

Written by London Swaminathan
Post No. 15,580
Date uploaded in London – 5 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
English version was posted yesterday; here is the Tamil version:
கனகாபிஷேகம்
கனகாபிஷேகம் என்பது 90 அல்லது 100 வயது நிறைவடைந்த தம்பதிகளுக்கு, தங்கக்காசுகளால் அபிஷேகம் செய்து, நடத்தப்படும் ஒரு விழா.
பொருள்: ‘கனகம்’ என்றால் தங்கம். தங்கக் காசுகளால் தம்பதியர் மீது அபிஷேகம் செய்வது.
காலம்: பொதுவாக 90-வது , சில சமயங்களில் 100-வது வயதிலும் இந்த விழா நடத்தப்படுகிறது.
ஞானிகள் அல்லது கலைஞர்களுக்குத் தங்கக் காசுகளால் செய்யப்படும் ஒரு சிறப்பு கௌரவ நிகழ்வாகும்.
சிவார்க்க மணி தீபிகை என்ற நூலை அப்பைய தீட்சிதர் இயற்றினார்; அதனால் மகிழ்ந்த சின்னபொம்ம நாயக்கர், தீக்ஷிதருக்கு கனகாபிஷேகம் செய்தார். அந்தப் பணத்தைக் கொண்டு அவர் பார்வதி சமேத ஸ்ரீ காலகண்டேஸ்வரர் ஆலயத்தை அடையபலத்தில் நிறுவினார்.
60 வயதில் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயதில் சதாபிஷேகம், 90 வயதில் கனகாபிஷேகம் கொண்டாடப்படுகின்றன.
அப்போது அந்தப் பெரியவர்களிடம் அனைவரும் ஆசீர்வாதம் பெறுவார்கள் ; காஞ்சி பரமாசார்ய சுவாமிகளுக்கு நடந்த கனகாபிஷேகத்தை நமது காலத்தில் பலரும் நேரில் கண்டார்கள்; இப்போதும் வீடியோ மற்றும் யூ ட்யூபில் காணலாம்.
***
கேனோபநிஷத்
கேனோபநிஷத், சாமவேதத்தைச் சேர்ந்த உபநிஷத் ஆகும்., தலவாகர உபநிஷத் என்றும் இதற்குப் பெயர். ‘கேன’ (எவரால்) என்ற கேள்வியுடன் தொடங்கும் ஒரு முக்கியமான உபநிஷத் . ‘கேன’ என்றால் ‘எவனால்’ அல்லது ‘யாரால்’ என்று பொருள். மனம், வாக்கு மற்றும் புலன்கள் யாருடைய சக்தியால் இயங்குகின்றன என்ற கேள்வியுடன் இது துவங்குகிறது.
இது நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு பகுதிகள் பிரம்மத்தின் இயல்பை விளக்குகின்றன, அடுத்த இரண்டு பகுதிகள் தேவர்களின் வெற்றி மற்றும் ‘யக்ஷ தரிசனம்’ (தெய்வீக தரிசனம்) கதையின் மூலம் ஞானத்தை உணர்த்துகின்றன.
கண்களால் பார்க்க முடியாத, ஆனால் கண்களுக்குக் கண், காதுக்குக் காது, மனதிற்கு மனம் என எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கும் அந்த பரப்பிரம்மமே உண்மையான இறைவன் என இது போதிக்கிறது. ஆதிசங்கரர் மற்றும் மத்வர் ஆகியோர் இந்த உபநிஷத்திற்கு உரைகள் எழுதியுள்ளனர்.
***
கேது கிரஹம்
உண்மையில் கிரகம் அல்ல ; வானத்தில் காண முடியாது; சாயா / நிழல் கிரகம் ஆகும் .
புனிதத் தலங்கள்: கேது – கீழப்பெரும்பள்ளம் – திருத்தொலைவில்லி மங்கலம். ராகு-கேது தோஷ நிவர்த்திக்காக, காளஹஸ்தி போன்ற தலங்களுக்கும் செல்லலாம்.
