தமிழில் பழ மறையைப் பாடுவோம்: பாரதியார்

bharati stamp

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1474; தேதி 11 டிசம்பர், 2014.
Today is Bharathyar’s Birth Day

அமிழ்தம் அமிழ்தம் என்று கூவுவோம்—நித்தம்
அனலைப் பணிந்து மலர் தூவுவோம்
தமிழில் பழமறையைப் பாடுவோம்—என்றும்
தலைமை பெருமை புகழ் கூடுவோம்

பாரதியார் ஒரு தீர்க்கதரிசி. அவர் சொன்னதெல்லாம் நடந்து வருகிறது. சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்றார். நாம் சந்திரனுக்கு விண்கலம் அனுப்பி வெற்றி கண்டு விட்டோம். சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்றார். இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குள் இலங்கைக்கு சாலைப் பாலம் அமைத்து விடுவோம். எல்லோரும் அமர நிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்களிக்கும் என்றார். நாம் வல்லரசு ஆகும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அப்போது நாம் சொல்வதை எல்லோரும் கேட்பர்.

தேமதுரத் தமிழ் ஓசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்றார். இன்று உலகெங்கும் தமிழ் பள்ளிகளும் தமிழ் சங்கங்களும் தமிழ் கோவில்களும் உள. சொல்லில் உயர்வு தமிச் சொல்லே அதை தொழுது படித்திடடி பாப்பா என்றார். இன்று தமிழ் மொழி செம்மொழியாக் கப்பட்டுவிட்டது. மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதிலோர் மகிமை இல்லை. திறமான புலமை எனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்றார். இன்று இந்தியர்கள் திறமையை உலகமே கண்டு வியந்து பெரிய பதவிகளைக் கொடுத்து உயர்ந்த சம்பளத்தில் அமர்த்தியுள்ளது.

தமிழில் பழமறையைப் பாடுவோம், வேதம் என்றும் வாழ்கவென்று கொட்டு முரசே என்றும் பாடினார். வேதத்தின் பெருமைதனை உலகம் போற்றத் துவங்கிவிட்டது. அவர் எதை எதை எல்லாம் மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று எதிர் பார்த்தாரோ அதைத் தானே செய்தும் காட்டினார்.
அவர் பாடல்களில் நிறைய வேத மந்திரங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதோ சில எடுத்துக் காட்டுகள்:

அயம்லோகாஹா ப்ரியதமஹ = அனைத்திலும் இனியது இவ்வுலகம் என்று அதர்வ வேதம் கூறுகிறது. இதை உலகு இன்பக் கேணி என்று மொழி பெயர்த்தார்:
ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகின்பக் கேணி என்றே – மிக
நன்று பல்வேதம் வரைந்த கை
பாரத நாயகி தன் திருக் கை — என்று பாடினார்.

ஏகம் சத் விப்ராஹா பஹூதா வதந்தி = உண்மை ஒன்றே; அறிஞர்கள் அதைப் பலவாறாகப் புகல்வர் – என்று கடவுள் ஒருவரே என்று ரிக் வேதம் சொன்னதையும் மேற்கூறிய வரிகளில் காணலாம்.

இந்துக்கள் பிள்ளையாரைத் தொழாமல் எந்தக் காரியத்தையும் செய்யமாட்டார்கள். சுக்லாம் பரதரம் என்று மந்திரத்தைச் சொல்லித் தலையில் குட்டிக் கொண்டு அமிர்த தாரை விழும் இடத்தில் ‘’அக்யூபிரஸ்ஸர்’’ கொடுத்துவிட்டுத்தான் எல்லா பூஜைகளையும் தொடங்குவர்.. அதை அவர் அழகிய தமிழில்
வெள்ளாடை தரித்த விட்டுணு என்று செப்பிய மந்திரத் தேவனை
=சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் என்று சொல்கிறார்.

Subramanya Bharati

இப்பொழுது எல்லா இந்துக்களுக்கும் ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் சவிதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹீ என்ற காயத்ரி மந்திரம் தெரியும். இதை அவர் அழகிய தமிழில்
“செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்—அவன்
எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” — (காயத்ரி மந்திரம்)
என்று மொழி பெயர்த்தார். சம்ஸ்கிருதம் தெரியாதவர்களும் இந்தத் தமிழ் மந்திரத்தைச் சொன்னால் அறிவு தெளிவு பெறும். நினைத்ததெல்லாம் கைகூடும்.

தர்மம் சர, சத்யம் வத, ……….. என்று தைத்ரீய உபநிஷத் சொல்கிறது. அதைத் தூய தமிழில்,

வேத வானில் விளங்கி, ‘அறம் செய்மின்
சாதல் நேரினும் சத்தியம் பூணுமின்
தீதகற்றுமின் என்று திசை எல்லாம்
மோத நித்தம் இடித்து முழங்கியே — என்று மொழி பெயர்த்தார்.

பிருஹத் ஆரண்யக உபநிஷதத்தில் வரும் புகழ் பெற்ற
அசதோ மா சத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர் மா அம்ருதம் கமய — என்ற மந்திரத்தை
இருளை நீக்கி ஒளியினைக் காட்டுவாய்
இறப்பை நீக்கி, அமிர்தத்தை ஊட்டுவாய் — என்று அற்புதமாக மொழிபெயர்த்துள்ளார்.

