மொழிக் கொள்கைகளை தோற்கடிக்கும் நாடு! அற்புதத்தீவு நியூகினி! (Post No.4390)

 

மொழிக் கொள்கைகளை தோற்கடிக்கும் நாடு! அற்புதத்தீவு நியூகினி! (Post No.4390)

 

Research Article Written by London Swaminathan 

 

Date: 12 NOVEMBER 2017

 

Time uploaded in London- 19-01

 

 

Post No. 4390

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

நியூகினி என்னும் தீவு உலகின் மிகப்பெரிய தீவுகளில் ஒன்று. இது ஒரு தனி நாடு. ஆஸ்திரேலியாவுக்கும் இந்தோநேஷியாவுக்கும் இடையே, பசிபிக் மஹா சமுத்திரத்தில் உள்ளது. இங்கு சுமார் 750 மொழிகள் பேசப்படுகின்றன. இது ஏன் என்பதை, மொமழி ஆராய்ச்சியாளர்களாலும் விளக்க முடியவில்லை. சம்ஸ்கிருதம், தமிழ் என்னும் இரண்டு பழைய மொழிகளை உடைய பாரதத்துக்கு இது பல செய்திகளை அளிக்கும்.

 

தமிழ் என்னும் மொழி ஏன் உடைந்து போய் மலையாளம், கன்னடம், தெலுங்கு என்ற மொழிகளாக உருவாயின? சம்ஸ்கிருதம் என்னும் மொழி உடைந்து குஜராத்தி, மராத்தி, இந்தி என்று ஏன் பல மொழிகள் உருவாயின? பலமொழிகளைப் பேசியோர் வந்து குடியேறினரா? அல்லது பிற மொழிக் கலப்பால் இப்படி உருவாயிற்றா? அப்படிப் பல மொழி கலந்தால் அது ஒரு புறம் தெலுங்காகவும் இன்னொரு புறம் கன்னடமாகவும் மற்றொரு புறம் மலையாளமாகவும் இன்னும் துளு என்றெல்லாம் ஏன் பிரிந்தன? இப்படி ஒருமொழி உடைய எவ்வளவு காலம் பிடிக்கும்? — இவ்வறெல்லாம் கேள்விகள் கேட்டால் எத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினாலும் அவைகளை எல்லாம் ‘பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போக்கடிக்கும்’ சில எடுத்துக் காட்டுகளும் கிடைக்கும்!

 

 

நான் நீண்ட காலமாக முன்வைத்துவரும் கொள்கை: உலகில் தமிழும் சம்ஸ்கிருதமும் மிகப் பழைய மொழிகள். ஒரே மூலத்திலிருந்து வளர்ந்த மொழிகள்; வேறு எந்த இரண்டு மொழிகளுக்கும் இடையேயுள்ள ஒற்றுமையைவிட இவ்விரு மொழிகளுக்கு இடையே தான் ஒற்றுமை அதிகம். சந்தி இலக்கணமும் வேற்றுமை உருபுகளும் இரண்டு மொழிகளுக்கும் உள்ள ஒற்றுமையைக் காட்டும் முக்கிய அம்சங்கள். மேலும் தமிழில் உள்ள ஆயிரக்கணக்கான ஆங்கிலச் சொற்களுக்கு விளக்கம் காண ஒரே வழி– தமிழ் -சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகள்தான் உலகிலுள்ள பெரும்பாலான சொற்களுக்கு வேர் என்று ஒப்புக் கொள்வதாகும். அது எனது கொள்கை.

 

பழைய மொழிகளில் உள்ள பெரும்பாலான சொற்களை இவ்விரு மொழிகளில் காட்டலாம். ஆகவே தமிழ் ஒரு தனி மொழி- அது திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பதெல்லாம் பிதற்றல்; உண்மை என்ன என்றால் பாரத மண்ணில் வாழ்ந்த மக்கள் வடக்கு, தெற்கு எனப் பிரிந்து நீண்ட நெடுங்காலம் வாழ்ந்ததால் இரண்டும் தனித் தனி — ஆனால் சஹோதர மொழிகள் ஆயின. இந்த விஷயங்களைப் பல முறை எழுதி ஆதாரங்களும் கொடுத்துள்ளேன். தமிழ் மொழியில் ஆயிரக் கணக்கான ஆங்கிலச் சொற்கள் உள்ளன. இவைகளை எல்லாம் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பச் சொற்கள் என்று வெளிநாட்டினர் கூறுவர்; அது தவறு; பாரத நாட்டின் மூல மொழியிலிருந்து ஆங்கு குடியேறிய புராதன இந்தியர்கள் பரப்பிய சொற்கள் அவை. ஆகையால் அவைகளைத் தமிழ் சொற்களாகவும் கருதலாம் என்றேன்

நியுகினி மொழிகளின் வரலாறு எனது கொள்கைகளுக்குத் துணையாக வருகிறது.