Astronomically, Ketu and Rahu denote the points of intersection of the paths of the Sun and the Moon as they move on the celestial sphere.
சூரியனும் சந்திரனும் சுற்றும் பாதைகளில் (கோடுகள்) ஒன்றை ஒன்று வெட்டும் இடம் இது .
கேது, பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய சுவர்பானு என்ற அசுரனின் உடற் பகுதியாகும். மோகினி வடிவில் வந்த விஷ்ணு, அமுதம் அருந்திய அசுரனின் தலையை வெட்டியபோது, உடற்பகுதி கேதுவாகவும், தலைப்பகுதி ராகுவாகவும் மாறியது.
கேது சர்ப்பத்தின் தலையையும், மனித உடலையும் கொண்டதாக சித்தரிக்கப்படுகிறது. கேதுவின் அதிதேவதை கணேசர்
ஜோதிடத்தில் துறவு, மோட்சம், ஆன்மீகம் மற்றும் உலகியல் பற்றற்ற தன்மையுடன் கேது தொடர்புடையது. ஒருவரின் ஜாதகத்தில் கேது வலுவாக இருந்தால், அவர் சிறந்த அறிவாளியாகவும், தத்துவ ஞானியாகவும் அல்லது மருத்துவத் துறையில் வல்லுநராகவும் திகழ்வார் .
பொதுவான அர்த்தம்– கொடி, வால் நட்சத்திரம்.
***

கீசகன்
பீமனால் கொல்லப்பட்ட விராட தேச படைத்தலைவன்.
விராட தேச ராணி சுதேஷ்ணையின் சகோதரன். மல்யுத்தத்தில் வல்லவன், பாண்டவர்களின் ஓராண்டு மறைவு வாழ்க்கையின் போது (அஞ்ஞாதவாசம்), திரௌபதி மாறுவேடத்தில் சைரந்திரி என்ற பெயருடன் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தாள். அவளைத் தவறான முறையில் கீசகன் அணுகியவுடன் பீமனுடன் சேர்ந்து திட்டம் போட்டாள்; இரவு நேரத்தில் தனியிடத்துக்கு வருமாறு சொல்லவே அவன் ஆசையுடன் வந்தான் .அங்கே படுத்திருந்த பீமனை திரௌபதி என்று எண்ணி அணுகியபோது பீமன் அவன் மீது பாய்ந்து சண்டையிட்டுக் கொன்றான்
***
கோலாட்டம் / கும்மி


தென் இந்தியாவில் பெண்கள் ஆடும் நாட்டுப்புறக் கலை. பெண்கள் வட்டமாக நின்று ஒருவருடன் ஒருவர் கோல் எனும் குச்சிகளை அடித்து பாடிக்கொண்டே சுற்றுவார்கள் கும்மி என்பதில் குச்சிகளுக்குப் பதிலாக கைகளை ஒருவருடன் ஒருவர் தட்டுவார்கள் அப்போது பாட்டும் தாளமும் இருக்கும் ; பொதுவாக தெய்வீக இந்துசமய கிராமீயக் கலை இது ; கோவில் திரு விழாக்கள்லங்களிலும் சம்பிரதாய பஜனைகளிலும் இன்றும் இடம்பெறுகிறது ; பெரும்பாலும் மார்கழி மாதத்தில் நடைபெறுகிறது.
குஜராத்திலும் டாண்டியாயென்ற பெயரில் நவராத்ரி காலத்தில் கோலாட்டம் ஆடுகிறார்கள் ; ராஜஸ்தானிலும் கோலாட்டம் உண்டு; தண்ட , கோல் என்ற இரண்டு சொற்களுக்கும் கம்பு, குச்சி என்றே பொருள்.
