Written by S NAGARAJAN
Date: 7 JUNE 2018
Time uploaded in London – 8-39 am (British Summer Time)
Post No. 5083
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
செல்வம் சேர வாஸ்து வழி
Clutter-ஐ ஒழியுங்கள்!
ச.நாகராஜன்
1
காசு மேலே காசு வரும் கட்டுரையைப் படித்தீர்களா? நீரை வடகிழக்கு மூலையில் வைத்தவர்களுக்கு செல்வம் சேருவதற்கான நல்ல அறிகுறி வரும் என்று எழுதியிருந்தேன். அதில் சற்று கங்கா ஜலம் அல்லது பன்னீருடன் சில மலர்களையும் தூவலாம். தினம்தோறும் புதிய ஜலத்தை நிரப்புமாறும் இந்தப் பழக்கத்தைத் தொடர்ந்தால் காரண்டியாக காசு வரும் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
சார், ஒண்ணும் பலிக்கலை சார் என்று சொல்பவர்கள் இருந்தால் அவர்களுக்காகத் தான் இந்தக் கட்டுரை.
அன்பர்களுக்கு உத்வேகமூட்ட ஒரு உண்மைச் சம்பவத்தைக் குறிப்பிடுகிறேன்.
நெருங்கிய சொந்தம். நல்ல கூர்மையான புத்திசாலி. நல்ல உழைப்பாளி. ஆனால் உழைப்புக்கும் தீர்க்கமான புத்திக்கும் தகுந்த ஊதியம் கிடைக்கவில்லை. என்னிடம் ஆலோசனை கேட்ட போது
Clutter-ஐ ஒழிக்குமாறு ஆலோசனை கூறினேன்.
குறிப்பாக விபத்தில் சிக்கியிருந்த ஒரு ஸ்கூட்டர் பல காலமாக வீட்டு வாசலின் முன்னால் நிறுத்தப் பட்டிருந்தது. அதை உடனடியாக அகற்றுமாறு கூறினேன்.
சில மாதம் கழித்து மீண்டும் ஆலோசனையைக் கேட்டார்.
ஸ்கூட்டர் வெளியேற்றப்படவில்லை என்பதை அறிந்த நான் கண்டிப்பாக அதை அகற்றுமாறு கூறியதோடு அதை எடுத்துச் செல்பவர்களுக்கு சற்று பணம் கூடக் கொடுக்கலாம் என்று சொன்னேன்.
உடனடியாக ஸ்கூட்டர் அகற்றப்பட்டது.
மறு நாள் இந்தியாவின் தலை சிறந்த பெரிய வங்கியிலிருந்து அவருக்கு பிரமாதமான வேலை நல்ல சம்பளத்துடன் கிடைத்தது.
மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும். வருடங்கள் உருண்டோடின. மிக நல்ல அந்தஸ்து. நல்ல செல்வம் சேர்ந்தது.
சென்ற வாரம் கூட இதைப் பற்றி அவர் குடும்பம் கூறி மகிழ்ந்தது.
இது போல ஏராளமான உண்மைச் சம்பவங்கள் உள்ளன.
உங்கள் வீட்டு நிகழ்வும் அதில் சேர வேண்டுமானால் Clutter-ஐ அகற்றுங்கள்.
2
எது சார் குப்பை என்று கேட்டால் சுலபமான பதில் எது உங்களுக்குத் தேவையில்லையோ அதெல்லாம் குப்பை தான் என்று சொல்லலாம்.
வீட்டில் சுவர் ஓரத்தில் தொங்கும் ஒட்டடை, பேனில் படிந்து கிடக்கும் தூசி, ஆங்காங்கு பயன்படுத்தாமல் இருக்கும் டேபிள், சேர் உள்ளிட்ட பல பொருள்களின் மீதுள்ள தூசி எல்லாமே குப்பைகூளம் தான்.
ஓடாத கடிகாரம் : கடிகாரம் இருக்கும்; ஆனால் அது ஓடவில்லை.
உடனடியாக அதை ஓடும் கண்டிஷனில் ரிப்பேர் செய்யுங்கள்; அல்லது அதை வீட்டை விட்டு அகற்றி விடுங்கள்.
இதே போல பல காலம் பயன்படுத்தாத உடைந்து போன பொருள்களை சற்று கூட தாக்ஷண்யம் இன்றி வெளியில் அகற்றி விடலாம்.
மலர் செடிகள் வைப்பது நல்லது தான்; ஆனால் நீர் ஊற்றாமல் அது வாடி வதங்கி இருப்பது தான் தவறு.
பழுத்துப்போன காகிதங்கள், உபயோகமற்ற டயரிகள், தேவையற்ற பாத்திரங்கள், காலி பாட்டில்கள், முக்கியமாக பால் கவர்கள், பழைய பேப்பர்கள் .. அடடா. லிஸ்ட் முடிவில்லாத ஒன்று.
இவற்றை சிறிது பணம் கிடைக்கும் என்பதற்காக சேர்த்து வைத்து வர வேண்டிய பெரிய செல்வத்தை இழக்காமல் – அது வரும் வழியைத் தடை செய்ய விடாமல் – அகற்றி விடுங்கள்.
சரி, முக்கியமான ஆவணங்கள், வீட்டுப் பத்திரம் உள்ளிட்டவை பழையதாகத் தானே இருக்கும் அவற்றை என்ன செய்வது என்ற கேள்வி எழலாம்.
மிக முக்கியமான ஆவணங்களை அழகான ஃபோல்டரில், அல்லது பையில் அல்லது பைலில் வைத்து அதைச் சுற்றி ஒரு தங்க நிற ரிப்பனைக் கட்டி விடுங்கள். போதும்.
கம்ப்யூட்டரில் கூட ஈ மெயிலில் தேவையற்ற அஞ்சல்களை அழித்து விடுங்கள்.
இது வாழ்முறைப் பழக்கமாக ஆகும் போது செல்வம் சேர விடாமல் இருக்கும் தடைகள் அகலும்.
வீட்டைச் சுற்றிலும் கூட தோட்டம் உள்ளிட்டவற்றில் குப்பைகளைச் சேர்க்கக் கூடாது.
தோட்டத்திலிருந்து பழைய சாமான்களை அகற்றிய பிரபலமான ஒருவர் மிக உச்சத்திற்குச் சென்ற சம்பவம் கூட உண்டு.
ஆக வடகிழக்கில் நீர் வைத்தேன்; வடக்கில் காஷ் பாக்ஸை வைத்தேன் பலனில்லை என்று வருத்தப்பட்டால் உங்கள் வீட்டில் உள்ள clutter மீது கவனம் செலுத்துங்கள். அது தான் தடை!
3
Cleanliness is next to Godliness என்று சும்மா சொல்லவில்லை. சுக கந்த மால்ய சோபே என்று லக்ஷ்மியை போற்றுவதற்குக் காரணம் சுத்தமான நறுமணம் கமழும் இடத்தில் இருப்பவள் அவள் என்ற உண்மையை உள்ளத்தில் இருத்தியே!
ஆக அழுக்கை அகற்ற முயற்சி செய்யும் போது நல்ல அறிகுறிகளைக் காணலாம்.
வாஸ்து சாஸ்திரம் சொல்லும் உண்மை இது.
***