உலகம் எப்படி அழியும்? எப்போது அழியும்? வள்ளுவன் தகவல் (Post No.3355)

Written by London Swaminathan

 

Date: 15 November 2016

 

Time uploaded in London: 6-26 AM

 

Post No.3355

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

உலகம் எப்படி அழியும்?

பூகம்பத்தால் அழியும்.

எப்போது அழியும்?

பண்புடையவர்கள் இல்லாவிடில் அழியும்.

 

இப்படிக்கூறியது திருவள்ளுவர். பொய்யாமொழிப் புலவன் சொல்லுவது பொய்யாகுமா?

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அது இன்றேல்

மண்புக்கு மாய்வது மன் (குறள் 996)

 

பொருள்:-

நல்ல பண்புகள் (குணங்கள்) உடையோர் வாழ்வதால்தான் இந்த உலகம் அழியாமல் இருக்கிறது. சான்றோர் இல்லாவிடில் நிலநடுக்கம் (பூகம்பம்) உண்டாகி எல்லாம் மண்ணுக்குள் புதைந்துவிடும்.

 

அதாவது கலியுகம் முற்றிப்போய், நல்லவர்கள் குறைந்துவிட்டால், உலகம் அழிந்துவிடும். புராணங்களும், மஹாபாரதமும் சொன்ன அதே கருத்தை வள்ளுவனும் இயம்புவதில் வியப்பொன்றுமில்லை.

 

இதற்கு ஆறு குறள்களுக்கு முன், வள்ளுவன் அபாயச் சங்கு ஊதுகிறான்:-

 

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்

தாங்காது மன்னோ பொறை (குறள் 990)

 

பொருள்:-

வேலியே பயிரை மேய்ந்தால் பூமாதேவி பொறுக்கமாட்டாள். சான்றோரின் குணங்கள் நீங்குமானால் இந்தப் பெரிய நிலம் பாரத்தைத் நிச்சயமாகத் தாங்காது.

 

இதையே அவ்வையார் வேறுவிதமாக விளம்புவார்:-

நல்லவர் ஒருவர் இருந்தால் போதும். அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை என்று.

 

நல்லவர் இல்லாவிடில் மழை பெய்யாது.

 

அந்தக் காலத்தில் வறட்சி நிலவினால் உடனே ஊருக்குள் முனிவர்களையும், சாது சன்யாசிகளையும் அழைத்து வருவர் என்பதை ராமாயணம் மூலம் அறிவோம். ரிஷ்யசிருங்கர் என்னும் கலைக் கோட்டு முனிவர் வந்தபின்னர் மழை பெய்தது.

 

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை – வாக்குண்டாம்

 

 

ஆயினும் வள்ளுவன் உறுதியாக் கூறுவது என்னவென்றால், எப்போதும் கொஞ்சம் நல்லவர்கள் மிச்சம் இருப்பார்கள்; உலகமே தலைகீழாகப் போனாலும் அவர்கள் நிலைபெயர மாட்டார்கள்!

 

ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப்படுவார் – குறள் 989

 

உலகம் அழியும் காலத்தில் பெரும் சுனாமி தாக்குதலில் கடல், கரை கடந்து நாட்டிற்குள் புகுந்தாலும், மேன்மக்கள், பாதை மாற மாட்டார்கள்.

 

வாழ்க வள்ளுவன்! வளர்க சான்றோர்!!

 

–subham–

 

 

திருக்குறளில் அந்தணரும் வேதமும் ! (Post No.3296)

img_8188

Written by S. NAGARAJAN

 

Date: 28 October 2016

 

Time uploaded in London: 5-38 AM

 

Post No.3296

 

Pictures are taken from various sources; thanks. Pictures are representational; may not have direct connection to the article below.

 

Contact :– swami_48@yahoo.com

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 1

 

திருக்குறளில் அந்தணரும் வேதமும் !

 

                      ச.நாகராஜன்  

இந்த ஆய்வில் சங்க இலக்கியம் மட்டுமே இடம் பெறுகிறது. சங்க இலக்கியம் என்பது : –                               எட்டுத் தொகை நூல்கள்,

பத்துப்பாட்டு  நூல்கள்,

பதினெண்கணக்கு நூல்கள் ஆகியவையே.