 

 

முதலில் நியூகினி பற்றிய புள்ளி விவரங்களைக் காண்போம்:

 

நியூகினியில் 750-க்கும் மேலான மொழிகள் பேசப்படுகின்றன. அவை ஆஸ்திரேலியப் பழங்குடி மொழிகளுடன் தொடர்பு அற்றவை. இவர்களுடன் தொடர்பில்லாத மொழி பேசும் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் 250 வெவ்வேறு மொழிகளைப் பேசுகின்றனர். இந்த மக்களின் முன்னோர்கள் 50,000 ஆண்டுகளுக்கு முன் குடியேறியவர்கள்; ஒருவர் பேசும் மொழி மற்றவர்களுக்குத் தெரியாது; புரியாது!

 

வெளி நாட்டினர் படை எடுத்ததில்லை; வணிகத் தொடர்பும் பிற நாட்டினருடன் இல்லை; எல்லோரும் மேலனேசியக் (Melanesia; Mela= mala= black) கருப்பர்கள்; ஏன் 750 மொழிகள்? இவைகளைப் பார்க்கும்போது ஆரிய-திராவிட மொழிக் கொள்கைகள் அடிபட்டுப் போகும்; அதா வது ஒருவர் வந்து குடியேறியதால் பல மொழிகள் உருவாயின என்பது தவறு. யாருமே வராத நியூகினி காட்டுக்குள் 750 மொழிகள்; ஆஸ்திரேலியப் பழங்குடி இடையே மேலும் 250    மொழிகள்!

இதில் இன்னும் ஒரு விந்தை என்ன வென்றால் அந்த மொழிகளுக்குள், சில கொஞ்சமும் மற்ற மொழிகளுடன் தொடர்பிலாத- தனிப்பெரும் மொழியாக நிற்கிறது. ஸ்பெயின் நாட்டிலுள்ள பாஸ்க் (Basque) மொழி போல! இதுவும் மொழியியல் வல்லுநர்களுக்குப் புரியாத புதிராக இருக்கிறது. அலை அலையாக மக்கள் குடி ஏறியிருந்தாலும் அவர்கள் வெவ்வேறு இடத்திலிருந்தா வந்தார்கள்? ஆக மொழிகள் உருவாக வெளி அம்சங்கள் தேவை இல்லை என்றே தோன்றுகிறது.

 

 

இன்னும் ஒரு பெரிய விந்தை பாபுவா நியூகினி (Papua New Guinea)  மொழிகள் தமிழ் சம்ஸ்கிருதம் முதலிய இந்திய மொழிகளைப் போல எழுவாய்- செயப்படுபொருள் – வினைச் சொற்கள் (subject, object, verb= SOV) வரிசையில் அமைந்துள்ளன. ஆனால் சற்றுத் தொலைவில் உள்ள ஆஸ்திரேலிய மொழிகள் எஸ். வி. ஓ (Subject, Verb, Object) வரிசையில் உள்ளன. அதாவது ஆங்கிலம் போல.

நான் இட்லி சாப்பிட்டேன் என்பது இந்திய மொழிகளின் வாக்கிய அமைப்பு; நான் சாப்பிட்டேன் இட்லி என்பது ஆங்கில மொழி அமைப்பு; ரஷியன் போன்ற மொழிகளில் எதை எங்கு வேண்டுமானாலும் போடலாம்: இட்லி நான் சாப்பிட்டேன்; சாப்பிட்டேன் நான் இட்லி;  நான் சாப்பிட்டேன் இட்லி.

 

 

மேற்கு பாபுவாவின் வளைகுடா மாகணத்தில் (Gulf Province of West Papua) ஆயிரம் பேர் மட்டுமே பேசும் போரோம் (Porome) மொழி மலையாளம் போல மூக்கொலி (nasal sound) அதிகம் உடையது; ஆனால் உலகிலுள்ள எந்த மொழிக்கும் தொ டர்புடையதல்ல; இது

மொழியியலாளருக்கு சவால் விடும் மர்ம மொழி; பாஸ்க் (Basque)  மொழி போல!

கிறிஸ்தவ மதப் பிரசாரகர்கள் தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக சில மொழிகளைக் கற்று எளியதொரு அகராதியைத் தொகுத்தனர். இதனால் சில் புதிய சொற்கள் தோன்றின.

