Madurai Meenakshi Temple:Thousand Pillared Temple
ஆய்வுக் கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்.1152; தேதி ஜூலை 6, 2014.
((தமிழ் அன்பர்களுக்கு அன்பான வேண்டுகோள். மற்றவர்கள் வருடக் கணக்கில் நூற்றுக் கணக்கான புத்தகங்களைப் படித்து ஆராய்சி செய்து எழுதும் ஆய்வுக் கட்டுரைகளைத் திருடாமல் பயன் படுத்துங்கள். கட்டுரையை எழுதியது யார், எந்த பிளாக் – கில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிய்யுங்கள். தமிழ் வாழும்! தமிழரும் உயர்வர்!))
உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் ஆயிரம் கால் மண்டபம் உள்ளது !
மாயா நாகரீக நகரமான மெக்சிகோ நாட்டு சிசன் இட்சாவில் ஆயிரம்கால் மண்டபம் உள்ளது! !!
விஜய நகர சாம்ராஜ்யம் முழுதும் ஆயிரம் கால் மண்டபங்கள் பட்டொளி வீசிப் பிரகாசிக்கின்றன !!!
மேலே படியுங்கள்!!
தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள உலக அதிசயங்கள் பற்றி நிறைய பேருக்குத் தெரிவதே இல்லை. லண்டனில் வாழும் எங்களுக்கு ‘இந்த அரசனின் மேஜை’ ,’அந்த அரசனின் செருப்பு’, ‘மஹாராணியின் உடை’, ‘திருமண கவுன்’ — என்றெல்லாம் காட்டிக் காசு பறிக்கிறார்கள். அப்படியே ஏதேனும் பார்க்கத்தக்க அதிசயம் இருந்தாலும் அதெல்லாம், வெள்ளைக்காரன்கள் கொள்ளை அடித்துக் கொண்டுவந்த கோஹினூர் வைரம், திப்புசுல்தானின் புலி, குப்தர் காலத் தங்கக் கசுகள் என்ற வகையில் வந்துவிடும். ஆனால் அத்தனையையும் அழகாகப் பாதுகாத்துக் கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்துக் காட்டும் அழகே அழகு!!!! இந்த மஹா திருடர்களிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உண்டு!!! உண்மையில் நிறையவே உண்டு!!!!!!
அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள மியூசியங் களுக்கும், பிரபுக்களுக்குச் சொந்தமான தனியார் வீடுகளுக்கும் போய்ப் பார்த்தால் தமிழ்நாட்டுத் திராவிடக் கொள்ளைக்கரர் ஆட்சியில் கடத்திவரப்பட்ட அற்புதமான சிலைகளைக் காணலாம். நியூயார்க் மியூசியத்தில் நான் பார்த்த ஒரு சிலை இந்திய மியூசியத்தில் அப்படியே இருக்கிறது. எது ‘ஒரிஜினல்’, எது ‘போலி’ என்பது அந்த சிலைக்குள் ஒளிந்திருக்கும் இறைவனுக்கே வெளிச்சம்!!
“கோயில் பூசை செய்தான் சிலையைக் கொண்டு விற்றல் போலும்………. ஆயிரங்களான நீதி அவை உணர்ந்த தருமன்…………………. சீச் சீ !சிறியர் செய்த செய்கை செய்தான்”………… என்ற பாரதியாரின் பாஞ்சாலி சபத பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. “திராவிடங்களின் ஆட்சி”யில் கோவில் நகைகளில் இருந்து உண்மையான மாணிக்க, மரகத, வைரக் கற்களை எடுத்துக் கொண்டு செயற்கைக் கற்களை வைத்ததாகவும் “பெரியவர்கள்” சொல்லிக் கேள்வி. சிவன் சொத்துக் குல நாசம் என்பர். அது பலிக்கட்டும்.
எதற்கு இவ்வளவு முத்தாய்ப்பு என்கிறீர்களா? நல்ல வேளை, ஆயிரங்கால் மண்டபங்கள் முதலியன கருங்கற்காலால் ஆனதால் இந்தக் கொள்ளைக்கார மஹாபாவிகளால் ஒன்றும்செய்ய முடியவில்லை. படையெடுத்துவந்த முஸ்லீம் வெறியர்கள் சேதப்படுத்தியது போக மிச்சம் மீதி இன்னும் இருக்கிறது.