 

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்    

செந்தண்மை பூண்டொழுகலான்   (குறள் 30)

 

எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் அந்தணர் என்போர் அறவோர்.

இனிய நீர்மையும் கருணையும் கொண்டவர் ஆதலின் அந்தணர் அறவோர் ஆவர்.

ஈர நெஞ்சத்து அந்தணர் (பரிபாடல் 14) என்பதால் கருணை உள்ளம் கொண்டவர் அந்தணர் என்பது பெறப்படுகிறது

அறவாழி அந்தணன் (குறள் 8)

இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன் (கலி 88) என்ற இடங்களில் இறைவனை அந்தணன் என்ற சொல் குறிக்கிறது.

 

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்   (குறள் 134)

ஓத்துக் கொளல் என்பது வேதம் ஓதுதல்.

ஒருவேளை வேத்ம ஓதுவதை மறந்தாலும் கூடத் திருப்பி ஓதிக் கொள்ளலாம். ஆனால் ஒழுக்கத்தை இழந்தால் பார்ப்பான் உயர்வு ஒழிந்து இழிவான்.

மறப்பினும் என்று உம் போட்டுச் சொல்லப்படுவதால் வேதம் ஓதுவதை அந்தணன் ஒருபோதும் மறக்க மாட்டான் என்பதை அவர் குறிப்பிடுகிறார்..

மிகக் கடினமான பயிற்சியை மேற்கொண்டிருக்க வேண்டியிருப்பதாலும் தொடர்ந்து தினசரி அதை ஓத வேண்டியிருப்பதாலும் வேதத்தை மாற்றவும் முடியாது. மறக்கவும் முடியாது.

ஜட பாடம், கன பாடம் என்பது எல்லாம் சிக்கல் நிறைந்த ஓதல் பயிற்சிகள். கனபாடத்தில் தேர்ந்தவர்களே கனபாடிகள் ஆவர். ஆனால் இந்த வேதம் ஓதுதல் மறந்தாலும் கூட ஒருவேளை திரும்பப் பெறக்கூடும். ஆனால் ஒழுக்கம் இழந்தாலோ, பிறப்பே கெடும் என அறிவுறுத்துகிறார் வள்ளுவர்.

வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும் என்று இந்த இரண்டையும் இணைத்துப் பின்னாலே வந்த நறுந்தொகை கூறுகிறது.

பார்ப்பான் என்பது மெய்ப்பொருள் அல்லது பிரம்மத்தைப் பார்ப்பான் என்பதைக் குறிக்கும்.

 

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்    (குறள் 28)

 

நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளந்த

மறைமொழி தானே மந்திரம் என்ப என்ற தொல்காப்பிய வரிகளை இங்கு நோக்கினால் அர்த்தம் எளிதாகப் புரியும்.

 

தவமும் தெய்வத்திருவருளும் அறிவும் உடையோரின் சொல்லே மந்திரம் ஆகிறது. அதையே மறைமொழி என்று இங்குக் காண்கிறோம்.

 

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்                    

நின்றது மன்னவன் கோல்         (குறள் 543)

அந்தணர் நூல் வேதமாகும். அதற்கும் அறத்திற்கும் ஆதியாய் நிற்பது மன்னவனால் செலுத்தப்படும் செங்கோல்.

ஆகவே அறத்தை அடிப்படையாகக் கொண்டு வேத நூலைப் போற்ற மன்னவன் கோல் செங்கோலாக அமைதல் வேண்டும்.

 

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்                          

பெருமிறை தானே தனக்கு        (குறள் 847)

 

அரிய மறைப்பொருளை உணர்ந்து அதன் வழி நடக்காமல் இருக்கும் அறிவிலாதவர் தனக்குத் தானே பெரும் தீங்கினை இழைத்துக் கொள்வர்.

இங்கு உபதேசம் குறிப்பிடப்படுகிறது. கேட்ட மறைப் பொருளை – உபதேசப் பொருளை உட்கொள்ளாதவன் அறியாமையால் தனக்குத் தானே தீங்கு இழைத்துக் கொள்வதை இந்தக் குறள் நன்கு உணர்த்துகிறது.

 

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்               

ஆன்றாரோ டொப்பர் நிலத்து   (குறள் 413)

செவியுணவு என்பது கேள்வி.

