Pasupathinath Temple at Kathmandu, Nepal
எழுதியவர்: ச.நாகராஜன்
வானவியல், கணித, ஜோதிட மேதை
ஸ்ரீபதி புதிய பாதையை ஜோதிடர்களுக்குக் காண்பித்த மகா மேதை! இவர் வாழ்ந்த காலம் கி.பி.1019 முதல் 1066 வரை என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீபதியின் தந்தையார் பெயர் நாகதேவர். நாகதேவரின் தந்தையாரான கேசவரும் ஒரு ஜோதிட மேதை தான். பிரபல ஜோதிட மேதையான லல்லரின் ஜோதிட நூல்களைக் கற்றுத் தேர்ந்த ஸ்ரீபதி பெரும் வானவியல் நிபுணராகவும் கணித மேதையாகவும் ஜோதிடத்தில் புது நெறி காட்டும் புரவலராகவும் திகழ்ந்தார். கோளங்களைப் பற்றிய இவரது ஆராய்ச்சி குறிப்பிடத் தகுந்தது.
நேபாளத்தை சேர்ந்தவர்
துருவ மானஸம் (1056ல் எழுதியது) என்னும் நூலில் இவர் தன்னைப் பற்றிக் கூறுகையில்,”நேபாளத்தைச் சேர்ந்த கபிலவாஸ்துவில் ரோஹிணி நதி பாயும் ஊர் எங்களது ஊர்” எனக் குறிப்பிடுகிறார்.இந்த நூல் 105 செய்யுள்களைக் கொண்டது. இதில் கிரகங்களிருக்கும் நிலைகள், செல்லும் பாதை, கிரகணங்கள் ஆகியவை நன்கு விளக்கப்பட்டுள்ளன.நாளுக்கு நாள் இவர் புகழ் பாரதமெங்கு பரவியது. மூன்று ஸ்கந்தங்களிலும் வல்லவரான இவர் பல அரிய நூல்களை இயற்றினார். ஆகவே இவரை மரியாதையாக அனைவரும் ஸ்ரீபதி பட்டர் என அழைக்கலாயினர்.
Another View of the Paupathinath Temple
ஸ்ரீபதி பத்ததி
ஜோதிடர்களுக்கு சவாலான ஒரு விஷயம் பாவம் மற்றும் ராசி சந்திகளில் இருக்கும் கிரகங்களின் பலத்தை நிர்ணயிப்பது தான். பராசரர் வழியிலிருந்து மாறி இவர் புது பத்ததியை உருவாக்கினார். இதன் படி பத்தாம் இடத்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி அதையொட்டி பல புதிய பாதைகளை சுட்டிக் காட்டினார். இந்த பத்ததி (வழிமுறை) கற்பதற்கு மிகவும் கடினமானது. என்றாலும் கூட மிகவும் பிரபலமானது.ஜாதக பத்ததி அல்லது ஸ்ரீபதிபத்ததி என்ற பெயரால் இது சிறப்புற அழைக்கப்பெற்று ஜோதிடர்களின் மனம் கவர்ந்த நூலாக இன்று விளங்குகிறது.
ஸ்ரீபதியின் இதர நூல்கள்
வராஹமிஹிரரின் நூல்கள் இவரைப் பெரிதும் கவர்ந்தன. அவரை வியந்து போற்றி அவர் பாதையில் தான் ஒரு வழி நூலையும் இயற்றினார். இவரது சித்தாந்தசேகரம் என்ற அரிய வானவியல் நூல் 19 அத்தியாயங்களைக் கொண்டது. 125 செய்யுள்களைக் கொண்ட இவரது கணிததிலகா பூர்த்தியாகாத ஒரு நூல்.ஜோதிட மேதை ஸ்ரீதரரின் நூலை ஒட்டி அவர் இதை எழுதத் தொடங்கினார்.இதன் 14ம் அத்தியாயத்தில் அல்ஜீப்ராவின் பல்வேறு சமன்பாடுகளையும் சூத்திரங்களையும் அவர் அன்றே விளக்கி இருப்பதைக் காணும் மேலை நாட்டார் இன்று வியந்து அவரைப் போற்றுகின்றனர்.திக்கோதிதகரணம் (1039ல் எழுதியது) சூரிய சந்திர கிரகணங்களைப் பற்றி 20 செய்யுள்களில் விளக்குகிறது.20அத்தியாயங்கள் கொண்ட ஜ்யோதிஷ ரத்னமாலா லல்லரின் ஜ்யோதிஷரத்னகோசத்தைத் தழுவி இவரால் எழுதப்பட்டது. இந்த நூலுக்கு மராத்தியமொழியில் இவர் ஒரு விளக்க உரையையும் எழுதினார். மராத்திய மொழியின் புராதன நூலாக இது இலங்குகிறது.ரத்னமாலையில் இவர் மக்களைப் பரிவுடன் அழைக்கும் பாங்கு வியந்து போற்றுதற்கு உரியது.
மறைந்த நூல்கள் பல
ஸ்ரீபதி எழுதிய பல நூல்கள் மறைந்து விட்டன. பீஜ கணிதம் போன்ற இவரது சிறந்த நூல்கள் இன்று காணக் கிடைக்கவில்லை.(என்றாலும் கூட கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இருந்த கிருஷ்ணமிசிரர் என்னும் அந்தணர் இவரது அரிய நூலான சித்தாந்த சேகர விவரணத்தை வியாக்யானத்தோடு முதல் 4 அத்தியாயம் 75 சுலோகங்கள் வரை அச்சிட்டுள்ளார்.)
ஜோதிடத்தில் ஒரு சுவாரசியமான திருப்பத்தை ஏற்படுத்தி ஒரு பத்ததியை உருவாக்கி புது வழி காட்டியவர் ஸ்ரீபதி என்பதால் இவரது நூல்களை ஜோதிட ஆர்வலர்கள் மிகவும் ஆர்வத்துடன் தேடிக் கற்று வருகின்றனர்.
******************