பிறவா யாக்கைப் பெரியோன் கோயில்!

meenakshi close
Madurai Meeakshi Temple is considered as one of the 100 Wonders of the World

சிலப்பதிகாரக் கோவில்கள்

ஆராய்ச்சிக் கட்டுரை: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்: 1215; தேதி 5 ஆகஸ்ட் 2014

சிலப்பதிகாரம் என்னும் தமிழ் காப்பியம், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. 1800 ஆண்டுகளுக்கு முன் ‘’தமிழ் கூறு நல்லுலகம்’’ எப்படி இருந்தது என்பதைப் படம் பிடித்துக் காட்டும் அற்புத நூல் இது. படிக்கப் படிக்கத் தெவிட்டாது. இதில் இல்லாத விஷயங்கள் இல்லை. இது ஒரு இந்துமத கலைக் களஞ்சியம். இதற்கு அடியார்க்கு நல்லாரும் அரும்பத உரை ஆசிரியரும் எழுதிய உரைகளைப் பயிலுவோருக்கு இசை, நடனம், சமயம், கலை, பண்பாடு, ஒழுக்க சீலங்கள், கோவில்கள், இந்திர விழா, நாட்டுப் புறப் பாடல்கள், யாழ், தமிழ் நாட்டுக் கதைகள், நம்பிக்கைகள், வரலாறு, புவியியல், இசைக் கருவிகள் முதலியன பற்றி ஏராளமான விஷயங்கள் கிடைக்கும். தமிழ்நாட்டில் இன்று 38,000 கோவில்கள் உள்ளன. தமிழ் மொழி தெய்வத் தமிழ் என்று போற்றப்படுகிறது. ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கோவில்களும் வழிபாட்டு முறைகளும் மாறிவிட்டன!

சேரன் செங்குட்டுவன் மஹா சிவ பக்தன். தலையில் சிவனின் பாதங்களைச் (காலணிகள்) சுமந்து கொண்டிருக்கையில் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி (பெருமாள்) கோவில் பட்டர்கள் ஓடிவந்து பிரசாதம் கொடுத்தனர். உடனே அதைத் தோளில் சுமந்தார். இதைப் பாடிய இளங்கோ, தலையில் சிவனின் பாதங்கள் இருந்ததால் தோளில் பெருமாள் பிரசாதத்தை வைத்தார் என்று சொல்வதில் இருந்து ஹரியையும் சிவனையும் ஒன்று என்று உணர்ந்த பெருந்தகை செங்குட்டுவன் என்பது விளங்கும்.

சிலப்பதிகாரத்தில், தமிழ் நாட்டுக் கோவில்கள் பற்றி ஐந்தாறு இடங்களில் அற்புதமான தகவல்கள் வருகின்றன. அவற்றில் எதுவும் இப்போது இல்லை. ஏனெனில் அந்தக் காலத்தில் செங்கல், சுண்ணாம்பு, மரம் ஆகியவற்றால் அவை எல்லாம் கட்டப்பட்டன. அவை கால வெள்ளத்திலும் கறையான் வாயிலும் விழுந்து அழிந்துவிட்டன. சில வழிபாடுகள் காலப் போக்கில் மறந்தும் மறைந்தும் போயின.
இளங்கோவின் பட்டியலில் எங்குமே பிள்ளையார் வழிபாடோ, கோவில்களோ குறிப்பிடப்படவில்லை என்பது இந்தக் காவியத்தின் காலத்தைக் கணிக்க உதவுகிறது. நாலாம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் யாத்த காவியம் இது.

srirangam kuthirai veera
Srirangam Temple pillars

சில கோவில்களின் பட்டியலை இளங்கோவின் வாய் மொழியாகவே கேட்போம்:

கோவில் பட்டியல் 1 (இந்திரவிழவு ஊர் எடுத்த காதை)
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
……………………………………………………………..
அறவோர் பள்ளியும், அறன் ஓம்படையும்
புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும்

பொருள்: 1)அவதாரம் என்ற பெயரில் ஒரு தாயின் வயிற்றிலும் பிறவாத மஹாதேவனாகிய சிவன் கோவிலும், 2)ஆறுமுகன் கோவிலும், 3)வெள்ளை நிற சங்கு போல உடலை உடைய பலதேவன் கோயிலும் (கிருஷ்ணனின் சகோதரன்), 4)நீலமேனி உடைய பெருமாள் கோயிலும், 5)முத்து மாலையும் , வெண்குடையும் உடைய இந்திரன் கோயிலும், 6)சமணர்களின் பள்ளியும், அறச் சாலைகளும், துறவிகள் வாழும் ஒதுக்குப் புறமான இடமும் பூம்புகாரில் இருந்தன.

temple side view

கோவில் பட்டியல் 2 (கனாத் திறம் உரைத்த காதை)

