Written by S NAGARAJAN
Date: 30 May 2017
Time uploaded in London:- 6-44 am
Post No.3954
Pictures are taken from different sources such as Face book, Wikipdia, Newspapers etc; thanks.
contact: swami_48@yahoo.com
தமிழ் இன்பம்
வள்ளுவர் குறளில் கையாண்ட வ்டமொழிச் சொற்கள் என்ற கட்டுரையில் (கட்டுரை எண் 3873, வெளியான தேதி : 3-5-2017)
வைஷ்ணவ பரிபாஷை என்ற நூலைக் குறிப்பிட்டு அந்த நூலின் பெருமையைக் குறித்து தனியே ஒரு கட்டுரை எழுதப்படும் என்று குறிப்பிட்டிருந்தேன். இதோ, அந்தக் கட்டுரை!
தமிழ் வளர்க்கும் பரிபாஷைச் சொற்கள்!- ‘வைஷ்ணவ பரிபாஷை’ என்னும் அரிய நூல்!!
ச.நாகராஜன்
வைஷ்ணவ பரிபாஷை என்ற அரிய நூல் பிராமணர்கள் பேசும் பரிபாஷைச் சொற்களைப் பற்றிய நூல்.
எங்க ஆத்துக்கு வரேளா?
அவாள் எப்படி வருவா? அவாத்திலே ஆம்படையான் எங்கேயோ வெளிலே போயிருக்காராம்.
இதில் அகம் – வீடு – இல்லம் ‘ஆம்’ ஆகச் சுருங்கி ஆத்துக்கு வருகிறீர்களா என்ற பொருளில் ஆத்துக்கு வரேளா என்று ஆகி இருக்கிறது.
அகமுடையான் – வீட்டுக்காரன் – கணவன்
அகமுடையாள் – வீட்டுக்காரி – இல்லத்தரசி – மனைவி
இப்ப்டி ஐயர் ஆத்துத் தமிழை ஆராயப் புகுந்தோமானால் அழகிய தமிழ்ச் சொற்கள் நூற்றுக் கணக்கில் கண்டு பிடிக்கலாம்.
ஆயிரக் கணக்கில் அள்ளித் தருகிறேன் என்று கச்சை கட்டிக் கொண்டு முன் வருகிறார் ஒரு தமிழ் அன்பர்.
அவர் தான் எம்பார் க்ண்ணன் ரங்கராஜன்.
வைஷ்ணவ ப்ரிபாஷை என்ற மின்வடிவ நூலில் ஐயர் மற்றும் ஐயங்கார் பரிபாஷையை – ஆங்கிலத்தில் dialect – நன்கு ஆராய்ந்து சொற்களைத் தொகுத்து முறைப்படுத்தி வகைப்படுத்தி 931 பக்கங்களில் தந்துள்ளார்.
அசுர முயற்சி. ராக்ஷஸ பிரயத்னம். வெற்றி கிடைத்திருக்கிறது.
56 அத்தியாயங்களில் அன்பர் பலவேறு தலைப்புகளில் பரிபாஷையை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து அமுதாக வழங்கி இருக்கிறார்.
பாராட்ட வார்த்தைகளே இல்லை! வாழ்த்துக்கள்!!
உறவுகள், வர்ணங்கள், பரிமாணங்கள், வடிவங்கள், ருசிகள், தரங்கள், அளவுகள்,சரீர பாகங்கள், பிராணிகள், பக்ஷிகள், பூச்சிகள், பழங்கள், கறிகாய்கள், மளிகை சாமான்கள், புஷ்பங்கள், உலோகங்கள், எண்கள், பழைய தமிழ் அளவுகள், நாணயம், வேலைகள், தளிகை, அகம், கால் அளவைகள், வருஷங்கள், மாதங்கள், திதிகள், ராசிகள், வார நாட்கள், ருதுக்கள், பக்ஷ்ங்கள், அயனங்கள், பொழுதும் ஜாமமும், ந்க்ஷத்திரங்கள், வாஹனம், திசை என்று அன்பர் எதையும் விடவில்லை.
பழத்தைப் பிழிந்தெடுத்து ஜூஸ் போல தந்திருக்கிறார்.