மதுரை, ஸ்ரீரங்கம், திருநெல்வேலி, சிதம்பரம், திருவண்ணாமலை, ராமேஸ்வரம் முதலிய பல ஊர்களிலும் ஆந்திரத்தில் வாரங்கல் ஹனுமகொண்டா, கர்நாடகத்தில் மூடுபித்ரி போன்ற இடங்களிலும் ஆயிரங்கால் மண்டபங்கள் உள்ளன. பல இடங்களில் ஆயிரங்கால் மண்டபங்கள் என்று சொன்ன போதிலும் சில நூறு தூண்களையே காணமுடியும்.
மதுரையிலும் ஸ்ரீரங்கத்திலும் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரம் தூண்களைக் காண முடியும். இவை இரண்டும் உலக மஹா அதிசயங்கள். இன்று இப்படி ஒரு கட்டிடத்தை எழுப்ப பல கோடி– கோடி ரூபாய் தேவைப்படும். பல்லாயிரம் ஊழியர்கள் வேலை செய்யவேண்டி வரும். பெரிய பெரிய எஞ்சினீயர்கள் ஆயிரம் வரை படங்களைத் தயாரித்து ஆராய்ச்சிக் கூட்டங்கள் போட வேண்டியிருக்கும். 600 முதல் 800 ஆண்டுகளுக்கு முன் காகதீய வம்சமும் நாயக்க வம்சமும் இவைகளைக் கட்டிய காலத்தில் என்ன வசதி இருந்தது? – இன்றுள்ள ஒரு வசதியும் கிடையாது. ஆயினும் எப்படி அற்புதமாக அமைத்துவிட்டனர். எண்ணி எண்ணி இறும்பூது எய்வோம்
Warangal/Hanamkonda 1000 pillar Temple.
ஆயிரங்கால் மண்டபங்கள் ஒவ்வொன்றும் சிற்பக்கலை மியூசியங்கள். வெள்ளைகாரன் நட்டில் இவைகள் இருந்தால் ஒவ்வொரு தூணுக்கும் கண்ணாடிப் பெட்டி வைத்து, ஆயிரம் ஆராய்ச்சிப் புத்தகம் வெளியிட்டு, ஒவ்வொன்றையும் படம் பிடித்து, கீ செயின் (சாவிக்கொத்து), பட அட்டைகள் (வியூ கார்ட்ஸ்), காந்த அட்டைகள் (மாக்னெட்) என்று விற்றுக் கோடி கோடியாக சம்பாதித்திருப்பான். நாமும் பயன்படுத்தாமலா இருந்தோம்? புளியோதரை சாப்பிட்டுவிட்டு அதில் கையைத் துடைத்தோம். நம்முடைய பெயர்கள் காலாகாலத்துக்கும் நீடிக்க அதில் நமது பெயர்களை கூரான கற்கள் ,உலோகக் கம்பிகள், சாவிக்கொத்துகள் வைத்து எழுதினோம். கடவுள் நம்மை மன்னிப்பாராக.
மதுரை ஆயிரம் கால் மண்டபத்தில் சிறு வயதில் ஓடிப் பிடித்து விளையாடியது என் நினைவுக்கு வருகிறது. இப்போது அங்கே ஒரு மியூசியம் வைத்துப் “பாதுகாக்கிறார்கள்”. அற்புதமான சிலைகள் இருக்கின்றன. இதை அமைத்த அரியநாத முதலியார் (1569) பெயர், ‘கின்னஸ் சாதனைப் புத்தக’த்தில் இடம்பெறவேண்டும். ஏன் தெரியுமா? உலகிலேயே நீண்ட காலம் அமைச்சர் பதவி வகித்தவர் அவர்தான். 71 ஆண்டுகளுக்கு நான்கு நாயக்க மன்னர்களுக்கு தளபதியாக-மந்திரியாக (கி.பி.1529—1600) இருந்தவர்! மண்டப முகப்பில் அவர் குதிரையில் சவாரி செய்கிறார்.
இந்த மண்டபத்தில் சுமார் ஆறு அடி உயரம் உடைய 26 சிற்பங்கள் இருக்கின்றன. குறவன் – குறத்தி, ரதி மன்மதன், அர்ஜுனன், பாண்டவ சகோதரர்கள், அரிச்சந்திரன் சந்திரமதி – இன்னும் எத்தனையோ!! குறவன் குறத்தி ஒரு அற்புதமான கலைப் படைப்பு. குறத்திக்கு மூன்று குழந்தைகள்: ஒன்று முதுகில் , மற்றொன்று கூடைக்குள், இன்னொன்று பால் குடிக்க நெஞ்சில்! குறவன் – அவனுக்கே உரித்தான அத்தனை நகைகளையும் அணிந்து சர்வ ஆபரண பூஷணனாக விளங்குகிறான். மண்டபத்துக்குள் உள்ள 22 தூண்கள் வெவ்வேறு இன்னிசை ஒலி எழுப்புகின்றன.