பாரதியாரின் பாடலில் அதர்வ வேதத்தின் தாக்கத்தை அதிகம் காணமுடிகிறது.
கண்ணம்மா என் காதலி – என்ற பாடலில்
பாயும் ஒளி நீ எனக்கு, பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு, தும்பியடி நான் உனக்கு
வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நான் உனக்கு
பூணும் வடம் நீ எனக்கு, புது வயிரம் நான் உனக்கு
வான மழை மது நீ எனக்கு, வண்ண மயில் நான் உனக்கு
பானம் அடி நீ எனக்கு, பாண்டமடி நான் உனக்கு

என்பதெல்லாம் அதர்வண வேத (14-2-71) கல்யாண மந்திரத்தின் பாணியில் இருக்கிறது:

இதே போல சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம் என்ற கவிதையில் கை முதல் துவங்கி ஒவ்வொரு அங்கத்தையும் இறைவன் பணியில் பயன்படுத்துவது அதர்வண வேத (19-60) மந்திரத்தின் பாணியில் இருக்கிறது:

ஈசாவாஸ்யம் இதம் சர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத் — என்ற ஈசாவாஸ்ய உபநிஷத வாக்கியம்
துச்சமெனப் பிறர் பொருளைக் கருதலாலே
சூழ்ந்ததெல்லாம் கடவுள் எனச் சுருதி சொல்லும்
என்ற வரிகளில் காணலாம்

இப்படி பாரதி பாடல் முழுதும் வேத முழக்கத்தைக் காணலாம். அவர் பாடியதெல்லாம் வேத மந்திரம் போன்ற சக்தியுடையவை. ஏனெனில் உள்ளத்தில் ஒளி உண்டாகில் வாக்கினிலே ஒளி உண்டாகும் என்று அவரே பாடி வைத்துள்ளார். பாரதி பாடலை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படியுங்கள் உங்கள் உடலிலும், வீட்டிலும் பாசிட்டிவ் வைப்ரேஷன்ஸ் பரவுவதைக் காண்பீர்கள்.

Barathi_by_Kabil
இதோ அவர் எடுத்தாண்ட சில வேத மந்திரங்கள்:
ஜீவா ஜ்யோதிர் அஸுமஹி – ரிக்வேதம்
பொருள்:- அறிவொளி துலங்க நாம் வாழ்வோம்.

ஸர்வ ஆஷா மம மித்ரம் பவந்து
எட்டு திக்கும் என் நண்பர் குழாம் ஆகட்டும் (அதாவது யாதும் ஊரே, யாவரும் கேளிர்)
ஆநோ பத்ராஹா ருதவோ யந்து விஸ்வதஹ – ரிக் வேதம்
அனைத்து திசைகளில் இருந்தும் உயர்ந்த எண்ணங்கள் எங்களை வந்தடைவதாகுக.

அதர்வ வேத மந்திரம் : மணமகளிடம் சொல்கிறான்:–
நம் இருவர் பார்வையும் இனிதாகட்டும்
நம்முடைய முகத்தில் நல் இணக்கம் பிரதிபலிக்கட்டும்
உன் இதயத்தில் எனக்கு இடம் கொடு
நாம் ஈருடல், ஓருயிர்

மணமகள் சொல்கிறாள்:–
இதோ இந்த ஆடையால் உன்னைப் போர்த்துகிறேன்
இது மனுவிடம் இருந்து வந்தது
நீ எனக்கு மட்டுமே சொந்தம் ஆவாயாக
மற்ற எந்தப் பெண்ணையும் புகழாதே
–அதர்வ வேதம் 7-36/37

ஓ இந்திரனே! இந்தப் பெண்ணையும் ஆணையும்
சக்ரவாகப் பறவைகள் போல சேர்த்து வைப்பாயாக
நல்ல வீட்டில் சுகமாக வசித்து
குழந்தைகளுடன் முழு வாழ்வு வாழட்டும்

நான் இது, நீ அவள்
நான் பாட்டு, நீ கவிதை
நான் வானம் நீ பூமி
நாம் இருவரும் கூடி வாழ்வோம்
குழந்திகளுக்கு பெற்றோர் ஆஅவோம்
–அதர்வ வேதம் 14-2

என்னுடைய முந்தைய பாரதி பற்றிய கட்டுரைகள்:
1.மனம் ஒரு பெண், மனம் ஒரு புலி (Posted on 17-2-2014)
2.Quotes from the Greatest Tamil Poet Bharati (11-12-2013)
3.வாழ்க்கையில் வெற்றி பெற பாரதி அட்வைஸ் 10-12-2013
4.பாரதியுடன் 60 வினாடி பேட்டி (16-1-2012 & 10-9-2014)
5.பாரதியின் பேராசை (Posted on 27-12-2012)
6.பாரதி பாட்டில் பகவத் கீதை (Posted on 10-12-2012)
7.பேய்கள் பற்றி பாரதி & விவேகாநந்தர் (Posted on 29-11- 2012)
8.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே (Posted on 10-9-2012)
9.பாரதி பாட்டில் பழமொழிகள் (Posted on 25-6-2012)
10.உங்களுக்கு வள்ளுவனையும் பாரதியையும் தெரியுமா? (27-3-2014)
11.காலா என் காலருகே வாடா! ஞானிகளின் ஞானத் திமிர் (23-3-2014)
12.ஆரிய பாரதி வாழ்க (செப் 10, 2014)

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: