கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:– 1181; தேதி:– 19 July 2014.
கம்பராமாயணப் பாடலைப் படிதவுடன் லண்டன் காட்சி ஒன்று நினைவுக்கு வந்தது. இங்கெல்லாம் ஒவ்வொரு சுரங்க ரயில் பாதை ஷ்டேஷனிலும் வீடுகளிலும் புறாக்கள் உட்காரக் கூடாது என்பதற்காக மேல் கூரையில் கூரான கம்பிகளைப் பொருத்தி வைத்திருக்கிறார்கள். காலையில் அலுவலகத்துக்குச் செல்லும் ஆட்களின் ‘கோட்டு- சூட்’டுகள் மீது புறாக்கள் எச்சம் போட்டுவிடக்கூடாது என்பதற்காக! லண்டனின் மத்தியப் பகுதியில் உள்ள டிரபால்கர் சதுக்கத்தில் புறாக்களுக்கு பொறி வாங்கிப்போடுவதை யும் தடுத்துவிட்டனர்.
லண்டன் முதலிய மேலைநாடுகளில் ஆடு, மாடு, நாய், பூனை, கோழி, சேவல் எல்லாவற்றையும் வளர்ப்பார்கள்; “மானே, தேனே, முத்தே, மணியே, கரும்பே, கற்கண்டே” என்று கொஞ்சுவார்கள். விருந்தினர் வரும் அன்று எல்லாம் “டைனிங் டேபிளில்” சாப்பாடாக மாறிவிடும். குழந்தைகள் கொஞ்சம் வருத்தப்பட்டால், அடுத்த விருந்து நடக்கும் வரை மரணத்தை ஒத்திப் போடுவார்கள். வெளிநாடு போகும்போது நாய் பூனைகளைக் கொலைக்களத்துக்கு அனுப்பிவிடுவார்கள். இதற்கான அறநிறுவனங்கள் அவற்றை வேறு யாரும் ஏற்காவிடில், ஒருவாரத்தில் எலெக்ட்ரிக் ஷாக் கொடுத்து ‘’கருணையோடு’’ கொன்று விடுவார்கள்.
இதைத் தவிர ஒவ்வொரு நாளும் கொல்லப்படும் ஆடு மாடுகளின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில்!! லண்டனில் மட்டும்!!
கம்பன் பாடலில் அயோத்தி நகர மாளிகையில் புறவுக்கு மாடம் வைத்திருப்பதை ஒரு அழகு, ஒரு சிறப்பு என்று வருணித்ததைப் படித்தவுடன் இத்தனையும் நினைவுக்கு வந்தது!!!
புள்ளி அம் புறவு இறை பொருந்தும் மாளிகை
தள்ள அருந் தமனியத் தகடு வேய்ந்தன
எள்ள அருங் கதிரவன் இள வெயிற் குழாம்
வெள்ளி வெண் கிரிமிசை விரிந்த போலுமே
-பால காண்டம், பாடல் 121, கம்ப ராமாயணம்.
பொருள்: மாளிகைகளில் தங்கத் தகடுகள் வேயப்பட்டன. அவைகளை எளிதில் அகற்ற முடியாது. புள்ளிகளை உடைய மாடப் புறாக்கள் தங்குவதற்கு உரிய இடங்கள் இருந்தன. வெள்ளியிலான மலையில் காலை இளம் கதிரவனின் கிரணங்கள் பரவினால் எப்படி இருக்குமோ அப்படி அந்த மாளிகைகள் பிரகாசித்தன.
இதில் மாடப்புறாக்கள் தங்குவதற்கு இடம் இருந்தது என்பதைப் பெருமையாகக் கூறுகிறான் கம்பன். அதாவது மாடப் புறாக்கள் தங்குவதும் ஒரு அழகு. மாடங்களில் தங்குவதால்தான் அவைகளுக்கு மாடப்புறாக்கள் என்று பெயர். பறவைகளின் மீதுள்ள அன்புக்கு இதுவும் ஒரு சான்று.
இந்தியப் புலவர்கள் இயற்கையின் மீது பற்று உடையவர்கள். காளிதாசனின் ரகுவம்சத்தில் இந்துமதி சுயம்வரக் காட்சியில் ஒரு பாடல் வருகிறது. சூரசேன மஹாராஜாவை இளவரசி இந்துமதிக்கு தோழி சுநந்தை அறிமுகப்படுத்துகிறாள் —- ஒவ்வொரு அரசனையும் அறிமுகப்படுத்தும் போதும் ஒவ்வொரு இயற்கைக் காட்சியும் வருகிறது. சூரசேன மன்னனை நீ மணந்துகொண்டால் கோவர்த்தன மலையில் உள்ள பாறைகளில் அமர்ந்துகொண்டு மயில்கள் ஆடுவதைப் பார்த்து ரசிக்கலாம் என்று கூறுகிறான் காளிதாசன்.
மேலை நாட்டு, கீழை நாட்டு அணுகுமுறைக்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.
Trafalgar Square in London. Now feeding pigeons is not allowed.
காக்கை குருவி எங்கள் ஜாதி நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்-
நோக்கும் திசை எல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம் — (பாரதி)
புறவுக்காக உயிர் கொடுக்க முன்வந்த சிபிச்சக்ரவர்த்தியின் புகழைப் பாடும் பாடல்கள் புறநானூற்றில் உண்டு. சோழநாட்டுக் கண்ணகியும் இதைக் குறிப்பிட்டு பாண்டிய மன்னனை வசைபாடுகிறாள்.
வாழ்க பறவைகள்!! வளர்க அஹிம்சை!!
-சுபம்-
You must be logged in to post a comment.