாபதே ||
(க்ஷீர சமுத்ரம் கடல்களுக்கு அதிபதி, கௌஸ்துப மணி ரத்னங்களுக்கு அரசன், தினகரனும் விஷ்ணுவும் தீனர்களுக்குத் துணைவர்)
சசி உட்கணபதே, ஹநுமான் பலிநபதே, நாரதாதி பக்தநபதே, சாஜன் வீணா ம்ருதங்கபதே |
(நட்சத்திரங்களின் தலைவன் சந்திரன், ஹநுமான் பலசாலிகளின் அதிபதி, நாரதர், பக்தர்களின் தலைவர், வாத்தியங்களில் வீணை முதன்மையானது)
சிரஞ்சீவௌ சாஹ் அக்பர் நரபதே, தான்ஸேன் தான்பதே ||
இது போலவே சிரஞ்சீவி அக்பர் நரர்களுக்கு அதிபதி, அது போலவே தானபதி தான்ஸேன் தான்!
சங்கீத ரஸிகர்கள் சென்று காணும் வட விருக்ஷம்
அக்பரின் அந்தப்புரத்தில் அக்பரைத் தவிர உள்ளே நுழையக் கூடிய உரிமையை தான்ஸேன் மட்டுமே பெற்றிருந்தார்.
அங்கு அவரது கச்சேரிகளை அந்தப்புரத்தில் இருக்கும் அரசமகளிருடன் அக்பரும் கேட்டு மகிழ்வது வழக்கம்.
தீபக் ராகம் பாடியபோது எழுந்த அக்னி ஜுவாலையில் தான்ஸேன் இறந்ததாக கர்ண பரம்பரைச் செய்தி தெரிவிக்கிறது.
அவரது அந்திமக் கிரியையின் போது கண்ணீருடன் அக்பர கலந்து கொண்டார் என்பதை வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர்.
தான்ஸேனின் சமாதி, அவர் சங்கீதத்தை சாதகம் செய்த வட விருக்ஷம் முதலிய அனைத்தும் இன்றும் சங்கீத ரஸிகர்கள் செல்லும் இடங்களாக இன்றும் திகழ்கின்றன.
சுவையான சம்பவங்கள் நிறைந்த தான்ஸேனின் வாழ்க்கை இந்திய சங்கீதத்தின் பெருமைக்கான ஒரு வரலாறே. ஹிந்து(ஸ்தானி) ராகங்கள் பற்றியும் ராக தேவதைகளைப் பற்றியும் அறிய விரும்புவோர் தான்ஸேனின் வரலாறைப் படிப்பது பயன் தரும் ஒன்றாக அமையும்!
*******
இதைப் படிக்கும் அன்பர்கள் நேற்று வெளியான அக்பரும் சூரிய நமஸ்காரமும் கட்டுரையையும் படித்து மகிழலாம்.
You must be logged in to post a comment.