
Written by london swaminathan
Date: 13th August 2016
Post No. 3058
Time uploaded in London :– 18-29
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

உணவில் சைவ உணவு, அசைவ உணவு பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
குஜராத்தி உணவு, வங்காளி உணவு, தென்னிந்திய சமையல், வட இந்திய சமையல் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தமிழ், சம்ஸ்கிருத மொழிகளால் உணவு கேள்விப்பட்டது இல்லை அல்லவா?
ஆனால் ஏதோ காரணத்தால் சம்ஸ்கிருத அறிஞர்கள் உணவை ஐந்து வகையாகவும், தமிழ் அறிஞர்கள் உண்வை ருசியின் அடிப்படையில் ஆறு வகையாகவும் பிரித்து இருக்கின்றனர்..
நளன், பீமன் போன்ற புகழ் பெற்ற புராண, இதிஹாச சமையல் நிபுணர்கள் “பஞ்ச பக்ஷ பரமான்னம்” படைத்ததாகப் படிக்கிறோம்.
பிராமணர்கள் வீட்டில் சாப்பிடுவோர் , அடடா! பஞ்சபக்ஷ பரமான்னம் கிடைத்தது என்பர். அவர்களே தமிழ் உணவு சாப்பிடும்போது அடடா! அறுசுவை உணவு என்பர்.
அது என்ன பஞ்ச பக்ஷ பரமான்னம்?

பக்ஷ்யம், போஜ்யம், சோஷ்யம், லேஹ்யம், பேயம் என்று ஐந்து வகையாக பிரித்ததற்குக் காரணம் அந்த உணவும் எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் காட்டவே.
1.பக்ஷணம் என்ற சொல் நம் எல்லோருக்கும் தெரிந்ததே; இது நொறுக்குத் தீனி வகை; கருக்கு முறுக்கென்று சப் தம் போட்டுச் சாப்பிடும் திட உணவுப் பொருட்கள். எடுத்துக் காட்டு: முறுக்கு, காராச் சேவை, காராபூந்தி
2.போஜ்யம்: போஜனம் (Bois in French) என்ற சொல்லும் தமிழர்களுக்குத் தெரிந்த சொல்லே. என்ன போஜனம் ஆயிற்றா? என்றால் சாப்பிட்டாகிவிட்டதா? என்று பொருள். அதாவது சாதம், சாம்பார், குழம்பு முதலியன. பெரும்பாலும் திட வடிவில் வாயில் எடுத்துப் போட்டுக் கொள்ளும்படி இருக்கும்.
3.லேஹ்யம்: இந்தச் சொல்லும் எல்லா தமிழர்களுக்கும் தெரிந்த சொல்லே; சித்த, ஆயுர்வேத வைத்தியர்கள் லேகியம் என்று சொல்லிக் கொடுத்தால் அதைக் கையில் வாங்கி நக்கிச் சுவைப்போம். ஆங்கிலச் சொல் LICK ‘லிக்’ (நக்கு) என்ற சொல்லும் சம்ஸ்கிருத மூலத்திலிருந்து வந்த சொல்லே.
சோஷ்யம் என்ற வகை உணவுகள் உறிஞ்சிக் குடிக்க வேண்டிய பானங்கள். சக் SUCK (உறிஞ்சு) என்ற ஆங்கிலச் சொல் இதிருந்து பிறந்த சொல்லே. ரோஸ் மில்க் முதல் பட்டர்மில்க் (மோர்) வரை எல்லா பானங்களும் பாயசங்களும் இதில் அடக்கம்..
பேயம் என்பனவும் திரவ நிலையிலுள்ள உணவு வகைகளே. ஆனால் இவைகளை உறிஞ்சத் தேவை இல்லை. அன்னாந்து அப்படியே குடிக்கலாம். பால், தண்ணீர், நீர்மோர் போன்றவை.
கம்ப ராமாயண காலத்திலேயே ஸ்ட் ரா STRAW இருந்தது பற்றி முன்னரே எழுதியுள்ளேன். இலைகளின் காம்பிலுள்ள ஓட்டைகளைக் கொண்டு அவைகளை ஸ் ட் ரா போல தமிழர்கள் பயன்படுத்தினர் என்பது கம்பன் தரும் தகவல்!

அறு சுவை உண்டி
பொருள்கள் திட நிலையில் இருக்கிறதா, திரவ நிலையில் இருக்கிறதா என்ற அடிப்படையில் சம்ஸ்கிருத வல்லுநர்கள் பிரித்தனர். ஆனால் தமிழ் அறிஞர்கள் சுவையின் அடிப்படையில் உணவு வகைகளை ஆறு பிரிவுகளாகப் பயன்படுத்தினர்.
அறு சுவை யாவை?
தித்திப்பு= இனிப்பு (சர்க்கரை, வெல்லம், கரும்பு, பழச்சுவை)
கைப்பு= கசப்பு ( பாகற்காய், வேப்பிலை)
புளிப்பு= புளியங்காய், மாங்காய், எலுமிச்சை
உவர்ப்பு= உப்புச் சுவை (உப்பு)
துவர்ப்பு= பாக்கு முதலியன தரும் ருசி
கார்ப்பு= காரம், உறைப்பு (மிளகாய், மிளகு)
தமிழர்கள் இதை 1200 ஆண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தியமைக்கு நாலடியாரில் சான்றுளது.
அறுசுவையுண்டி யமர்ந்தில்லாளூட்ட
மறுசிகை நீக்கியுண்டாரும் — வறிஞராய்ச்
சென்றிரப்ப ரோரிடத்துக் கூழெனிற் செல்வமொன்
றுண்டாக வைக்கற்பாற்றன்று
—(நாலடியார் பாடல் 1)

அறு சுவை உண்டி = ஆறு சுவையுடைய உணவை
இல்லாள் அமர்ந்து ஊட்ட = பெண்சாதி அன்புடன் பரிமாற
மறு சிகை நீக்கி = மற்றொரு கவளத்தை வேண்டா ம் என்று தள்ளி
உண்டாரும் = உண்ட செல்வர்களும்
வறிஞராய் = வறுமையுற்று
ஓர் இடத்துச் சென்று = வேறு ஒரு இடத்துக்குப் போய்
கூழ் இரப்பர் எனில் = கூழை பிச்சையாக கேட்பார்களானால்
செல்வம் ஒன்று = செல்வம் என்கிற ஒரு பொருள்
உண்டு ஆக = நிலையாக இருப்பதாக
வைக்கல் பாற்று அன்று = வைக்க வேண்டாம் (நினைக்க வேண்டாம்)
செல்வம் நிலையாமை தலைப்பில் வரும் பாடல் இது.
ஆக 5 உணவு, ஆறு உணவு — எதைச் சாப்பிட்டாலும் வயிறு நிறையும்.
கண்ணனோவெனில் பகவத் கீதையில் உணவு வகைகளை மூன்றாகப் பிரிக்கிறார். சத்துவ குணம், ராஜச குணம், தமோ குணம் கொடுக்கும் உணவு எவையென்று செப்பியதை முன்னரே ஒரு கட்டுரையில் தந்துள்ளேன்.
–subham–
You must be logged in to post a comment.