மனித முகம்; சிங்க உடல்! ஸ்பிங்ஸ்! எகிப்திய அதிசயங்கள்- பகுதி 8 (Post No.3664)

Written by London swaminathan

 

Date: 23 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 21-10

 

Post No. 3664

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

எகிப்தில் பிரமிடுகளுக்கு அடுத்தபடியாக எல்லோருக்கும் தெரிந்தது ஸ்பிங்ஸ் SPHINX என்னும் பிரம்மாண்டமான சிலை ஆகும். இதற்கு மூன்று பெருமைகள் உண்டு:

 

உலகிலேயே மிகப்பெரிய சிலை!

உலகிலேயே பழமையான சிலை!

உலகிலேயே விநோதமான சிலை!

இந்து மதத்தில் விஷ்ணுவுக்கு முக்கிய அவதாரங்கள் 10. அதில் ஒன்று நரசிம்மாவதாரம்; அங்கே சிங்க முகம் , மனித உடல். ஆனால் எகிப்தில் மனித முகம், சிங்க உடல்: நேர் எதிர் உருவம்.

 

எகிப்தில் எங்கே உள்ளது (Sphinx) ஸ்பிங்ஸ்?

கீஸா (Giza) என்னும் இடத்தில் இந்தச் சிலை இருக்கிறது. அது எகிப்தின் தலைநகரான கெய்ரோவுக்கு அருகில் உள்ளது.

 

இந்த சிலையின் பொருள் என்ன? இது என்ன?

 

இது எகிப்திய மன்னரின் முகத்தையும் படுத்திருக்கும் சிங்கத்தின் உடலையும் கொண்டது.

 

இதன் உயரம் நீளம் என்ன?

இதன் உயரம் 66 அடி; நீளம் 240 அடி. பெரும்பாலும் ஒரு மலையைச் செதுக்கி உருவாக்கியுள்ளனர். ஆயினும் அத்தோடு கல்வேலைப்பாடு செய்து பொருத்தியுள்ளனர்.. அருகில் நாலாவது அரச வம்சத்தைச் சேர்ந்த காப்ரே என்ற மன்னரின் பிரமிடு இருக்கிறது

இது கொஞ்சம் சேதம் அடைந்துள்ளது. எகிப்துக்குள் வந்த துருக்கி படைகள் துப்பாக்கி– பீரங்கிப் பயிற்சிக்கு இதை குறியிலக்காகப் பயன்படுத்தியது!!

 

3000 ஆண்டு எகிப்திய வரலாற்றில் பலமுறை இதைப் பாதுக்காக்க மேல்பூச்சு பூசினர். பாலைவனப்பகுதியில் இருந்ததால் பெரும்பகுதியை மணலும் மூடிப் பாதுகாத்தது. முன்காலத்தில் இதில் பல வர்ணங்களைப் பூசி யிருந்தனர். உடலையும் முகத்தையும் சிவப்பு வர்ணத்தாலும் மன்னரின் தலைக் கிரீடத்தை மஞ்சள்-நீல நிறங்களாலும் அலங்கரித்தனர்.

 

 

ஸ்பிங்ஸ் சிலை குறித்து இரண்டு புதிர்கள் உள்ளன:

  1. இதன் வயது எதற்காக இப்படி ஒரு விநோதமான உருவத்தை அந்த மன்னன் சமைத்தான்?

 

இது இருக்கும் பகுதியில் பெரிய பிரமிடு (Great Pyramid)  என அழைக்கப்படும் கூஃபூவின் பிரமிடு, அவனுடைய மகன் காஃப்ரேயின் பிரமிடு, அவனுடைய மகன் மென்கௌரேயின் பிரமிடு (அதாவது கூஃபுவின் பேரன்) ஆகியன இருக்கின்றன. சிலர் இது காப்ரேயின் முகம் என்பர்; மற்றும் சிலர் இது மன்கௌரேயின் முகம் என்பர்; இவர்கள் எல்லோரும் கி.மு 2600 முதல் 2400 வரை ஆண்டவர்கள். ஆனால் வேறு சில ஆராய்ச்சியாளர்கள் இது அவர்களுக்கெல்லாம் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்டது — அதாவது கி.மு.5000 தான் இதன் உண்மை வயது என்பர். அப்படியானால் 7000 ஆண்டுகளாக இது மழையிலும் வெய்யிலிலும் கஷ்டப்பட்டு வருகிறது!

 

ராபர்ட் ஸ்சோச் (Robert Schoch) என்ற அறிஞர் காலநிலை மாற்றத்தால் சிலைக்கு ஏற்பட்ட அரிப்பு/ சிதைவை வைத்துக் கணக்கிட்டு 7000 ஆண்டுப் பழமையானது என்பார். ஆனால் தொல்பொருட்துறை அறிஞர்கள் இது காப்ரே மன்னரின் காலத்தை ஒட்டியே உருவாகி இருக்க வேண்டும் என்பர். அப்படியானால் இதன் வயது 5000 ஆண்டுகளுக்கும் குறைவே.

 

இப்படி ஒரு உருவத்தை ஏன் உருவாக்கினர்?

இது திட்டமிடப்பட்டு உருவாக்கிய சிலை என்பது ஒருசாரார் வாதம்; மற்றொரு கோஷ்டி, இல்லை, பக்கத்தில் உள்ள பிரமிடுகளுக்குக் கல் தோண்டுகையில் கற்களை வெட்ட வெட்ட இப்படி ஒரு உருவம் இயற்கையிலேயே உருவாகியது. அதை வீணடிக்கவேண்டாம் என்று எண்ணி, சிங்க உருவமாகச் செதுக்கிவிட்டார்கள் என்கின்றனர்.

 

அருகிலேயே ஸ்பிங்ஸ் கோவில் (Sphinx Temple)  இருக்கிறது அது காப்ரே (Khafre) என்ற மன்னருடன் தொடர்புடையது. ஆகையால் காப்ரேதான் இதையும் உருவாக்கினான் என்பது ஊகம்! இது ஒரு சாலையின் முடிவில் இருப்பதாலும் அருகில் மிகப் பழைய பிரமிடுகள் இருப்பதாலும் அவைகளின் காவலனாக — காவல் தெய்வமாக- இதைப் படைத்தனரோ என்றும் எண்ணுவர். இது பற்றி எந்தக் கல்வெட்டும் இல்லா ததால் இப்படிப் பல ஊகங்கள், புதிர்கள் உலவுகின்றன!

 

எகிப்திலும் கிரேக்க (Greece) நாட்டிலும் பலவகையான ஸ்பிங்ஸ் சிலைகள் உள்ளன. அவைகளைப் பின்னர் காண்போம்.

 

–Subham–