கட்டுரை மன்னன்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1250; கட்டுரை தேதி:– 25 ஆகஸ்ட் 2014.
(என்னுடைய இரண்டு ‘’பிளாக்’’ குகளையும் படித்தோர் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டி விட்டது! அனைவருக்கும் நன்றி)
சனீஸ்வரன் எள் விளக்கும், சர்ச் (மாதா கோவில்) விளக்கும்:
தமிழ் நாட்டுக் கோவில்களில் சனிக்கிழமைகளில் சனைச்சரன் (சனீஸ்வரன்) சந்நிதியில் எள் விளக்கு ஏற்றுவதைப் பார்த்திருப்பீர்கள். இதைக் காசு கொடுத்து வாங்க வேண்டும். இது போல மேலை நாட்டு கத்தோலிக்க கிறிஸ்தவ சர்ச்சுகளில் மெழுகுவர்த்தி ஏற்றும் வழக்கம் இருக்கிறது. பாரீஸ் நகரில் உள்ள புனித இருதய மாதாகோவிலில் 2 யூரோவுக்கு சின்ன மெழுகு திரியும், 10 யூரோவுக்கு பெரிய மெழுகு திரியும் விற்கிறார்கள். இதை கிறிஸ்துவ பக்தர்கள் வாங்கி ஏற்றுகிறார்கள்.
(( சனை: = மெதுவாக, சரன்= செல்பவன். இதை தவறுதலாக சனீஸ்வரன் என்று எழுதி வருகின்றனர் )).
24 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு முறை பாரிசுக்குப் போயிருந்தேன் (ஆகஸ்ட் 19,20,21—2014). அப்போது சாக்ரெட் ஹார்ட் சர்ச்சுக்கும் சென்றேன். மெழுகுவர்த்தி பகுதியைத் தாண்டி ஒரு பெட்டியும், உறைகளும் வைத்திருந்தார்கள். சர்ச்சில் அவர்களின் பெயரில் பிரார்த்தனை செய்ய 17 யூரோ சார்ஜ் என்று அறிவிக்கப்படிருந்தது. இது நமது ஊரில் அர்ச்சனை சீட்டு வாங்கி அர்ச்சனை செய்வது போன்றது! சத்ய சாயி பாபாவிடம் பலர் கோரிக்கை எழுதப்பட்ட ‘’கவர்’’களை (உறை) கொடுப்பார்கள். அதை அவர் வாங்கிவிட்டால் அந்தக் காரியம் நிறைவேறும் என்று பக்தர்கள் நம்பினார்கள். இன்னும் சில இந்துக்கள் அனுமார் சிலயில் ராமநாமம் எழுதி காகித மாலை போடுவார்கள். இதை எல்லாம் நினைவுபடுத்தியது 17 யூரோ சர்ச் உறை!!
கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், இந்துக்களைப் போலவே பல பழக்க வழக்கங்களைக் கொண்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதிய ‘’பைபிளில் சம்ஸ்கிருதம்’’ என்ற நீண்ட ஆங்கிலக் கட்டுரையில் இது பற்றி ஒப்பிட்டு எழுதியுள்ளேன்.
பாரிஸில் உள்ள மற்றொரு புகழ்பெற்ற நாத்ர்தாம் கதீட்ரலுக்கும் சென்றேன்.அங்கு ஒரு மிஷினில் 2 யூரோ போட்டால் கோவிலின் படத்துடன் ‘மெடல்’ வெளியேவந்து விழும். இந்துமதக் கோவில்களும், சுற்றுலாத் தலங்களும் இந்த முறையைப் பின்பற்றலாமே!

பாரீஸ் நகரில் உள்ள லூவ்ர் மியூசியம் மிகவும் புகழ்பெற்றது. இங்குதான் புகழ்பெற்ற மோனாலிஸா படம் உள்ளது. வெளியே ஒரு பெரிய ‘போஸ்டர்’ ஒட்டி இருந்தார்கள். அதில் ஒரு எகிப்திய எழுத்தர் யோகாசன நிலையில் அமர்ந்திருந்தார். ஏற்கனவே நான் இந்துமதத்தையும் எகிப்திய பழங்கால மதத்தையும் ஒப்பிட்டு பல கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். யோகாசன முறையில் அமர்ந்த அந்த படத்தைப் பார்த்தவுடன் நேராக அனத சிலை வைக்கப்பட்ட இடத்துக்கு விரைந்து சென்று புகைப்படம் எடுத்தேன்.

அந்த எகிப்திய எழுத்தர் யோகாசன நிலையில் அமர்ந்திருப்பது நான் முன்னர் எழுதிய ஏழு கட்டுரைகளில் சொன்ன விஷயத்தை உறுதிப் படுத்தியது. சிந்து சமவெளியில் காணப்படும், நரபலி மற்றும் கொடி ஊர்வலம் இந்துமதத்தில் காணப்படும் முத்திரைகள், அதர்வ வேதத்தில் காணப்படும் ‘’செக்ஸ்’’ மந்திரங்கள், தாயத்துகள் முதலியன் எகிப்திலும் இருப்பதை ஒப்பிட்டு நான் எழுதியதை இந்தச் சிலையும் உறுதிப் படுத்தியது. எகிப்திய அரசர்கள் அணியும் பாம்புக் கிரீடம் சிவபெருமான் போல இருப்பதையும் பார்த்தமாத்திரத்திலேயே உணரலாம்.

