
Mahalakshmi Temple in Mumbai
Post No. 12,006
Date uploaded in London – – 16 May , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
மஹாராஷ்டிர மாநில புனிதத் தலங்களைத் தொடர்ந்து காண்போம்.
மும்பை நகரத்தில் மட்டுமே இருபது புகழ்மிகு இந்துக் கோவில்கள் உள்ளன. இதோ அவற்றின் பெயர்கள் :-
1.சித்தி விநாயகர் கோவில்
2.மகாலெட்சுமி கோவில்
3.மும்பாதேவி கோவில்
4. குட்டி சபரிமலை கோவில்
5. ஹரே கிருஷ்ணா கோவில் கோவில்
6.வைஷ்ணவ தேவி கோவில்
7.பாபுல்நாத் சிவன் கோவில்
8.வாகேஸ்வரர் சிவன் கோவில்
9.ராதா கோபிநாத் கோவில்
10.பாலாஜி/ வெங்கடேஸ்வரா கோவில்
11.சுவாமிநாராயண் கோவில்
12.பிரபாதேவி கோவில்
13.கண்டேஸ்வரர் ஹனுமான் கோவில்
14.இச்சாபுரி கணேஷ் கோவில்
15.ஆர்ய சமாஜ் கோவில்
16.சிருங்கேரி மடம் கோவில்
17.சுவர்ணா கோவில்
18.ஸஹர் ஐயப்ப சிவா பார்வதி கோவில்
19.BAPS சுவாமிநாராயண கோவில்
20.சமணர் கோவில் (Jain Temple)
மும்பை அருகிலுள்ள எலிபெண்டா தீவு குகைக் கோயில் மற்றும் மேலே குறிப்பிட்ட பாபுல்நாத், வாகேஸ்வரர் சிவன் கோவில்களை ஏற்கனவே தரிசித்தோம் (இதே தொடரில் முந்தைய பகுதிகளைக் காண்க)
இப்பொழுது முக்கிய கோவில்களை மட்டும் தரிசிப்போம்.
பகுதி 15
100 ஆண்டுகளுக்கு முந்தைய புஸ்தகங்களைப் பார்த்தால் இப்போதுள்ள புகழ்மிகு கோவில்களின் பெயர்களே இரா. அப்போது அவைகள் பிரசித்தமாகவில்லை அல்லது கட்டப்படவே இல்லை என்று பொருள்.

61..மும்பா தேவி கோவில்
மும்பை என்ற பெயருக்கே காரணமாக அமைந்த மிகப்பழைய கோவில் இது. துர்கா தேவியின் வேறு பெயர் மும்பா தேவி. மதுரைக்கு மீனாட்சி, காஞ்சிக்குக் காமாட்சி, காசிக்கு விசாலாக்ஷி என்பது போல ஒவ்வொரு ஊருக்கும் உரித்தான கடவுள் உண்டு. அவ்வகையில் மும்பை நகரின் தெய்வம் மும்பா தேவி . விவசாயிகளும், மீனவர்களும், சந்திர வம்ச க்ஷத் ரியர்களும் காலா காலமாக வழிபடும் தெய்வம் அவள் . தற்போதைய கட்டிடங்கள் 1675-ம் ஆண்டு கட்டப்பட்டவை. ஒரு மேடை மீது காட்சி தரும் தேவிக்கு கிரீடம், நகைகள் ஆகியன அழகு சேர்க்கின்றன. கருங்கல்லிலான தேவிக்கு முகத்தில் ஆரஞ்சு வர்ணம் பூசப்பட்டுள்ளது கோவிலுக்குள் பிற தெய்வச் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. செவ்வாய் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை திறந்திருக்கும் இக்கோவிலுக்கு செவ்வாயன்று நிறைய பக்தர்கள் வருகின்றனர்.
Xxx

62.சித்தி விநாயகர் கோவில்
பிள்ளையார், எல்லா இந்துக்களுக்கும் முதற் கடவுள் என்ற போதிலும் மஹாராஷ்டிர மக்களுக்கு தேசீய கடவுளும் ஆகும். வங்காளத்தில் துர்கா பூஜை போல மஹாராஷ்டிரத்தில் கணேஷ் சதுர்த்தி ஒரு வாரத்துக்குக் கொண்டாடப்படும். மும்பை நகர சித்தி விநாயகருக்குக் கூடுதல் சிறப்பு என்னவென்றால் பாலிவுட் நடிகர் நடிகையரும் அரசியல்வாதிகளும் வருகை தந்து கோவிலின் பெருமையை உயர்த்திவிட்டனர் ; எல்லோருக்கும் வரம் தரும் சக்தி உடையவர் என்பது இதன் பொருள். 1801-ம் ஆண்டில் கட்டப்பட்டது.
