
Picture of Nan Tien Temple in Australia
Written by london swaminathan
Date: 6 February 2016
Post No. 2514
Time uploaded in London :– 9-51 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact



சிட்னி நகரிலிருந்து சுமார் ஒர் மணிநேரம் காரில் சென்றால் உல்லாங்காங் என்ற இடத்தை அடையலாம். அதற்கு அருகில் புகழ் பெற்ற நான் டியன் (Nan tien) புத்தர் கோவில் இருக்கிறது. இது மிகப் பெரிய கோவில். நல்ல இயற்கை வனப்பு மிக்க இடத்தில் கட்டி இருக்கிறார்கள். படிக்கட்டுகள் மூலம் உயர உயர செல்ல வேண்டும். அதற்கும் மேலாக ஒரு பெரிய மணி இருக்கிறது. அதை அடைய இன்னும் மேலே செல்ல வேண்டும்.
பசுமையான இந்த பூமியில் நுழையும்போதே மனோரம்யமான காட்சிகள் காத்திருக்கின்றன. உள்ளே நுழைகையில் நம்மை வரவேற்கிறார் சிரிக்கும் புத்தர். இது ஒரு அதிஷ்டசின்னமாகக் கருதப்படுவதால் சென்னை, பம்பாய் நகரங்களில் பலர் வீடுகளிலும் இதை இப்போது காணலாம்.

பின்னர் பெரிய, உயரமான படிக்கட்டுகள் வழியே சென்றால் முதல் நிலை புத்தர் கோவில். பெரிய, உயரமான வண்ண புத்தர். அவருடைய பல அவதாரங்களைப் பிற்கால பவுத்த நூல்கள் கூறுவதால் அது என்ன மைத்ரேயர் என்ற விவரங்களை சீன மொழியிலும், ஆங்கில மொழியிலும் பொறித்திருக்கிறார்கள். உள்ளே மவுனமாக பிரார்த்தனை, தியானம் செய்யலாம். செருப்புகள் அணிந்தே உள்ளே செல்லலாம்.
ஆனால் இதற்கு மேலே மூன்று புத்தர்கள், அதற்கும் மேலே உயரமான இடத்தில் ஐந்து பல வண்ண புத்தர் சிலைகள் உள்ளன. அங்கே செருப்புகளை வெளியே போட்டுவிட்டுச் செல்ல வேண்டும்.
நான் ஹாங்காங்கிலுள்ள புகழ் பெற்ற புத்தர் கோவிலுக்குச் சென்ற போது எல்லோரும் செருப்புக் காலுடன் சென்று வணங்குவதைக் கண்டு வியந்தேன்.
இந்த புத்தர் கோவிலில் சிக்குடை, பாதி உடை அணிந்த பெண்களை அனுமதிப்பதில்லை. ஒரு ஆஸ்திரேலிய வெள்ளைக்காரி, பாதி உடை அணிந்திருந்ததால் அவரை மரியாதையாக திருப்பி அனுப்பினர். வரவேற்பு பகுதிக்குச் சென்றால், சால்வை கிடைக்கும் என்றும் அதைப் போர்த்திக்கொண்டு வரலாமென்றும் சொல்லி அனுப்பினர்.


