வள்ளுவனும் வன்முறையும்

வள்ளுவர் சிலை

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்

‘’ அன்பென்று கொட்டு முரசே — மக்கள் அத்தனை பேரும் நிகராம்.

இன்பங்கள் யாவும் பெருகும் — இங்கு யாவரும் ஒன்று என்று கொண்டால் ’’

 

 

என்று பாடினான் பாரதி. ‘’அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’’ (ப்பாள்) என்று அன்[பின் சிறப்பபைப் பாடினான் வள்ளுவன். ஆயினும் இருவரும் அஹிம்சாவாதிகள் அல்ல. தேவையான போது, தேவையான அளவுக்கு பலத்தைப் பிரயோகிக்க வேண்டும் என்பதில் இரு கவிஞர்களுக்குமே உடன்பாடு உண்டு.

 

மரண தண்டனைக்கு ஆதரவு

 

மரண தண்டணைக்கு ஆதரவு தருபவன் வள்ளுவன். அவன் தீவிர அஹிம்சாவாதி அல்ல. தீயோரை அழிப்பது பயிர்களின் களைகளை நீக்குவது போல என்று அழகான உவமை தருகிறான். இதோ அந்தக் குறள்:

 

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனோடு நேர் (550)

 

பொருள்: நாட்டில் உள்ள கொடியோரை மரண தண்டனை கொடுத்து அழிப்பது, பயிர்கள் நன்றாக வளர உழவர்கள் களை எடுப்பது போல் ஆகும்.

 

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

எண்ணின் தவத்தான் வரும் (264)

 

கீதையில் ‘’பரித்ராணாய சாதூணாம் விநாசாய ச துஷ்க்ருதாம்’ என்று கண்ணன் சொன்னதன் எதிரொலி இது. ‘’தீயோரை அழிப்பதும் நல்லோரைக் காப்பதும் என் குறிக்கோள்’’ என்று பகவான் கண்ணன் சொன்னதை, தவமுடைய யாரும் செய்ய முடியும் என்பதை வள்ளுவன் ஒப்புக்கொள்கிறான்.

 

கன்னத்தில் அடி, கையை முறுக்கு, கரும்பு போல நசுக்கு

அதிகாரம் 108, கயவர்கள் பற்றியது. அதில் கஞ்சர்களையும் சேர்த்துத் திட்டுகிறார். கயவர்களின் கன்னத்தில் அடித்து ஆளை நொறுக்கு என்றும் சொல்வான் வள்ளுவன்.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடுறுடைக்கும்

கூன்கைய ரல்லா தவர்க்கு (1077)

 

பொருள்: கன்னத்தில் அடித்து நொறுக்கினால்தான் கயவர்கள் உதவி செய்வர். அதுவரை சாப்பிட்ட பின்னர் ஈரக் கையால் கூட உதறித் தெறிக்க மாட்டார்கள்.

இன்னொரு குறளில் கரும்பு போல கசக்கி நசுக்கு என்கிறான்.

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ் (1078)

 

பொருள்: சான்றோர்கள் சொன்ன மாத்திரத்திலேயே பிறர்க்கு உதவி செய்வர். கயவர்கள் மட்டும் கரும்பு போல் கொன்று பிழிந்தால்தான் பயன்படுவார்கள்.

 

வள்ளுவன் கோபக்காரனும் கூட. சோற்றுக்கே அலையவேண்டிய நிலை இருக்குமானால் பிரம்மாவே பிச்சை எடுக்கட்டும் என்று அவனைச் சபிக்கவும் தவறவில்லை.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகு இயற்றியான் (1062)

பொருள்: உலகில் சிலர் பிச்சை எடுத்துத்தான் உயிர் வாழவேண்டும் என்றால், அந்த பிரம்மாவே பிச்சை எடுத்து அழியட்டும்.

bharathy

பாரதியும் வன்முறையும்

 

இதைப் படித்துத்தான் பாரதியும் கொதிதெழுந்தான் போல.

