Written by London Swaminathan
Post No. 15,284
Date uploaded in London – 18 December 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ENGLISH VERSION WAS POSTED YESTERDAY (17-12-2025)
துர்கா தேவி ( என் சுய புராணமும் உள்ளது)
சிற்ப சாஸ்திரத்தில் துர்க்கையின் வடிவம்
துர்க் என்றால் கோட்டை ; துர்க்கையை வழிபடுவோரை அவள், அரண் போல வளைத்துக் காப்பாள் ;
தேவி வடிவங்களில் மிகவும் நம்பிக்கையையும் தைரியத்தையும் வெற்றி உணர்வினையும் ஊட்டக்கூடிய தோற்றம் துர்கா தேவி . அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே நமக்கு பாசிட்டிவ் எனர்ஜி / ஆக்க பூர்வ சக்தி வந்துவிடும் !
****
துர்கா தேவியின் மகிஷாசுர மார்த்தனி சிற்பம்தான் மிகவும் மனதில் பதியும் வடிவம். மகாபலிபுரத்தில் உள்ள இந்த மஹிஷாசுரமர்தனியின் சிலையைப் புகைப்படம் எடுக்காத வெளி நாட்டுக்காரர் எவருமில்லை! யார் யாரெல்லாம் மாமல்லபுரத்துக்கு வந்தார்களோ அவர்கள் எல்லோரும் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே எருமை முக அசுரனை தேவி வதம் செய்த காட்சியை படம்பிடித்து புஸ்தகங்களில் வெளியிட்டுள்ளனர்; அவ்வளவு அற்புதமான சிலை!
மஹிஷ – எருமை.
மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி சிற்பம்
துர்க்கையின் உருவான மகிஷாசுரமர்த்தினி பத்து கரங்களைக் கொண்டவர். மூன்று கண்களை உடையவர். தலையில் ஜடா மகுடம் தரித்தவர். சந்திரகலாவைத் தலையில் சூடியவர். கண்கள் நீலோத் பல மலரினை ஒத்ததாக அமைந்திருக்கும். பருத்த உடலினையும், மெலிந்த இடையினையும் பெற்றவர். அடசி மலரின் நிறத்தினை உடையவர். உடலில் மூன்று வளைவுகளை /நெளிவுளைக் (திரிபங்கம்) கொண்டவர். வலது கரங்களில் திரிசூலம், கத்தி /கட்கம், சக்தி ஆயுதம், சக்கரம் அம்பு ஆகியவையும் இடது கரங்களில் பாசம் அங்குசம். கேடயம், பரசு, மணி ஆகியவற்றைத் தரித்திருப்பார். இவளின் காலடியில் துண்டிக்கப்பட்ட மகிஷனின் கழுத்திலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருப்பது போல் அமைந்திருக்கும். எருமைத் தலையின் மீது தமது இடது காலினையும், தமது வாகனமாகிய சிங்கத்தின் மீது காலை ஊன்றியவாறும் அமைந்திருப்பார் என்று சிற்பரத்தினம் குறிப்பிடுகின்றன.
விஷ்ணுதர்மோத்திரம், மகிஷாசுரமர்த்தினியைச் சண்டிகா என்று அழைக்கின்றது. இவர் இருபது கரங்கள் பெற்றவளாகக் கூறுகிறது. பொன் நிறத்தில் ஒளிருபவளாகவும் சிங்கத்தின் மீது கோபத்துடன் அமர்ந்திருப்பவளாகவும் குறிப்பிடுகிறது. இவளது கைகளில் சூலம், கட்கம், சங்கு, சக்கரம், பாணம், சக்தி, வஜ்ரம், அபயம், டமரு, குடை ஆகியவைகளை வலது கரங்களில் தரித்தும், இடது கரங்களில் நாகபாசம், கேடயம், பரசு, அங்குசம், தனுஷ், கந்தம் (மணி) துவஜம் (கொடி) கதை, கண்ணாடி மற்றும் முத்காரம் (கள்ளி) ஆகியவைகளைத் தரித்திருப்பாள். வலது கையில் ஏந்திய திரிசூலம் மகிஷனின் கழுத்தில் பதித்திருப்பது போல அமைந்திருக்கும். மகிஷனின் விழி பிதுங்கி, புருவங்கள் இரத்தத்தில் நனைவது போலிருக்கும்.
