Research paper written by London Swaminathan
Post No.1213; Dated :- 4 August 2014.
சிலப்பதிகாரத்தை யாத்த இளங்கோவும் காவியத்தின் கதாநாயகனான கோவலனும் சம்ஸ்கிருத அறிஞர்கள் !! இது நான் கூறும் கருத்து மட்டும் அல்ல. சிலப்பதிகாரத்தை அழகிய ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வீ.ஆர் ராமசந்திர தீட்சிதரும், கோவலன் சம்ஸ்கிருதப் புலமை பெற்றவன் என்று எழுதி இருக்கிறார்.
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் ஒரு இந்து மதக் கலைகளஞ்சியம் ஆகும்.1939 ஆண்டில் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வீ.ஆர். ராமசந்திர தீட்சிதர், பக்கம் தோறும் கொடுத்திருக்கும் அடிக் குறிப்புகளையும் அடியார்க்கு நல்லாரும் அரும்பதவுரையாசிரியரும் எழுதிய நீண்ட உரைகளையும் படிப்போருக்கு இது சொல்லாமலேயே விளங்கும்.
சிலப்பதிகாரம் — புகார், மதுரை, வஞ்சி — என்ற மூன்று மாபெரும் தமிழ் நகரங்களின் பெயரில் 3 காண்டங்களாகப் பிரிக்கப்பட்டது. அதில் 30 காதைகள் உள்ளன. ஆய்ச்சியர் குரவை என்ற பகுதியில் கண்ணன், இராமன் புகழையும் குன்றக் குரவை என்ற பகுதியில் முருகன் புகழையும் வேட்டுவ வரி என்ற பகுதியில் துர்க்கையின் புகழையும் விதந்து ஓதுகிறார் இளங்கோ.
சங்க இலக்கிய நூலான நற்றிணையின் கடவுள் வாழ்த்தில் எப்படி விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்லோகம் (பூ பாதௌ….) உள்ளதோ, அதே போல சிலப்பதிகாரத்தில் பல சம்ஸ்கிருத ஸ்லோகங்களின் மொழிபெயர்ப் புகளைக் காணலாம்.
கோவலனும் இளங்கோவும் சம்ஸ்கிருத அறிஞர்கள் என்பதற்கான சில எடுத்துக் காட்டுகளை காண்போம்:–
சான்று ஒன்று:–
குழந்தையைக் கொல்ல வந்த பாம்பைக் கொன்ற ஒரு கீரிப்பிள்ளை பெருமித உணர்வோடு வாசலில் காத்திருந்தது. தண்ணீர்க் குடத்துடன் வீட்டுக்குத் திரும்பிய பார்ப்பனி, கீரியின் வாய் முழுதும் ரத்தம் படிந்திருப்பதைப் பார்த்து, பதறிப் போய், கீரிதான் குழந்தையைக் கொன்றுவிட்டது என்று தவறாக எண்ணி கீரியின் தலையில் குடத்தைப் போட்டுக் கொன்ற பஞ்ச தந்திரக்கதை எல்லோருக்கும் தெரியும்.
இதில் ஒரு சுவையான விஷயத்தை நுழைக்கிறார் நுன்மாண் நுழைபுலம் மிக்க இளங்கோ! அந்த வீட்டுப் பார்ப்பனக் கணவன் கோபித்துக் கொண்டு அவளை விட்டுப் பிரிந்தான். எதற்காக? வடதிசை சென்று புண்ணியம் தேட! அப்படிப் போகையில், வட மொழி வாசகம் எழுதிய ஒரு ஓலையை அந்தப் பார்ப்பனப் பெண்ணிடம் கொடுத்து கற்றவரிடம் (அடைக்கலக் காதை) காட்டி உய்வு பெறு என்று சொல்லிப் போய்விடுகிறான். அந்தப் பிராமணப். பெண் கடைத் தெருவில் நின்று, குய்யோ முறையோ என்று ஓலமிட்டு அழுத போது, கோவலன் வந்து அந்த சம்ஸ்கிருத பாடலைப் படித்து அவளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறான். அடியார்கு நல்லார் எழுதிய உரையில் அது என்ன சம்ஸ்கிருத ஸ்லோகம் என்பதையும் பஞ்ச தந்திரக் கதையிலிருந்து எடுத்துச் சொல்கிறார்.
இங்கே காலவழுவமைதி உள்ளதைச் சுட்டிக்காட்டிய தீட்சிதர், கோவலனை சம்ஸ்கிருதப் புலமை பெற்றவன் என்கிறார். காலவழுவமைதி= கோவலன் காலத்துக்கு முன்னர் நடந்த சம்பவம் இது!!
