ராமாயணத்தில் வரங்கள் (35) சுரஸா தேவிக்கு பிரம்மா வரம் அருளியது! (Post.15,406)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,406

Date uploaded in London – 8 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் வரங்கள் (35)    

ராமாயணத்தில் வரங்கள் (35) சுரஸா தேவிக்கு பிரம்மா வரம் அருளியது!

ச. நாகராஜன் 

அடுத்து சுந்தரகாண்டத்தில் முதல் அத்தியாயத்தில் இன்னொரு வரம் பற்றிய விவரத்தைப் பார்க்கிறோம்.

மைநாக மலையிடமிருந்து விடை பெற்ற ஹனுமார் வேகமாகப் பறந்து செல்லலானார்.

அப்போது தேவர்கள் சர்ப்பங்களுக்குத் தாயான சுரஸையைப் பார்த்து,

“நீ கோரமான ராக்ஷஸ உருவத்தை எடுத்துக் கொண்டு ஒரு முகூர்த்த நேரம் ஹனுமாருக்கு இடைஞ்சல் செய்; உன்னை அவர் உபாயத்தினால் வெல்கிறாரா அல்லது துன்பத்தை அடைகிறாரா என்று பார்க்க விரும்புகின்றோம். அவரது வலிமையையும் ஆண்மையையும் மறுபடியும் பார்க்க விரும்புகிறோம்” என்றனர். 

உடனே சுரஸா தேவி பயங்கரமான ராக்ஷஸ வடிவை எடுத்துக் கொண்டு ஹனுமார் முன்னால் தோன்றினாள்.

அவரைப் பார்த்துக் கூறலானாள். 

மம பக்ஷய: ப்ரதிஷ்டஸ்த்வமீ ஈஸ்வரைர்வானரர்ஷப:\

அஹம் த்வாம் பக்ஷயிஷ்யாமி ப்ரவிசேஷம் மமாநதம் || 

சுந்தரகாண்டம், முதல் அத்தியாயம், ஸ்லோக எண் 161

வானரர்ஷப: – ஓ! வானரோத்தம!

த்வம் ஈஸ்வரை: – நீ தேவர்களாலே

மம பக்ஷய: – எனக்கு இரையாக

ப்ரதிஷ்ட: – நியமிக்கப்பட்டாய்

அஹம் – நான்

த்வாம் – உன்னை

பக்ஷ்யிஷ்யாமி – தின்னப் போகிறேன்

மம – என்னுடைய

இதம் ஆனனம் – இந்த வாய்க்குள்

ப்ரவிஷ: – புகுவாயாக 

அப்ரவீன்னாதி வர்தேன்யாம் கஸ்சிதேஷ வரோ மம |

சுந்தரகாண்டம், முதல் அத்தியாயம், ஸ்லோக எண் 167

கஸ்சித் – ஒருவரும்

மாம் – என்னை

ந அதிவர்ததே – கடந்து செல்லக் கூடாது

ஏஷ – இது

மம – எனது

வர: – வரம்

அப்ரவீத் – என்று (சுரஸை) சொன்னாள் 

ப்ரவிஷ்ய வதனம் மேத்ய கந்தவ்யம் வானரோத்தம | 

வானரோத்தம – வானரோத்தம!

மே வதனம் – எனது வாயில்

ப்ரவிஷ்ய – புகுந்து விட்டு

அத்ய – இப்போது

கந்தவ்யம் – போக வேண்டும் 

வர ஏவ புரா தத்தோமம தாத்ரேதி சத்வரா |

வ்யாதாய வக்த்ரம் விபுலம் ஸ்திதா ஸா மாருதே: புர: || 

சுந்தரகாண்டம், முதல் அத்தியாயம், ஸ்லோக எண் 169

  ஏஷ – இது

புரா – முற்காலத்தில்

தாத்ரா – பிரம்மாவினால்

மம – எனக்கு

தத்த: வர: – கொடுக்கப்பட்ட வரம்

இதி – என்ற

வாக்யம் – சொல்லை

மாருதே: – ஹனுமாருக்கு

புர: – எதிரில்

ஸ்திதா – நின்று கொண்டு

ஸா – அவள் தனது

வக்த்ரம் – வாயை

சத்வரா – வேகமாக

விபுலம் – மிகப் பெரியதாய்

வ்யாதாய – திறந்து கொண்டு

அப்ரவீத் – சொன்னாள்

இதைக் கேட்ட ஹனுமார் கோபம் கொண்டார். எப்படி விழுங்க நினைக்கிறாயோ அப்படியே வாயைத் திறந்து கொள் என்றார். பிறகு அவர் பத்து யோஜனை அளவு வளர்ந்தார். சுரஸையோ தனது வாயை இருபது யோஜனை அகன்றதாகச் செய்தாள். ஹனுமார் உடனே முப்பது யோஜனை அளவு வளர்ந்தார். சுரஸையோ தனது வாயை நாற்பது யோஜனை அகன்றதாகச் செய்தாள். இருவரும் இப்படி மாறி மாறி பெரிய உருவை எடுக்க ஸுரஸை நூறு யோஜனையாக மாறிய அளவில் ஹனுமார் திடீரென்று சுருங்கி அங்குஷ்ட பிரமாண வடிவை எடுத்து அவள் வாயில் புகுந்து மீண்டு வெளியில் வந்தார்.

உடனே சுரஸா தேவி தன் சுய ரூபத்தை எடுத்து ஹனுமாரை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தாள்.

சுரஸா எப்படி எப்போது எதற்காக பிரம்மாவிடமிருந்து வரம்  பெற்றாள் என்ற விவரம் இங்கு சொல்லப்படவில்லை;

** 

Leave a comment

Leave a comment