ஒவ் வொரு மொழி பேசுவோரும் சில ஆயிரம் மட்டுமே இருந்ததால் கல்யாணத்துக்கு மற்ற  மொழிக்குடும்பத்தை நாட வேண்டி இருந்தது. இதனால் ஒரே குடும்பத்தில் மூன்று நான்கு மொழி பேசும் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, பேரன் எனப் பெருகினர். இதனால் கலப்பின (Pidgin) மொழிகள் உருவாயின. ஆயினும் ஆதியில் எப்படி 750 வெவ்வேறு மொழி பேசுவோர் இங்கு வந்தனர்  என்பது  மொழியியல் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிடுகின்றன.

 

உலக ஜனத்தொகையில் ஒரு சதவிகிதம் உடைய பபுவா நியுகினி உலக மொழிகளில் ஆறில் ஒரு பங்கு மொழிகளை உடைத்தாயிருப்பது அதிசயமே.

  

இந்தியர்களைப் போலவே நெருங்கிய உறவினர்களின் பெயர்களையோ, இறந்தோரின் பெயரையோ சொல்ல மாட்டார்கள். பழங்காலத்தில் கணவர் பெயரைச் சொல்ல மாட்டாத தமிழ்ப் பெண்கள், ‘அவர்’ ‘வீட்டுக்காரர்’ ‘ஆத்துக்காரர்’, ‘இந்த ஊர் கோவிலில் உள்ளவரின் பெயர்’ என்றெல்லாம் சுற்றி வளைத்து கணவர் பெயரைச் சொல்லியது ;போல அங்கும் புதுப்புது சொற்களை உருவாக்கும் தேவை ஏற்பட்டது.

 

வேடிக்கை என்னவென்றால் மிக அ திகம் பேர் பேசுவது எங்கா ENGA மொழி; அதை சுமார் இரண்டு லட்சம் பேர் பேசுகின்றனர். அவர்களோவெனில் நாட்டின் நடுப்பகுதியில் யாரும் அணுகமுடியாத மலைப்பகுதியில் வசிப்பவர்கள்!

 

டான் லேகாக் (Late Don Laycock) என்பவர் வாழ்நாள் முழுதும் இந்தத் தீவின் மொழிகளை ஆராய்ந்தார்; அவர் சொல்கிறார்: இந்தத் தீவில் எப்படி இவ்வளவு மொழிகள் வந்தன? என்று கேட்காதீர்கள். உலகில் பெரிய நாடுகளில் ஏன் ஒரு சில மொழிகள் மட்டுமே உள்ளன? என்று கேள்வியை மாற்றிப்

போடுங்கள்; விடை கிடைத்துவிடும். ஏனேனில் அங்கெல்லாம் நாடு முழுவதையும் ஒரு குடைக் கீழ் ஆண்ட மன்னர் இருந்தனர்; ஒரே எழுத்து முறை இருந்தது; நீண்ட கால இலக்கியம் இருந்தது; போக்குவரத்து வசதிகள்– அதன் மூலம் வணிகத் தொடர்புகள் இருந்தன; இவை எதுவும் பபுவா நியூகினி நாட்டில் இல்லாததால் பல மொழிகள் உலா வந்தன என்பார்.

 

எது எவ்வாறாயினும் உலகில் இவ்வள வு மொழிகள் வேறு எங்கும் இல்லை; அதுவும்கூட ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத மொழிகள்!

750 மொழிகளை ஒரு சில தலைப்புகளில் சேர்த்து வகைப் படுத்தினாலும் மொழிகளில் உள்ள இலக்கண வேறுபாடுகள் பெரிய புதிர்களாக விளங்குகின்றன.

 

இந்தத் தீவின் மொழிகள் வெகு வேகமாக அழிந்து வருகின்றன. காலனியாதிக்க காலத்திலேயே பிரிட்டன், ஜெர்மனி, ஹாலந்து ஆகியன பல பகுதிகளைப் பிடித்து ஆண்டன. ன்னர் ஆஸ்திரேலிய நிர்வாகத்தின் கீழ் வந்தது; ஒரு பகுதி – இரியன் ஜயா- என்பது இந்தோநேசியாவின் ஆட்சிக்குட்ப்பட்டது. சுசுவாமி என்னும் மொழி பேசுவோர் 50 பேர் மட்டுமே இருந்தனர். இன்னும் சில மொழிகளை 500 பேர் மட்டுமே பேசினர். ஆங்கிலக் கல்வி முதலியவற்றால் 750 மொழிகளில் பெரும்பாலானவை அழிந்து வருகின்றன அல்லது அழிந்துவிட்டன என்றே சொல்லலாம்.

 

மொத்தத்தில் மொழிக் கொள்கையாளர் சொன்ன பல விதிகளைப் பொய் என்று காட்டுகிறது பபுவா நியூகினி நாடு.

TAGS:– நியூகினி, மொழிகள் கொள்கை