Date: 29 DECEMBER 2017
Time uploaded in London- 6-13 am
Written by S NAGARAJAN
Post No. 4559
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
தமிழ் இன்பம்
அதிசயப் புலவர் கவி காளமேகம் பற்றிய முந்தைய கட்டுரை எண் 4525 ; வெளியான தேதி 21-12-17- இதைப் படித்து விட்டுத் தொடரவும்.
யம கண்டம் ஏறிப் பாடிய கவி காளமேகத்தின் அதிசயப் பாடல்கள்! –
குடத்திலே கங்கை அடங்கும்!!
ச.நாகராஜன்
6
பத்து அவதாரங்களும் அரை வெண்பாவில்!
அதிமதுரக் கவிராயர் தன் 64 தண்டிகைகாரர்களுடனும், இதர புலவர்களுடனும், பொது மக்களுடனும் தயாராக இருக்க திருமலைராயன் அரியாசனத்தில் அமர்ந்திருக்க அனாயாசமாக யமகண்டம் ஏறினார் கவி காளமேகம்.
அனைவரும் பதைபதைக்க அமர்ந்திருந்தனர்.
சமஸ்யா பூரணம் என்பதைப் பற்றி ஏற்கனவே இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதிய கட்டுரையில் விளக்கியுள்ளார். மீண்டும் அதை இங்கு விவரிக்கவில்லை.
ஈற்றடியாக ஒரு புதிரைக் கொடுத்து அதை விடுவிக்கக் கூறுவது சிறந்த புலவருக்கான ஒரு பரீட்சை – இதுவே சமஸ்யா பூரணம்.
‘குண்டக்க மண்டக்க’ என்று இந்தக் காலத்தில் கூறுவது போல எதிராளியை மடக்குவதற்காகவே எதையாவது கூறி அதை ஈற்றடியாக அமைத்து முதல் மூன்று அடியைப் பூர்த்தி செய்யச் சொல்வது ஒரு பழக்கமாக இருந்தது.
சமஸ்யா என்ற வார்த்தையே தமிழில் சமிசை ஆக ஆகி விட்டது.
முதலில் அதிமதுரக் கவிராயர் எழுந்தார்.
திருமால் அவதாரம் பத்தினையும் ஒரு வெண்பாவில் அடக்கிப் பாடுங்கள் என்று கூறி விட்டுப் பெருமிதம் தொனிக்க அமர்ந்தார்.
பத்து பெரும் அவதாரங்களை நான்கு அடி கொண்ட வெண்பாவில் அடக்க முடியுமா?
ஆனால் கவி காளமேகமோ கலங்கவில்லை.
பத்து அவதாரத்திற்கு ஒரு வெண்பா வேண்டுமா என்ன? அரை வெண்பா போதுமே என்றார் அவர்.
கூட்டம் அயர்ந்து போனது.
பாடலைப் பாடினார் காளமேகம்:
மெச்சுபுகழ் வேங்கடவா! வெண்பாவிற் பாதியிலென்
இச்சையிலென் சென்ம மெடுக்கவா – மச்சாகூர்
மாகோலா சிங்காவா மாராமா ராமாரா
மாகோபா லாமாவா வாய்
கூட்டம் திகைத்தது. “மாகோலாசிங்காவா மாராமா ராமாரா மாகோபா லாமாவா வாய்”! என்ன இது?
காளமேகமே விளக்கினார்:
மெச்சு புகழ் – தேவர் முனிவர் ஆகிய அனைவரும் மெச்சுகின்ற பெரும் கீர்த்தியை உடைய
வேங்கடவா – திருவேங்கடம் உடையானே!
வெண்பாவில் பாதியில் – ஒரு வெண்பாவில் பாதியில்
என் இச்சையில் – எனது விருப்பப்படி
உன் சென்மம் எடுக்க – உன் அவதாரம் பத்தையும் எடுத்துக் கூற
வா – வந்து அருள்வாயாக!
மச்சா – மச்சாவதாரத்தைச் செய்தவனே
கோலா – வராஹாவதாரத்தைச் செய்தவனே
கூர்மா – கூர்மாவதாரத்தைச் செய்தவவே
சிங்கா – நரசிங்கனே
வாமா – வாமனனே
ராமா – பரசுராமா!
ராமா – தசரத ராமா!
ராமா – பலராமா!
கோபாலா – கிருஷ்ணா
மா ஆவாய் – இனி கல்கி அவதாரம் செய்யப் போகின்றவனே!
மச்சம் – மீன்; கூர்மம் – ஆமை; கோலம் – பன்றி; வாமனம் – குறள்; மா- குதிரை (இந்த அவதாரம் இனி செய்யப் போகின்றபடியால் ஆவாய் என எதிர் காலத்தில் கூறினார்)
சபையோர் ஆரவாரம் செய்ய அதி மதுரம் தலை கவிழ்ந்தார்.
7
Ancient Zodiac of Egypt
ஒரே வெண்பாவில் 12 ராசிகளை அடக்குங்கள்!
இராசிகளின் பெயர்களை ஒரு வெண்பாவில் அடக்கிப் பாடுங்கள்!
அடுத்தாற்போல ஒரு தண்டிகைப் புலவர் எழுந்தார்.
ஒரு வெண்பாவில் அனைத்து ராசிகளும் வரவேண்டும்.முறையும் தொகையும் இருக்க வேண்டும். ஆனால் எந்த அடைமொழியும் இருத்தல் கூடாது. பாடுங்கள் பார்ப்போம் என்றார்.
காளமேகம் சிரித்தார். பாடலைப் பகர்ந்தார்:
பகருங்கால் மேடமிட பம்மிதுனங் கர்க்க
டகஞ்சிங்க கன்னி துலாம்விர்ச் – சிகந்த
நுசுமகரங் கும்பமீ னம்பன்னி ரண்டும்
வசையறு மிராசி வளம்
மேஷம்,ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் (சிங்கம்), கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் , மீனம் ஆகியவை பன்னிரெண்டும் ராசி வளம்.
கூட்டம் ஆரவாரித்தது.
8
Tri Murtis
ஒரு வெண்பாவில் மும்மூர்த்திகளின் அனைத்து விவரமும் அடக்க முடியுமா?
இன்னொரு தண்டிகைப் புலவர் எழுந்தார்.
இன்னும் கஷ்டமான பொருளைத் தந்து அவரைப் பாட முடியாதபடி மடக்க வேண்டும் என்று எண்ணி ஏராளமான விஷயங்களைக் கூறி அதை ஒரு வெண்பாவில் அடக்க வேண்டும் என்றார்.
அவர் கூறியது:
மும்மூர்த்திகளின் பெயர், அவர்கள் தின்னும் கறி, உண்ணும் உணவு, ஏந்துகின்ற ஆயுதம், அணிகின்ற ஆபரணம், ஏறுகின்ற வாகனம், வசிக்கும் இடம் ஆகிய இவை அனைத்தும் ஒரு வெண்பாவில் அடக்கிப் பாட முடியுமா என்றார்.
இவ்வளவு விஷயங்களை ஒரு நாலடிப் பாவில் அடக்க முடியுமா?
முடியும் என்றார் காளமேகம். பாடினார் இப்படி:
சிறுவ னளைபயறு செந்நெற் கடுகு
மறிதிகிரி தண்டு மணிநூல் – பொறியரவம்
வெற்றேறு புள்ளன்னம் வேதனரன் மாலுக்குக்
கற்றாழம் பூவே கறி
அனைவரும் பிரமிக்க காளமேகம் பாடலை விளக்கினார்.
வேதன் அரன் மாலுக்கு – பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளுக்கு
கறி – கறி ஆவன
பயறு, சிறுவன், அளை – பயறு, பிள்ளை, வெண்ணெய் ஆகிய மூன்றும் தான்!
செந்நெல் கடுகு – நெல், விஷம், பூமி ஆகிய மூன்றுமே உணவாகும்.
தண்டு, மறி, திகிரி – தண்டம், மான், சக்கரம் ஆகிய மூன்றுமே ஆயுதங்களாகும்.
நூல், பொறி அரவம் ,மணி – உபவீதம், புள்ளியை உடைய பாம்பு, கௌஸ்துபம் மணி ஆகிய மூன்றுமே பூஷணம்
அன்னம், வெற்றேறு, புள் – அன்னம், வெள்ளிய இடபம், கருடன் ஆகிய இந்த மூன்றுமே வாகனங்களாகும்.
பூ, கல்தாழ், அம் – தாமரை மலர், கைலை மலை, ஆழ்ந்த பாற்கடல் ஆகிய இந்த மூன்றுமே வசிப்பிடமாகும்.
நான்கே வரிகள். அதில் அனைத்தையும் அடக்கிய காளமேகத்திற்கு யார் நிகர் ஆவார் என்று கூட்டம் ஆரவாரித்தது. சமஸ்யா (சமிசை) கேட்டவர் வெட்கம் அடைந்தார்.
ஆனால் அடுத்த தண்டிகைப் புலவர் எழுந்தார்.
9
Himalayas
ஈ ஏற மலை குலுங்கப் பாடுங்கள்!
ஈ ஏற மலை குலுங்கும் என்று ஈற்றடி அமைத்துப் பாடுக என்றார்.
எங்காவது ஈ ஏற மலை குலுங்குமா? இது என்ன இடக்கான அடியாக இருக்கிறதே என்று அனைவரும் நினைக்க, காளமேகம் கவி மழை பொழிந்தார்.
வாரணங்க ளெட்டு மதமேரு வுங்கடலும்
தாரணியு மெல்லாஞ் சலித்தனவால் – நாரணனைப்
பண்வா யிடைச்சி பருமத்தி னாலடித்த
புண்வாயி லீமொய்த்த போது
பொருளைக் காளமேகமே விளக்கினார்.
நாரணனை – ஆயர்பாடியில் கண்ணனாக அவதரித்த நாராயணனை
பண்வாய் இடைச்சி – இசை போலும் சொல் உடைய யசோதை பிராட்டி
பரு மத்தினால் அடித்த – பருத்த மத்தினால் அடித்த போது உண்டாகிய
புண் வாயில் – புண்ணின் இடத்தில்
ஈ மொய்த்த போது – ஈ ஒன்று மொய்த்த போது
வாரணங்கள் எட்டும் – எட்டுத் திசைகளிலும் உள்ள அஷ்ட திக் கஜங்கள் எனப்படும் திக்கு யானைகள் எட்டும்
மாமேருவும் – மகா மேரு மலையும்
கடலும் – ஏழு கடல்களும்
தாரணியும் – உலகங்களும் ஆகிய எல்லாம்
சலித்தன – அசைந்தன!
(சலித்தனவால் என்பதில் ‘ஆல்’ அசை. எல்லா உலகங்களும் அவற்றில் உள்ள திக் கஜங்கள் எனப்படும் திக்கு யானைகள் உள்ளிட்ட அனைத்தும் இறைவனது திரு வயிற்றில் வைத்துக் காக்கப்படுபவை ஆதலால் கண்ணன் அசைந்த போது அவையும் கூடவே அசைந்தனவாம்!)
எப்படி ஒரு அற்புதமான கற்பனை!
அனைவரும் கை தட்டிப் பாராட்டினார்கள்!!
River Ganga Mata (Ganges)
10
இல்லாத ஒன்றைச் சொன்னால் தான் இவர் அடங்குவார் என்று நினைத்தார் தண்டிகைப் புலவர்களில் ஒருவர்.
ஆகவே வேண்டுமென்றே குடத்திலே கங்கை அடங்கும் என்று ஈற்றடி அமைத்துப் பாடுக என்றார்.
அனைவரும் சிரித்தனர். குடத்தில் எப்படி கங்கை அடங்கும்?
காளமேகம் சொல் ஜாலக்காரர். பாடினார் இப்படி:
விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்
மண்ணுக் கடங்காமல் வந்தாலும் – பெண்ணை
இடத்திலே வைத்த விறைவர் சடாம
குடத்திலே கங்கை அடங்கும்.
கூட்டம் எழுந்து நின்று ஆரவாரித்தது. இறைவனின் ஜடா மகுடத்திலே கங்கை அடங்கும். உண்மை தான்.
கங்கை – கங்கா நதியானது
விண்ணுக்கு அடங்காமல் – ஆகாயத்திற்கு அடங்காமல்
வெற்புக்கு அடங்காமல் – மலைகளில் அடங்காமல்
மண்ணுக்கு அடங்காமல் – பூமிக்கு அடங்காமல்
வந்தாலும் – பெருக்கெடுத்து ஓடி வந்தாலும்
பெண்ணை இடத்திலே வைத்த – உமா தேவியை இடப்பாகத்திலே வைத்திருக்கும்
இறைவர் ஜடா மகுடத்திலே – சிவபிரானின் ஜடை மகுடத்திலே
அடங்கும் – அடங்கும்.
Boats in River Ganges
**
இப்படி அற்புதமான பொருளாழமும், சிக்கலான கருத்துக்களை நேர் படுத்தியும் அமைக்கப்படும் பாடல்கள் கொண்ட மொழி தமிழ் மொழி!
அதன் பெருமையை ஒருவராலும் முழுவதுமாக உரைக்க முடியாது!
***