அமரர்தருக் கோட்டம், வெள்யானைக் கோட்டம்
புகார் வெள்ளை நாகர்-தம் கோட்டம், பகல் வாயில்
உச்சிக்கிழான் கோட்டம், ஊர்க் கோட்டம், வேற் கோட்டம்
வச்சிரக் கோட்டம், புறம்பணையான் வாழ் கோட்டம்
நிக்கந்தக் கோட்டம் நிலாக் கோட்டம், புக்கு எங்கும்
தேவிர்காள்! எம் உறு நோய் தீர்ம் என்று மேவி
பாசண்டச் சாத்தற்கு பாடு கிடந்தாளுக்கு

பொருள்: 1)கற்பக மரம் உள்ள கோயில்,
2)ஐராவதம் (இந்திரன் வாகனம் வெள்ளையானை) உள்ள கோயில், 3)பலதேவன் கோயில்,
4)சூரியன் கோயில்,
5)சந்திரன் கோயில்,
6)ஊர்த் தேவதை கோயில்,
7)முருகன் கோயில்,
8)இந்திரனின் வஜ்ராயுதம் உள்ள கோயில்,
9)ஐயனார் கோயில்,
10)அருகன் கோயில்,
11)பாசண்டச் சாத்தன் கோயில்.

lepakshi multihead
Lepakshi Temple sculpture

கோவில் பட்டியல் 3 (நாடுகாண் காதை)

அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலம்செயாக் கழிந்து
பணை ஐந்து ஓங்கிய பாசிலைப் போதி
அணிதிகழ் நீழல் அறவோன் திர்ருமொழி
அந்தரசாரிகள் அறைந்தனர் சாற்றும்
இந்திர விகாரம் ஏழ் உடன் போகி—
………………………….
ஐவகை நின்ற அருக தானத்து

பொருள்: 1)ஐந்து கிளை போதி மரத்தின் கீழ் உள்ள புத்ததேவனின் இந்திரவிகாரங்கள் ஏழு, 2)பஞ்ச பரமேஷ்டிகள் நிற்கும் அருகன் இடம்.

கோவில் பட்டியல் 4 (காடுகாண் காதை)

காடுகாண் காதையில் திருவரங்கம், திருப்பதி கோயில்கள் வருகின்றன.

1)ஸ்ரீரங்கத்தில்
திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும்

2)திருப்பதியில்
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
காணப் புறப்பட்டதாக மாங்காட்டு மறையோன் என்னும் பிராமணன் வாயிலாக இளங்கோ பாடுகிறார்.

3)ஐயைதன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு – என்
கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் என்ற சமண மதப் பெண் துறவி மூவரும் ஒரு துர்க்கை கோவிலில் ஓய்வு எடுத்தனர்.

தங்க கோபுரம்
Gold Towers are in Madurai, Tirupati, Srirangam, Chidambaram and several other temples

கோவில் பட்டியல் 5 ( ஊர் காண் காதை)
மதுரை நகரில் உள்ள கோவில்கள்

நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும்
உவணச் சேவல் உயர்த்தோன் நியமும்
மேழி வலன் உயர்த்த வெள்லை நகரமும்
கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்
அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்
மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்

பொருள்: 1)நெற்றிக் கண்ணன் (சிவன்) கோயில், 2)கருடக் கொடி வைத்திருப்பவன் (விஷ்ணு) கோயில், 3)கலப்பை வைத்திருப்பவன் (பலராமன்) கோயில், 4)கோழிக் கொடி வைத்திருப்பவன் (முருகன்) கோயில், 5)சமணர் பள்ளிகள், ராஜாவின் அரண்மனை (மன்னவன் கோயில்).

2alakarkoil
Alagarkoil near Madurai
Tamilnadu_02
Jain centres of Tamil Nadu

கோவில் பட்டியல் 6 ( குன்றக் குரவை)
முருகன் கோவில்கள்
சீர்கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேலன்றே—
பாரிரும் பௌவத்தினுள் புக்குப், பண்டொருநாள்,
சூர் மா தடிந்த சுடர் இலைய வெள்வேலே

பொருள்: 1)திருச்செந்தூர், 2)திருச்செங்கோடு, 3)சுவாமிமலை, 4)திருவேரகம் ஆகிய தலங்களை முருகன் ஒருபோதும் விட்டுப் பிரிவது இல்லை.முன்னொரு காலத்தில் கடல் நடுவில் மாமர வடிவில் நின்ற சூரனை வென்ற சுடர்மிகு வேல் அவன் கையில் உள்ளது!

கோவில் பட்டியல் 7 ( கால்கோட் காதை)
ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடம் கொண்டு சிலர் நின்று ஏத்த
ஆடக மாடம்= திருவந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில்
நீர்ப்படைக் காதையிலும் வேறு சில இடங்களிலும் புத்த விஹாரங்கள் பாடப்படுகின்றன.

வாழ்க ‘தருமமிகு’ தமிழ் நாடு! வளர்க தெய்வத் தமிழ்!!

–சுபம்–

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: