அஷ்டபதி பாடல்கள் அருளிய ஜெயதேவர் கதை (Post N0.9789)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9789

Date uploaded in London – –  –29 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 28-6-2021 அன்று ஒளிபரப்பான உரை!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

பாரத நாடு பல்லாயிரக்கணக்கான ரிஷிகளையும், மகான்களையும், அருளாளர்களையும், யோகிகளையும், இசையால் இறைவனை வழிபட்ட நாத உபாஸகர்களையும் பெற்ற நாடு. இவர்களில் ஜெயதேவ கோஸ்வாமி தனி இடத்தைப் பெறுகிறார்.

பஜனை சம்பிரதாயத்தில் இன்றளவும் இவரது அஷ்டபதி பாடல்கள் ஜீவத் தன்மையுடன் பாடப்பட்டு லக்ஷக்கணக்கானோருக்கு கிருஷ்ண பக்தியைத் தந்து கொண்டிருக்கிறது.

ஒரிஸா மாநிலத்தில் குர்தா மாவட்டத்தில் உள்ள பிராச்சி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கெந்துளிசாசன் என்ற இடத்தில் ஜெயதேவர் பிறந்தார். இவர் இயற்றிய இணையற்ற காவியம் கீத கோவிந்தம். இதில் கண்ணன், ராதை, ராதையின் தோழி ஆகிய மூன்று பாத்திரங்களே இடம் பெறுகின்றனர். ராதையின் தெய்வீகக் காதலை இசை வடிவமாக்கி அமைக்கப்பட்ட அழியாத அமிர்த காவியமாகும் இது. விரகதாபம் கிருஷ்ணபக்தியில் குழைய அதில் ஏற்படும் அற்புதமான கீத  கோவிந்தத்திற்கு இணையான இசைக் காவியம் இன்றளவும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. கீத கோவிந்தம் மஹா காவிய வரிசையைச் சேர்ந்தது.12 அத்தியாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு கீர்த்தனத்திலும் எட்டு சரணங்கள் உண்டு. அஷ்ட என்றால் எட்டு. ஆகவே இது அஷ்டபதி என்ற பெயரைப் பெற்றது.  ஜெயதேவர் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது தெரிய வருகிறது. லக்ஷ்மணசேனரின் அரசவைக் கவிஞராக இவர் இருந்து வந்தார்.

போஜதேவருக்கும் ரமாதேவிக்கும் அவர்கள் செய்த தவப்பயனாக ஜெயதேவர் அவதரித்தார். இளமையிலிருந்தே கிருஷ்ண பக்தியில் ஊறித் திளைத்த ஜெயதேவர் உண்மையான யோகியாக வாழவே விரும்பினார். தனது நண்பரான பராசரருடன் அருகில் இருந்த புரி நகருக்குச் சென்றார். அங்கு தியானம், நாம சங்கீர்த்தனம் என வாழ்க்கையைக் கழிக்க ஆரம்பித்தார். உஞ்சவிருத்தியில் கிடைத்த பிக்ஷையே அவரது ஆகாரமானது. அந்தச் சமயத்தில் சுதேவர் என்ற பிராமணர் புரி நகரில் வசித்து வந்தார். குழந்தைப் பேறு இல்லாத அவர் ஜகந்நாதரை வேண்டினார். பிறந்த குழந்தையை ஜகந்நாதருக்கே அர்ப்பணிப்பதாகவும் உறுதி கூறினார். அழகிய பெண் குழந்தை ஒன்று அவருக்குப் பிறந்தது. அந்தப் பெண் குழந்தைக்கு பத்மாவதி என்ற பெயரிட்டதோடு அதை ஜகந்நாதருக்கே அர்ப்பணித்தார். அன்று இரவே அவரது கனவில் ஜக்ந்நாதர் தோன்றி அவர் கொடுத்ததை ஏற்றுக் கொண்டதாகக் கூறினார். மகளை அவர் அருமையாக வளர்த்து வந்த போது ஜகந்நாதர் அவர் கனவில் தோன்றி பத்மாவதியை தனது பக்தனான ஜெயதேவருக்கு மணம் முடிக்கும் படி கூறினார். யார் அந்த ஜெயதேவர் என்று சுதேவர் தேட ஆரம்பித்து அவரைக் கண்டு பிடித்தார். இறைவனின் ஆணையைக் கூறினார். ஆனால் ஜெயதேவருக்கோ மண வாழ்க்கையில் ஆர்வமில்லை. ஆனால் சுதேவர் நடந்ததை எல்லாம் கூறிய போது ஜகந்நாதரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார் ஜெயதேவர். மணம் முடிந்தது. தன் சொந்த கிராமத்திற்குத் திரும்பினார் ஜெயதேவர். சில காலம் அங்கு தங்கி விட்டுப் பின்னர் யாத்திரை கிளம்பினார் ஜெயதேவர்.

இவரது வாழ்க்கையில் புல்லரிக்க வைக்கும் ஏராளமான அற்புத சம்பவங்கள் உண்டு. ஒடிஸா மன்னனான சாத்யகி ஒரு பெரும் கவிஞனும் கூட. அவன் ஜெயதேவரின் அஷ்டபதியையும் அதற்குள்ள கீர்த்தியையும் கண்டு பொறாமை கொண்டான். ஜெயதேவரை அழைத்து அவரது கீத கோவிந்தத்தையும் தனது கவிதைகளையும் இறைவன் முன் வைப்போம், எதை இறைவன் அங்கீகரிக்கிறானோ அதுவே உண்மையான கவிதை என்றான். அதன்படியே கீத கோவிந்தமும் மன்னனின் கவிதைகளும் இறைவனின் பாதத்தில் வைக்கப்பட்டு கர்பக்ருஹம் மூடப்பட்டது. மறுநாள் கோவிலுக்குச் சென்று பார்க்கையில் மன்னனின் கவிதைகள் கர்பக்ருஹத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்தது. ஜெயதேவரின் கீத கோவிந்தம் இறைவனின் திருக்கமல பாதங்களில் பிரகாசித்தது. மன்னன் உடனடியாக அவரை வணங்கி அவரைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டான்.

ஜெயதேவர் யாத்திரை மேற்கொள்ள விரும்பியதை அறிந்த மன்னன் அவருக்கு நிறைய பணத்தைக் கொடுத்தான். அதை அவர் விரும்பவில்லை. விஷம் போன்றது பணம் என்றார் அவர். மன்னனோ கேட்கவில்லை. ஆகவே மன்னன் தந்த பொருளை எடுத்துக் கொண்டு கிளம்பினார் அவர். அவரிடம் நிறைய பணம் இருந்ததை அறிந்து கொண்ட திருடர்கள் சிலர், தனிவழியில் அவர் செல்லும் போது அவரைத் தாக்கி அவர் கைகளையும் கால்களையும் வெட்டினர்; அவரை ஒரு கிணற்றில் தூக்கிப் போட்டு விட்டு, பணத்தைப் பறித்துக் கொண்டு ஓடினர். நல்ல வேளையாக கிணற்றில் தண்ணீரே இல்லை. ஜெயதேவர் மனமுருக இறைவனைத் துதிக்க ஆரம்பித்தார். அந்த வழியே வந்த அரசன் லக்ஷ்மணசேனன் அவரைக் காப்பாற்றி அவரைப் பற்றி முழுதுமாக அறிந்தான். தன் அரசவையில் பிரதான பதவியைத் தந்தான். ஒரு நாள் அரசவையில் ஒரு விழாவை ஒட்டி அனைவருக்கும் வேண்டியது தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஜெயதேவரிடம் பொருளைப் பறித்த திருடர்கள் பிராமணர் வேஷம் பூண்டு அங்கு வந்தனர்; ஜெயதேவரைப் பார்த்துத் திகைத்தனர். ஆனால் ஜெயதேவரோ அவர்களை மனதால் மன்னித்தது மட்டுமின்றி நிறையப் பணத்தை அவர்களிடம் கொடுத்து ஒரு படைத்தலைவனை சில வீரர்களோடு அவர்களின் பாதுகாப்பிற்காக அனுப்பினார். படைத்தலைவன் ஆவல் உந்த அந்த பிராமணர்களை நோக்கி எப்படி இப்படிப்பட்ட மகானின் தொடர்பு உங்களுக்குக் கிடைத்தது என்று கேட்டான். அதற்கு அந்தத் திருடர்கள், ‘நாங்கள் அனைவரும் ஒரு மன்னரின் கீழ் சேவை புரிந்து வந்தோம். நாங்கள் அங்கு அரசவையில் அதிகாரிகள். அவர் எங்கள் கீழ் பணி புரிந்தார். அவர் பல தீங்குகளைச் செய்தார். அதற்காக மன்னன் அவருக்கு மரணதண்டனை கொடுத்தான். அதிலிருந்து தப்பி அவர் இங்கு வந்து விட்டார். எங்களைக் கண்டு பயந்து விட்டார்” என்றனர். இந்த இமாலயப் பொய்யை அவர்கள் சொன்ன அந்தக் கணமே தரை பிளந்தது. அவர்கள் அதல பாதாளத்திற்குச் சென்று வீழ்ந்தனர். இதைக் கண்ட படைத்தலைவன் ஆச்சரியமுற்று நடந்ததை எல்லாம் மன்னரிடம் சொன்னான்.