இளங்கோ அடிகள் சொன்ன மான் வாகனம்
சிலப்பதிகாரத்தில் கொற்றவைக்கு (துர்கா தேவி) மான் வாகனம் இருப்பதை இளங்கோ அடிகள் பல இடங்களில் ‘’கலையதூர்தி’’ என்று குறிப்பிடுவார் (கலை= மான், ஊர்தி=வாகனம்). பிற்கால சைவ இலக்கியங்களிலும் இச் சொல் பயிலப்படுகிறது. இது பற்றி வாகன ஆரய்ச்சிக் கட்டுரைகளில் விரிவாக எழுதிவிட்டேன். லூவ்ர் மியூசியத்தில் மானுடன் காட்சி தரும் வனதேவதை ஆர்டெமிஸ் சிலை இருந்தது. அதை விரைந்து சென்று புகைப்படம் எடுத்தேன். இந்துமத எச்ச சொச்சங்கள், மிச்சம் மீதிகள் உலகெங்கும் காணப்படுகிறது என்று காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) தனது 1936 ஆம் ஆண்டு சென்னை உபந்யாசங்களில் கூறி இருப்பதையும் நினைவிற் கொண்டேன்.
‘’லவ் லாக்’’– (காதல் பூட்டு)
பாரிஸ் நகர செய்ன் நதி, லண்டனில் உள்ள தேம்ஸ் நதியைவிட அழகானது. இரண்டு நதிகளிலும் இரண்டு முறை படகுப் பயணம் செய்துள்ளேன். பாரிஸில் கரை முழுதும் சிமென் ட் பூசி, கான்க்ரீட் போட்டு, படித்துறை அமைத்து, படிக்கட்டுகள் கட்டி இருப்பதால் மக்கள் ‘’ஜாலி’’யாக அமர்ந்து படிக்கிறர்கள். கல்லூரி மாணவிகள் ‘’லாப்டாப்’’ கப்யூட்ட்ர்களையும், வயதானவர்கள் நாவல்களையும் வைத்துக் கொண்டு பொழுதுபோக்குவதைக் கண்டேன்.
அந்த நதியின் பாலங்களில் ஆயிரக் கணக்கான காதலர் பூட்டுகளைக் கண்டு, பல கோணங்களில் நின்று, ஏழெட்டுப் புகைப்படம் எடுத்தேன். உலகில் மனிதர்கள் உருவ வழிபாட்டையோ, மூட நம்பிக்கைகளையோ ஒழிக்கவே முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணம். காதலர்கள் அவர்களுடைய பெயர்களை பூட்டுகளின் மீது எழுதி அந்தச் சாவியை நதியில் தூக்கி எறிந்து விடுவார்கள். அப்படிச் செய்தால் அந்தக் காதலை யாரும் காலாகாலத்துக்கு அழிக்க முடியாது என்று நம்புகின்றனர். ஆயினும் இப்படிக் காதலுக்கு பூட்டுப் போட்டவர்கள் கொஞ்சம் வருடங்களில் விவாக ரத்து (டைவர்ஸ்) செய்வதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன!! ஆக, இது ஒரு மேலை நாட்டு நவீன மூட நம்பிக்கை என்று நாம் கொள்வதில் தவறில்லை. இந்த வழக்கம் 100 ஆண்டுகளுக்கு முன், முதல் உலகப்போரின்போது துவங்கியதாம்.

செய்ன் நதிக்கரையில் நிறைய பழைய புத்தகக் கடைகளும் ஓவியக் கடைகளும் இருக்கின்றன. இரவு நேரத்தில் சாதாரண பூட்டுப் போட்டுவிட்டுப் போய்விடுவார்கள்!! யாரும் திருடமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்!!
பாரிஸில், லண்டன் சுறுசுறுப்பைக் காண முடியவில்லை. ஒருவேளை நாங்கள் போனபோது சம்மர் சீசன் என்பதால் எல்லோரும் வெளியே போய்விட்டார்கள் போலும்!! எங்கு பார்த்தாலும் ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள்!!

சிம்மாசனத்தை கண்டுபிடித்தது இந்துக்கள்
விக்ரமாதித்தன் சிம்மசனம் பற்றிய கதை 2000 ஆண்டுகளுக்கு முந்தையது. தமிழிலும் அரியாசனம் என்ற சொல் உண்டு. இது இந்தியாவில் இருந்து உலக்ம் முழுதும் சென்ற கொள்கை. மைசீனிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கோட்டை வாசல்களில் பெரிய சிங்கச் சிலைகள் இருப்பது இந்திய கலாசாரத்தின் தாக்கதைக் காட்டுகிறது. ஜூலியஸ் சீசர், அகஸ்டஸ் சீசர் என்ற பெயர்களில் உள்ள சீசர் என்பது கேசரி என்ற சம்ஸ்கிருதச் சொல்லின் மரூஉ. கேசரி என்றால் சிங்கம். இந்த மிருகம் ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் மட்டுமே உண்டு.
பாரிஸ் லூவ்ர் மியூசியத்தில் இம்மசனம் , காமதேனு ஆசனம் கண்டு மகிழ்ந்தேன். காமதேனு ஆசனம் பற்றி ஆராய்ச்சி துவங்கியுள்ளேன். முடிவு தெரிந்தால் எழுதுவேன்.
contact swami_48@yahoo.com






You must be logged in to post a comment.