‘’இனி ஒரு விதி செய்வோம் – அதை

எந்த நாளும் காப்போம்;

தனி ஒருவனுக்கு உணவிலை எனில்

ஜகத்தினை அழித்திடுவோம்’’-

வள்ளுவனைப் போல பாரதியும் சொல்கிறான்; உலகையே அழித்து விடுவோம் என்று!

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்  சோற்றுக்கோ வந்தது இங்கு பஞ்சம் என்றும் சாடுகிறான்.

 

பகவத் கீதை வாயிலாக கீழேயுள்ள வாசகத்தைக் கூறுகிறான். உலகில் போலீஸ் இல்லாத நாடோ படைகள் இல்லாத நாடோ இல்லை. இதை அறிந்தவர்கள் பகவத் கீதையைப் புரிந்துகொள்ள முடியும். குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டணைக்குரியவர்களே

 

‘’வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர்

நெஞ்சகத் தருக்குடை நீசர்கள் இன்னோர்

தம்மொடு பிறந்த சகோதரர் ஆயினும்

வெம்மையோடொறுத்தல் வீரர் தம் செயலாம்’’.

 

கீழேயுள்ள பீமனின் சபதத்தைப் படிப்பவர்களுக்கு பாரதியின் மனதில் இருக்கும் கருத்து புரியும். அதர்மத்தை அழிக்க வன்முறை என்பது ஆதிகாலம் முதல் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. வடபுல மன்னர்களும் தமிழ் மன்னர்களும் தங்கள் வீரத்தைக் காட்டக்கூட சண்டைகள் போட்டதை சங்கத் தமிழ் இலக்கியங்களும் காளிதாசனின் காவியங்களும் காட்டும்.

 

‘’தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன்—தம்பி

சூரத் துச்சாதனன் தன்னையும் ஆங்கே

கடைபட்ட தோள்களைப் பிய்ப்பேன்- அங்கு

கள் என ஊறும் இரத்தம் குடிப்பேன்.’’

 

இந்து மதக் கடவுளர்கள், அன்பும் பண்பும் மிக்கவர்களுக்கு ஆனந்தத்தை அளித்தனர். பண்பற்ற அசுரர்களை வீழ்த்தி ஆனந்தக் கூத்தும் ஆடினர்.

 

‘’நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி

நயம்புரிவாள் எங்கள் தாய்—அவர்

அல்லவராயின் அவரை விழுங்கிப் பின்

ஆனந்தக் கூத்திடுவாள்’’

என்று பாரத அன்னையின் வீரத்தினைப் புகழ்கிறான் பாரதி.

 

‘’பாரதப் போரெனில் எளிதோ?—விறற்

பார்த்தன் கை வில்லிடை ஒளிர்வாள்

மாரதர் கோடி வந்தாலும்—கணம்

மாய்த்துக் குருதியில் திளைப்பாள்

பேயவள் காண் எங்கள் அன்னை—பெரும்

பித்துடையாள் எங்கள் அன்னை’’

 

என்று காளி, மகிஷாசுரமர்த்தனி, பவானி ஆகியோரை மந்தில் கொண்டு பாடுகிறான். வீர சிவாஜி ,குகோவிந்த சிம்மன் கவிதைகள் வாயிலாக அவன் வெளியிட்ட வீராவேசக் கருத்துக்கள் இன்றைக்கும் நம் எல்லையைக் காக்கும் துருப்புகளுக்கு ஊற்றுணர்ச்சி தரும் என்றால் மிகையாகாது.

 

Please read my earlier posts:

1.வள்ளுவர் சொன்ன சுவையான கதைகள் 2.வள்ளுவர் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் 3.வள்ளுவனுடன் 60 வினாடி பேட்டி 4.பாரதியுடன் 60 வினாடி பேட்டி 5.பாரதி நினைவுகள் 6.பாரதி பாட்டில் பழமொழிகள் 7.சிட்டுக்குருவியிடம் பாரதி கற்ற பாடம் 8.பாரதியின் பேராசை 9.பாரதி பாட்டில் பகவத் கீதை 10.பயமே இல்லாத பாரதி 11.சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே (பாரதி வாழ்க)

 

Picture are taken from various websites; thanks. swami_48@yahoo.com