***
கோவலன் / கண்ணகி
சிலப்பதிகாரம் என்னும் தமிழ் காப்பியம் கோவலன் / கண்ணகி கதையை எடுத்துரைக்கிறது; கோவலனும் கண்ணகியும் காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த இரு பெரும் வணிகர்களின் புதல்வனும் புதல்வியும் ஆவார்கள் ; இருவரும் தீ வலம் வந்து இந்து சம்பிரதாயப்படி கல்யாணம் செய்துகொண்ட பின்னர் கோவலன், மாதவி என்னும் ஆடலரசியின் வலையில் வீழ்கிறான் ; பின்னர் கண்ணகியிடம் வந்தபோது , அவளும் கணவனே கண் கண்ட தெய்வம் என்று ஏற்று புதிய வாழக்கை நடத்துவதற்காக மதுரைக்குச் செல்கிறார்கள் ; சாப்பாட்டுக்கு வழி தேடுவதற்காக கண்ணகி தன்னுடைய கால் சிலம்பினைக் கொடுக்கவே அவன் மதுரைக் கடைத்தெருவுக்குச் செல்கிறான்; அங்கே ராணியின் கால் சிலம்பினைத் திருடிய பொற்கொல்லன், கோவலனைத் திருடன் என்று பொய் சொல்லி பாண்டிய மன்னன் முன் நிறுத்தவே அவன் விசாரணை செய்யாமல் கோவலனுக்கு மரண தண்டனை கொடுத்துவிடுகிறான்; இதை அறிந்த கண்ணகி சீறி எழுந்து மன்னர் அரசவைக்குள் புகுந்து தன்னுடைய சிலம்பில் மாணிக்கம் இருக்கும் , ராணி சிலம்பில் முத்துக்கள் இருக்கும் என்று சொல்லி சிலம்பினை உடைக்கிறாள்; மன்னனும் ராணியும் தவறை உணர்ந்து மாரடைப்பில் செத்து விழுகிறார்கள்; கண்ணகி தன்னுடைய ஒரு முலையைத் திருகி எறிந்து மதுரையில் உள்ள தீயோரை மட்டும் அழிக்க அக்கினி தேவனுக்கு கட்டளை இடுகிறாள்; பின்னர் சேர நாட்டுக்குச் சென்று கோவலனுடன் விமானத்தில் தேவலோகம் செல்கிறாள் இந்தக் காட்சியைக் கண்ட கானவர்கள், இந்த அற்புத நிகழ்சசியை சேர மன்னனுக்குத் தெரிவிக்கவே இளங்கோ அடிகள் சிலப்பதிகார காவியத்தில் நமக்கு இதை பாடல் வடிவில் தந்தார் பிற்காலத்தில் கண்ணகியை ஒரு முலை இழந்த திருமா பத்தினி என்ற பெயரில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் மக்கள் வணங்கினார்கள் .
***
கிருஷ்ண / கேசவ


கிருஷ்ண என்றால் கருப்பன் ; பிறப்பில் கிருஷ்ணன் கருப்புத் தோலுடனும் அவனுடைய அண்ணன் பலராமன் வெள்ளைத் தோலுடனும் பிறந்தார்கள் .
கேசவ என்றால் கேசி என்னும் அசுரனைக் கொன்றவன் என்றும் அலக்கான கேசத்தை / தலை முடியை உடையவன் என்றும் பொருள் ; விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணனின் முழு லீலைகளையும் மகாபாரதத்திலும் பாகவத புராணத்திலும் காணலாம் .சம்ஸ்க்ருதத்தில் கிருஷ்ண என்பது ஆணின் பெயர்; கிருஷ்ணா என்ற நெடிலுடன் வந்தால் பெண்ணின் பெயர். திரவுபதியும் ஒரு கருப்பி; அவளுக்கு கிருஷ்ணா என்று பெயர் .
