

WRITTEN BY S Nagarajan
swami_48@yahoo.com
Date: 18 JULY 2019
British Summer Time uploaded in London – 6-49 AM
Post No. 6644
Pictures are taken from various sources including Facebook, google, Wikipedia. This is a non- commercial
blog. ((posted by
swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
ஹெல்த்கேர் ஜூலை 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
ஆரோக்கியம் என்றால் என்ன? அதை எப்படி அடைவது?!
ச.நாகராஜன்
நல்ல ஆரோக்கியம் என்கிறோமே ஆரோக்கியம் என்றால் என்ன?
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நன்றாக இருந்து வாழ்க்கையை முழு வாழ்க்கையாக நீடித்த ஆயுளுடன் வாழச் செய்வதே ஆரோக்கியம்.
வியாதிகள் இல்லாமல் இருப்பது தான் ஆரோக்கியம் என்பதல்ல, அப்படி ஒருவேளை வியாதிகளோ உடல் ரீதியான பிரச்சினைகளோ வந்தாலும் அதிலிருந்து சீக்கிரமே குணமடைந்து எழச் செய்வது தான் நல்ல ஆரோக்கியம் எனப்படுகிறது.
நல்ல ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக அமைவது நான்கு காரணங்கள். 1)மரபணு ரீதியாக வருவது 2) சூழ்நிலை ரீதியாக வருவது 3) உறவுகள் ரீதியாக வருவது 4) கல்வி
ஆரோக்கியமான உணவுத் திட்டம், உடல் பயிற்சி, வியாதிகள் வருவதை உடனுக்குடன் அறிவது, அவற்றை நீக்க நல்ல உத்திகளைக் கையாளுவது இவை அனைத்துமே ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகளாகும்.
உலக சுகாதார நிறுவனமான WHO – WORLD HEALTH ORGANISATION 1948இல் ஆரோக்கியத்திற்கான விளக்கமாக,“Health is a state of complete physical, mental and social well-being and not merely the absence of disease or infirmity” என்று கூறியுள்ளது.
ஆரோக்கியம் என்பது மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நன்றாக வாழ்வது என்று சொல்லப்பட்டிருந்த அடிப்படை இன்று சற்று விரிவடைந்து ஆன்மீக ஆரோக்கியம், உணர்ச்சி பூர்வமான ஆரோக்கியம், பொருளாதார ரீதியான ஆரோக்கியம் என்றெல்லாம் கூறப்படுகிறது. மனமும் உடலும் சரியாக இருந்து மன அழுத்தம் இல்லாமல் அமைதியாக வாழ்வதே ஆரோக்கிய வாழ்க்கை என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம்.
உடல் ரீதியான ஆரோக்கியம்
வியாதி இல்லாமல் உடல் இயக்கங்கள் அனைத்தும் சரியாக இயங்கி வேலைத் திறனில் பூரணமாக இருந்து வாழ்வதற்கு, சரியான சமச்சீரான உணவு, உடல் பயிற்சி, தேவையான ஓய்வு ஆகிய மூன்றும் அவசியம்.
உடல் ரீதியான ஆரோக்கியம் வாழ்க்கை முறையை அபாயம் இல்லாமல் அதாவது நோயில்லாமல் அமைத்துக் கொள்வதில் இருக்கிறது.
சரியாக சுவாசிப்பது, இதயத்தின் இயக்கம், தசைகளின் வலு, நெகிழ்வுத் தன்மை, உடல் அமைப்பு ஆகியவற்றை நல்ல ஆரோக்கியம் தருகிறது. அத்துடன் மட்டுமின்றி பணியிடங்களில் அபாயம் இல்லாமல் ரிஸ்க் இல்லாமல் பணியாற்றும் சூழ்நிலை, சரியான செக்ஸ் உறவு, ஆரோக்கியத்தை நீடித்து கொள்வதற்கான வழிமுறைகளைத் தவறாது பின்பற்றுவது, புகையிலை, சிகரெட், மது ஆகியவற்றைத் தவிர்ப்பது, போதை மருந்துகளையும் தடை செய்யப்பட்ட மருந்துகளையும் உட்கொள்ளாமல் இருப்பது ஆகியவையும் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை.
மன ரீதியான ஆரோக்கியம்
மன ரீதியான ஆரோக்கியம் என்பதற்குச் சரியான வரையறுப்பைத் தருவது சுலபமல்ல. ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழ்நிலையையும், அனுபவத்தையும் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அது அமைகிறது.
மனச்சோர்வு, கவலை இவை இல்லாமல் இருப்பது மட்டுமல்ல மன ஆரோக்கியம்.
வாழ்க்கையை ஜாலியாக அனுபவிப்பது, பிரச்சினைகள் வரும்போது அதிலிருந்து மீள்வது, எப்போதும் பாலன்ஸாக சமச்சீர் நிலையுடன் இருப்பது, ஆபத்து வரும்போது அதற்குத் தக நெளிவு சுளிவுடன் இருந்து அதிலிருந்து மீள்வது, எப்போதும் பாதுகாப்புடனும் பயமின்றியும் இருப்பது இவை அனைத்தையும் தருவது தான் மன ஆரோக்கியம்.
உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் ஒன்றை ஒன்று சார்ந்தவை.
நீடித்த வியாதியால் ஒருவன் படுத்த படுக்கையாகக் கிடப்பானாகில் அவன் மனச்சோர்வை தானாகவே அடைவான்; மன ரீதியாக பாதிக்கப்படுவான்.
மனோவியாதி உடலை இளைக்க வைக்கும்; செயல்திறனைக் குறைக்கும்.
மரபணு ரீதியாக வரும் வியாதிகள் ஆரோக்கியக் கேட்டை உருவாக்கும். மோசமான சூழ்நிலைகளில் வாழ்வதும் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
உலக சுகாதார நிறுவனம் கீழ்க்கண்ட காரணிகள் ஒருவரின் ஆரோக்கியத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறது:
ஒருவர் எங்கு வாழ்கிறார் என்பது அவரது சுற்றுப்புறம் எப்படி இருக்கிறது என்பது மரபணு ரீதியான காரணங்கள் ஒருவரது வருமானம் ஒருவரது கல்வி அறிவு ஒருவர் உறவினர்களுடனும் குடும்பத்தினரிடமும் எப்படிப் பழகுகிறார் என்பது
சமூக ரீதியான காரணங்கள் பின்வருமாறு; ஒரு குடும்பம் எவ்வளவு பண வசதியுடன் இருக்கிறது அல்லது அவர் சார்ந்த சமூகம் எப்படிப்பட்ட வசதியுடன் இருக்கிறது.
அவர் வாழுமிடத்தில் கொசு போன்ற தொல்லைகள் இல்லாமல் இருக்கிறதா என்பது
பழக்க வழக்கங்கள், வாழ்க்கை நடைமுறைகள் – இவற்றில் ஒருவர் தனது விருப்பத் தேர்வாக எதையெதைத் தேர்ந்தெடுக்கிறார் என்பது
நல்ல ஆரோக்கியத்தை அடைவது எப்படி?
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை நாமே உடனடியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நல்ல ஆரோக்கியம் என்பது அன்றாடம் மேற்கூறிய அனைத்தையும் சரிபார்த்து தீயனவற்றைக் களைந்து நம்மை நல்வழிப் படுத்திக் கொள்வதாகும்.
சரியான வழிகாட்டல் (நீங்கள் படிக்கும் ஹெல்த்கேர் இதழில் வெளியாகும் கட்டுரைகள் சரியான வழிகாட்டிகளாக அமையும்)
சரியான உணவுத் திட்டம்
சரியான உடல் பயிற்சிகள்
வியாதிகள் வருமுன்னரே உடலை அவ்வப்பொழுது செக் செய்து கொள்ளல்
மனநலத்தை சீராக வைத்துக் கொள்ளல்
சிகரெட், புகையிலை, மது, போதை மருந்துகளை நீக்குதல்
பாஸிடிவ் அவுட் லுக் எனப்படும் சரியான, நேர்மறை அணுகுமுறையை எதிலும் மேற்கொள்ளல்
உறவுகளைச் சீர்பட அமைத்துக் கொள்ளல்
சமூகத்தோடு இணங்கி வாழக் கற்றல்
நமது வாழ்க்கை முறை பற்றிய நமது மதிப்பீடுகளை உயரிய ஒன்றாக அமைத்துக் கொள்ளல்
இவை அனைத்தும் அற்புதமான ஆரோக்கியமான வாழ்வை மன ரீதியாக, உடல் ரீதியாக, சமூக ரீதியாக உறுதிப் படுத்தும்.
உடனடியாக நாம் செய்ய வேண்டியது நமக்கென ஒரு செக் லிஸ்ட் (Check List –சரி பார்க்கும் பட்டியல்) தயாரித்து, அதை மதிப்பிட்டு முன்னேற வேண்டும், அவ்வளவு தான்!
பேப்பரையும் பேனாவையும் எடுப்பது தான் முதல் படி!!


vdharma
/ July 12, 2020அருமை. எழுதியதற்கு மிக்க நன்றி