
Written by london swaminathan
Date: 20th August 2016
Post No. 3075
Time uploaded in London :– 6-37 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
இந்தியாவை ஆண்ட மன்னர்களில் மிகவும் சிறப்பாக ஆண்ட பெருமையுடையவன் போஜன். ஆனால் போஜன் என்ற பெயரில் பல மன்னர்கள் ஆண்டதால் எந்த போஜ ராஜனைப் பற்றியது அஷ்ட லெட்சுமி கதை என்று சொல்வதற்கிலை.
துணிவே துணை!
கடவுள் ஆறு இடங்களில் இருக்கிறார் என்று
சம்ஸ்கிருதத்தில் ஒரு அழகான ஸ்லோகம்/பாடல் இருக்கிறது.
உத்சாஹ: சாஹசம் தைர்யம் புத்தி: சக்தி: பராக்ரம:
ஷடேதே யத்ர திஷ்டந்தி தத்ர தேவோபி திஷ்டதி
பொருள்:–
உற்சாகம் (ஊக்கம்/ஆவல்), சாஹசம் (துணிகரச் செய்ல்), தைர்யம் (துணிவு),
புத்தி: (மூளை/அறிவு), சக்தி: (உடல் வலிமை), பராக்ரம: (வீரம்)
–ஆகிய ஆறும் எங்கே இருக்கின்றனவோ அங்கே இறைவன் உறைவான்.

வான் புகழ் வள்ளுவனும் தேன் தமிழில் செப்புகிறான்:-
விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும் தன் நாளை எடுத்து
பொருள்:- வீரன் ஒருவன், தன் வாழ்நாளில் போரில் காயங்கள் ஏற்படாத நாட்களை எல்லாம், வீணாகிவிட்ட நாட்கள் என்று கணக்கிடுவான்.
ஆக துணிவு, வீரம் என்பன போற்றப்படும் பண்புகள். போரில் இறந்தால் சுவர்க்கம் கிடைக்கும் என்று பகவத் கீதையும் புறநானூறும் பகரும். (முன்னொரு கட்டுரையில் இது பற்றி விரிவாக கொடுத்துள்ளேன்)
சுவையான கதை
தைர்யத்தின் மதிப்பை விளக்க ஒரு சுவையான கதை உளது.
போஜராஜன் அரசாட்சியில் எட்டு லட்சுமிகளின் அருள் இருந்ததால் பயமோ, பஞ்சமோ இன்றி மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் போஜன் ஒரு தவறு செய்துவிட்டதால் எட்டு லெட்சுமி களுக்கும் கோபம் வந்துவிட்டது.
போஜ ராஜனே! உன் பிழை கண்டு வருந்துகிறோம்; நாங்கள் போய் வருகிறோம் என்று தன, தான்ய, தைர்ய, வீர, விஜய, வித்யா, கஜ, சந்தான லெட்சுமிகள் அறிவித்தனர்.
போஜனோ
“சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே — என்பது ஆன்றோர் வாக்கு ஆயிற்றே.
“எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீ பொறுப்பது உன்கடன்” – என்று சான்றோர் பாடுகின்றனரே. “மன்னிக்க வேண்டுகிறேன்” என்று முறையிட்டான்.
உடனே எட்டு லெட்சுமிமார்களும் “ஒரு வரம் தந்தனம். எங்களில் ஒருவரை மட்டும் கொள்க” என்றனர்.
புத்தியுள்ள போஜன் சொன்னான்: எனக்குத் துணிவு இருந்தால் உலகத்தையே வென்றுவிடுவேன். ஆகையால் தைர்ய லெட்சுமி என்னிடம் இருக்கட்டும் என்றான்.
அவர்களும் “ததாஸ்து” (அப்படியே ஆகட்டும்) என்று இயம்பினர்.
மறுநாள் காலையில் போஜ ராஜனுக்கு பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது.

தைர்ய லெட்சுமி இருந்த இடத்தில் வீர, விஜய, வித்யா லெட்சுமிகள் நுழைந்தனர். எங்கே துணிவு இருக்கிறதோ அங்கே தான் நாங்கள் இருப்போம் என்றனர். அதையடுத்து தன, தான்ய, சந்தான, கஜ லெட்சுமிகளும் உள்ளே வந்தனர். எங்கே கல்வியும் (வித்யா) தைர்யமும், வெற்றியும், வீரமும் இருக்கிறதோ அங்கே தான் தன, தான்யம், பிள்ளைப்பேறு (சந்தானம்), கஜலெட்சுமி (அதிர்ஷ்டம்/ லாபம்) இருப்போம் என்று ஓதினர்.
போஜனுக்கு மெத்த மகிழ்ச்சி. அவர்களைப் போற்றித் துதிபாடினான்.
இன்று கல்வியிலோ, தொழிலிலோ, அரசாட்சியிலோ , அலுவலகத்திலோ, குடும்பப் பொறுப்பிலோ உள்ளோருக்கு இந்தக் கதை தரும் அறிவுரை ஆயிரம் புத்தகங்களிலும் காணக்கிடைக்காத அற்புத அறிவுரை ஆகும்.
பாரதி பாடுகிறான்:–
“குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
சாமி மார்க்கெல்லாம் தைரியம் வளருது
தொப்பை சுருங்குது சுறுசுறுப்பு விளையுது
எட்டு லச்சுமியும் ஏறி வளருது;
சாத்திரம் வளருது, சாதி குறையுது
நேத்திரம் திறக்குது, நியாயம் தெரியுது
பழைய பைத்தியம் படீலென்று தெளியுது;
வீரம் வருகுது, மேன்மை கிடைக்குது
சொல்லடி சக்தி, மலையாள பகவதி
தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது.”
அஷ்ட லக்ஷ்மி நமோ நம:
பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!!!




You must be logged in to post a comment.