
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 16 October 2018
Time uploaded in London – 7-04 AM
(British Summer Time)
Post No. 5546
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

யானை பொம்மை பற்றிய ‘மூட நம்பிக்கை’! (Post No.5546)
மூட நம்பிக்கைகள் பற்றிய ஒரு ஆங்கிலப் புஸ்தகம் லண்டன் பல்கலைக் கழக லைப்ரரியில் கிடைத்தது. அதில் பல விநோத நம்பிக்கைகள். ஒன்று யானை பற்றியது. நான் இதுவரை கேள்விப் பட்டத்தில்லை. லண்டனில் என் வீட்டிலும் நிறைய மர யானை பொம்மைகள் உண்டு. அவை ஒவ்வொன்றும் நவக் கிரஹங்கள் போல ஒவ்வொரு திசையைப் பார்த்துக் கொண்டு நிற்கின்றன. இப்படி நிற்கக் கூடாதாம். வெள்ளைக்காரர்கள் சொல்கிறார்கள்.
“மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை”
என்னும் திருமூலர் பாடலின் தத்துவம் பற்றி காஞ்சி பரமாசார்யார் சொல்லிவிட்டார். அதற்கு மேல் நாம் சொல்ல என்ன இருக்கிறது?
இருந்த போதிலும் திருமூலர் காலத்திலிருந்து மர யானை பொம்மைகள் தமிழ் நாட்டில் இருந்தது தெரிகிறது. எங்கள் மதுரையில் புகழ்பெற்ற கல் யானை கூட உண்டு. ஆண்டுதோறும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பவனி வந்து கல்யானைக்கு கரும்பு கொடுத்த திருவி ளையாடல் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
யானையின் அபார ஞாபக சக்தி, பழி வாங்கும் குணம், உ.வே.சாமிநாத ஐயர், காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் சொன்ன யானக் கதைகள், சங்க இலக்கியத்தில் தமிழ்ப் பெண்ணின் பாடலுக்கு மயங்கி தானியக் கதிர்களைச் சாப்பிடாமல் நின்ற யானை, புத்தர், மஹாவீரர் ஆகிய பெரியோர்களின் தாய்மார்களின் கனவில் தோன்றிய
யானைகள், புத்தர் முன் மண்டியிட்ட யானை, யானை லத்தி காப்பிக் கொட்டை ஸ்பெஷல் காப்பி, கஜ சாஸ்திரம், கோவில்களில் கஜ பூஜை, யானைக்கு உள்ள பல பெயர்கள்– என்று நூற்றுக் கணக்கான யானை புராணங்களை எழுதிய எனக்கு நேற்று ஆங்கிலப் புஸ்தகத்தில் படித்த செய்தி வியப்பு அளித்தது.
அதாவது வீட்டில் யானை பொம்மையோ, வரைபடமோ, காலண்டரோ எது இருந்தாலும் அது வாசல் கதவை நோக்கிய வண்ணமாக இருக்க வேண்டுமாம்! அப்படியில்லாவிடில் துரதிர்ஷ்டமாமம்!!!

ஒரு லண்டன் வாசி எழுதுகிறார்,
என் வீட்டில் மர யானை பொம்மைகள் உண்டு. நண்பர் ஒருவர் என் வீட்டுக்கு வந்தார். நான் சொன்னேன்; நான் சரியான அதிர்ஷ்டக் கட்டை. ராமே ஸ்வரம் போனாலும் சனைஸ்சரன் விட மாட்டான் என்ற பழமொழி போல எனக்கு யானை பொம்மை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லை. உடனே என் ஆங்கில நண்பர் சொன்னார்:– அட, உங்களுக்குத் தெரியாதா? யானை பொம்மையை வாசலை நோக்கி வரவேற்பது போல வைக்க வேண்டும் என்று.
அன்று முதல் யானை பொம்மையை வாயில் திசை நோக்கி வைத்தேன். பின்னர், ஒரே அமோகம் தான்.

யானை முடி தாயத்து!
இன்னொரு பெண்மணி எழுதுகிறார்– யானை பொம்மை, யானை முடி தாயத்து– இவை எல்லாம் அதிர்ஷ்டச் சின்னங்கள் என்று உங்களுக்குத் தெரியாதா? ஆனால் பொம்மை வாசலை நோக்கி இருக்க வேண்டும்.
இன்னொரு பெண்களுக்கான பத்திரிக்கையில் ஒரு குறிப்பு:
எனது அப்பா திடீரென்று இறந்து போனார். பின்னர்தான் தெரிந்தது. எதேச்சையாக யாரோ கை பட்டு எங்கள் வீட்டு யானை பொம்மை திசை மாறித் திரும்பி இருந்தது என்று. அதாவது அவர் மரணம் அடையப் போவதை, யானை முன்னரே தெரிந்து கொண்டுவிட்டது.
இன்னொரு அன்பர் பத்திரிக்கையி எழுதுகிறார்; அவர் கிண்டல் செய்கிறாரோ, உண்மையைச் செப்புகிறாரோ; துப்பு எதுவும் கிடைக்கவில்லை. அவர் மப்புடன் எழுதியது இதுதான்:
உங்களுக்குத் தெரியாதா?
யானைக்கு என்ன நடக்கிறது என்று தெரியாவிட்டால் மதம் பிடித்துவிடும். ஆகையால் வாயிற் கதவுகளை நோக்கி வையுங்கள்.

மற்றொரு பெண்மணி யானை முடி தாயத்து அதிர்ஷ்டம்
அளிக்கும் என்கிறார். நான் குருவாயூர்
அருகில் உள்ள யானை முகாமுக்கு சென்றிருந்தேன். அங்கு 50, 60 யானைகளைப் பராமரிக்கிறார்கள்.
சிலர் யனைப் பாகனுடன் ‘கிசு கிசு’ என்று பேசிக்கொண்டிருந்தார்கள். என்ன என்று கேட்ட போது தமிழும் மலையாளமும் அறிந்த ஒருவர் எனக்கு விளக்கினார். யானை முடி வேண்டுமானால் பணம் கொடுக்க வேண்டுமாம். அவர் கண்ணுக்கு முன்னால் யானையின் வால் முடியைப் பிடுங்கி நமக்குக் கொடுப்பாராம். எனக்கு அதிர்ஷ்டமும் வேண்டாம்; யானை முடியைப் பிய்த்து அதைக் கொடுமைப் படுத்திய பாவமும் வேண்டாம் என்று சொல்லி விட்டு நைஸாக நகர்ந்து விட்டேன்.
இதில் வேடிக்கை என்ன வென்றால், யானையை உலகிற்குக் காட்டியவனே இந்தியந்தான். ஆப்பிரிக்கவின் புகழ்மிகு எகிப்திய ஓவியங்களில் யானையே இல்லை. தென் கிழக்காஸிய நாடுகள் முழுதும் இந்திரனின் அதிர்ஷ்டக்கார வெள்ளை யானை ஐராவதம்தான் சி லைகளிலும், கொடிகளிலும்!!! தாய்லாந்து போன்ற நாடுகளின் அரசாங்க சின்னங்களிலும் உளது. தமிழ்நாட்டுக் கோவில்களில் பூமியைக் காக்கும் அஷ்ட திக் கஜங்கள் என்னும் எட்டு யானைகள் கர்ப்பக்கிரஹத்தைச் சுற்றிலும் உள. சங்க இலக்கியப் பாடல்களில் யானைக் குறிப்புகள் பற்றி ஒரு ஆராய்ச்சி புஸ்தமே உளது. ஸரஸ்வதி மஹால் லைப்ரரி (தஞ்சாவூர்) யில் கஜ சாஸ்திரம் இருக்கிறது.
ஸிந்து-ஸர்ஸ்வதி நாகரீக முத்திரையில் யானைப் படம் உளது; ஆயினும் ஆப்பிரிக்காவில் தந்த சிற்பங்கள் உள. யானைப் படமோ சிலையோ இல.
யானை என்னும் பிராணி வெப்ப மண்டல நாட்டுப் பிராணி. அது ஐரோப்பியா சென்றது 2000 ஆண்டுகளுக்கு முன்னர்தான். டேரியஸ், அலெக்ஸான்டர் ஆகியோர் படை எடு , ப்புக்கு முன்னால் அவர்கள் யானையைப் பார்த்தது இல்லை. மாமூத் போன்ற யானையின் மூதாதையர் இருந்ததோ மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் அப்படி இருந்தும் யானை பொம்மை பற்றி இவ்வளவு நம்பிக்கைகள் எப்படிப் பரவின என்பது ஆரய்ச்சிக்குரிய விஷயம்.
(யானை பற்றிய என்னுடைய ஆங்கிலக் கட்டுரையில் வெள்ளைக்காரர்களின் பெயர்களையும் புஸ்தகம், பத்திரிக்கைகளின் பெயரையும் கொடுத்துள்ளேன்)
“பொம்மையில் மறைந்தது மாமத யானை
பொம்மையை மறைத்தது மாமத யானை”– ஆங்கிலத் திருமூலர்.
யானைகள் வாழ்க!!
–SUBAHM–










