வேள்வியில் ஆகுதியாக்கப்படும் அவி உணவு தேவருக்கான உணவு.  செவி உணவாகிய கேள்வியில் மிக்கார் இங்கு நிலவுலகில் இருப்பினும் கூட அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.

கேள்வியையும் வேள்வியையும் வள்ளுவர் கையாளும் பாங்கு நம்மை பிரமிக்க வைக்கிறது.

 

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர் செகுத்து உண்ணாமை நன்று  (குறள் 259)

இந்தக் குறளில் மாபெரும் அறப் பண்பை வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

ஹவிஸ் என்பது தமிழில் அவி ஆயிற்று. நெய்யை ஆகுதியாக ஹவிஸாகக் கொடுத்து ஆயிரம் வேள்விகளைச் செய்வதைக் காட்டிலும் ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அதன் ஊனை உண்ணாமை நன்று என்கிறார் வள்ளுவர்.

ஆக, –

அந்தணர் அறவோர் எனப்படுவதும் அவர்கள் வேதம் ஓதுதலைச் செய்யும் ஒழுக்கம் உடையவர் என்பதும், இந்த அந்தணர், வேதம், அறம் இவை செழித்திருக்க மன்னவன் செங்கோல் சரியாக இருக்க வேண்டும் என்பதும் வள்ளுவரின் கூற்று.

மறைப்பொருளை உணராமல் இருப்பவன் தனக்குத் தானே கெடுதி செய்து கொள்கிறான் என்பதை வலியுறுத்திய வள்ளுவர் அவி உணவை உட்கொள்ளும் தேவரோடு கேள்விச் செல்வத்தில் மேம்பட்டவர் ஒப்பாவார் என்றும் அவி சொரிந்து ஆயிரம் யாகங்களைச் செய்வதை விட ஒரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை உண்ணாமல் இருப்பது நன்று என்றும் கூறுகிறார்.

வேதம், பார்ப்பான், ஹவிஸ், தேவர், மன்னவன் கோல், அறம் ஆகிய அனைத்தும் சரியான விகிதத்தில் இணைக்கப்பட்ட அறச் சாறை சில குறள்களிலேயே அள்ளித் தருகிறார் வள்ளுவர்.

மிக உயரிய நூலாக வேதம் கருதப்படுவதையும், அதை ஓதுபவர் அறவோர் என்பதையும், அதைக் காப்பதே மன்னவன் கடமை என்பதையும் வள்ளுவர் குறள்களில் நிலை நிறுத்திக் காண்பிக்கிறார்.

இதுவே வேதம் மற்றும் அந்தணர் பற்றிய வள்ளுவர் கொள்கை!

 

பின்னாலே எழுந்த ஏராளமான தமிழ் இலக்கிய நூல்களில் இந்தக் குறள்களை அடியொட்டிய ஏராளமான பாக்களைப் பார்க்கலாம். அதன் அடியொட்டிய அற்புத வரலாறுகளையும் படிக்கலாம்.

******

சங்க இலக்கியம் குறிக்கும் தெய்வங்களைப் பற்றிய எனது முந்தைய கட்டுரையைப் படித்த தமிழ் ஆர்வலரின் மடலே இந்தக் கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கக் காரணம். (அவரது மடலைக் கட்டுரையின் விமரிசனப் பகுதியில் காண்க)

பல ஆண்டுகளாக எழுத வேண்டும் என்று நினைத்திருந்த இந்தத் தொடருக்குப் பிள்ளையார் சுழி போட வைத்த அன்பருக்கு நன்றி. சங்க இலக்கியங்களைத் தாமே பயின்றால் இன்று நமக்கு போலியாக ஊட்டப்படும் பல பொய்க்கருத்துக்கள் போகும்; தமிழ்ச் சமுதாயம் மேம்படும்.

திருக்குறளில் மறுபிறப்புத் தத்துவம்! -2 (Post No.3266)

1935-valluvar

Written by S. NAGARAJAN

Date: 19 October 2016

Time uploaded in London: 6-31 AM

Post No.3266

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

ஹிந்துக்களின் மறுபிறப்புக் கொள்கையை வலியுறுத்தும் வள்ளுவர், பிறப்பு ஏன் ஏற்படுகிறது, அதை எப்படி அறுப்பது என்பதையெல்லாம் தெளிவாகச் சொல்கிறார். மறுபிறப்புத் தத்துவம் பற்றிய இறுதிக் கட்டுரை இது. முந்தைய கட்டுரையைப் படிக்காதவர்கள் தயவுசெய்து அதைப் படித்து விட்டு பின்னர் தொடரவும்.

 

திருக்குறளில் மறுபிறப்புத் தத்துவம்! -2

ச.நாகராஜன்

 

punul-valluvar

திருக்குறளில் திருவள்ளுவர் ஹிந்துக்களின் மறுபிறப்புத் தத்துவத்தை மட்டும் சுட்டிக் காட்டி நின்று விடவில்லை. பிறவிச் சுழல் ஏன் ஏற்படுகிறது, அதை எவ்வாறு போக்குவது என்பதையெல்லாம் விரிவாக விளக்குகிறார்.

ஒரு பெரிய மஹரிஷியின் போதனைகளாக அவை அமைந்துள்ளன.

 

 

தத்துவஞானிகள் பெரிய விளக்கவுரைகளில் பல நாட்கள் பேசுவதையெல்லாம் அவர் சூத்திர வடிவில் தந்து விடுகிறார்.

ஆகவே தான் உபநிடத, வேதத்திற்கு சரி நிகராக தமிழ் மறை போற்றப்பட்டு வருகிறது.

 

 

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி                   விழிப்பது போலும் பிறப்பு       (குறள் 339)

 

உறங்குவதும் விழிப்பதும் இயல்பாய் உயிருக்கு அமைவது போல சாக்காடும் பிறப்பும் மாறி மாறி வருகின்றன.

எவ்வளவு பிரம்மாண்டமான ஒரு தத்துவத்தை மிக சுலபமாக இரண்டே இரண்டு வரிகளில் தந்து விடுகிறார்!

 

பிறப்பு என்பது துன்பம்.  எதையாவது மனிதப் பிறவியில் வேண்டி நீ விரும்பினால் அது பிறவாமையாக அமைய வேண்டும்.. மற்ற எதையும் விரும்பும் அவாவை அறுத்து விட்டால் அது  தானே வரும். என்கிறார் அவர். குறளைப் பார்ப்போம்.

 

 

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை  மற்றது

வேண்டாமை வேண்ட வரும்       (குறள் 362)

 

பிறவிச் சுழலிலிருந்து ஏன் விடுபட வேண்டும்?

அதற்கு பதிலையும் அழகாகத் தருகிறார் இப்படி!

 

 

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்                                                 இறைவனடி சேராதார்        (குறள் 10)

 

 

இரகசியம் புரிகிறது இப்போது. பிறவிச் சுழலிலிருந்து விடுபட்டால் தான் இறைவன் அடியைச் சேர  முடியும்.

இல்லையேல் இல்லை தான்!

 

 

பிறப்பை அறுப்பது எப்படி? அதற்கும் வழியைச் சொல்கிறார்.

முதலில் பிறப்பை வேண்டாதவனின் இயல்பை இப்படிக் கூறுகிறார்:

 

 

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்

உற்றார்க்கு உடம்பும் மிகை    (குறள் 345)

 

 valluvar-iyengar

பிறப்பறுத்தலை மேற்கொண்ட ஒருவனுக்கு அதற்கு க்ருவியாக இருக்கும் அவன் உடம்புமே மிகை தான்! அதற்கு மேல் உலகத் தொடர்பு எதற்காக?

 

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று

நிலையாமை காணப் படும்    (குறள் 349)

 

 

ஒருவன் இருவகைப் பற்றையும் அறுத்து விட்ட உடனேயே அப்பற்று அவனது பிறப்பை அறுக்கும். அது அறாத போது பிறந்து இறந்து வருகின்ற நிலையாமை காணப்படும்.

 

பிறப்பு என்பது என்ன என்பதை வரையறுக்கும் குறளையும் வள்ளுவர் தந்து விடுகிறார்:

 

 

பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும்                     மருளான் ஆம் மாணாப் பிறப்பு     (குறள் 351) 

 

மெய்ப்பொருள் இல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் விபரீத உணர்வால்  தான் இன்பம் இல்லாத பிறப்பு ஏற்படுகிறது.

