வாதக்கோன், வையக்கோன், ஏதக்கோன்: யார் நல்லவர்? (கட்டுரை எண்.2816)

IMG_9826

Written by london swaminathan

 

Date: 16 May 2016

 

Post No. 2816

Time uploaded in London :– காலை 9-05

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஒரு ஊரில், வாதக்கோன், வையக்கோன், ஏதக்கோன் – என்று மூன்று பேர் வசித்தனர். சிலர் அவர்களிடம், ஒரு நல்ல காரியம் செய்ய நன்கொடை வசூலிக்கச் சென்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் என்னதெரியுமா சொன்னார்கள்?

 

வாதக்கோன் நாளை என்றான், வையக்கோன் பின்னையென்றான்

ஏதக்கோன் யாதொன்றும் இல்லை என்றான் – ஓதக் கேள்

வாதக்கோன் நாளையினும் வையக்கோன் பின்னையினும்

ஏதக்கோன் இல்லை இனிது

 

பொருள்:

நாளைக்கு வா, தருகிறேன் என்றான் வாதக்கோன்; மறு நாள் போனபோதும் நாளைக்கு வா, தருகிறேன் என்றான்; இப்படி நாட்கள் உருண்டோடின.

கொஞ்சம் நேரம் கழித்து வாருங்கள், தருகிறேன் என்றான் வையக்கோன்; சிறிது நேரம் கழித்துச் சென்றால், ஐயா, வெளியே போய்விட்டார்- என்று மனைவி சொன்னாள்; மாலை நேரத்தில் சென்று பார்த்தால், ஐயா, இப்பொழுதுதான் போன் செய்தார்; அவசர ஜோலியாக வெளியூர் செல்வதாக; எப்பொழுது திரும்பிவருவார் என்று சொல்லவில்லை என்றாள் மனைவி.

 

ஏதக்கோன் வீட்டுக்கு, நன்கொடை கேட்கச் சென்றபோது, இதோ பாருங்கள், இந்த மாதிரிப் பணிகளுக்கெல்லாம் நான் நன்கொடை கொடுப்பதுமில்லை; அந்த அளவுக்கு என்னிடம் பணமும் இல்லை என்றான்.

 

இந்த மூன்று ஆட்களில் இல்லை என்று சொன்னானே ஏதக்கோன்; அவன்தான் நல்லவன் – என்கிறார் அவ்வையார்.

 

சம்ஸ்கிருதத்திலும் அழகான பாடல் உண்டு (நான் முன்னர் எழுதிய கட்டுரையிலுந்து)

paari vallal

Pari, who gave his chariot to a climbing plant, one of the Seven Tamil Philanthrophists

தானதூஷணம்

அநாதரோ விலம்பஸ்ச வைமுயம் சாப்ரியம் வச:

பஸ்சாத் பவதி ஸந்தாபோ தான தூஷண பஞ்சகம்.

 

 

ஐந்து வகைத் தானங்கள் குறையுடைய தானம்; அவையாவன:

அநாதர- மரியாதை இல்லாமல் வழங்கும் தானம்

விலம்ப: – தாமதமாகக் கொடுக்கும் தானம்

வைமுக – முக்கியம் கொடுக்காமல் இருப்பது

அப்ரியம்வச: – திட்டிக் கொண்டே கொடுப்பது

பஸ்சாத் சந்தாப- கொடுத்த பின்னர் வருந்துவது

உத்தமன், மத்திமன், அதமன்

தமிழில் நீதிவெண்பா பாடல் ஒன்றும், இதே கருத்தை அழகாக விளக்கும்:

தானறிந்தோருக்குதவி தன்னாலமையுமெனில்

தானுவந்தீதல் தலையாமே—ஆனதனால்

சொன்னாற் புரிதலிடை சொல்லியும் பன்னாள் மறுத்துப்

பின்னாட் புரிவதுவே பின்.

 

பொருள்:– ஒருவர் தான் அறிந்த ஒருவருக்கு உதவி செய்ய முடியுமானால், அவர் கேட்கும் முன்னால், மகிழ்ச்சியுடன் தானே வலியப் போய் உதவி செய்தால், அது தலையானது; முதன்மையானது; உத்தமம்.

அவர் கேட்ட பின்னர், உதவி செய்வது இடைப்பட்டது; மத்திமம்.

அவர் கேட்ட பின்னரும் பல நாள் தாமதித்து, பின்பு உதவுவது கடைப்பட்டது; கடைத்தரமானது; அதமம்.

அன்பர்களே! நண்பர்களே! நாம் எல்லோரும் உத்தமர்களாக வாழ்வோம்! அல்லது வாழ முற்படுவோம்.

ஆங்கிலப் பழமொழிகளிலும் இதே கருத்தைக் காணலாம்:–

He gives twice who gives quickly

To refuse and to give tardily is all the same

He that is long a giving knows not how to give

Long tarrying takes all the thanks away

 

 

முந்தைய கட்டுரைகள்:

கருமிகள் பெரும் கொடையாளிகள்! ஒரு கவிஞரின் கிண்டல் (12 மே, 2016)

நன்கொடை/ தானம் பற்றிய பழமொழிகள், பாடல்கள் (25 பிப்ரவரி 2016)

–சுபம்–