மாமல்லபுரத்தில் இச்சிற்பம் அமைந்துள்ளது.
Durga at Gangakondacholeeswaram
மாசிமகத்தன்று கடற்கரையில் குவியும் பழங்குடி இருளர் இனமக்கள் அப்போது காலநிலை மாறி, கடல் நீரால் சூழப்பட்டு இருக்கும் இந்த மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவிலில் முழங்கால் கடல் நீரில் நடந்து சென்று அங்கு உள்ள துர்கா சிற்பத்திற்கு பூஜை செய்து வணங்குவர்.
காஞ்சி கைலாசநாதர் கோயிலில் மற்றும் தமிழகமெங்கும் பரவலாக இடம்பெற்றுள்ளது. சிவன் கோவில்களில் வடபுறச் சுவர்களில் உள்ள மாடங்களில் துர்க்கையைக் காணலாம் ; சில இடங்களில் எருமைத் தலை மீது அவள் காட்சி அளிக்கிறாள்.
மகிஷாசுரனை வதம் செய்ய உருவாக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி அனைத்து கடவுளர்களின் சக்தியையும், ஆயுதங்களையும் பெற்று வணங்கப்பட்டாள். சிவபெருமான் திரிசூலத்தையும் விஷ்ணு சுதர்சன சக்கரத்தையும் பிரம்மா தனது சக்தியையும் அளித்தார்கள்.
***
லலிதா சஹஸ்ரநாமம் முழுதும் பண்டாசுரனை வதம் செய்த கதை வருகிறது .
தேவி மஹாத்ம்யம் என்னும் 700 ஸ்லோககங்களில் அவள் கதை முழுதும் சுருக்கமாக வருகிறது வங்காளி மக்களுக்கு இந்தத் துதி அத்துப்படி;.கோவில்களில் தினசரி பாராயணமும் நடக்கும்; காளி, துர்கா என்ற வடிவங்களில் அவளை ராம கிருஷ்ண பரமஹம்சர் முதல் பல்லாயிரக்கணக்கானோர் வணங்கி அருள்பெற்றனர் .
சம்ஸ்கிருதத்தில் ‘நவ’ என்றால் ஒன்பது என பொருள். மந்திர சாஸ்திர நூல்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றன. சைலபுத்ரி, பிரம் மசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மஹா கௌரி, சித்திதாத்திரி என ஒன்பது வடிவம் .
நவதுர்க்கா வடிவங்கள்
பிரதமம் சைல புத்ரிச்ச த்விதியம் பிரம்மசாரினிம்
திருதியம் சந்திரகண்டாச்ச கூஷ்மாண்டா சதுர்த்தமம்
பஞ்சமம் ஸ்கந்தமாத்ரேணி ஷஷ்டமம் காத்யாயனீம்
சப்தமம் காலராற்றிச்ச அஷ்டமம் கௌரிநிம்
நவமம் சித்திதாத்ரீச நவதுர்கா பிரதிடதம்
प्रथमं शैलपुत्रीति द्वितीयं ब्रह्मचारिणी ।
तृतीयं चन्द्रघण्टेति कूष्माण्डेति चतुर्थकम् ॥
पञ्चमं स्कन्दमातेति षष्ठं कात्यायनी तथा ।
सप्तमं कालरात्रिश्च महागौरीति चाष्टमम् ॥
नवमं सिद्धिदात्री च नवदुर्गाः प्रकीर्तिताः ।
उक्तान्येतानि नामानि ब्रह्मणैव महात्मना ॥
பிரதமம் ஷைலபுத்ரிதி த்வீதீயம் ப்ரஹ்மசாரிணீ |
திருதீயம் சந்திரகண்டேதி கூஷ்மாண்டேதி சதுர்த்தகம் ||
பஞ்சமம் ஸ்கந்தமாதேதி ஷஷ்டம் காத்யாயணீ ததா |
சப்தமம் காலராத்ரிஸ் -ச மஹாகவுரிஇதி ச அஸ்டமம் ||
நவமம் சித்திதாத்திரீ ச நவதுர்காஹா ப்ரகீர்த்தாஹா ||
உக்தானி ஏதானி நாமானி ப்ரஹ்மனைவ மஹாத்மனா ||
Meaning:
(These are the names of Nava Durgas)
1: First is Shailaputri (Daughter of the Mountain), Second is Brahmacarini (Who wanders in Brahman, a Tapasyi, performer of Penance),
2: Third is Chandraghanta (Bell of Moon), Kushmanda (Glowing substratum of Universal Egg) is Fourth,
3: Fifth is Skandamata (Mother of Skanda), Sixth is Katyayani (Daughter of Katyayana Rishi),
4: Seventh is Kalaratri (Dark Night of Destruction), Mahagauri (Great Shining White Form) is Eighth,
5: And Nighth is Siddhidatri (Bestower of Siddhis or Accomplishments); These are eulogized as Nava Durga (Names of Nine Durgas),
6: These Names were indeed uttered by (none other than) the great-souled Brahma.
Mahisasuramardini drawing
1.சைலபுத்ரி
துர்க்கை அம்மனின் முதல் வடிவம் சைலபுத்ரி. நவராத்திரி முதல் நாளில் சைலபுத்ரி துர்க்கையை வழிபடுவது வழக்கம். சைலபுத்ரி என்பது ‘மலைமகள்’ என்று பொருள். மலை அரசனான இமவானின் என்பவரின் மகள் இவர். இவருக்கு பார்வதி, சதி, பவானி தேவி என பல்வேறு பெயர்கள் உள்ளன.
இவர் தனது முன் அவதாரத்தின் தட்சனின் மகளாக பிறந்ததால் ‘தாட்சாயினி’ என்றும் கூறுவர். இவர் தான் சிவனை திருமணம் பார்வதி தேவி ஆவார்.
2.பிரம்மசாரிணி
‘பிரம்ம’ என்றால் தபஸ் அதாவது தவம் செய்தல் என்று பொருள். மிக எளிமையாக காட்சி தரும் இந்த பிரம்மசாரிணியின் வலக் கரத்தில் கமண்டலம் காணப்படுகிறது.
சிவ பெருமானை திருமணம் செய்யும் பொருட்டு கடும் தவம் புரிந்தார்.
3. சந்திரகண்டா
நவராத்திரியின் மூன்றாம் நாளில் சந்திர காண்டா அன்னையை வணங்கப்படுகிறார். இவர் அன்னையின் மூன்றாவது வடிவமாவார். நீதியை நிலை நாட்டி சந்திர பிறையை அணிந்தவள். ‘சந்திர’ என்றால் நிலவு. ‘கண்டா’ என்றால் மணி என்று பொருள்.
பத்து கைகளை கொண்டு சிங்க வாகனத்துடன் காட்சி தருகின்றார்.
Durga statue
4. கூஷ்மாண்டா:
கு, உஷ்மா, ஆண்டா என்ற மூன்று சொற்கள் உள்ள பெயரின் முறையே சிறிய, வெப்பமான, உருண்டை என்ற பொருள் கொண்டது.கூஷ்மாண்டா என்பவர் ஆதிசக்தி துர்கா தேவியின் படைத்தல் உருவம் ஆகும்.
5. ஸ்கந்த மாதா
ஸ்கந்த என்றால் முருகனை குறிக்கும். மாதா என்றால் அன்னை அதாவது முருகனின் தாய் ஆவார்
நான்கு கரங்களை உடைய ஸ்கந்த மாதா இரண்டு கரங்களில் தாமரையும், ஒரு கரம் பக்தர்களுக்கு ஆசி வழங்குவது போன்றும், மற்றொரு கரம் மடியில் குழந்தை முருகனை ஆறுமுகத்துடன் அரவணைத்து காட்சி தருகின்றாள். இவர் தாமரை மலர் மீது அமர்ந்து தவம் செய்பவளாக விளங்குகின்றார்.