இதைக் கேட்ட ஜெயதேவர் அந்தத் திருடர்களுக்காக மனம் உருகிக் கண்ணீர் சிந்தினார். அதே கணத்தில் அவரது கைகளும் கால்களும் வளர்ந்து முற்றிலும் பூரண குணத்தை அடைந்தன. எழில் வாய்ந்த ஜெயதேவரை தரிசித்த மன்னனின் ஆச்சரியம் பன்மடங்கானது. அவன் உண்மையை எல்லாம் அவரிடமிருந்து தெரிந்து கொண்டான். இப்படி ஏராளமான சம்பவங்கள் இறைவனின் திருவருளால் நிகழ்ந்து கொண்டே இருக்கவே, ஜெயதேவரின் புகழ் நாளுக்கு நாள் உலகெங்கும் பரவத் தொடங்கியது. மனமுருகி கிருஷ்ணபக்தியில் திளைத்த அவர் கீத கோவிந்தம் என்னும் மகத்தான கீத மஹாகாவியத்தை இயற்றினார். மக்கள் அவரை பக்த கவி என்று அழைக்கலாயினர்.                                                                       கீதகோவிந்தம் 24 அஷ்டபதிகளைக் கொண்டுள்ளது. இதில் 72 ஸ்லோகங்கள் உள்ளன. தெய்வீகமான இந்த கீதங்கள் இறைவனின் திருவாக்காகவே கொள்ளப்படுகிறது. உதாரணத்திற்கு ஒரு  அஷ்டபதியைச் சொல்லலாம். 19வது அஷ்டபதியில் வரும் வாக்கியங்கள் இவை:                      

स्मरगरलखण्डनं मम शिरसि मंडनं ஸ்மரகரல கண்டனம் மம சிரஸி மண்டனம் 
देहि पदपल्लवमुदारम् । தேஹி பதபல்லவமுதாரம்
ज्वलति मयि दारुणो मदनकदनारुणो ஜ்வலதி மயிதாருணோ மதனகதனாருணோ
हरतु तदुपाहितविकारम् ॥     ஹரது தத்பாஹிதவிகாரம்                                                                                கிருஷ்ணர் ராதையிடம்  கெஞ்சுகிறார் இப்படி:-  மன்மதனின் விஷத்தை நான் அருந்தி விட்டேன். தாபத்தால் நான் எரிந்து கொண்டிருக்கிறேன். நான் உனது மலர்ப்பாதங்களில் எனது சிரசை வைக்கிறேன். அதுவே எனது அனைத்து உபாதைகளுக்கும் தீர்வைத் தரும்.

கீதத்தை இயற்றிவிட்டாலும் கூட ஜெயதேவருக்கு அவரது வாக்கியங்கள் சற்று மனதை உறுத்தின. மகோன்னதமான அவதாரமான கிருஷ்ணர் ஒரு கோபிகையிடம் இப்படிக் கெஞ்சுவாரா? கெஞ்சுவதும் முறையோ! சீச்சீ, தப்பாக எழுதி விட்டேன் என்று அவர் மனம் நொந்தார்.  உடனே ஓலைச் சுவடியிலிருந்து அதை அழித்து நீக்கினார். அப்போது தான் மனம் சற்று சாந்தியை அடைந்தது. படுக்கச் சென்றார். மறுநாள் காலையில் ஓலைச் சுவடியைப் பிரித்துப் பார்த்த போது அழகாக அது அப்படியே இருந்தது. திகைத்துப் போன ஜெயதேவர் ஓலைச் சுவடியை நெருப்பில் காட்டினார்.நெருப்பில் சுவடி எரியவே இல்லை. கிருஷ்ணரின் திருவுள்ளத்தை அறிந்து கொண்ட ஜெயதேவர் தெய்வீக விளையாட்டில் தான் ஒரு சிறு கருவியே என்பதை உணர்ந்து கண்ணீர் பெருக்கினார். 

இந்த அஷ்டபதியைப் பற்றி இன்னும் ஒரு செய்தியும் கூறப்படுகிறது. 19ஆம் அஷ்டபதியை ஆரம்பித்த ஜெயதேவர், ஸ்மரகரல கண்டனம் மம சிரஸி மண்டனம் வரை எழுதினார். அதற்குப் பின்னர் வார்த்தைகள் தடைப்பட்டு நின்று விட்டன. அவரை ஆற்றில் குளித்து விட்டு வருமாறு கூறினார் பத்மாவதி. அவரும் சுவடியைக் கீழே வைத்து விட்டுக் கிளம்பினார். சிறிது நேரத்தில் உள்ளே நுழைந்த அவர் அஷ்டபதியைத் தொடர்ந்து எழுத ஆரம்பித்து தேஹி பதபல்லவமுதாரம் என்று எழுதி விட்டு வெளியில் சென்றார். சிறிது நேரத்தில் அங்கு வந்த ஜெயதேவர் தனது சுவடியைத் தருமாறு கேட்க, “இப்பொழுது தானே வந்து எழுதினீர்கள்” என்று பத்மாவதி கூற சுவடியைப் பார்த்த ஜெயதேவர் திகைத்துப் போனார் ‘தேஹி பதபல்லவமுதாரம்’ என்ற வரியைப் பார்த்து அதை எழுதியருளியது கிருஷ்ணரே என்பதை உணர்ந்து கிருஷ்ணரின் தெய்வீக விளையாடலால் ஆனந்தம் கொண்டார். தனக்குக் கிடைக்காத கிருஷ்ண தரிசனம் தனது மனைவிக்குக் கிடைத்ததை எண்ணி அவர் ஆனந்தப்பட்டார்; பத்மாவதி தேவியும் பக்தியால் உருகினார்.

ஜெயஜகதீச ஹரே என்ற அஷ்டபதியில் பத்து அவதாரங்களையும் அவர் விவரிக்கிறார். ஒவ்வொரு அவதாரமும் அவர் அகக்கண்ணில் தோன்ற அதை அப்படியே கீதமாக இசைத்தார். ஒவ்வொரு அஷ்டபதிக்கும் உரிய ராகம் ஒன்று உண்டு. அந்த பத்ததி அப்படியே இன்று வரை பின்பற்றப்பட்டு வருகிறது.    

ஜெயதேவருக்கு ஏற்ற பத்தினியாக பத்மாவதி திகழ்ந்தார். ராணியிடன் அந்தரங்கமாக அவர் பழகி வந்தார். ஒருமுறை அவருடன் பேசிக் கொண்டிருக்கையில் ராணி கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறும் சதியே சிறந்தவள் என்ற தனது கருத்தைச் சொல்ல அதை பத்மாவதி உடனே மறுத்தார். கணவன் இறந்தார் என்ற சேதியைக் கேட்ட அந்த மாத்திரத்திலேயே உயிரை விடுபவள் அல்லவா உண்மை சதி என்று பத்மாவதி தன் கருத்தைக் கூற ராணிக்குச் சற்று பொறாமை ஏற்பட்டது.