Moodbidri, Karnataka.
(( ஆடி வீதியில் உள்ள இசைத் தூண்கள், மீனாட்சியின் உலக அதிசய நகைகள், உலகம் முழுதும் மியூசியங்களில் உள்ள மதுரை அதிசயங்கள் – இன்ன பிற விஷயங்களை நாலு ஐந்து ஆங்கிலக் கட்டுரைகளில் ஏற்கனவே எழுதிவிட்டேன். கூறியது கூறல் ஒரு இலக்கியக் குற்றம் என்பதால் இத்துடன் நிறுத்துவேன்)).
மதுரையில் 985 தூண்களே இருக்கின்றன. மீதி 15 தூண்கள் இருக்குமிடத்தில் சபாபதி கோவில் இருக்கிறது. ஆக மொத்தம் ஆயிரம்! இதன் நீளxஅகலம்= 76 மீட்டர் x 72 மீட்டர். மண்டப முகப்பில் விதானத்தில் தமிழ் ஆண்டுகள் அறுபதையும் குறிக்கும் சக்கரம் உள்ளது.
ஸ்ரீரங்கம் ஆயிரம் கால் மண்டபம், மதுரையை விட அளவில் பெரியது. ஆயிரங்கால் மண்டப நீள x அகலம் = 152 x 48 மீட்டர். அங்கே 953 தூண்கள் உள்ளன. மதுரையைப் போலவே ஒவ்வொன்றிலும் அழகிய சிற்பங்கள். இந்த ஆயிரம் கால் மண்டபம் பற்றியே தனி ஆராய்ச்சிப் புத்தகம் எழுதலாம். பொருள் வசதி இருந்தால் நானே அதைச் செய்வேன்! இதுவும் நாயக்கர் காலத்தில் எழுந்ததே. முஸ்லீம் படையெடுப்பில் வீழ்ந்த எல்லாவற்றையும் மீண்டும் புனர் நிர்மாணம் செய்து உலகப் புகழ் பெறும்படி செய்தவர்கள் விஜய நகர சாம்ராஜ்யமும் அவர்கள் வழிவந்த நாயக்க வம்சமும் ஆகும்.. சுந்தரத் தெலுங்கினில் பாட்டு அமைத்து அவர் புகழ் பாடுவோம்! தலை வனங்குவோம்!
வாரங்கல் ஆயிரம் கால் மண்டப கோவில்
தெலுங்கானாவில் வாரங்கல் அருகே ஹனுமகொண்டாவில் ஒரு கோவில் இருக்கிறது .ஆனால் இந்தச் சிவன் கோவிலில் சுமார் 300 தூண்களே இருப்பதாக ஆய்வாளர் கூறுவர். ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது போல தூண்கள் காட்சி தருகின்றன. இது மற்ற எல்லாவற்றையும் விட மிகப் பழையது. தமிழ்நாட்டைத்தவிர மற்ற இடங்களில் உள்ளவை ஆயிரம் தூண்கள் உடையவை அல்ல. நிறைய தூண்கள் இருந்தால் ஆயிரம் என்று சொல்லி விடுவர். தசரதனுக்கு நிறைய பெண்டாட்டிகள் என்பதால் 60,000 பேர் என்று நாம் சொல்லுவது போல! இது ருத்ர தேவன் (கி.பி1163) காலத்தில் உருவாக்கப்பட்டது.
கர்நாடகத்தில் மூடபித்ரி என்னும் இடத்தில் ஜைன கோவில் ஒன்றிலும் “ஆயிரம் கால்” மண்டபம் உள்ளது.
ராமாயணத்தில் ஆயிரம் கால் மண்டபம்:–
சூர்ப்பநகை சூழ்ச்சிப் படலத்தில் ராவணனுக்கு தெய்வய் சிற்பியான மயன் நீண்ட தூன்கள் ஆயிரம் கொண்ட அழகிய மண்டபத்தை உருவாக்கினான். பிரம்மா கூட அதைப் பார்த்து வெட்கம் அடையும் படி அது அமைக்கப்பட்டது.
வந்தான் நெடு வான் உறை தச்சன் மனத்து உணர்ந்தான்
சிந்தாவினை அன்றியும் கைவினைஅயாலும் செய்தான்
அம்தாம நெடுந்தறி ஆயிரத்தால் அமைத்த
சந்து ஆர்மணி மண்டபம் தாமரையோனும் நாண.