6. காத்யாயனி
முற்காலத்தில் காதா என்ற முனிவர் இருந்தார். அவருக்கு காதயா என்ற மகன் இருந்தார். காதா கடும் தவம் செய்து துர்க்கையை மகளாக பெற்றார். இதனால் இவருக்கு ‘காத்யாயனி’ என்ற பெயர் வந்தது. இவருக்கு மகிஷாசுர மர்த்தினி என்ற பெயரும் உண்டு.
7. காளராத்திரி
அன்னையின் ஒன்பது ரூபங்களில் மிக பயங்கரமான ரூபம் இந்த காளராத்திரி எனும் காளி ரூபம்.
கால என்றால் நேரத்தையும், மரணத்தையும் குறிக்கும். ராத்திரி என்றால் இரவு எனவும் பொருள். காளராத்திரி என்றால் காலத்தின் முடிவு என பொருள்படும்.
இந்த துர்க்கை வடிவம் எதிரிக்கும் அச்சத்தைத் தரக்கூடியது.இவளின் நான்கு கைகளின், ஒன்றில் கரத்தில் வஜ்ராயுதமும், மறுகரத்தில் வாளும் இருக்கும். மற்ற இரு கரங்கள் பக்தர்களுக்கு அபயம் தருவதாக உள்ளது. இந்த அன்னைக்கு கழுதை வாகனமாக உள்ளது.
8. மகாகௌரி
மகா என்றால் பெரிய என்றும், கௌரி என்றால் தூய்மையானவள் என்றும் பொருள்படும். இவரின் பால் போல் வெண்மையாகக் காட்சி தருகின்றார்.
நான்கு கரம் கொண்ட மகாகௌரி, ஒரு கரத்தில் சூலம், மறு கரத்தில் மணியையும் தங்கி நிற்கிறாள். மற்ற இரு கரங்கள் பக்தர்களுக்கு அபயம் தருகிறார். இவருக்கு காளை வாகனமாக இருக்கின்றது.
9. சித்திதாத்ரி
நவராத்திரி விழாவின் கடைசி நாளான மகா நவமி தினத்தில் ‘சித்தி தாத்ரி’ துர்க்கை வழிபாடு செய்வர். ‘சித்தி’ என்றால் சக்தி என்றும், தாத்ரி என்றாள் அருள்பவள், அதாவது சக்தியை அருள்பவள் என்று பொருள்.
மார்கண்டேய புராணத்தில் பக்தர்களுக்கு அன்னை அருளிய எட்டு விதமான சித்திகள் -குறிப்பிடப்பட்டுள்ளது.
தாமரை மலரில் அமர்ந்திருக்கும் சித்திதாத்ரி, நான்கு கரங்களில், இடது கரத்தில் கதை, சக்கரத்துடனும், வலக் கரத்தில் தாமரை, சங்கு ஏந்தியும் அருள்பவள். சித்திதாத்ரி அன்னையின் வாகனம் சிங்கம்.
***
விஷ்ணு துர்க்கை
மேல்மா கிராமத்தில் விஷ்ணு துர்க்கை புடைப்புச்சிற்பம் கண்ெடடுக்கப்பட்டது. பாலை நில கடவுளாகவும், வேட்டைக்கு செல்வோர், போருக்கு செல்வோர் கடவுளாகவும் துர்க்கை வழிபாடு பழக்கத்தில் உள்ளது. புடைப்பு சிற்பம் வடக்கு திசை நோக்கி உள்ளது.
