நம்பினார் கெடுவதில்லை: மரண தண்டனை ரத்து! (Post No.2546)

two pillars

Written  by London swaminathan

 

Date: 16  February 2016

 

Post No. 2546

 

Time uploaded in London :–  9-43 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

 

 

ஒரு மனிதனுக்கு ஒரு மாகாண கவர்னர், தவறுதலாக, அநியாயமாக மரணதண்டனை கொடுத்துவிட்டார். பாரசீக நாட்டில் (தற்போது ஈரான்) இது நடந்தது. மரண தண்டனைக் கைதிக்கு நம்பிக்கை போகவில்லை. இறுதிவரை முயன்று பார்ப்போம். நம்பினார் கெடுவதில்லை; இது நான்கு மறைத் தீர்ப்பல்லவா!

 

அந்த ஊரில் மரண தண்டனைக் கைதிகளை ஒரு தூணில் கட்டிவைத்து, தலையை ஒரே வெட்டாக வெட்டி விடுவர். நேரம் நெருங்கியது. கொலை வாளுடன் வந்தான் தண்டனையை நிறைவேற்றும் வெட்டியான். அப்போது, மரண தண்டனைக் கைதி ஒரு வேண்டுகோள் விடுத்தான். எனக்கு இந்தத் தூணில் மரணம் வேண்டாம். அடுத்த தூணில் கட்டிவைத்து என்னை வெட்டு என்றான்.

 

வெட்டியானுக்கு ஒரே சிரிப்பு. “ஏனப்பா? சாகப் போகிறவனுக்கு தலைக்கு மேலே, வெள்ளம் சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன? உனக்கு எதற்கு அடுத்த தூண்?” என்று நகைத்தான். கைதியோ மீண்டும் மீண்டும் வேண்டினான். “சரி, போ! உன் கடைசி ஆசையை நான் நிறைவேற்றுகிறேன்” என்று அடுத்த தூணுக்கு அழைத்துச் சென்று கட்டிக் கொண்டிருந்தான். இதற்குள் பெரும் கூட்டம் கூடிவிட்டது. அந்த நாட்டு அரசன், அந்தப் பக்கமாகச் செல்லுகையில் இது என்ன  பெருங்கூட்டம்? எனக்குத் தெரியாமல் எந்நாட்டில் என்ன நடக்கிறது? என்றான். உடனே எல்லோரும் கைதியின் விநோத வேண்டுகோளைத் தெரிவித்தனர். அரசனுக்கும் ஆச்சரியம். கூட்டத்தை விலக்கி, மரண தண்டனைக் கைதியுடன் பேசினான். அவன், தான் நிரபராதி என்றும், தனக்கு மரணதண்டனை அளித்தது தவறு என்றும் அழகாக எடுத்துரைத்தான். உடனே அவனை விடுதலை செய்ய அரசன் உத்தரவிட்டான்.

நம்பிக்கையை இழக்கக்கூடாது;முயற்சி திருவினை ஆக்கும்.

 

Xxx

cow

சண்டை பிறந்தால் தீர்வு பிறக்கும்!

ஒரு ஊரில் ஒரு பக்காத் திருடன் இருந்தான். ஒரு குடியானவன், பக்கத்து ஊரில் ஒரு பசு மாட்டை விலைக்கு வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போவதைப் பார்த்தான். இந்த மாட்டை இன்று இரவு திருடி விடுவோம் என்று அவனுக்குத் தெரியாமல் பின் தொடர்ந்தான். போகும் வழியில் ஒரு ஆவியும் (பேய்) அவனைப் பின் தொடர்ந்தது. அது, அந்தக் குடியானவனைக் கொல்ல வேண்டுமென்று திட்டமிட்டது.

 

அந்தக் குடியனவனைப் பின் தொடரும் திருடனிடம் சென்று தனது திட்டத்தை தெரிவித்தது. திருடனுக்கு ஏக சந்தோசம். நமக்கு ஒரு துணை கிடைத்தது என்று ஜாலியாகப் பேசிக்கொண்டே சென்றான்.

 

குடியானவனின் வீடும் வந்தது. அவன் மாட்டைக் கட்டிவிட்டு, மனைவி மக்களைச் சந்தித்து அளவளாவினான். திருடனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம். முதலில் பேயை (ஆவி) அனுப்பி, குடியானவனைக் கொல்லச் செய்தால் வீட்டிலுள்ள எல்லோரும் அழுது புலம்புவார்கள். எல்லோரும் விழித்துக் கொண்டால் பின்னர் மாடு திருடும் வேலை நடக்காது என்று எண்ணி, பேயே! நீ உன் திட்டத்தை  எனக்குப் பின்னால் நிறைவேற்று; கொஞ்சம் பொறு — என்றான்.

 

பேய்க்கும் ஒரு சந்தேகம். இந்தத் திருடன் போய் முதலில் பசுவைத் திருடினால் அது, “மா, மே” என்று கத்தும். எல்லோரும் விழித்துக் கொண்டால் என் பாடு, திண்டாட்டமாகிவிடும் என்று எண்ணி, “ஏ, திருடா, கொஞ்சம் பொறு. நான் போய் என் வேலையை முதலில் முடிக்கிறேன்” என்றது.

 

 

இருவரும் ஒருவரை ஒருவர் வலியுறுத்தவே, அது வாக்குவாதமாகி மாறி கைகலப்பில் முடிந்தது. வீட்டிலுள்ள எல்லோரும் விழித்துக்கொண்டு வேடிக்கை பார்க்க வெளியே வந்துவிட்டனர். ஊரே கூடிவிட்டது. திருடனும் பேயும் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்கவே, ஊர் மக்கள் அனைவரும் கூடி, அவர்களை ஓட ஓட விரட்டினர். குடியானவனுக்கு மிக்க மகிழ்ச்சி.

 

–சுபம்–

 

ஓஷோ கூறிய பக்கா திருடன் கதை!

bigstock-Burglar-8487742

ச.நாகராஜன்
Post No 1221; Dated 8th August 2014

ஜென் கதைகளில் ஒன்று!

வாழ்க்கையில் எப்படி வெற்றி பெறுவது? ஜென் குருமார்கள் இதற்கு கதை மூலம் பதில் கூறியுள்ளனர். ஜென் பிரிவில் வழங்கி வரும் இதை ஓஷோ கூறியுள்ளார். கதை இது தான்:

ஜப்பானில் ஒரு பக்காத் திருடன் இருந்தான். அவன் திருடுவதில் நிபுணன் அவனை யாராலும் பிடிக்க முடியவில்லை.நாடு முழுவதும் அவன் பெயர் பிரசித்தமாகி விட்டது. ராஜாவின் பொக்கிஷத்திலிருந்தே அவன் திருடி விட்டான். தான் வந்ததற்கு அடையாளத்தையும் அவன் விட்டுச் செல்வதால் அவனது திருட்டுகள் பிரபலமாயின. மக்கள் அவனை வியந்து பாராட்டி நேசிக்கவே தொடங்கி விட்டனர் எந்த திருட்டு நடந்தாலும் என் வீட்டிற்கு பக்காத் திருடன் நேற்று வந்தான் என்று மகிழ்ச்சியுடன் கூறும் நிலையை அவன் உருவாக்கி விட்டான்.

ஆனால் காலம் சென்றது. அவனுக்கும் வயதாகி விட்டது. அவனது மகன் ஒரு நாள் அவனிடம்,’ தந்தையே! உங்களுக்கு மிகவும் வயதாகி விட்டது. உங்கள் கலையை எனக்குச் சற்று கற்பியுங்களேன்” என்று வேண்டிக் கொண்டான்.

பக்காத் திருடன் தன் மகனை அன்புடன் பார்த்து,” சரி, மகனே, இன்று இரவு என்னுடன் வா! ஏனென்றால் இது சொல்லிக் கொடுத்து வருவதில்லை. தானே வர வேண்டியது! நீயே என்னைப் பார்த்தால் கலையை பிடித்துக் கொள்ளலாம். கற்பிக்க முடியாத ஒன்று இது.” என்றான்.

மகனுக்கோ ஒரே பயம்! அவனது முதல் திருட்டு இது. ஒரு வீட்டின் சுவரில் கன்னம் வைத்து அதை உடைத்தான் பக்கா திருடன். நேர்த்தியாக அவன் கைகள் வேலையைத் திறம்படச் செய்தன.அவனிட்த்தில் பயம் இல்லை; பரபரப்பும் இல்லை. நிதானமாக வேலையை முடித்தான்.ஏதோ, தன் வீட்டின் சுவரை உடைப்பது போல உடைத்து உள்ளே நுழைந்தான். மகனுக்கோ உடல் எங்கும் நடுக்கம். கால்கள் தள்ளாடின. யாராவது பிடித்து விட்டால் என்ன செய்வது?

Jewelry-Thief-Walkthrough

கும்மிருட்டில் சர்வ சாதாரணமாக பக்கா திருடன் வீட்டில் நுழைய மகனும் பின் தொடர்ந்தான். வீட்டின் உள்ளே நகைகள் இருக்கும் அறைக்குள் சென்று ஆள் நுழையக் கூடிய அளவில் இருந்த பெரிய பீரோவைத் திறந்தான். மகனை நோக்கி,” விலை மதிப்புள்ள எதை வேண்டுமானாலும் எடு” என்று கூறினான். பீரோவினுள் மகன் நுழைந்தான். உடனே பக்கா திருடன் பீரோவின் கதவுகளை நன்கு மூடி விட்டு, “திருடன் திருடன், வாருங்கள், எல்லோரும் வாருங்கள்’ என்று கத்தி விட்டு தான் கன்னமிட்ட துவாரத்தின் வழியாகத் தப்பிச் சென்று விட்டான்!

மகனுக்கு வேர்த்து விறுவிறுத்தது. தனது தந்தை இப்படிச் செய்வார் என்று அவன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை இப்படி மாட்டி விட்டு விட்டாரே, மஹா பாவி! அப்பனா இவன்! பீரோ கதவை வேறு பூட்டி விட்டான்! பிடிபட்டால் மரணம் தான் பரிசு. அடித்தே கொன்று விடுவார்கள். அவன் கண்களிலிருந்து நீர் வழிந்தது.

ஒரு மணி நேரம் கழிந்து வீட்டிற்கு வந்த மகனை அன்புடன் பக்காத் திருடன் வரவேற்றான். மகனோ தனது மேலிருந்த போர்வையைத் தூக்கி எறிந்து விட்டு,” என்ன அநியாயம் இது! இப்படியா செய்வது?” என்று கோபத்துடன் கூவினான்.

பக்காத் திருடன் கூறினான்:” ஓ! நீ ஒன்றுமே சொல்ல வேண்டாம். தூங்கப் போ. உனக்கு நமது கலை புரிந்து விட்டது! அதைப் பற்றிப் பேச வேண்டாம்”

மகனோ,”இல்லை இல்லை, என்ன நடந்தது என்று நான் கூறுகிறேன்” என்றான்.

“உனக்குச் சொல்ல வேண்டுமென்றால் சொல். எனக்குக் கேட்க வேண்டுமென்பது இல்லை. நாளை முதல் நீ தனியாகவே திருடச் செல்லலாம். உனக்குத் திறமை இருக்கிறது. அதைப் பற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என்றான் பக்கா திருடன்.

மகனோ,” தந்தையே! நடந்ததைச் சொல்லாவிட்டால் எனக்குத் தூக்கமே வராது. நீ என்னைக் கொன்றே விட்டாய்! அதிலிருந்து தப்பி வந்திருக்கிறேன். நடந்ததைக் கேள்!” என்றான்,
“அப்படியா! ஒரு நிபுணன் என்றால் அப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்து தப்பித்துத் தான் வரவேண்டும். இது சகஜமப்பா. சரி என்ன நடந்தது அதைச் சொல்” என்றான் தந்தை.
Jewel_Thief_poster

“எப்படியோ அது நடந்தது. தப்பி விட்டேன். எனது மனமோ, புத்தியோ எதுவும் அதற்குக் காரணமில்லை. ஆனால் நடந்து விட்டது” என்றான் மகன்.

தந்தை கூறினான் ” இது தான் வாழ்க்கையில் வெற்றி பெறும் வழி, அது எந்தத் துறையாக இருந்தாலும் சரிதான். திருடுவதோ, ஓவியம் வரைவதோ, கவிதை இயற்றுவதோ எந்த துறையாக இருந்தாலும் சரி தான்! திருடனாக இருந்தாலும் சரி, யோகியாக இருந்தாலும் சரி. தலையிலிருந்து எதுவும் உதிப்பதில்லை வேறு எங்கோ கீழே இருந்து தான் அனைத்தும் உதிக்கிறது. அதற்கு உள்ளுணர்வு என்று பெயர் கொடு, தியானம் என்று சொல். பல பெயர்களைச் சொன்னாலும் விஷயம் ஒன்று தான். உன் முகத்தில் ஒரு தேஜஸ் ஜொலிக்கிறது நீ ஒரு மாஸ்டர் திருடனாக பக்கா திருடனாக ஆகி விடுவாய் பக்கா திருடனாக நான் ஆனதால் எனக்கு தியான ஒருமைப்பாடு சித்தியாகி இருக்கிறது. ஆகவே உனக்கு தியானம் சித்திக்க வேண்டுமென்றால் இது தான் வழி!”

நடந்ததை மகன் கூறலானான்:” நான் பீரோவின் உள்ளே நடுநடுங்கியவாறு ஒளிந்திருக்கையில் நீங்கள் போட்ட கூச்சல் சத்தத்தைக் கேட்டு ஒரு வேலைக்காரி மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றிக் கொண்டு வந்தாள். அதை சாவி துவாரம் வழியே பார்த்தேன். திடீரென எனக்கு ஒன்று தோன்றியது. பூனை போல மியாவ் மியாவ் என்று கூவினேன்.இதுவரை நான் பூனை போல சத்தமிட்டதே இல்லை. பூனை தான் இருக்கிறதென்று பீரோ கதவை வேலைக்காரி திறந்த போது பூவென்று ஊதி மெழுகுவர்த்தியை அணைத்து அவளைத் தள்ளி விட்டு வெளியே ஓடினேன்.

எல்லோரும் என்னைத் துரத்திக்கொண்டு பின்னால் ஓடி வந்தார்கள் திடீரென அங்கு ஒரு கிணறு வழியில் இருந்ததைப் பார்த்தேன். அதன் அருகே ஒரு பெரிய பாறை இருந்தது. அசைக்க கூட முடியாத அளவு பெரிய பாறை அது. கஷ்டப்பட்டு அதைத் தூக்கி கிணற்றில் வீசினேன். பின்னர் ஓட ஆரம்பித்தேன். எல்லோரும் கிணறு அருகே வந்து நின்றனர். நான் கிணற்றுக்குள் விழுந்து விட்டதாக அவர்கள் நினைத்துக்கொண்டனர். ஒரு வழியாகத் தப்பி வீட்டுக்கு ஓடி வந்தேன்.”

பக்கா திருடன் கூறினான்:”மகனே நீ தூங்கப் போ! என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம். நீயாகவே உனது வேலையைத் தொடங்கலாம்!”

ஓஷோ கூறுகிறார்: சும்மா இரு; அனைத்தையும் அறி!

******************

சென்னையிலிருந்து வெளிவரும் முதல் ஓசை நாளிதழில் 29-6-2014 அன்று வெளியான கட்டுரை

Pictures are used from different sites, not related to this story;thanks.