 

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

பேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு    (குறள் 357)

 

உபதேசப் பொருளை ஒருவன் ந்னகு ஆராய்ந்து முதல் பொருளை உணருவானாயின், மீண்டும் பிறப்புள்ளதாக நினைக்க வேண்டாம்.

 

பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் சிறப்பு என்னும்

செம்பொருள் காண்பது அறிவு   (குறள் 358)

 

பிறப்பிற்கு காரணமாகிய பேதைமை நீங்க சிறப்பு என்னும் செம்பொருளைக் காண்பதே அறிவாகும்.

 

பிறப்பிற்குக் காரண்மாக எல்லா உயிருக்கும் அமைவது எது?

இரகசியத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறார் வள்ளுவர்.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்

தவாஅப் பிறப்பு என்னும் வித்து   (குறள் 361)

எல்லா உயிர்களுக்கும் எல்லாக் காலத்தும் விடாமல் வருகின்ற பிறப்பிற்குக் காரணம் அவா என்று சொல்லுவர் நூலோர்

 valluvar-gold

முத்தான ஒன்பது குறள்கள்!

பிறப்பிற்குக் காரணம் அவா.

அது நீங்க செம்பொருள் காண்பது அறிவு.

 

அது நீங்க பெரியோரின் உபதேச நெறிகளை ஓர்ந்து உணர். அறி!

 

மெய்ப்பொருள் இல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று நினைக்கும் மயக்கத்தினாலேயே பிறப்பு ஏற்படுகிறது.

இருவகைப் பற்றையும் அறுக்கும் ஒருவனுக்கு அந்தப் பற்றே பிறப்பை அறுத்து விடும்.

 

பிறப்பு வேண்டாதவனுக்கு உடம்பே மிகை தான்.

பிறவிப் பெருங்கடலைக் கடந்தவனே இறைவன் அடி சேர முடியும்.

 

இந்த உலகில் நீ  ஒரே ஒன்றை மட்டும் வேண்ட விரும்பினால் பிறவாமையை வேண்டு!

ஏனெனில் பிறப்பும் இறப்பும் தூங்குவதும் விழிப்பதும் போலத் தான்!

 

சிறந்த தத்துவஞானியான ம்ஹரிஷி வள்ளுவரின் பிறப்பறுக்கும் உபநிடத மொழிகளைத் தொகுத்துப் பார்க்கும் போது வியப்பும் பிரமிப்பும் மேலிடுகிறது.

 

இரகசியத்திற்கெல்லாம் மேலான இரகசியத்தை தெளிவாக எளிய பாக்களில் தருகிறார் வள்ளுவர்; அதை அமிழ்தினும் இனிய தமிழில் பெறுகிறோம் நாம்!

 

எவ்வளவு பாக்கியசாலிகள்!

 

ஹிந்துப் பண்பாட்டின் ஆணிவேரை இதை விட வேறு யாரால் இவ்வளவு சிறப்பாக சூத்திர வடிவில் தர முடியும்.

வாழ்க வள்ளுவர், வாழ்க தமிழ்!

****************

வள்ளுவரும் வானவரும்! (Post No.3260)

hy14-pushkar_2472025g-jpghindu-2

Written by S. NAGARAJAN

Date: 17 October 2016

Time uploaded in London: 5-21 AM

Post No.3260

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

திருக்குறளில் தேவர் உலகம்

வள்ளுவரும் வானவரும்!

By ச.நாகராஜன்

 

 

 img_5160-2

பாரத நாடெங்கும் தொன்று தொட்டு இருந்து வ்ரும் பண்பாடு ஒன்றே தான்!

 

மிகப் பழைய சங்க இலக்கிய  நூலான திருக்குறளில் இந்தப் பண்பாட்டை விளக்கும் நூற்றுக் கணக்கான குறட்பாக்களைக் காணலாம்.

 

தேவர் அல்லது வானவரைப் பற்றிய ஏராளமான செய்திகளை பாரத நாடெங்கும் உள்ள மக்கள் அறிவர். ஹிந்துப் பண்பாட்டை விளக்கும் ஏராளமான கதைகளும் அதைச் சார்ந்த சடங்குகளும், விழாக்களும், நம்பிக்கைகளும் தொன்மங்களும் வான உலகில் –விண்ணுலகில் – இருக்கும் வானவரைச் சார்ந்தே உள்ளன.

