6 நாட்களில் 30 கோவில்கள்! சூறாவளி சுற்றுப் பயணம்! புதிய உண்மைகள்! (Post No.6224)

6 நாட்களில் 30 கோவில்கள்! சூறாவளி சுற்றுப் பயணம்! புதிய உண்மைகள்! (Post No.6224)


 Written by london swaminathan


swami_48@yahoo.com


Date: 4 April 2019


British Sumer Time uploaded in London – 5-49 am

Post No. 6224

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

மார்ச் 23, 2019  அன்று இந்தியாவுக்குச் சென்றேன். சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக நாலு நாட்களுக்கு கோவில் விஜயம். பின்னர் 29-ம் தேதி காஞ்சீபுரம் விஜயம். லண்டனுக்கு விமானம் ஏறும் முதல் நாள் இரவில் ஏப்ரல் 2-ம் தேதி சென்னையில் கோவில்களுக்கு விஜயம். ஆக ஆறே நாட்களில் கண்டது என்ன?

30+ கோவில்கள்

செஞ்சி கோட்டை

கல்லணை

சகுந்தலா ஜகந்நாதன் மியூசியம், காஞ்சீபுரம்

சித்தர் , முனிவர் சமாதிகள்

புதிய அதிசயங்கள்

இந்த முறை நான் கண்ட புதிய அதிசயங்கள்:

1.கோவிலுக்குள் தங்கப் பல்லி தரிசனம்

2.கல் நடராஜர்- கிட்னி ஸ்டோன் Kidney Stone நோய் நீக்கும்

3.நமது விதியைத் திருத்தி (Fate Changing Horoscope Temple) எழுதும் ஜாதகக் கோவில்

4.செய்வினை, பேயை ஓட்டும் பேய் விரட்டும் (Ghost busters) மேடை

5.ஆண்டாள் பாடிய மணிக் கதவம் (Bell Door)

6.ஸ்ரீ பெரும்புதூரில் சினிமா போஸ்டர் ஸைசுக்கு 108 திவ்ய தேச ஓவியங்கள்

7.கருவூர் சித்தர், சாங்கு சிவலிங்க சித்தர், சானு முனிவர், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதிகள்

8.தேர்தல் (Election Inscription)  கல்வெட்டு- உத்தரமேரூர்

9.சகுந்தலா ஜகந்நாதன் மியூசியத்தில் மீன் வடிவ மகர யாழ்

10.உறையூர் கோவிலில் கோழி யானை சண்டையிடும் சிலை

500 புகைப்படங்கள்

இவை ஒவ்வொன்று பற்றியும் படங்களுடன் கட்டுரை எழுதுவேன்.

டாக்டர் நாகசாமி சொன்ன அதிசய விஷயங்கள்!

லண்டனுக்கு விமானம் ஏறுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னால் தொல்பொருட்  துறை பேரறிஞர் டாக்டர் நாகசாமியைச் சந்தித்து 90 வயது மூதறிஞருக்கு பணிவான வணக்கம் செலுத்தினேன். அவர் கர்நாடக இசைக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்ற அதிசயத் தகவலை  (ஆராய்ச்சிச் சொற்பொழிவில் கூறியதைச்) சொன்னார். தமிழ்நாட்டின் பெயரில் ஒரு ராகம் (திராவிடி),  ஆப்கனிஸ்தான் (காந்தாரி) பெயரில் ஒரு ராகம், வங்க (கௌலை)தேசம் சார்பில் உள்ள ராகம், மத்தியப்பிரதேசம்( மாளவம்) பெயரில் உள்ள ராகங்கள்  பற்றி விளக்கினார். தொல்காப்பியம் ஒரு இலக்கண நூல் மட்டுமன்று; அது ஒரு இசை நூல் என்றும் தொல்காப்பியர் சொல்லும் நாடக வழக்கு, உலகியல் வழக்கு என்பது ஸம்ஸ்க்ருத நாடக/இசை நூல்களில் உள்ள சொல் வழக்கு என்றும் விளக்கினார்.

தி. மு. க. தலைவர் ஸ்டாலின் உளறல் பற்றி நான் கேட்டபோது, டாக்டர் நாகசாமியை இது விஷயமாக ஒரு தமிழ் டெலிவிஷன் சானல் பேட்டி கண்டதாகவும் அதில் அவர் ஜி.யூ.போப் முதலிய மதப் பிரசாரகர்களின் விஷமங்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு இது வரை எவரும் பதில் சொல்லவில்லை என்றும் சொன்னார். டாக்டர் ஜி. யூ. போப் ஒரு தமிழ் அறிஞர் மட்டுமன்று; பெரிய ஸம்ஸ்க்ருத அறிஞரும்கூட; ஆனால் சாகும்போது தான் இதைச் செய்ததெல்லாம் கிறிஸ்தவ மதப் பிரசாரகத்துக்குத்தான்; மற்றவரும் இது போல மொழிகளைக் கற்று மதப் பிரசாரம் செய்ய வேண்டும் என்று சொன்னதையும் ஆதாரத்துடன் கூறினார்.

டாக்டர் நாகசாமியுடன் மோத எவரும் முன்வரார். அப்படி வந்தால் அவர்களது வாதம் கல்பாறையில் மோதிய மண்ணாங்கட்டி போல சிதறி உதிரும்.

