ஸ்ரீரங்கம் – ஆலயம் அறிவோம்! (Post.9057)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9057

Date uploaded in London – –20 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் 20-12-2020 அன்று ஒளிபரப்பான உரை. இதை www.facebook.com/gnanamayam தளத்திலும் youtubeலும் எப்போதும் காணலாம்.

ஆலயம் அறிவோம்!    

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

மாவினை, வாய் பிளந்துகந்த, மாலை வேலை வண்ணனை, என் கண்ணனை,

வன் குன்றமேந்தி, ஆவினை அன்று உய்யக் கொண்ட ஆயர் ஏற்றை,

அமரர்கள் தம் தலைவனை,  அந் தமிழின் இன்பப் பாவினை, அவ் வடமொழியைப் பற்றார்கள் பயில, அரங்கத்தரவணையில் பள்ளி கொள்ளும் கோவினை, நாவுற அழுத்தி, எந்தன் கைகள், கொய்ம் மலர் தூய்,

என்று கொலோ கூப்பும் நாளே?     

—குலசேகர ஆழ்வார் திருவடிகள் வாழியே!

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது  வைணவ திவ்ய க்ஷேத்திரங்கள் நூற்றியெட்டில் முதலாவதாகத் திகழும்

ஸ்ரீரங்க க்ஷேத்திரம் ஆகும். ஸ்வயமாக உருவாகிய ஏழு விஷ்ணு ஸ்தலங்களுள் இது மிக முக்கியமானதாக விளங்குகிறது. திருவரங்க திருப்பதி, பெரிய கோயில், பூலோக வைகுண்டம், போக மண்டபம் என்ற பல சிறப்புப் பெயர்கள் கொண்ட க்ஷேத்திரமும் இதுவே. கோயில் என்றாலே வைஷ்ணவ சம்பிரதாயத்தில் அது ஸ்ரீரங்கநாதர் எழுந்தருளியுள்ள ஸ்ரீரங்கத்தையே குறிக்கும்.

சிலப்பதிகாரம், அகநானூறு போன்ற சங்க இலக்கியத்தில் போற்றி புகழப்படும் தலமாக இருப்பதால் இதன் பழம் பெருமை நன்கு விளங்கும்.

ஸ்ரீரங்கம் கோவில் பிரம்மாண்டமானது. 156 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் கோவிலில் ஏழு பிரகாரங்கள் உள்ளன. அனைத்துப் பிரகாரங்களிலும் உள்ள கோபுரங்கள் மொத்தம் 21. திருச்சியில் உள்ள இந்தத் தலம் சென்னையிலிருந்து 324 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

புனிதமான காவிரி நதியின் வடகரையில் 3 மைல் தொலைவில் உள்ளது இது. காவேரி, கொள்ளிடத்திற்கு மத்தியில் இது அமைந்துள்ளது. காவேரியும் கொள்ளிடமும். ஸ்ரீரங்கத்தை மாலையிட்டது போல் சுற்றி வருகின்றன.

ஆதியில் ராமபிரானால் விபீஷணருக்குக் கொடுக்கப்பட்ட ஸ்ரீ ரங்கநாதர் அங்கேயே நிலைத்து நின்று அருள் பாலிக்கும் தலம் இது.

இந்த ஆலயம் விஜயரங்க சொக்கநாதரால் கட்டப்பட்டது.

ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவரான  விபீஷணர் இப்பொழுதும் இலங்கையிலிருந்து இங்கு இரவில் வந்து பூஜை செய்வதாக ஐதீகம்.

கோயிலின் வடபுறத்தில் தாயார் சந்நிதியும் ராமர் கோவிலும் உள்ளன.

இந்தக் கோயிலில் உள் விமானம் பிரணவ ரூபமாக அமைக்கப்பட்டிருப்பது இதன் தனிச் சிறப்பாகும். அந்த விமானத்தில் பர வாஸுதேவருடைய சிலா விக்ரஹம் இடுப்பு வரையிலும் காணப்படுகிறது. இந்த விக்ரஹம் முழுவதும் வளர்ந்து முழுமையாக நிற்கும் நாளில் கலி யுகம் முடிவுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.   சக்கரத்தாழ்வார், கோயிலுக்கு நிருதி மூலையில், அமைந்துள்ளார்.

தாயாரின் திரு நாமம் அரங்க நாயகி. தாயார் சந்நிதியின் மூல ஸ்தானத்தில்

இரண்டு தாயார்களின் விக்ரஹங்கள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

துலுக்க நாச்சியார் அரங்கனின் மீது ப்ரேமை கொண்டு முக்தியடைந்ததாக வரலாறு ஒன்றும் உண்டு.

இங்கு தான், தாயார் கோவிலின் முன் புறம், அழகிய சிங்கர் முன்னிலையில் உள்ள ஓர் மண்டபத்தில், கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றினார். கம்பர் மண்டபம் என்ற பெயருடன் இது விளங்குகிறது.

வைகுண்ட ஏகாதசி திருநாளில் ஸ்ரீரங்கநாதருக்கு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். ஸ்ரீரங்கத்திற்கு வடபால் கொள்ளிடக்கரை ஓரமாக தசாவதாரப் பெருமாள் கோவில் உள்ளது. கோவிலுக்குக் கிழக்குத் திக்கில் சிங்கப் பெருமாள் கோவிலும் வாயு மூலையில் தேசிகன் கோவிலும் உள்ளன.

பத்து ஆழ்வார்களும் ஆண்டாளும் அரங்கநாதரைப் போற்றிப் பாடிய பாசுரங்கள் மொத்தம் 247.

    உடையவர் என்றும் எம்பெருமானார் என்றும் ஸ்ரீ பாஷ்யகாரர், யதீந்திரர் என்றும் பல்வேறு நாமங்களால் சிறப்புற அழைக்கப்பெறும் ஸ்ரீ ராமானுஜர் ஆதி சேஷனின் அபராவதாரமாகக் கருதப்படுபவர்.

பூமன்னு மாது பொருந்திய மார்பன் – புகழ் மலிந்த

பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் – பல்கலையோர்

தாம் மன்ன வந்த இராமானுஜன் சரணாரவிந்தம்

நாம் மன்னி வாழ நெஞ்சே, சொல்லுவோம் அவன் நாமங்களே

என்று பக்தர்கள் பரவசமாய் போற்றித் துதிக்கும் ஸ்ரீராமானுஜர், ஸ்ரீரங்கம் கோவிலுக்குத் தென்பால் உள்ள, மொட்டை கோபுரத்தின் மீது நின்று தான், ஜனங்களுக்கு உபதேசம் செய்ததாகக் கூறப்படுகிறது. அரங்கநாதரின் ஆணைப்படி ஐந்தாவது பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் ராமானுஜரின் சந்நிதி உள்ளது. ஆனால் 120 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த அவர் தன் மெய்யுடலுடன் இன்றும் அங்கு இருந்து அருள் பாலிக்கிறார். அவரது உடல் ம்ருத சஞ்சீவினி மந்திரம் மூலம் நிலைத்திருக்கும் தன்மையுடன் இன்றும் உயிருடன் அந்த இடத்தில் இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். சந்தனமும் குங்குமமும் மட்டுமே இங்கு உபயோகப்படுத்தப்படுகிறது.

சுக்ர தோஷம் உடையவர்கள் அரங்கநாதரை தரிசித்தால் அந்த தோஷம் நீங்கி விடும் என ஜோதிட சாஸ்திரம் உறுதி கூறுகிறது. அரங்கநாதர் ஏற்கும் சந்தனமே சுக்ரனுக்கு உகந்த ஒன்று. அரங்கநாதர் பள்ளி கொள்வது வெண்மையான திருப் பாற்கடலில். வெண்மையான அனைத்தும் சுக்ரனுக்குப் பிடித்தவை. சுக்ரனுக்கு உகந்த பறவை கருடன். ஸ்ரீரங்கத்தில் பிரம்மாண்டமான கருட வாகனம் உள்ளது. ஸ்ரீரங்கத்தின் இன்னொரு பெயர் போக மண்டபம். போக காரகன் சுக்ரனே. இப்படி இன்னும் ஏராளமான அபூர்வமான உண்மைகள் சுக்ரனுக்கும் இந்த ஸ்தலத்திற்கும் உள்ள தொடர்பை விளக்குகின்றன! ஆகவே சுக்ர தோஷத்தை நீக்க அரங்கநாதர் வழிபாடே சிறந்த வழிபாடாகும்!

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கி வரும் அரங்கநாதர் அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.   நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்நாராயணா என்னும் நாமம்!      

நன்றி. வணக்கம்

tags- ஸ்ரீரங்கம் , ஆலயம்,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: