This article is availabe in English as well.
By London swaminathan
Post no 878 dated 1st March 2014
தமிழ்க் குரங்குகளுக்கு அறிவு ஜாஸ்தி!!
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்!……..இல்லை…… இல்லை,…..
தமிழ்க் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று சொல்லுவதே பொருத்தமாக இருக்கும். ஏனெனில் நாம்தான் உலகில் முதலில் பிறந்தோம் என்று பறை சாற்றிக் கொள்கிறோம் அல்லவா?
“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு
முன் தோன்றிய மூத்த குடி”
— தமிழ்க் குடி என்று சொல்லுவது உண்மையானால் முதல் குரங்கு தமிழ் குரங்காகத்தானே இருக்க வேண்டும்! நிற்க.
தமிழன் இயற்கையில் ஊறித் திளைத்தவன் என்பது சங்க இலக்கியத்தின் 2000+ பாடல்களைப் படிப்போருக்கு தெள்ளிதின் விளங்கும். அவன் வருணிக்கும் மரம், செடி, கொடி, விலங்கினங்கள், பறவைகள் எல்லாவற்றையும் ஓவியமாக வரைந்து வைத்தால் காணக் கண்கள் ஆயிரம் வேண்டும். இன்று நமக்கு மிக நெருங்கிய உடன் பிறப்பான குரங்கை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
மனிதனைப் போன்ற உணர்வு குரங்குகளுக்கும் உண்டு என்பதெல்லாம் இப்போதுதான் ‘டிஸ்கவரி சேன்னல்’ முதலியவற்றில் ஆராயப்படுகின்றன. ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன், பிராணிகளை உன்னிப்பாகக் கவனித்து அவைகளை உவமைகளாகவும் எழுதி வைத்துவிட்டான்.
“இஞ்சி தின்ன குரங்கு போல”, “குரங்கு கையில் கொடுத்த பூமாலை போல”, “குரங்குப் பிடி” என்ற பழமொழிகளை எல்லாம் மனக் கண் முன்னால் ஓவியமாகக் கண்டு பாருங்கள். எவ்வளவு கன கச்சிதமாகச் சொல்லியிருக்கிறான் என்பது புரியும்.
இதோ சில காட்சிகள்:
காடுகளில் மயில்கள் ஆடும்போது வண்டுகள் பாடுகின்றனவாம். குரங்குகள் பலாப் பழத்தை மத்தளம் போல வைத்துக் கொண்டு தாளம் போடுகின்றனவாம்.காட்டிற்குள் ஒரு ஆர்க்கெஸ்ட்ரா/ இசைக் குழு! இப்படி ஒரு காட்சி. (அகம்.352)
இன்னொரு இடத்தில் ஒரு குரங்கு மழைத் தண்ணீரில் எழும் காற்றுக் குமிழ்களைக் கம்பால் அடித்து மகிழ்கிறதாம் (ஐங்கு 275)
மற்றொரு குரங்கு மயில் முட்டையை எடுத்து பாறை மீது உருட்டி பந்து விளையாடுகிறதாம் (குறு. 38)
கான மஞ்ஞை அறையீன் முட்டை
வெயிலாடுமுசுவின் குருளை உருட்டும்—(குறு. 38)
குரங்குகள் மரத்தில் கிளைக்கு கிளை தாவிப் போவதையும், ஊஞ்சல் ஆடுவதையும் புலவர்கள் வருணித்து மகிழ்கின்றனர்.
குரங்குகளுக்குக் கூடப் புணர்ச்சிக்குப் (செக்ஸ்) பின் வெட்கம் வரும் என்பதைக் கவனித்துப் பாடியும் வைத்திருக்கிறான் தமிழன் (நற்றிணை 151)
கடுவன், முறியார் பெருங்கிளை அறிதல் அஞ்சிக்
கறிவளர் அடுக்கத்து கள்வினிற் புணர்ந்த
செம்முக மந்தி செல்குறி கருங்காற்
பொன்னினர் வேங்கைப் பூஞ்சினைச் செலீஇயர்
குண்டுநீர் நெடுஞ்சுனை நோக்கி கவிழ்ந்து தன்
புன்தலைப் பாறு மயிர் திருத்தும் — ( நற்றிணை 151)
ஒரு ஆண் குரங்குடன், செம்முக மந்தி களவினில் தொடர்பு கொண்டதாம். தன்னுடைய கோஷ்டிக்குக் கலைந்த தலை முடியையும் முகத்தையும் காட்டினால் ரகசியம் வெளியாகி விடும் என்று அஞ்சி ஒரு மரத்தின் மீது ஏறி நீர்ச் சுனையில் கண்ணாடி போல முகம் பார்த்து தலை மயிரை அழகாக சரி செய்து கொண்டதாம். பெண் (குரங்கு) கள் ‘மேக் அப் போடுவது’ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்ணாடிக்கு முன் நடந்திருக்கிறது!!
இந்தக் காட்சி மிகைப் படுதப்பட்டதல்ல, இப்போது குரங்குகளைப் பற்றி ஆராய்சி செய்வோர் அதற்கு மனிதன் போல சிந்தித்து முடிவு எடுக்கும் புத்தி இருக்கிறது என்பதைச் சோதனைகளில் கண்டு பிடித்து இருக்கிறார்கள். நாம் அவர்களை 2000 ஆண்டு இடைவெளியில் தோற்கடித்து விட்டோம். இது புலவர் இள நாகனார் பாடிய பாடல்.