ஒருநாள் அவர் பத்மாவதியிடம் முதலைக் கண்ணீர் வடித்து அவரது கணவர் ஜெயதேவர் காட்டிலே மிருகங்களால் கொல்லப்பட்டார் என்று கூறினார். அதைக் கேட்ட அந்தக் கணமே பத்மாவதி தன் உயிரை விட்டார். இதைப் பார்த்த ராணி திகைத்துப் போனார். என்ன செய்வது என்று தெரியாத நிலையில் ஜெயதேவரையும் மன்னரையும் அழைத்து வருத்தத்துடன் உண்மையைக் கூறினாள். ஜெயதேவர் சற்றும் கலங்கவில்லை. நான் தான் உயிரோடு இருக்கிறேனே, அது தெரிந்தால் அவள் உயிருடன் எழுவாள் என்று கூறி கிருஷ்ணரை நோக்கி மனமுருகப் பிரார்த்தித்தார். அஷ்டபதியைப் பாட ஆரம்பித்தார். பின்னர் மனைவியை அழைக்க, அவர் எழுந்தார். ராணியின் வேதனையைப் போக்கியதால் அவர் மிகவும் மகிழ்ந்தார்.

கங்கையில் தினமும் குளிக்கும் பழக்கமுடைய ஜெயதேவருக்கு வயதான காலத்தில் கங்கா நதிக்குச் செல்ல முடியவில்லை. ஆனால் கங்கையே பாய்ந்து வந்து அவரது வீட்டிற்கு அருகில் வந்தாள் என்று கூறப்படுகிறது.

இறுதி காலத்தில் பிருந்தாவனம் சென்ற அவர் அங்கேயே கிருஷ்ணருடன் ஐக்கியமானார்.

இசை நாடகமாகவும், ராதா கல்யாணங்களில் பாடப்படுவதாகவும் உள்ள அஷ்டபதிகளின் பெருமை இசைக் கலைஞர்களுக்கும் நாட்டியக் கலைஞர்களுக்கும், பஜனைஉற்சவம் செய்வோருக்கும் சாமான்யர்களுக்கும் இஷ்டமான ஒன்று. சந்தன சர்சித நீல  களேபர எனத் தொடங்கும் அஷ்டபதி நாடெங்கும் பிரசித்தமான ஒன்று. 19ம் அஷ்டபதி சஞ்சீவி அஷ்டபதி என்று அழைக்கப்படுகிறது. இதைப் பாடினால் நோய் அனைத்தும் தீரும் என்பது அனுபவ பூர்வமான உண்மை. ராதா வதன எனத் தொடங்கும் 22ஆம் அஷ்டபதி கல்யாண அஷ்டபதி என்று கூறப்படுகிறது.ராதை என்ற ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்றுவதை இசைக்கும் கீதம் இது.

24 அஷ்டபதிகளும் கிரமம் மாறாமால் இன்றும் ஆயிரக்கணக்கான இல்லங்களில் ஒலிக்கப்பட்டு வருகிறது. ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் புதுக்கோட்டை ப்ரஹ்ம ஸ்ரீ கோபால கிருஷ்ண பாகவதர் அஷ்டபதி இசைக்கப்படும் ராதா கல்யாணத்தை வெகுவாகப் பல இடங்களிலும் பரப்பியவர்களுள் முக்கியமானவர். இன்றும் ஆயிரக்கணக்கான இடங்களில் கீத கீத கோவிந்தம் பாடப்படுகிறது; அதைக் கேட்போர் கிருஷ்ணரின் திருவடியை நிச்சயமாகச் சேரும் பாக்கியவான்களே!

ஜயது ஜயது ஜயதேவ! நன்றி வணக்கம்!

tags – Tags- அஷ்டபதி பாடல்கள் ,ஜெயதேவர் , கீத கோவிந்தம்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: