Research Article written by London swaminathan
Date: 4 January 2017
Time uploaded in London:- 15-53
Post No.3513
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
ஆதிகாலத்தில் இந்தியர்களுக்கு ஒரே சிந்தனைதான். அவர்கள் உவமைகள் கூட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மேலும் அததகைய உவமைகளை வேறு எந்த பண்பாட்டிலும் காண முடியாது. இதனால் என்ன தெரிகிறது? ஆரியரும் கிடையாது, திராவிடரும் கிடையாது; இமயம் முதல் முதல் குமரி வரை ஒரே சிந்தனைதான். ஒரே பண்பாடுதான். ஒரு உவமையை வைத்து மட்டும் இப்படிச் சொல்லிவிட முடியாது. ஏராளமான இடங்களில் இதைக் காணலாம் “யானையால் யானையாத்தற்று” = நாட்டு யானையை வைத்து காட்டு யானையைப் பிடிப்பது என்பதை வள்ளுவனும் சொல்லுவான். அவனுக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சாணக்கியனும் அர்த்தசாத்திரத்தில் சொல்லுவான்!
தொல்காப்பியனும், காளிதாசனும், சங்கப் புலவர்களும் கிருஷ்ண பரமாத்மா என்ன சொன்னாரோ அதையே கிளிப்பிள்ளை மாதிரி திரும்பத் திரும்பச் சொல்லுவர்.
ஒரே ஒரு உவமையை மட்டும் எடுத்துக்கொள்வோம்:
முத்துமாலை அல்லது ரத்தின மணிமாலை
மத்த: பரதரம் நான்யத் கிஞ்சித் அஸ்தி தனஞ்சய
மயி சர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணி-கணா இவ
-பகவத் கீதை 7-7
தனஞ்சயா! என்னைக் காட்டிலும் உயர்ந்தது வேறு ஒரு சிறிதும் இல்லை; நூலில் மணிகள் போல இவை எல்லாம் என்னிடத்தில் கோர்க்கப்பட்டுள்ளன.
இது அவதூதோபநிஷத்திலும் உள்ளது
யேன ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ; தத் ஸூத்ரம் தாரயேத் யோகீ யோகவித் ப்ராஹ்மணோ யதி:
தொல்காப்பியர் சம்ஸ்கிருதத்தில் உள்ள சூத்ரம் என்ற சொல்லையே தனது சுருக்கமான விதிகளுக்குப் (1425) பயன்படுத்தியுள்ளார் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். கீழேயுள்ள பகுதியில் நூல் (சரடு) என்ற பொருளில் வருகிறது. தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் நூல்=சூத்ரம் என்றால் ஒரே பொருள்தான்! அதவது சரடு/ நூல் , புத்தகம்
நூற்பா=சூத்ரம் 1426
நேரின மணியை நிரல்படவைத்தாங்கு
ஓரினப் பொருளை ஒருவழி வைப்பது
ஒத்து என மொழிப உயர்மொழிப் புலவர்
பொருள்:– ஒரே மாதிரியான மணிகளை வரிசையாகக் கோர்ப்பதுபோல ஓரினப் பொருள்களைத் தொகுத்து ஒரு முறையில் வைப்பதை ஒத்து என்று கூறுவர் சிறந்த புலவர்.
சூத்திரம் 1425-ல் சூத்திரம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லையும் சூத்திரம் 1426-ல் மணி என்ற சம்ஸ்கிருதச் சொல்லையும் தொல்காப்பியர் கையாளுவதையும் மறந்துவிடக் கூடாது.
இதையே மற்ற புலவர்கள் எப்படிப் பயன்படுத்துகின்றனர் என்பதைப் பார்க்கையில் மேலும் வியப்படைவோம்.
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு (குறள் 1273)
பொருள்:-
கோத்த மணியின் ஊடே விளங்கும் நூலைப்போல என் காதலியின் அழகினுள்ளே (இவள் மறைத்து வைத்தாலும்) தோன்றுகின்ற குறிப்பு ஒன்று இருக்கின்றது.
காளிதாசன் பயன்படுத்தும் இடங்கள்:
ரகுவம்சம் 1-4; 6-28; 7-10, 8-64, 16-62; விக்ர 5-2, 5-3
எனக்கு முன்னால் இருந்த பெரியோர்களால் செய்ய்ப்பட்ட ராமாயணம் இந்த துவாரமுடைய சூரியவம்சத்தில் என்னுடைய போக்கு, வஜ்ரத்தினால் துளியிடப்பட்ட ரத்தினத்தில் நூல் (எளிதாகச்) செல்லுவது போல இருக்கிறது- ரகுவம்சம்.1-4
இந்த அங்கதேச மன்னர், பல தேச மன்னர்களை வென்றதால் அவர்களுடைய மனைவிமார் முத்துமாலைகளை இழந்தனர். இப்பொழுது அவர்கள் அழுவதால் விழும் கண்ணீர்த்துளிகள் நூலின்றியே புது முத்துமாலைகள் சூட்டியதைப் போல விளங்கின – ரகுவம்சம்.6-28
(இந்த உவமையைப் பல தமிழ்ப் புலவர்கள் பயன்படுத்தி இருப்பதைக் கீழே காண்க)
ஒரு பெண் கால் கட்டைவிரலில் நூலைக் கட்டி, அதில் மணிகளைச் சேர்த்து மாலை கட்டிக் கொண்டிருந்தாள். அஜன் வருவதைக் கேட்டவுடனே நூலின் மறுமுனையை விட்டுவிட்டு அவனைப் பார்க்க ஜன்னலுக்கு ஓடினாள். அவள் காலில் நூல் மட்டுமே இருந்தது. மணிகள் சிதறி ஓடின- ரகுவம்சம்..7-10
பெண்கள் தனது உள்ளங்கைகளால் தண்ணீரை அடித்து விளையாடினர். அந்த வேகத்தில் அவர்களுடைய முத்துமாலைகள் இற்றுப் போயின. ஆனால் அவர்கள் எழுப்பிய நீர்த்துளியானது அவர்களுடைய மார்பகங்கள் மேல் மணிகள் போல இருந்ததால் மாலை நழுவியதை அவர்கள் உணர முடியவில்லை.-ரகுவம்சம்.18-62
பாதி தொடுக்கபட்ட மேகலை என்னும் வரிகள் ரகுவம்சத்தில் (ரகுவம்சம்.8-64) வருகிறது.
சங்கத் தமிழ் இலக்கியத்தில்
அகம்225 (எயினந்தை மகன் இளங்கீரனார்
பூத்த இருப்பைக் குழைபொதி குவீணர்
கழல்துளை முத்தின் செந்நிலத்து உதிர
பொருள்:-
குவிந்த துளை உடைய பூங்கொத்துகள் நூலினின்று அறுந்து விழும் துளையுடைய முத்தைப் போல சிவந்த நிலத்தில் உதிரும்.
குடவாயிற் கீரத்தனார் பாடிய (அகம்.315) பாடலில்
கோடை உதிர்த்த குவி கண் பசுங்காய்
அறுநூல் பளிங்கின் துளைக் காசு கடுப்ப
வறு நிலத்து உதிரும் அத்தம்
பொருள்:-
நெல்லி மரத்தில் மேல் காற்று உதிர்த்த, குவிந்த கண்ணை உடைய பசிய காய்கள், நூல் அறுபட்டு விழுந்த துளையுடைய , பளிங்குக் காசுகளைப் போல வெற்று நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் காட்டு நெறி….
இதே புலவர் (அகம்.289) இன்னொரு பாட்டில், ”
கண்பனி நெகிழ்நூல்முத்தின், முகிழ் முலை தெறிப்ப”
பொருள்:-
உடன் அவர் இல்லாமையை எண்ணி வருந்த, நூலறுந்து விழும் முத்துக்களைப் போல கண்ணீர் முலை மீது சிந்தக், குற்றம் இல்லாத படுக்கையில் அழகிய மெல்லிய அன்னச்சிறகால் ஆகிய அணையைச் சேர்த்து………………………………….
இளங்கீரனார் ஒவ்வொரு பாட்டிலும் காளிதாசன் பயன்படுத்திய இரண்டு விஷயங்களைப் பயன்பத்துகிறார் என்பது அவர் காளிதாசனைக் கரைத்துக்குடித்தவர் என்பதைக் காட்டும்.
குறுந்தொகைப் பாடலில் (51) குன்றியனார் என்னும் புலவர் கூறுவதாவது:-
கூன் முண் முண்டகக் கூர்ம்பனி மாமல்ர்
நூலறு முத்திற் காலொடு பாறித்
துறைதொறும் பரக்குந்தூமணல் சேர்ப்பனை
பொருள்:-
வளைந்த முள்ளையுடைய கழிமுள்ளியினது மிக்க குளிர்ச்சியுடைய கரிய மலரானது, நூலற்று உதிர்ந்த முத்துக்களைப் போல காற்றால் சிதறி நீர்த்துறைகள் உள்ள இடம்தொறும் பரவும் தூய மணல் பரப்பை………………
குறுந்தொகை 104-ல் காவன் முல்லைப் பூதனார் என்னும் புலவர் கூறுவதாவது:-
அம்ம வாழி தோழி காதலர்
நூலறு முத்திற் றண்சித ருறைப்பத்
தாளித் தண்பவர் நாளமேயும்
பொருள்:-
தோழி, ஒன்று கூறுவன்; கேட்பாயாக, நம் தலைவர் (காதலர்) நூலற்ற முத்துவடத்தினின்றும் தனித்து உதிர்கின்ற முத்துக்களைப்போல, குளிர்ந்த பனித்துளிகள் துளிக்க, குளிர்ந்த தாளியறுகின் கொடியை, விடியற்காலத்தில் பசுக்கள் மேயும்…………..
கலித்தொகையிலும் (பாடல் 82, மருதக்கலி, மருதன் இளநாகன்) கண்ணீர்த் துளிகளை அறுந்த முத்துமாலைக்கு ஒப்பிடுவதைக் காணலாம்.
தமிழ் பக்தி இலக்கியத்தில் நிறைய இடங்களில் முத்துமாலை கோத்தல், அறுந்த முத்துமாலை உவமைகளை காணலாம்.
“செப்பு மொழி பதினெட்டுடையாள்- எனில்
சிந்தனை ஒன்றுடையாள்” (பாரத தேவி)– பாரதியார்
–சுபம்—