
Written by S. NAGARAJAN
Date: 6 October 2016
Time uploaded in London: 18-30
Post No.3223
Pictures are taken from various sources; thanks
ச.நாகராஜன்
புத்த போதனை
‘மனம் மட்டுமே’ என்னும் தத்துவம்!
ச.நாகராஜன்
மனித வாழ்க்கையில் மனம் என்னும் மர்மம் முக்கிய பங்கை வகிக்கிறது.
கண் முன்னால் நண்பர் ஒருவர் வந்து நிற்கிறார். மனம் எதையோ பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறது. அவர் தன் கைகளை கண்களின் முன்னால் ஆட்டி என்ன, என்னைத் தெரியவில்லையா என்று சத்தம் போடுகிறார். திடீரென கண் “பார்வையை அடைந்து, அட, நீயா, எப்ப வந்தே” என்று கேட்கிறோம். அவரோ, நான் வந்து ஐந்து நிமிடம் ஆயிற்று. என்கிறார்,
நல்ல பார்வையுள்ள கண்கள் தான், ஆனால் மனம் அத்துடன் சேராததால் ‘பார்க்கவில்லை’.
. மனம் சேர்ந்தவுடன் பார்வை வந்து விடுகிறது.
இனிய சங்கீதம் ஒலிக்கிறது. ஆனால் மனம் அதில் லயிக்கவில்லை. ஒரே கரகோஷம். திடுக்கிட்டு “விழித்த” நாம் பக்கத்திலிருந்தவரை, “என்ன, பாட்டு பாடினார்?” என்கிறோம். அடுத்தவர் நம்மை முறைக்கிறார். சங்கீத ரஸனை இல்லாத இந்த பைத்தியத்திற்குப் பக்கத்தில் நான் வந்து சேர்ந்தேனே, கிரகசாரம் என்று அவர் நொந்து கொள்கிறார். மனம் செவிப் புலனுடன் சேரவில்லை. சங்கீதம் கேட்கவில்லை.
சாப்பாடு பரிமாறப்படுகிறது. சாப்பிட்டு முடிந்து விட்டோம். “என்னடா, சாப்பிட்டே, அதாவது தெரியுமா?” தாயின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் முழிக்கிறோம். மனம் சாப்பாட்டில் லயிக்காத போது சுவை தெரியவில்லை, சாப்பிட்டது என்ன என்பது புரியவில்லை.
இதோ போல ஒவ்வொரு புலனின் செயலையும் கவனித்துப் பார்த்தால் மனமே சுவையைத் தருகிறது; பார்வையைத் தருகிறது; செவிப் புலனைக் கேட்க வைக்கிறது என்பதை அறிய முடிகிறது.
மஹாயான புத்த மதத்தில் மனம் மட்டுமே – மைண்ட் ஒன்லி –MIND ONLY – என்று ஒரு தத்துவம் உண்டு
இப்போது பாகிஸ்தானில் உள்ள இடத்தில் – வடமேற்கு இந்தியாவில் பிறந்த சகோதரர்களான ஆஸங்கா மற்றும் வசுபந்து இந்தத் தத்துவத்தைப் பிரபலப் படுத்தியவர்கள்.
அவர்களின் தர்க்கம் எளிதானது.
எந்த ஒரு பொருளும் மனதாலேயே உருவாக்கப்படுகிறது பார்க்கின்ற அனைத்துமே மனதின் ப்ரொஜக் ஷன் தான்!
எந்த ஒரு பொருளையும் எடுத்துக் கொள்ளுங்கள், அது பார்ப்பவரின் பார்வையைப் பொறுத்து மாறுபடுகிறது.
உதாரணமாக பாலை எடுத்துக் கொள்வோம், அது மனிதருக்கு அருமையான உணவாகத் தோன்றுகிறது. அதுவே தேவர்களுக்கு அமிர்தமாக் ஆகிறது. நரகத்திலிருப்பவருக்கோ அது கொதிக்கும் இரும்பாக இருக்கிறது. சாந்தி அடையாத ஆவிகளுக்கோ அது சீழ் அல்லது இரத்தமாக ஆகிறது.ஒரே பொருள், பல நிலைகளில் உள்ளவர்களின் மனதிற்குப் பலவிதமாக அது காட்சி தருகிறது.
