மொழியின் வலிமை தாழ்த்தப்பட்டவரை உயர்த்துவதற்கே! நோபல் பரிசு உரை (Post No.3500)

Written by S NAGARAJAN

 

Date: 31  December 2016

 

Time uploaded in London:-  11-40 AM

 

Post No.3500

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

பாக்யா வார இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

மொழியின் வலிமை தாழ்த்தப்பட்டவரை   உயர்த்துவதற்கே! நோபல் பரிசு உரை

ச.நாகராஜன்

 

 

 

நோபல் பரிசு பெறுவது உலகின் மிகப் பெரிய கௌரவம். அங்கீகாரமும் கூட. இதைப் பெறுவோர் பரிசு பெறும் நிகழ்ச்சியில் ஒரு உரை நிகழ்த்துவர். அது மிகவும் அற்புதமான உரையாக அமையும். ஆகவே ஒவ்வொரு துறையிலும் பரிசு பெற்றவர்கள் நிகழ்த்திய நோபல் பரிசு உரைகளைத் தொகுத்து தொகுதி தொகுதியாக வெளியிடப்படுகிறது.

 

அவற்றுள் டோனி மாரிஸனின் (Tony Marrison) உரையும் ஒன்று. அதன் சுருக்கத்தை இங்கே காணலாம்..

 

1993ஆம் ஆண்டு டோனி மாரிஸன் நோபல் பரிசை இலக்கியத்திற்காகப் பெற்றார். இப்படி நோபல் பரிசு பெறும் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி இவரே என்ற புகழையும் கூடவே பெற்றார்.

 

 

அவர் தனது நாவல்களில் ஆழ்ந்த பார்வையுடனும் கவிதை ஆவேசத்துடனும் அமெரிக்க வாழ்வியல் உணமைக்கு உயிர் தருபவர் என்பது நோப்ல பரிசு பெறுவதற்கான காரணமாக குறிப்பிடப்பட்டது.

 

டிசம்பர் 7ஆம் தேதி ஸ்வீடனின் பரிசு பெறும் மேடையில் ஏறி அவர் ஆற்றிய உணர்ச்சி மிக்க சொற்பொழிவு அனைவருக்கும்  மொழியைப் பயன்படுத்த வேண்டிய வழியைப் பற்றி உத்வேகமூட்டும் ஒரு உரையாக அமைந்தது. அவர் உரையின் சாரம்:

 

 

: முன்னொரு காலத்தில் ஒரு பெண்மணி இருந்தாள். அவள் கண்பார்வையற்றவள். ஆனால் புத்திசாலி. அவள் ஒரு அடிமை. கறுப்பு இனத்தைச் சேர்ந்தவள். அமெரிக்க பிரஜை. தனியே ஒரு சிறிய வீட்டில் நகருக்கு வெளிப்புறத்தில் அவள் வாழ்ந்து வந்தாள்.

 

 

அவளது  புத்திகூர்மை அவள் அண்டை அய்லாரையும் தாண்டி நகரில் வசிப்போரையும் தாண்டி எங்கும் பரவியிருந்தது.

ஒரு நாள் சில இளைஞர்கள் அந்தப் பெண்மணி அப்படிப்பட்ட புகழுக்கு உரியவள் இல்லை என்று நிரூபிக்கும் கெட்ட எண்ணத்துடன் அவளை அணுகினர்.

 

ஒரே ஒரு கேள்வி கேட்போம். அதற்குச் சரியான பதிலைச் சொல்லி விட்டால் அவள் மேதாவி தான் என்பதை ஒப்புக் கொள்வோம். இல்லையேல் அவள் ஒரு ஃப்ராடு என்று சொல்வோம் என்றனர்.

 

 

அவர்களில் ஒருவன் அந்தப் பெண்மணியை அணுகி, “அம்மணி, இதோ என் கையில் ஒரு சிறிய் பறவை இருக்கிரது. அது உயிரோடு இருக்கிறதா அல்லது செத்து விட்டதா?” என்று கேட்டான்.

 

 

பறவை உயிரோடு இருக்கிறது என்று அவள் கூறினால் கையை ஒரே ஒரு அமுக்கு அமுக்கி அந்தப் பறவையைக் கொன்று விடலாம். அவள் செத்து விட்டதாகச் சொன்னால் உயிரோடு இருக்கும் பறவையைக் காட்டி அவள் கூறியது தவறு என்று நிரூபிக்கலாம் என்பது அந்த இளைஞர் கூட்டத்தின் திட்டம்.

 

ஆனால் மகா புத்திசாலியான பார்வையற்ற அந்தக் கறுப்பு இனப் பெண்மணி அவர்களின் மோசமான திட்டத்தை அறிந்து கொண்டாள்.  சற்று பேசாமல் இருந்த அவளை அவர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.

 

 

கடைசியில் அவள் பேசினாள்: “உங்கள் கையில் இருக்கும் பறவை உயிரோடு இருக்கிறதா செத்து விட்டதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கான விடை உங்கள் கையில் இருக்கிறது என்பது மட்டும் எனக்குத் தெரியும். விடை உங்கள் கையில் தான் இருக்கிறது!”

 

 

அதற்கான அர்த்தம் – ஒருவேளை அது இறந்து கிடந்த போது அதை எடுத்து வந்திருக்கலாம். அல்லது அதை நீங்களே சாகடித்திருக்கலாம். ஒருவேளை அது உயிரோடு இருந்தால் அதை நீங்கள் இப்போது நினைத்தாலும் சாக அடிக்கலாம். அது உயிரோடு இருக்க வேண்டுமா இல்லையா என்பது உங்கள்  முடிவைப் பொறுத்தது. பொறுப்பு உங்களுடையதே.

இந்த அதிரடி பதிலைக் கேட்டு திருதிருவென்று விழித்த இளைஞர்கள் மனம்  மாறி அவளிடம் தங்களின் உண்மையான திட்டத்தை எடுத்துரைத்து தங்கள் செய்கைக்கு வருந்தினர்.

பார்வையற்ற அந்தப் பெண்மணி அவர்கள் தங்கள் வலிமையை உறுதிப்படுத்துவதிலிருந்து தன் கவனத்தை அவர்கள் எந்தக் கருவியின் மூலம் அதை உறுதிப்படுத்த முயல்கிறார்கள்  அதற்கு மாற்றிக் கொண்டாள். பதிலைச் சொன்னாள்.

 

 

கையில் இருக்கும் பறவையைப் பற்றிய உண்மை நிலையப் பற்றிய ஹேஷ்யம் எனக்கு எப்போதுமே ஒரு கவர்ச்சியைத் தந்தது. ஆனால் இப்போது நினைக்கும் போது நான் செய்யும் எழுத்துப் பணியே என்னை இந்த நோபல் பரிசு பெறும் இடத்திற்கு கொண்டு சேர்த்துள்ளது.

 

 

ஆகவே அந்தப் பறவையை மொழி என்றும் அந்தப் பெண்மணியை ஒரு எழுத்தாளர் என்றும் நான் காண்கிறேன். அவளுக்குப் பிறக்கும் போது கொடுக்கப்பட்ட  மொழியை – அது பல கொடிய காரணங்களுக்காகத் தடுக்கப்பட்ட போதிலும் கூட –  அதை எப்படி உரிய முறையில் கையாண்டு  சேவை செய்ய முடியும் என்று தான் அவள் கவலைப்பட்டாள்.

 

அவள் ஒரு எழுத்தாளர் என்பதால், மொழியை ஒரு அமைப்பாகவும் அத்துடன் கூட உயிர்ப்புடன் கூடிய விளைவை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகவும் அவள் நினைக்கிறாள்.

 

 

ஆகவே குழந்தைகள் அவளிடம் “அது உயிருட்ன்  இருக்கிறதா அல்லது செத்து விட்டதா என்ற கேள்வியை எழுப்பும் போது அவள் மொழி என்பது இறக்கக் கூடிய ஒன்றே. ஆனால் அதை உயிர்ப்புடன் தக்கவைக்க முயற்சியும் திட மனதும் வேண்டும்; கையில் இருக்கும் பறவை இறந்து விட்டது என்றால் அந்த சவத்திற்கு  காரணம் அதை வைத்திருந்தவர்களே என்று நம்புகிறாள்.

பேச்சு வழக்கொழிந்து, எழுதவும் முடியாமல் இறந்து போன ஒரு மொழி என்பது விளைச்சலைத் தராமல் தனக்குத் தானே முடக்கு வாதத்தை உருவாக்கிக் கொண்ட ஒன்றேயாகும்.

 

 

ஒரு மொழியின் செழுமை என்பது அதை கையாண்டு பேசுபவர்கள், படிப்பவர்கள், எழுதுபவர்கள் ஆகியவர்களிட்ம் அது வாழும் திறனைப் பொறுத்தே உள்ளது.

 

டோனி மாரிஸன் இப்படி அற்புதமாக மொழியின் ஆற்றலையும் அதைக் கட்டிக் காத்து வளர்கக் வேண்டிய கடமையையும் தன் உரையில்  எடுத்துரைத்தார்.  அவரது உரை எந்த ஒரு மொழிக்கும் பொருந்தக் கூடியதே!

 

 

டோனி மாரிஸனின் கருத்துப் படி ஒரு  மொழி அடிமைத் தனத்தையோ போரையோ அல்லது ஒரு இனத்தைப் பழிவாங்குவதற்கோ ப்யன்படுத்தக்கூடாது. மாறாக ஒடுக்கப்பட்டவர்களை உயர்ததுவதற்காக மொழியின் வலிமை அவர்களைச் சென்று சேர வெண்டும்.

 

 

அறிவை நோக்கியே ஒரு  மொழி முன்னேற வேண்டும், அதன் அழிவை நோக்கி அல்ல.

 

 

நாம் இறக்கிறோம். அதுவே வாழ்க்கையின் அர்த்தமாக இருக்கலாம். நாம் மொழியைப் பேசுகிறோம். அதுவே நமது வாழ்க்கையை அளக்கும் அளவுகோலாக இருக்கும்.

 

 

இப்படி, மொழியைப் பற்றி தனது ஆழ்ந்த கருத்தைக் கூறியுள்ள டோனி மாரிஸன் எந்த எழுத்தும் தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை  தன் நோபல் உரையில் உலக மக்களின் முன் வைக்கிறார்.

 

 

அவரது நெகிழ்வு தரும் இந்த உரை உலகில் அனைவராலும் அடிக்கடி பேசப்பட்டு அனைவருக்கும் உத்வேகத்தைத் தருகிறது.

மொழிச் சண்டையை விடுத்து மொழியின் வலிமையை ஆக்க பூர்வமாக ஒடுக்கப்பட்டோரின் நலத்திற்காகப் பயன்படுத்தினால் உல்கம் ஒன்று படும்; மேம்படும்!

*******