***
சம்பாஷ்ணைகள் என்ற அத்தியாயத்திலிருந்து ஒரு சிறிய் பகுதி:
ரங்கா : கவலைபடாதேள். சீக்கிரம் போய்டலாம். ராத்திரி தளிகை ஆயிடுத்தா. என்ன பண்ணேள், இன்னைக்கு
கோமளம் மாமி : தளிகை ஆயிடுத்துடா. ராத்திரிக்கு ஒண்ணும் தனியா பண்ணல. மத்தியானம் பண்ன வெண்டக்காய் கொழம்பு, பாவக்காய் கறமது இருக்கு. சாத்தமது பண்ணேன். அப்பறம் கொஞ்சம் வடாம் வறுத்துட்டேன். அவ்ளோ தான்.
ரங்கா: பிரமாதம் மாமி. உங்க தளிகைன்னா கேக்கணுமா. நளபாகமாச்சே.
கோமளம் மாமி : படவா. சாப்டாமலே சொல்றே. உனக்கு பரிகாசம் பண்ண நான் தான் ஆப்டேனா. போய் வேலையை பாரு. விட்டா பேசிண்டேருப்பே. அம்மா கிட்ட நான் விஜாரிச்சதா சொல்லு. என்ன. நான் கிளம்பறேன். இந்த சனிக்கிழமை ஆத்துக்கு வாடா.
ரங்கா: சரி மாமி. நான் கண்டிப்பா வரேன். நீங்க கிளம்புங்கோ. பத்திரமா போயிட்டு வாங்கோ.
**
சங்க காலத்திலிருந்து பிராமணர்கள் யாகத் தீயை வளர்த்தார்போல தமிழையும் ஒங்கி உயர வளர்த்திருக்கிறார்கள்.
இதை மன்னர்களும் மக்களும் அங்கீகரித்து அவர்களைத் தொடர்ந்து பாராட்டி வந்திருக்கின்றனர்; உரிய மதிப்பையும் வழங்கியுள்ளனர்.
தூய தமிழ் சொற்களை பிராமணர் தமிழில் காணலாம்.
இவற்றைத் தொகுப்பது ஒரு பெரிய முயற்சி. இந்த் வேலையைத் தனி ஒருவராக எம்பார் கண்ணன் ரங்கராஜன் செய்திருக்கிறார் என்றால் அது “ஆசை பற்றி அறையலுற்ற” தமிழ் ஆசை தான் காரணமாக இருக்கும்.
இதே போல அவர் குறிப்பிடும் தென்னகத் தமிழ், கோவை தமிழ் மற்றும் இதர பகுதிகளின் பரிபாஷைகளையும் அந்தந்த ப்ரிபாஷைகளின் வல்லுநர்கள் தொகுத்தால் அது தமிழுக்குச் செய்யும் அரிய தொண்டாக அமையும்.
எம்பார் கண்ணன் ரங்கராஜன் அவர்களின் மின்னஞ்சல் முகவரி ykrrajan@gmail.com.
இந்த நூலைப் பெற விரும்புவோரும் அவரைப் பாராட்ட விழைவோரும் இந்த மின்னஞ்சலில் அவரைத் தொடர்பு கொள்ளலாம்.
நூலைப் படித்து முடிக்கின்றபோது தமிழை உண்மையாக வளர்ப்பவர்கள் ஒரு புறமிருக்க தமிழின் பெயரால் துவேஷத்தைத் தூண்டி அந்தக் குழம்பிய குட்டையில் மீன் பிடித்து தன்னையும் தன் குடும்பத்தையும் தழைக்கச் செய்யும் “தமிழ் இனக் காப்பாளர்களை” நினைக்காமல் இருக்க முடியவில்லை.
தமிழை வளர்ப்ப்வர் ஒரு புறம்; தமிழால் தன்னை வளர்ப்பவர் ஒரு புறம்.
நல்லவர்களை இனம் கண்டு பாராட்டாத தமிழ் இனம் இனியேனும் விழிக்குமா?
தமிழால் தன்னை வைதாரையும் வாழ வைக்கும் குமரன் அருளே தேவை!
நூலை எனக்கு அனுப்பி உதவிய எனது சம்பந்தி திரு ஆர்.சேஷாத்திரிநாதன் அவர்களுக்கு மீண்டும் எனது நன்றியை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
நூலும் நூலை எழுதியவரும் ஒரு மின்னஞ்சல் தூரத்திலேயே இருப்பதைச் சுட்டிக் காட்டிய மகிழ்ச்சியோடு கட்டுரையை முடிக்கிறேன்.
***