சான்று இரண்டு:–
கோவலனுக்கு மதுரைக்குப் போகும் காட்டு வழியை ஒரு மாங்காட்டுப் பிராமணன் (காடுகாண் காதை) சொல்வதாகக் கதை அமைத்துள்ளார் இளங்கோ. கோவலனும் கண்ணகியும் புகார் நகரில் இருந்து காட்டு வழியாக வருகையில் மாதவியின் நண்பி வசந்தமாலா போல வேஷம் போட்ட வனமோகினி கோவலனை இடைமறிக்க, மாங்காட்டு மறையவன் சொன்ன மோகினி விஷயங்கள் கோவலனுக்கு நினைவுக்கு வருகிறது. உடனே துர்க்கா தேவி மந்திரத்தை சொன்னவுடன் அந்த வன தேவதை ஓடிவிடுகிறது. இங்கே இளங்கோ பயன் படுத்தும் சொல் பாய்கலைப் பாவை மந்திரம். அதாவது பாயும் மான் என்னும் விலங்கை வாஹனமாகக் கொண்ட துர்க்காதேவியின் மந்திரம் (காடுகாண் காதை)
இதே பகுதியில் மாங்காட்டுப் பிராமணன் ஐந்தெழுத்து ( நமசிவாய) எட்டெழுத்து (நமோ நாராயண) மந்திரங்களின் பெருமையையும் பகர்கிறான். எல்லா இடங்களிலும் “மந்திரம்” என்னும் வடசொல்லைப் பயன்படுத்துகிறார் இளங்கோ!!
Mahishasuramardani in Mahabalipuram
சான்று மூன்று:–
1008 பெயர்களைக் கொண்ட சஹஸ்ரநாமம் எல்லா இந்துக் கடவுளர்க்கும் உண்டு. இளங்கோவுக்கு இந்த எண் மிகவும் பிடிக்கும். இந்திர விழா பற்றிய காதையில் 1008 மன்னர்கள் தங்கக் குடங்களில் புனித நீர் ஏந்தி இந்திர அபிஷேகம் செய்த்தைக் கூறுவார். சமண மதத்தினர் 1008 நாமம் சொல்வதாகக் கவுந்தி அடிகள் என்ற சமணப் பெண் துறவி வாயிலாகக் கூறுகிறார். ஊர்காண் காதையில் 1008 பொற்காசுகள் பற்றிப் பாடுகிறார் இளங்கோ. இதுவும் சம்ஸ்கிருத செல்வாக்கைக் காட்டும்.
சமணத் துறவி கவுந்தி அடிகள் வாய்மொழியாக சமண நாமாவளியில் பல சம்ஸ்கிருத நாமங்களைச் சொல்கிறார். இதில் பல சைவ (சிவன்) பெயர்களும் (நாடுகாண் காதை) உண்டு:
அறிவன் அறவோன் அறிவுவரம்பு இகழ்ந்தோன்
செறிவன், சினேந்திரன், சித்தன், பகவன்,
தரும முதல்வன், தலைவன், தருமன்
பொருளன், புனிதன், புராணன், புலவன்,
சினவரன், தேவன், சிவகதி நாயகன்
பரமன், குணவதன், பரத்தில் ஒளியோன்
தத்துவன், சாதுவன், சாரணன் காரணன்
……………………………………………
சங்கரன், ஈசன், சுயம்பு சதுர்முகன்
சான்று நான்கு:–
வேட்டுவ வரியில் வேடர்கள் ——– கொற்றவை என்றும் பாய் கலைப் பாவை என்றும் துர்கா தேவி என்றும் அழைக்கப்படும் தெய்வத்தை எப்படி எல்லாம் வணங்கினர் என்று நிறையவே சொல்கிறார் இளங்கோ:
அமரி, குமரி,கவுரி, சமரி
சூலி, நீலி, மால் அவற்கு இளங்கிளை (நாராயணி)
ஐயை, செய்யவள் வெய்யவாள் தடக்கைப்
பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை
ஆய்கலைப் பாவை அருங்கலைப் பாவை
இதில் கவுரி, நாராயணி என்ற சொற்கள் பல ஸ்தோத்திரங்களில் உள்ளன.
சர்வமங்கல மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரயம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே
என்ற ஸ்லோகம் எல்லோருக்கும் தெரிந்தது.
‘அயிகிரி நந்தினி’– என்ற மஹிஷாசுரமர்தனி ஸ்லோகத்தில் வரும் எல்லா விஷயங்களையும் வேட்டுவ வரியில் சொல்கிறார் இளங்கோ. அத்தனை யையும் காட்ட இடமிருக்காது. இதோ ஒரு சில செய்யுள்கள்:
ஆனைத் தோல் போர்த்துப் புலியின் உரி உடுத்துக்
கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால்—-
வானோர் வணங்க, மறைமேல், மறையாகி
ஞானக் கொழுந்தாய், நடுக்கு இன்றியே நிற்பாய்!
வரிய வளைக்கை வாள் ஏந்தி மாமயிடற் செற்று,
கரியதிரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால்—-
அரி, அரன், பூமேலோன், அகமலர் மேல் மன்னும்
விரிகதிர் அம்சோதி விளக்கு ஆகியே நிற்பாய்!
சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்தி
செங்கண் அரிமான் சினவிடைமேல் நின்றாயால்—-
கங்கை முடிக்கு அணிந்த கண்ணுதலோன் பாகத்து
மங்கை உருவாய், மறை ஏத்தவே நிற்பாய்!
–வேட்டுவ வரி
இதே போல பகவத் கீதையின் தாக்கத்தையும் பல இடங்களில் காணலாம். சம்ஸ்கிருத சொற்களின் ஆதிக்கமும் சங்க இலக்கியத்தைவிட பன்மடங்கு கூடுதலாகக் காணக்கிடக்கிறது. பின்னொரு சமயம் அவை பற்றிக் காண்போம்.
–சுபம்–
You must be logged in to post a comment.