குரங்கின் மனநிலையை, ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்திலும் சுந்தர காண்டத்திலும் கவிஞர்கள் (வால்மீகி, கம்பன்) அழகாகச் சித்தரித்துள்ளனர். சீதா தேவியைக் கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில், குரங்குகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்கின்றன.
( நமது அரசியல்வாதிகளுக்கு கோப்பெருஞ்சோழனும், ராமாயணக் குரங்குகளும்தான் உண்ணாவிரத முன்னோடிகள்).
தமிழ் இலக்கியமும் இரண்டு பரிதாபக் காட்சிகளை வருணிக்கின்றன:
ஒரு பெண் குரங்கின் குட்டி மலைப் பள்ளத்தாக்கில் தவறி விழுந்து இறந்துவிட்டது. அது கண்டு பொறாது, தனது கூட்டத்தில் நின்று அழுதது. இதை வருணிக்கிறார் மலைபடுகடாம் கவிஞர் பெருங் கவுசிகனார்:
“கைக்கோள் மறந்த கருவிரல் மந்தி
அருவிடர் வீழ்ந்ததன் கல்லாப் பார்ப்பிற்கு
முறிமேல் யாக்கை கிளையொடு தவன்றி
சிறுமையுற்ற களையாப் பூசல்:- — ( மலைபடு வரி 311- 314)
“தேக்கடி ராஜா” போன்ற தமிழ் நாவல்களைப் படித்தவர்களுக்கு யானைகள் முறையாக துக்கம் அனுஷ்டிப்பது தெரிந்து இருக்கும். மேலை நாட்டினர் இப்போதுதான் விலங்கின அறிவாற்றலை உணரத் துவங்கி இருக்கின்றனர். நமக்கு முன்பே தெரியும்.
மற்றொரு குரங்கு அதன் காதல் கணவன் இறந்ததால், குட்டிகளை சுற்றத்தாரிடம் ஒப்படைத்துவிட்டு மலை மீது இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாம் (குறுந்தொகை 69)
கருங்கண் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி,
கல்லா வன்புறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்து பாய்ந்து உயிர் செகுக்கும்
–(கடுந்தோட் கரவீரனார், குறு. 69)
ஒரு புலவர் குரங்குச் சேட்டையைக் கண்டு அப்படியே வருணிக்கிறார்:
மந்திக் காதலன் முறிமேய்க் கடுவன்
தண்கமழ் நறைக்கொடி கொண்டு வியலறைப்
பொங்கல் இளமழை புடைக்கும் (ஐங்குறு 276)
மேகங்கள் வேகமாக ஓடுவதைப் பார்த்துவிட்டு ஒரு நறைக்கொடியின் தண்டை எடுத்து அதை அடிக்கப் போகுமாம்.
இன்னொரு பாடலில் எருமை மாட்டின் மீது சவாரி செய்யும் பையனைப் பார்த்த புலவர் அவனை பாறை மேல் உட்கார்ந்து இருக்கும் குரங்குக்கு ஒப்பிட்டு மகிழ்கிறார். (அக.206)
பால் கறந்து விநியோகித்த திருட்டுக் குரங்கு
குரங்குகள் பழங்களைத் திருடுவதையும் தட்டிப் பறிப்பதையும் நாம் கோவில்களில் கண்டிருக்கிறோம். ஆனால் திருட்டுத் தனமாக காட்டுப் பசுவின் பாலைக் கறந்து தன் குட்டிகளுக்கு விநியோகித்த அபூர்வக் காட்சியை ஒரு புலவர் பாடி வைத்திருக்கிறார். “இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்” என்பது தமிழ்ப் பழமொழி. அபடிப்பட்ட ஒரு காட்டுப் பசு ஒரு வேங்கை மரத்தின் கீழ் நின்று உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என்று உறங்கும் வேளையில் இந்தக் குரங்கு தன் கைவரிசையைக் காட்டிவிட்டது. அது மட்டுமல்ல. சுற்றத்தாரிரிடம், உஷ், பேசாமல் சும்மா இருங்கள்! என்று சைகை செய்துவிட்டுச் சென்றதாம்! எவ்வளவு குசும்பு!!
இதோ அதை வருணிக்கும் பொதும்பில் கிழாரின் நற்றிணைப் பாடல்:
தடங்கோட்டு ஆமான் மடங்கல் மா நிரைக்
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென,
துஞ்சுபதம் பெற்ற துய்த் தலை மந்தி
கல்லென் சுற்றம் கை குவியாக் குறுகி,
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி, தீம் பால்
கல்லா வன் பரழ்க் கை நிறை பிழியும்
மா மலை நாட! ( நற்றிணைப் பாடல் 57, பொதும்பில் கிழார்)
தற்காலத்தில் திரிகூடராசப்பக் கவிராயர் பாடிய குற்றாலக் குறவஞ்சியில் வரும் அழகான காட்சி:
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்
தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனல் இளம்பிறை முடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே
இது போன்ற பாடல் குறுந்தொகை 278 லும் உண்டு. தந்தைக் குரங்கு சிந்தும் கனிகளைக் குட்டிக் குரங்குகள் உண்டு உண்டு மகிழ்ந்தனவாம். இன்னும் இப்படிப் பல உள. அத்தனையும் ஒரே நேரத்தில் சுவைத்தால் திகட்டி விடும் அல்லவா !
Contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.