***
க்ரியா யோகா
கிரியா யோகா என்பது மூச்சு மற்றும் உயிர்சக்தியை (பிராணன்) கட்டுப்படுத்துவதன் மூலம் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தி, ஆன்மீக வளர்ச்சியை விரைவுபடுத்தும் ஒரு தியானம். இது பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி), மந்திரம் மற்றும் முத்திரைகளின் ஒருங்கிணைந்த கலவையாகும்.
பாபாஜியால் புத்துயிர் பெற்று, லாஹிரி மஹாசயரால் பரப்பப்பட்டது, பின்னர் பரமஹம்ஸ யோகானந்தர் இதை மேலை நாடுகளில் பரப்பினார் மன அமைதி , மன அழுத்தக் குறைவு, உடல் ஆரோக்கியம் ,ஆன்மீக ஞானம் போன்ற தெய்வீக குணங்களை வளர்த்தல் இதன் நோக்கம் ஆகும். யோகதா சத்சங்க சொஸைடி (YSS) கிரியா யோகாவைப்ப பரப்புவதில் முதலிடம் வகிக்கிறது.
***
க்ருபாச்சார்ய – க்ருபி
இவர்கள் இருவரும் இரட்டைப் பிறவிகள் ; கானகத்தில் விடப்பட்ட இவ்விருவரையும் சந்தனு மஹாராஜா வளர்த்தார் ; கிருபாச்சார்யார் கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் சகல ராணுவக் கலைகளையும் கற்பித்தார் . கிருபை , துரோணாச்சார்யாவை மணந்து அஸ்வத்தாமாவைப் பெற்றாள் . மஹாபாரத யுத்தத்தில் 11 படைத்தலைவர்களில் ஒருவர் க்ருபாச்சார்ய . கடைசி வரை வாழ்ந்த இவரை சப்த/ ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவர் என்று இந்துக்கள் போற்றுவர் ; ஆயினும், யுத்தம் முடிந்தவுடன் பாண்டவர் கூ டாரத்துக்கு தீ வைத்த மூவரில் இவரும் ஒருவர் ; பின்னர் பாண்டவ வம்சத்தில் வந்த பரீட்சித்துக்கும் ஆசிரியர் ஆனார் .
****
கிரௌஞ்ச த்வீபம்
இந்துக்களின் புராண பூகோள சாஸ்திரப்படி ஏழு கண்டங்களில் ஒன்று ; இது ஒரு மலைக்கும் பெயர் ; அதை முருகன் உடைத்ததால் அவருக்கு கிரௌஞ்ச பேதனார் என்ற பெயரும் உண்டு ; கிரௌஞ்ச என்பது கொக்கு/ நாரை வகைப் பறவைக்கும் ஒரு பெயர்; இதே போல வடிவத்தில் வியூகம் அமைத்த செய்தி மஹாபாரதத்தில் வருகிறது; வியூகம் என்றால் படை அணிவகுப்பு; தற்காலத்தில் கிரௌஞ்ச த்வீபம் என்பதைச் சிலர் அண்டார்ட்டிகா என்றும் கிழக்கு ஆப்ரிக்கா என்றும் ஐரோப்பாவை ஒட்டிய பகுதி என்றும் கற்பனையுடன் வருணிக்கின்றனர். கிரௌஞ்ச பறவை ஒன்றினை வேடன் வீழ்த்தியத்தைக் கண்ட வால்மீகி தனது சோகத்தால், ஸ்லோக மழை பொழிந்து ராமாயணத்தை நமக்கு அளித்தார்.
To be continued……………..
Tags- கிரௌஞ்ச த்வீபம், க்ருபாச்சார்ய ,க்ருபி, கிருஷ்ண, கேசவ
க்ரியா யோகா , கனகாபிஷேகம் , கண்ணகி, கேனோபநிஷத், HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 47; இந்து மத கலைச்சொல் அகராதி-47, கீசகன், கோலாட்டம் கும்மி