எல்லா புத்தர் கோவில்களிலும் ஊதுபத்தி வாங்கி கொளுத்தி வைக்கின்றனர். இதற்கென பிரமாண்டமான தொடீகள் உள.
ஆக மிகப்பெரிய, பல வண்ண ஒரு புத்தர், 3 புத்தர், 5 புத்தர் என்று தரிசித்த பின்னர் தியான மண்டபத்தில் அமர்ந்து தியானமும் செய்யலாம். இந்துக்கள் போலக் கையெடுத்துக் கும்பிடாமல், எல்லோரும் ஜப்பானிய முறையில் சிரம் தாழ்த்தியோ, மண்டியிட்டோ வணங்கினர். நானோ கரம் குவித்து, சிரம் தாழ்த்தி, தாழிட்டு வணங்கினேன்.
இந்த பிரம்மாண்டமான காம்பவுண்டில் சில் குறிப்பிடத்தக்க விஷயங்கள்:-
அருமையான சைவ உணவு சிற்றுண்டி சாலையில் 13 டாலருக்கு இழை, தழை சகிதம் சைவ உணவு கிடைக்கும். மாமிச சாஸேஜ் போலத் தோன்றும் டோபு, சோயா மொச்சை, காய்கறிக் கூட்டு ஆகியன சுவையும் மணமும் மிக்கவை. பெரிய காண்டீன். சுகமாகச் சாப்பிட்டோம்.
எங்கு பார்த்தாலும் புத்தர் சிலைகள்- புத்த பிட்சு சிலைகள், பல போஸ்களில்!

கோவிலுக்கு அருகிலுள்ள திறந்தவெளி அரங்கில் சீன ராசிகளின்படியான 12 பிராணிகளின் சிலைகளும் அந்தந்த ராசியின் பலனும் எழுதப்பட்டுள்ளன. இதைச் சுற்றி புகைப் படமெடுக்க பெரும் கூட்டம். அதே இடத்தில் ஒரு அதிர்ஷ்ட மரமும் இருக்கிறது. அதன் மீது ஒரு சிவப்பு நிற ரிப்பனை எறிவர். இதை கோவில்காரர்களே விற்பனை செய்கின்றனர். நாம் நினைத்த காரியம்நிறைவேற இப்படிச் செய்யலாம் என்கின்றனர்.
கீழே மரத்தில், அழகான குரங்கு பொம்மைகள் தொங்குகின்றன. மேலே மியூசியம், சீன மட்பாண்ட,பீங்கான் விற்பனைக் கூடம், படம்-புத்தக கலைப் பொருள் விற்பனைக் கூடங்கள் இருக்கின்றன. மியூசியத்திலிருக்கும் தங்க நிற புத்தர் உருவங்கள் காணவேண்டியவை.
பெரிய பகோடா, தனியே ஓரிடத்தில் இருக்கிறது. மேலே ஏறிச் சென்றால் மிகப்பெரிய மணி இருக்கிறது அதை அடிக்க பெரிய மரக்கட்டையைப் பொருத்தி இருக்கிறார்கள். முன்னோர்களின் நினைவாக நன்றி தெரிவிக்க இந்த ஏற்பாடு. முன்னோர்களின் சாம்பல்/அஸ்தி அடங்கிய பேழையை வைக்க ஒரு புத்தர் கோவிலில் ஏற்பாடு செய்திருக்கிரார்கள். இதற்குக் கட்டணம் உண்டு.


சிட்னி நகருக்குச் செல்லும் அனைவரும் பார்க்கவேண்டிய இந்தக் கோவிலில் புகைப்ப்படமெடுக்க நூற்றுக் கணக்கான இடங்கள் உள்ளன. ஆனால் மூன்று பிரதான கோவில்களிலும் புகைப்படமெடுக்கக் கூடாது.
மூங்கில் தோப்பு, தாமரைக் குளம், பிரமாண்டமான மரங்கள் ஆகியன இவ்விடத்தை அலங்கரிக்கின்றன. மேலே மணி அடிக்கச் செல்லும் புல் மேட்டில் பாம்புகள் ஜாக்கிரதை என்ற போர்டு வைத்துள்ளனர். பெரும்பாலும் சீன, ஜப்பானியர் கூட்டமிருந்தாலும் ஆங்காங்கே தமிழ்க் குரல்களும், இந்தியும் பயணிகளிடையே ஒலித்தன.

கோவிலைப் பார்க்க கட்டணமில்லை. ஆயினும் நாமே அதனழகைக் கண்டு வியந்து உண்டியலில் காசு போட விழைவோம்.
அமைதியான, அற்புதமான, அழகான கோவில்.
புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் (தர்மம்) சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி!!!

–subham–
You must be logged in to post a comment.