ஒரு அழகிய பெண்ணை வாலிபன் ஒருவன் இன்பம் தரும் போகப் பொருளாகப் பார்க்கிறான். ஆனால் ஓநாய் ஒன்றுக்கோ அது மாமிசக் குவியலாக ஆகிறது.
அடுத்ததாக கனவு நிலையை எடுத்துக் கொள்வோம். புதிய உலகம் ஒன்றைக் காண்கிறோம். தெரிந்தவர், தெரியாதவருடன் புதுப் புது அனுபவங்கள். ஏற்படுகின்றன. புலன்களின் செயலின்மையை நமது கனவு நிலை காட்டுகிறது.
மூன்றாவதாக எந்த ஒரு பொருளுக்கும் தனியான ஒரு ‘இருக்கை’ – எக்ஸிஸ்டென்ஸ் – இல்லை. ஏனெனில் எந்த ஒரு பொருளும் முடிவற்ற அணுக்களால் ஆனவையே. அணுக்களின் சேர்க்கையே ஒரு மேஜையாக நாற்காலியாக ஆகிறது. ஒவ்வொரு அணுவும் ஆறு பாகங்களைக் கொண்டிருக்கிறது. மேல், கீழ், வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என இப்படி ஆறு பாகங்களைக் கொண்டு ஒன்றுடன் ஒன்று உரிய விதத்தில் இணைந்து ஒரு “பொருளாக” ஆகிறது.
இப்படி வாதங்களை முன் வைக்கிறார் வசுபந்து.
இதற்கு எதிரான வாதங்களைக் கூட ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து அலசி ஆராய்ந்து அவற்றிற்குத் தக்க மறுமொழி அளிக்கிறார்.
இதனால் கவரப்பட்டவர்கள் மனம் மட்டுமே தத்துவத்தைப் பெரிதும் விரும்புகின்றனர்.
ஆரம்பத்தில் சற்று சிரித்து ஒதுக்கப்பட்ட மனம் மட்டுமே தத்துவம் இப்போது அறிவியல் வளர்ந்திருக்கும் நிலையில் ஒரு புதிய அந்த்ஸ்தைப் பெறுகிறது.
இந்த தத்துவத்தின் அனைத்து நிலைப்பாடுகளையும் விஞ்ஞானம் ஆமோதிக்கிறது.
ஜான் லாக்கின் (John Locke) கொள்கை இந்த மனம் மட்டுமே தத்துவத்தைப் போலவே உள்ளது. நவீன அறிவியலில் அணுக்களைப் பற்றிய இப்போதைய கண்டுபிடிப்புகளும், கனவு பற்றிய ஆய்வுகளும் மனம் மட்டுமே கொள்கையை ஆச்சரியத்துடன் பார்த்து அதற்கு ஒரு முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது.
நமது உபநிடதங்களில் அம்ருதபிந்தூபநிஷத் என்று ஒன்று உண்டு.

அதன் முதல் வரி இப்படி ஆரம்பிக்கிறது:
“மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்த மோக்ஷயோ”:
இதன் பொருள் : மனம் மட்டுமே மனிதர்களின் பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் காரணம்”
இந்த உபநிடதம் மனதை அடக்க வேண்டிய வழியைக் கூறி பாலில் நெய் மறைந்திருப்பது போல ஒவ்வொரு உயிரிலும் விக்ஞானம் உறைகிறது. மனமெனும் மத்தினால் அதை இடைவிடாது கடைந்தெடுக்க வேண்டும் என்கிறது.
மனம் என்னும் மாயத்தை ஹிந்து மதமும் புத்த மதமும் ஆராய்ந்து உரைக்கும் உண்மைகள் நவீன அறிவியலால் உரசப்பட்டு உண்மை என்று கூறப்படும் போது நமது மனம் ஆனந்தம் அடைகிறது, இல்லையா!
*******
































You must be logged in to post a comment.