இங்குள்ள பிள்ளையார் வலம் சுழி பிள்ளையார் இந்த மாநிலத்தின் பெரிய வரும்படி தரும் கோவில்களில் இதுவும் ஒன்று. அந்தக் காலத்திலேயே ஆண்டு வருமானம் 25 கோடிரூபாய் . கோவிலின் மரக்கதவுகளில் பல தெய்வ உருவங்களைக் காணலாம் . தங்கத் தகடுகளுக்கு இடையே கர்ப்பக்கிரகம் ஜொலிக்கும். அதிகமான பக்தர்கள் வரும் கோவில் இது.
Xxx
63.மகாலெட்சுமி கோவில்
மும்பை நகருக்குச் செல்லுவோர் சித்தி விநாயகர் கோவிலையும் மஹா லக்ஷ்மி கோவிலையும் தரிசிக்காமல் வர மாட்டார்கள். உலகின் செல்வச் செழிப்பு மிக்க நகர்களில் பம்பாயும் ஒன்று. இதற்குக் காரணம் மஹாலெட்சுமியும் மும்பா தேவியும் என்பது மக்களின் நம்பிக்கை இந்து சமய வணிகர் தாக்ஜி தாதாஜி இந்தக் கோவிலை 1831ம் ஆண்டில் கட்டினார் இங்கு மூன்று தேவிகள் காட்சி தருகின்றனர். மகாலெட்சுமியானவள் கைகளில் தாமரை மலர்களை ஏந்தி நிற்கிறாள்; மஹா காளியும் மஹா ஸரஸ்வதியும் இருபுறங்களில் நிற்கிறார்கள் . மூவரும் தங்க வளையல்கள், மூக்குத்திகள், இரத்தின மாலைகளுடன் ஜொலிக்கின்றனர் வசந்த காலத்தில் வரும் நவராத்திரியும் ஆஸ்வீன மாத பெரிய நவராத்ரியும் (தமிழக கணக்குப்படி புரட்டாசி நவராத்ரி) மிகப்பெரிய பண்டிகைகள் . கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் எல்லாம் மின்விளக்குக்களால் அலங்கரிக்கப்படுகிறது.
இந்தக்கோவில் பற்றி செவி வழிக் கதைகளும் உலவுகின்றன. பிரிட்டிஷ் கவர்னர் ஹார்ன்பி என்பவர் வோர்லி, மலபார் என்னும் இரண்டு இடங்களை இணைக்க ஒரு கடற் பாலம் கட்டுவதற்குத் திட்டமிட்டு அந்தப் பணியை ராம்ஜி ஷிவ்ஜி பிரபு என்ற தலைமை என்ஜினீயரிடம் ஒப்படைத்தார். ஆனால் பாலம் கட்ட முடியாதபடி பல இடையூறுகள் தலையெடுத்த வண்ணமிருந்தன. ஒரு நாள் ராம்ஜியின் கனவில் மகாலெட்சுமி தோன்றி, தான் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடப்பதைத் தெரிவித்தாள். முஸ்லீம் படை எடுப்பாளர்களால் கடலுக்குள் தூக்கி எறியப்பட்டிருந்த சிலைகளை ராம்ஜி மீட்டு, கோவில் கட்ட வழிவகை செய்தார் . பின்னர் பாலம் கட்டும் பணி இனிதே நிறைவேறியது . ஒரு குன்றின் மீது அமைந்த இந்தக்கோவில், இன்று ஏராளமான பக்தர்களைக் கவர்ந்து இழுக்கிறது.
Xxx
64..ஹரே கிருஷ்ணா கோவில்
ஹரே கிருஷ்ணா ( ISKCON ) இயக்கத்தை துவக்கிய பக்தி வேதாந்த பிரபுபாதா இந்தக் கோவிலுக்கு அஸ்திவாரமிட்டார் கிருஷ்ண பரமாத்மா , ராதா தேவி உருவங்களுடன் கிருஷ்ண லீலைகளும் இங்கே இருக்கினறன. கோவிலின் சிறப்பு என்னவென்றால் மான், மயில்,,குரங்கு, பசுக்கள் ஆகியன அவற்றின் இயற்கைச் சூழ்நிலையில் இங்கே திரிகின்றன . ஜன்மாஷ்டமி விழாக்காலத்தில் பெரிய பக்தர் கூட்டம் காணப்படும் . கையினால் வரையப்பட்ட கிருஷ்ண லீலை ஓவியங்கள் , கண்களுக்கு விருந்தாக அமைகின்றன.
XXX
65.பாலாஜி – வெங்கடேச்வர சுவாமி கோவில்

பாலாஜி கோவில், தமிழ்நாட்டு கோபுரம் போல பெரிய உயரமான கோபுரத்துடன் திகழ்கிறது. ஏனைய மராட்டிய கோவில்களின் தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது . Nerul நெருள் ரயில் நிலையத்துக்கு அருகில் குன்றின் மேல் அமைந்த இந்தக் கோவில், பக்தர்களுக்கு திருப்பதியை நினைவுபடுத்தும். தென்னிந்திய மக்களைக் கவர்ந்து இழுக்கும் கோவிலுக்குள் ராமானுஜர், ருக்மிணி , லட்சுமி, ராம , லட்சுமண, ஹனுமான் சந்நிதிகளும் இடம்பெற்றுள்ளன 60 அடி உயர கோபுரமும், உள்ளே அமைந்த நந்தவனமும் (தோட்டமும்) கோவிலுக்கு அழகு சேர்க்கின்றன .
XXX
66. சுவாமி நாராயணர் கோவில்
சுவாமி நாராயண பக்தர்களில் இரண்டு பிரிவினர் இருக்கின்றனர். அவர்கள் தனித்தனியே கோவில்களைக் கட்டி வழிபடுகின்றனர். இந்த சுவாமி நாராயண கோவில் மிகவும் பழமையானது சுவாமி நாராயண சம்பிரதாயத்தினர்ன் நடத்ததும் இக்கோவில் 1903ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது சுவாமி நாராயணனுடன், கிருஷ்ணா, லட்சுமி நாராயணன், ராதா, கணஷ்யாம் சிலைகளும் அலங்கரிக்கின்றன ஜன்மாஷ்டமி , ராம நவமி பண்டிகை காலங்களில் பக்தர்கள் பெருமளவில் வருகை புரிகின்றனர்.
XXX
67. குட்டி சபரிமலை
கனிஜூர்மங் என்னும் இடத்தில் மலை மீது அமைந்த குட்டி சபரிமலை கோவிலில் ஐயப்ப சுவாமி, சபரி மலை போலவே அமர்ந்துள்ளார். கேரளத்திலுள்ள ஐயப்பன் கோவிலை நினைவுபடுத்தினாலும், ஒரு பெரிய வித்தியாசம் இந்தக் கோவிலுக்கு எப்போதும் வரலாம்.செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் விசேஷ பூஜைகள் நடை பெறுகின்றன.. இப்போது கோவில் இருக்கும் இட்டத்திற்கு அருகில் பெரிய தேவி கோவில் இருந்தது. வெளிநாட்டு இந்து விரோதக் கும்பல்கள் அதை அழித்தன . இப்போதும் பாழடைந்த கோவில் பகுதிகளைக் காணலாம். அதன் அருகில் ஐயப்ப சுவாமி கோவில் தற்காலத்தில் கட்டப்பட்டது.
XX
68. மாதா வைஷ்ணவ தேவி கோவில்
ஜம்மு காஷ்மீரின் ஜம்மு பகுதியில் இருக்கும் வைஷ்ணோ தேவி கோவில் உலகப் பிரசித்தி பெற்ற பெரிய தலம் . அந்தக் கோவில் ஒரு குகைக்குள் இருப்பதால் ஊர்ந்து சென்றுதான் கோவிலுக்குள் நுழைய முடியும். அதே பாணியில் மும்பை நகர வைஷ்ணவ தேவி கோவில் அமைக்கப்பட்டுள்ளது . நகரின் நடுப்பகுதியில் இருக்கிறது. இந்தக் கோவில் மாறுபட்ட புதிய அனுபவத்தை நல்கும் இடமாகத் திகழ்கிறது
(ஏனைய மும்பை நகர கோவில்களின் விவரத்தை அறிய அந்தந்த இணை ய தளத்துக்குச் செல்லவும்)
தொடரும்……………………………….
Tags- சித்தி விநாயகர் கோவில் ,மகாலெட்சுமி கோவில் ,மும்பாதேவி கோவில் , மும்பை நகர கோவில்கள்