இராமபிரானுக்கு கம்பரும், காந்தியும், சுவாமி விவேகாநந்தரும் புகழ்மாலை
கட்டுரையாளர்:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண். 971; தேதி- 11th April 2014
கம்ப ராமாயண கடவுள் வாழ்த்து
உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே
பொருள்: படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களை முடிவேயில்லாத விளையாட்டாகச் செய்யும் தலைவன் எவனோ அவன் காலில் சரணடைகின்றேன்.
மும்மைசால் உலகுக்கெல்லாம்
மூல மந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும்
மருந்தினை இராமன் என்னும்
செம்மைசேர் நாமம் தன்னை
கண்களில் தெரியக் கண்டான்
வாலிவதைப் படலம், கம்ப ராமாயணம்
இராம நாமம்தான் எல்லா மந்திரங்களுக்கும் மூத்த மந்திரம், மூல மந்திரம் என்பான் கம்பன். அது ஏழு பிறவிகளில் செய்த தீவினைகளைப் பொடியாக்கும். இராம என்ற சொல்லை, வாலி தனது மார்பில் பாய்ந்த அம்பில் கண்டான். அடடா! ராமன் கையினால் மரணம் சம்பவித்தால் எனக்கு நேரடி மோட்சம்தான் என்று மகிழ்கிறான்.
இராம நாமம் நமக்கு என்ன என்ன தரும்?
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்.
****
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே.
இராமனுடைய இரண்டெழுத்தைச் சொன்னால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். செல்வம், ஞானம் (நல் அறிவு), புகழ், லெட்சுமி கடாட்சம் எல்லாம் கிடைப்பதோடு பாவங்கள் அழிந்து இந்த ஜன்மத்திலேயே ஜன—மரணச் சுழலில் இருந்து விடுதலையும் கிட்டும்.
சிவபெருமான் கூற்று
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சிவ பெருமானே ராமன் புகழ் பாடும் ஒரு பலஸ்ருதி ஸ்லோகம் வருகிறது. இந்த ஸ்லோகத்தைப் படித்தால் சஹஸ்ரநாமத்தை முழுக்கப் படித்த பலன் உண்டு
ஈஸ்வரோ உவாச
“ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே”
காந்திக்குப் பிடித்த ரகுபதி ரகவ ராஜா ராம்!
மஹாத்மா காந்திஜி, துப்பாக்கி ரவையால் சுடப்பட்டு உயிர் இழந்த போது அவர் கூறிய கடைசி சொல் ‘’ஹே ராம்!’’ ஒருவர் வாழ் நாள் முழுதும் ராம நாமத்தை ஜபித்தால்தான் கடைசி நிமிடத்தில் அவன் பெயர் நினைவுக்கு வரும்! அவர் எல்லா பஜனைகளிலும் ரகுபதி ராகவ ராஜாராம் பாடலைப் பாடியதோடு மட்டுமின்றி, உலகிற்கே அப்பாட்டை அறிமுகம் செய்தார்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர், வாழ் நாள் முழுதும் ராம நாமத்தை ஜபித்தார். 21 ஆண்டுகளில் 96 கோடி முறை அவர் ராம நாமம் சொன்னதாக அவர் வரலாறு கூறுகிறது. வாயினால் சொல்லும் வேகத்தைவிட மனதினால் கூடுதலாகச் சொல்லமுடியும்.
தர்ப்பண மந்திரம்
பிராமணர்கள் செய்யும் தர்ப்பணத்தில் க்ஷத்ரிய அரசனான ராமனின் பெயரைச் சொல்லுகிறார்கள்:
ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தர: சுசி:
மானஸம் வாசிகம் பாபம் ஸகுபார்ஜிதம்
ஸ்ரீ ராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி ந ஸம்சய:
ஸ்ரீ ராம ராம ராம
பொருள்:— அசுத்தமாகவாயினும், சுத்தமாகவாயினும் எந்த நிலையில் இருந்தாலும் எவன் ஒருவன் தாமரைக் கண்ணனை நினைக்கின்றானோ அவன் உள்ளும் புறமும் சுத்தமானவனே.
மனதாலோ, வாக்காலோ, செயலாலோ வந்தடைந்த பாவம் ஸ்ரீ ராமனை நினைத்த மாத்திரத்திலேயே கழிந்து போகும். இதில் சந்தேகம் இல்லை. ஸ்ரீ ராம ராம ராம.
இராமனுடைய பெயரை மூன்று முறை சொன்னவுடனேயே எல்லாப் பாவங்களும் அகன்று பரிசுத்தனாகி விடுவான்.
நாமும் ராம நாமம் சொல்லி பரிசுத்தம் அடைவோம்!!
சுவாமி விவேகாநந்தர் சொற்பொழிவு!
ஆங்கிலத்தில் சுவாமி விவேகாநந்தர் பேசியதை தமிழில் தருகிறேன். குறை இருப்பின், அது எனது மொழி பெயர்ப்பின் பிழையே அன்றி அவர் குற்றம் ஆகாது.
“இராமபிரான், புராதன வீர சகாப்தத்தின் சின்னம், தர்மத்தின் ஒட்டுமொத்த உருவம் அவர்; அறநெறிகளின் சின்னம் அவர். அதுமட்டுமல்ல, முன் உதாரணமாகத் திகழும் ஒரு மகன், ஒரு தந்தை, ஒரு கணவன், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு அரசன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி நம் கண் முன்னே கொண்டுவந்து ராம பிரானைத் தருகிறார் வால்மீகி முனிவர்.
அவருடைய அற்புதமான தூய மொழி, மாசு மருவற்ற நடை, அழகான மொழி, அதே நேரத்தில் எளிமையான ஒரு மொழி நடை! இதை மிஞ்ச உலகில் எதுவுமே இல்லை அப்படிப்பட்ட ஒரு மொழியில் ராம பிரானை வருணிக்கிறார்.
சீதா தேவி பற்றி நான் என்ன சொல்ல! அடடா!! அது போன்ற ஒரு சீதையைக் காண நீங்கள் உலகில் இதுவரை தோன்றிய எல்லா இலக்கியங்களையும் —- இன்னும் ஒரு படி மேலே சென்று உறுதி படச் சொல்லுவேன் —– வருங்காலத்தில் உலகத்தில் எழுதப்படப் போகின்ற அத்தனை இலக்கிய நூல்களையும் கற்றாலும் — நீங்கள் இன்னும் ஒரு சீதையைக் காண்பது அரிது! அவள் ஒப்பற்றவள். ஒரு முறைதான் அப்படிப்பட்ட குணம் உடைய பெண்ணைப் படைக்க முடியும். இராமர்கள் பலர் இருக்க முடியும். ஆனால் ஒரு சீதாதேவிக்கு மேல் காண முடியாது”.
— சுவாமி விவேகாநந்தரின் சொற்பொழிவுகள். ஆங்கிலத்திலும் கீழே கொடுத்துள்ளேன். ஆங்கில வாசகம் அவர் சொன்னது:–
“Rama, the ancient idol of heroic ages, the embodiment of truth, of morality, the ideal son, the ideal husband, the ideal father, and above all the ideal king, this Rama has been presented before us by the great sage Valmiki. No language can be purer, none chaste, none more beautiful, and at the same time simpler, than the language in which the great poet has depicted the life of Rama. And what to speak of Sita? You may exhaust the literature of the world that is past, and I may assure you that you will have to exhaust the literature of the world of the future, before finding another Sita. Sita is unique; that character was depicted once and for all. There may have been several Ramas, perhaps, but never more than one Sita!”
—-Swami Vivekananda
Contact swami_48@yahoo.com





You must be logged in to post a comment.