ஒவ்வொரு கட்டுரையிலும் புதிய தகவல்களை அளிப்பேன்

கதவு ஆராய்ச்சி

கோவில்களின் கதவுகள் பிரம்மாண்டமானவை. அவைகள் பல வடிவங்கள் கொண்டவை. அவை பற்றி தனி விதி முறைகள் உள்ளன. மணிகள் பொருத்திய கதவுகளைச் சில கோவில்களில் கண்டேன். அப்போதுதான் ஆண்டாளின் திருப்பாவை  வரிகளின் முழுப் பொருளும் விளங்கியது.

எல்லாக் கோவில்களிலும் உள்ள கதவுகள் மற்றும் மணிகளைப் புகைப்படம் எடுத்தேன்; கட்டுரைகளில் படங்கள் வரும்.

திருப்பாவை பாடல் 9

துாமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய

துாபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்

மாமான் மகளே! மணிக்கதவம் தாழ் திறவாய்!

பார்த்த கோவில்களைப் பார்ப்பதில்லை

குலதெய்வம் வைதீஸ்வரன், திருப்பதி வெங்கடாசலபதி, மதுரை மீனாட்சி, திருப்பரங்குன்றம் துர்கை, முருகன் தவிர வேறு எந்தக் கோவிலையும் ஒரு முறைக்கு மேல் பார்ப்பதில்லை என்ற சங்கல்பத்துடன் சென்று இதுவரை மூன்று இந்திய விஜயங்களிலில் பல புதிய விஷயங்களை அறிந்தேன்.

படங்கள் தயாரானவுடன் கட்டுரைகள் வரும்!

இந்த முறை நான் சென்ற ஊர்கள்

1.சென்னை

2.திண்டிவனம்

3.மலை வையாவூர் கோவில்

4.உத்தரமேரூர் கோவில்

5.செஞ்சி கோட்டை

6.மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில்

7.சிறுவாச்சூர் காளி கோவில்

8.திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில், உச்சிப் பிள்ளையார் கோவில், பல்லவர் குகை, மலை அடிவார மாணிக்க விநாயகர் கோவில்.

9.திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி -ஜம்புகேஸ்வரர் கோவில்

10.ஸ்ரீங்கம் பெருமாள் கோவில்

11.உறையூர் கோவில்

12.வயலூர் முருகன் கோவில்

13.திருப்பட்டூர் பிரம்மா கோவில்

14.திருவாசி சிவன் கோவில்

15.ஊட்டத்தூர் கல் நடராஜர்

16.கற்குடி கோவில்

17.திருவெறும்பூர்

18.கல்லணை

19.குணசீலம்

20.திருப்பராய்த்துறை

21.கருவூர் கோவில்

22.நாமக்கல் நாமகிரித் தாயார்

23.நெரூர் சதாசிவ பிராம்மேந்திர அதிஷ்டானம்

24.காஞ்சீபுரத்தில்…………………..

அஷ்டபுஜ பெருமாள் கோவில்

யதோத்தகாரி கோவில்

உலகளந்த பெருமாள் கோவில்

வைகுண்டப் பெருமாள் கோவில்

தேவராஜ பெருமாள் கோவில்

பாண்டவ தூதர்/ பெருமாள் கோவில்

கச்சபேஸ்வரர் சிவன் கோவில்

25.திருப்பருத்திக் குன்றம் சமணர் கோவில்

26.சகுந்தலா ஜகநாதன் மியூஸியம்

ஸ்ரீபெரும்புதூர் கோவில்

சென்னையில்…………….

வெங்கீஸ்வரர் கோவில்

சாங்கு சிவலிங்க சித்தர் ஜீவா சமாதி

யாத்ரிகர்களுக்கு எச்சரிக்கை 1

எங்கெங்கு வைஷ்ணவ கோவில்கள் (நாமம் போட்ட பெருமாள் கோவில்கள்) உளதோ அங்கெங்கெல்லாம் அவர்கள் இஷ்டப்படி கோவில்களை மூடுவார்கள்; திறப்பார்கள் (irregular opening hours

); ஆகையால் சேவை நேரம் தெரியாமல் போனால் மணிக்கணக்கில் திரை முன்னாலோ கதவு முன்னாலோ தவம் கிடக்கவேண்டும்.

சிவன் கோவில்கள் (விபூதிப்பட்டை) அனைத்தும் முறையாக காலை 6 மணி முதல் மதியம் 11-30 வரையும் மாலை 5 மணி முதல் 9 மணி வரையும் திறந்திருக்கும்.

சுருங்கச்சொல்லின் திரை போடும் நேரம், கோவில் திறக்கும் நேரம் தெரியாமல் போகாதீர்கள்; ஏமாறாதீர்கள்

எச்சரிக்கை 2

செஞ்சி, உத்தரமேரூர், காஞ்சீபுரம் கோவில்களில் சில, திருச்சி பல்லவர் குகை முதலியன தொல்பொருட்      துறையினரின் கட்டுப்பாட்டில் உளதால் காலை பத்து மணிக்குத் திறப்பார்கள்;

மாலை 4 மணிக்கு மூடிவிடுவார்கள். .

ஆகையால் முன்கூட்டி தகவல் அறிந்து திட்டமிட்டுச் செல்லவும்.

சுபம்—