கரண்ட மகுடம், காதுகளில் பத்திர குண்டலங்களுடன், கழுத்தில் சரபலி, மார்பு கச்சை, தோள்பட்டையுடன், இடுப்பில் அரையாடை முடிச்சுடன் உள்ளது. 4 கரங்களில் சங்கு, சக்கரம், அபயம், கடிஹஸ்தங்கள் காட்டப்பட்டுள்ளது. பல்லவர் காலமான , 7ம் நூற்றாண்டைச் சேர்ந்தது இது
******

சுய புராணம் MY STORY ALLOT LOT LUCKY PRIZE JOURNALIST QUOTA
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு முதல் ‘லாட்’டிலேயே மதுரை எல்லிஸ் நகரில் ஒரு வீடு அல்லாட் ஆகியது ஏனெனில் ஜர்னலிஸ்ட் கோட்டாவில் நானும்தினமணி எடிட்டர் ஏ என் சிவராமன் மகனும் மனுப்போட்டோம்; இரண்டே பேர்தான் மனு! இருவருக்கும் அடித்தது லக்கி பிரைஸ் ; ஆனால் என் வீட்டுக்கு எதிர்த்தாற்போல் சுடுகாடு!
நான் கிரஹப்பிரவேசம் செய்த நாளில் ஹோ வென்று ஒரு சடலம் எரிந்து கொ ண்டிருந்தது என் அம்மா கேட்டாள். என்னடா இது? என்று; அதெல்லாம் அப்புறம் சொல்றேன். முதலில் பூஜைக்கு வேண்டியதைஎடுத்து வைப்போம் என்றேன்.
பின்னர் நீண்ட போராட்டத்துக்குப் பின்னர், பெரும் ரகளை, கிளர்ச்சிக்குப் பின்னர் சுடுகாடு மூடப்பட்டது . நிற்க
சொல்ல வந்த விஷயம் வேறு; அந்த வீட்டில் குடிபுகுந்த பின்னர் என் மகனுக்கு நிற்காத வயிற்றுப்போக்கு ஏற்பட்டது சீர் அடித்தது என்று சொன்னார்கள் மதுரை பழங்காநத்தத்தில் போய் மந்திரித்தும் நிற்கவில்லை.
எங்கள் எல்லோருக்கும் கணபதி மந்திரத்தை தென்காசி ஆயக்குடி சுவாமிஜி கிருஷ்ணா உபதேசம் செய்தார்; கணபதி ஹோமத்தை மட்டும் எனது தந்தை மதுரை தினமணி பொறுப்பாசிரியர் வெ.சந்தானம், எனது பெரிய அண்ணன் ஸ்ரீநிவாஸன், தினமணி சீனியர் சப் எடிட்டர் வெங்கடராமனுக்கு உபதேசம் செய்தார்; அவரை தினமும் சந்திப்பதால் அவர் வீட்டுக்குப் போய் பிரச்சனையையும் கவலையையும் கொட்டித் தீர்த்தேன்; அவர் அலட்சியமாக
இதெல்லாம் புது வீட்டுக்குப்போனால் வரும் சாதாரண பிரச்சனை இதற்குப் போய் கவலைப்படாதே என்றார்
எனக்குப் பெரிய ஏமாற்றம். என்ன சார் ? உங்களிடம் வந்தால் நீங்கள் ஏதோ மந்திரம் போட்டு பிரச்சனையை முடித்து வைப்பீர்கள் என்று வந்தேன். நீங்கள் இப்படிச் சொல்கிறீர்களே? என்றேன் . சிறிது மெளனம் .

பின்னர், சரி ஒரு மந்திரத்தை சொல்லித் தருகிறேன்; கை, கால்களை அலம்பிக் கொண்டு (கழுவிக்கொண்டு) வா என்றார் . பெரும்பாலோருக்குத் தெரிந்த துர்கா சூக்தத்தின் முதல் மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் அவர் சொன்னபடி 13 ஆவ்ருத்தி /தடவை சொல்லி வருகிறேன். துர்கா தேவி பல ஆபத்துகளிலிருந்து காப்பாற்றியிருக்கிறாள்.
–subham —
Tags- விஷ்ணு துர்க்கை ,மாமல்லபுரம் ,மகிஷாசுரமர்த்தினி ,சிற்பம் , துர்கா தேவி, என் சுய புராணம், படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-32 , Hinduism through 500 Pictures in Tamil and English-32