யார் சொன்ன ‘ஐடியா’?
காகதீய, நாயக்கர்களுக்கு யார் இந்த எண்ணத்தைத் தோற்றுவித்தனர்? எப்படி அவரகளுக்கு 1000 தூண்களுடன் கட்டிடம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது? வேதத்திலேயே 1000 கால் மண்டபம் பற்றிய கருத்து எழுந்துள்ளது. 10, 100, 1000, லட்சம், கோடி என்ற தசாம்ச ‘டெசிமல்’ முறையையும் 1.2,3…. 10 என்ற எண்களையும் உலக மக்களுக்குக் கற்பித்தது இந்துக்களே. இதை நாம் உலகிற்குக் கற்பித்திராவிடில் கம்யூட்டர்களோ ராக்கெட்டுகளோ உருவாகி இருக்காது! இதற்கு வேதம் முதல் லீலாவதி அல்ஜீப்ரா பற்றி ஸ்லோகம் எழுதிய காலம் வரை ஆயிரக் கணக்கான குறிப்புகள் உண்டு.
ரிக்வேதத்தில் மித்ரன் – வருணன் மேலான துதியில் (5-62-6) ஆயிரம் கால் உடைய பரப்பு (பகுதி /பிரதேசம்) பற்றிய பாடல் வருகிறது. இது போன்ற துதிகளே நம் சிற்பிகளை ஊக்குவித்தது என்றால் மிகையாகாது.
மாயா நாகரீகத்துக்குக் கற்பித்தது யார்?
மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள மெக்சிகோ நாட்டில் சிசன் இட்சா என்ற நகரம் உள்ளது. எட்டாம் நூற்றாண்டு முதல் 400 ஆண்டுகளுக்கு கொடிகட்டிப் பறந்த நகரம் இது. வீரர்கள் கோவில் என்ற கட்டிடமும் அதற்கு முன் ஆயிரம் கால் மண்டம் இருந்த இடமும் உள்ளது. இப்பொழுது நூற்றுக் கணக்கான தூண்கள் மட்டும் வரிசை வரிசையாக நிற்கின்றன. ஒரு காலத்தில் இதற்கு ‘மேல்கூரை’ இருந்தது. உலகின் மிகப் பெரிய மார்க்கெட்டுகளில் ஒன்று இங்கே இருந்தது. பல வெளி நாட்டுக் கலாசரங்கள் கலந்து ஒன்றிப்போன நகரம் இது.
Chichen Itza,Mexico
மாயா கட்டிடக் கலை—பல்லவர் கால கட்டிடக் கலை- தென்கிழக்காசிய கட்டிடக் கலை மூன்றின் படங்களையும் அருகருகே வைத்துப் பார்த்தால் அற்புதமான ஒற்றுமையைக் காணலாம். இந்தியாவில் இருந்து போன சிற்பிகளின் கைவண்ணம்தான் இதுவும் என்பதில் ஐயமில்லை.
((மாயன் நாகரீகம் பற்றிய எனது மூன்று ஆங்கில கட்டுரைகளில் அறுபதுக்கும் மேலான ஒற்றுமைகளின் பட்டியலைக் கொடுத்துள்ளேன். மாயா நாகரீக மக்கள், அர்ஜுனன் காண்டவ வனத்தை எரித்தவுடன் தென் அமெரிக்காவுக்குச் சென்ற நாகர்கள் என்றும் எழுதியுள்ளேன்)).
கட்டுரையை முடிப்பதற்கு முன் ஒரு வரி:– இது இன்னும் ஆராய்சி செய்யப்படாத ஒரு துறை. இரு நாட்டு கட்டிடங்களையும் ஒப்பிட்டு ஆராய்ந்தால் இன்னும் பல உண்மைகள் புலப்படும்.
Please read my previous posts about Indian- Mayan Civilisation links:–
1.Are Mayas Indian Nagas? April 28, 2012.
2.Amazing Similarities between Mayas and Indian Nagas, Posted April 28, 2012
3.Part- 2 of Amazing Similarities between Mayas and Indian Nagas, Posted May 1, 2012.
4.Did Indians build Egyptian Pyramids?
5.The Wonder That is Madurai Meenakshi Temple (Posted on 14 Oct. 2011)
6. மாயா இன மக்கள், இந்திய நாகர்கள் !!! (posted on May 10, 2012)
7. நாகர்-மாயா இன அற்புத ஒற்றுமைகள் (posted on May 10, 2012)
Contact swami_48@yahoo.com
–சுபம்–
You must be logged in to post a comment.