 

 

திருக்குறளை இயற்றிய வள்ளுவருக்கே தேவர் என்ற பெயரும் உண்டு. அவருக்குரிய பத்துப் பெயர்களும் அவரது உயரிய பண்பையும் அருமையையும் எண்ணி, போற்றித் தரப்பட்டு வழிவழியாக வழங்கப்பட்டு வருகின்றன.

 

 

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்                   

மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை                        

 திருவாசகமும் திருமூலர் சொல்லும்                        

ஒருவா சகமென் றுணர் 

 

–என்ற ஔவையாரின் பாடலில் தமிழ்ம்றையும் நான்மறையும் ஒன்றே என்று அறுதியிட்டு உறுதி கூறப்படுகிறது!

 

 img_5163-2

இனி, வள்ளுவரின் கிண்டல் குறள்கள் அவரது அரிய மேதைத் தனமையையும் அதில் இழைந்து ஊடாடி விளங்கும் நகைச்சுவையையும் காட்டுவன.

 

 

இந்த நகைச்சுவைக் குறள்களில் முக்கியமான குறள் ஒன்று தேவர் குறள்.

 

 

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுகலான்        –  குறள் 1073

 

“தேவர் அனையர் கயவர்”

தேவரும் கயவரும் ஒன்று போலத் தான் என்று வள்ளுவர் கூறியதைக் கேட்டவுடன் திடுக்கிடுகிறோம். தூக்கிவாரிப் போடுகிறது.

 

 

ஆனால் அவர் அடுத்து அதற்கான காரணத்தை விளக்கும் போது சிரிக்கிறோம். இருவரும் தம் மனம் போன போக்கிலேயே அனைத்தையும் செய்யும் தன்மை வாய்ந்தவர்கள் என்பதால் தேவர் அனையர் கயவர்!!

வையத்துள் புண்ணியச் செயல்களைச் செய்பவரே வானுறையும் பேறு பெற்றவர்கள். அவர்கள் மனம் போன போக்கில் நல்லதையே செய்வர்.

 

 img_5164-2

ஆனால் பூமியில் மனம் போன போக்கைச் செய்யும் கயவர் தீயவற்றையே செய்வர். உயர்ச்சியும் இழிவுமாகிய காரண வேறுபாட்டால் நகைச்சுவையை ஊட்டி நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார் வள்ளுவர்.

நகைச்சுவையுடன் கூடிய கருத்தால் மிகவும் ஈர்க்கப்படுகிறோம்.

 

அடுத்து வான் நாட்டை புத்தேள் நாடு என்றும் வானவரை புத்தேளிர் என்றும் வள்ளுவர் கூறி இருக்கும் குறட்பாக்கள் சுவையானவை.

 

 

இப்படி வரும் ஆறு குறள்களைப் பார்ப்போம்.

 

 

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே

ஒப்புரவின் நல்ல பிற              – குறள் 213

 

பிறர்க்கு உதவி செய்யும் நல்ல பிரதிபலன் பாராத உதவி செய்யும் தன்மை தேவர் உலகத்திலும் பூவுலகத்திலும் காண்பது அரிதாகும்.

 

ஈவாரும் இல்லை, ஏற்பாரும் இல்லை என்பதால் தேவருலகில் ஒப்புரவு அரிது. யாவருக்கும் ஒப்பது இது போல வேறு ஒன்று இல்லாமையால் பூவுலகில் இது அரிது.

 img_3203

 

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு           – குறள்  234

 

ஒருவன் நிலவுலகில் பொன்றாத புகழைச் செய்வானாயின் வான் உலகம் அவனை வரவேற்குமேயல்லால் தன்னை எய்தி இருக்கும் ஞானிகளைப் போற்றாது.         

 

                      

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்                     

தள்ளாது புத்தே ளுலகு                   குறள் 290

 

களவினைச் செய்வார்க்கு உடம்பில் உள்ள உயிர் தவறும். அந்தக் களவினைச் செய்யாதவர்க்கு வானுலகம் வாய்த்தல் தவறாது.

 

 

புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என்மற்று           

இகழ்வார் பின் சென்று நிலை              குறள் 966

 

மானத்தை விட்டுத் தன்னை அவமதிப்பவர்கள் பின்னே ஒருவன் சென்று நிற்கின்ற நிலை அவனுக்கு இவ்வுலகப் புகழைத் தராது. தேவர் உலகத்திலும் கொண்டு சேர்க்காது. இப்படி அவமதிப்பார் பின் செல்வதால் அவனுக்குப் பின் என்ன தான் பயன்?

 

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு                              

நீர் இயைந்து அன்னார் அகத்து             குறள் 1323

 

 

நிலத்தில் நீர் கலந்தாற் போல ஒன்று ப்ட்ட நெஞ்சம் உடைய காதலரிடத்தில் ஊடலில் காணப்படுவது போன்ற இன்பம் தேவருலகில் உண்டா?

 

 img_3425

பெற்றார் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்                புத்தேளிர் வாழும் உலகு                   குறள் 58

 

பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுவாராயின் தேவருலகில் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர்.

 

அடுத்து வரும் மூன்று குறள்களில் அமரர் என்ற வார்த்தையையும், வானவர் என்ற வார்த்தையையும் தேவர் பயன்படுத்துகிறார்.

 

 

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை                 

ஆரிருள் உய்த்து விடும்                  குறள் 121

 

ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவர் உலகத்து உய்க்கும். அடங்காமையோ ஆர் இருள் கொண்ட நரகத்தில் செலுத்தும்.

 

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்                         

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு     (குறள் 18)

 

 

வானம் வறண்டு மழை இல்லாது போனால் இவ்வுலகில் வானவர்க்குச் செய்யும் பூஜை, திருவிழா எதுவும் நடைபெறாது.

 

 

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து  வானத்தவர்க்கு        (குறள் 86)

 

தேவர்கள் விரும்பி வரவேற்கும் விருந்தினர் யார் தெரியுமா? பூவுலகில் வந்திருந்த விருந்தினரை நன்கு  உபசரித்து அனுப்பி விட்டு அடுத்து வரும் விருந்தினருக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கின்றானே அந்த உத்தமன், அவனைத் தம் விருந்தினராக ஆவலோடு வரவேற்பார்களாம் தேவர்கள்!

 

 brahadeeswar-2

இன்னும் ஒரு குறளில் வானோர்க்கும் மேலான உலகத்தைப் பற்றிப் பேசுகிறார்.

 

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு               

உயர்ந்த உலகம் புகும்           (குறள் 346)

 

 

யான் எனது என்ற மயக்கத்தை அறுப்பார்க்கு வானோரும் எய்தற்கு அரிதான வீட்டுலகம் கிடைக்கும்.

 

தேவர் உலகத்தைச் சேர்ந்தோர் இமைக்க மாட்டார்கள் என்பதை ஒரு குறள் சுட்டிக் காட்டுகிறது.

 

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லான்              

அமையார்தோள் அஞ்சு பவர்   (குறள்  906)                             

மனைவியின் அழகிய தோளுக்கு அஞ்சி நடக்கின்றவர் தேவரைப் போல இந்த உலகில் வாழ்ந்தாலும் கூட ஆண்மை இல்லாதவரே ஆவர்.

 

 

ஹிந்துக்களின் வேதம், உபநிடதம், புராணம் ஆகியவை கூறும் பெரும்பாலான செய்திகளை சங்க இலக்கியத்தில் பரக்கக் காணலாம்.

 

 

பாரதம் முழுவதற்குமான ஒரே பண்பாட்டைச் சேர்ந்தவரே வள்ளுவர் என்பதும் அதைத் தன் குறள் நெடுகிலும் சுட்டிக் காட்டுகிறார் என்பதற்கும் வேறு என்ன சான்றுகள் வேண்டும்.

 

கடைசியாக் ஒன்று. இமையவர் கோமானான இந்திரனையும் அவர் விட்டு விடவில்லை.

 

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்               

இந்திரனே சாலுங் கரி   (குறள் 25)

 

ஐந்து புலன்களின் ஆசையை ஒழித்தவர்க்குச் சான்று கூற விசும்புளார் கோமானான இந்திரனே வருவான்

 andal-krishnan

ஆஹா, பதிமூன்று குறள்களில் பண்பாட்டைத் தெள்ளென விளக்கும அனைத்தையும் வள்ளுவர் தரும் பாங்கிற்கு ஈடு இணை உண்டோ!

 

 

ஏராளமான செய்திகளைப் பெறுகிறோம்.

 

வானவர் உலகம் உண்டு.

 

அதற்கும்  மேலான உலகமும் உண்டு.

 

வானவர்க்கு பூவுலகினர் பூஜையும் திருவிழாவும் எடுப்பர். மழை இல்லையேல் அவை நடைபெறா. (இந்திரவிழா உள்ளிட்ட பழைய செய்திகளையும், மழை தரும் பொறுப்பு இந்திரனுக்கு உண்டு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.)

 

 

அடக்கம் தேவ லோகத்தையும் அடங்காமை நரகத்தையும் தரும். மனைவி கணவனைப் போற்றல் வேண்டும். அது அரிய வானுலக வரத்தைத் தரும்.

 

தாம்பத்ய இன்ப உறவில் ஏற்படும் இன்பம் தேவலோகத்திலும் கிடைக்காது.

 

புகழுடைச் செயல்களைப் புரிபவன் பொன்னுலகம் போவான்.

களவுத் தொழில் செய்தலும், தன்னை அவமதிப்போரின் பின்னால் செல்லுதலும் தேவர் உலகை அடைய முடியாமல் தடுக்கும் தீமைகளாகும்

 

.

இன்னும் தேவாமிர்தத்தைச் சொல்லாமல் வள்ளுவரால் சும்மா இருக்க முடியுமா?

 

நான்கு குறள்களில் சாவா மருந்தான தேவாமிர்தத்தையும் குறிப்பிட்டு விடுகிறார்.

 

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று     – (குறள் 11)

 

 ambaji-temple-gujarat

மழையை உலகம் அமிழ்தம் எனப் போற்றுவதை இங்கு வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

 

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்            (குறள் 64)

 

தன் குழந்தையின் சிறுகை அளாவிய கூழை விட தேவாமிர்தம் சிறந்ததா, என்ன? இல்லை என்று ஓங்கிச் சொல்வோம் நாம். உலகியல்பு இது!

 

 

நம் முகத்தைச் சுளிக்க வைக்கும் ஒரு உவமையையும் அவர் தந்து விடுகிறார்.ஏனெனில் அப்படிச் சொன்னால் தான் அவர் சொல்ல வரும் பொருளுக்கு வலிமை சேரும்! அதனால் தான்!

நல்ல கற்றறிந்தோர் கூடிப் பேசும் அவையில் ஒன்றுமே படிக்காத ஒரு  முட்டாள் உளற ஆரம்பித்தால், ஐயகோ, அது தூய்மை இல்லாத முற்றத்தில் படைக்கப்பட்ட நல்ல அமிர்ததிற்கு ஒப்பாகும். (‘அசுத்தம்’ உள்ள இலையில் அமிழ்தம் வைக்கப்பட்டால்….?!)

 

அங்கணத்துள் உக்க அமிழ்தத்தால் தங்கணத்தார்          அல்லார் முன் கோட்டி கொளல்        (குறள் 720)

 

இன்னும் ஒரு குறள்- தலைவியின் தோள் அமிர்தத்தினால் ஆனது!

 

 

உறுதோறு உயிர்தளிப்பத் தீண்டலால் பேதைக்கு          

அமிழ்தின் இயன்றன தோள்           (குறள் 1106) 

 

தலைவியின் தோளைத் தீண்டும் போதெல்லாம் (போக இருக்கும்) உயிர் தளிர்ப்பதால் இவள் தோள் அமிர்தத்தினால் செய்யப்பட்

டிருக்க வேண்டும்!

 

எப்படி இருக்கிறது நான்கு குறள்கள்.

 

1330 குறள்களில் சுமார் 17 குறள்களில் தேவலோகத்தைக் காட்டுகிறார் தேவர்! அதாவது ஒரு சதவிகிதத்திற்கும் மேலாக!

 

இதுவே அவர் தன் கருத்துக்களுக்கு வானுலகைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

 ganga-shiva

என்ன இருந்தாலும் அவரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வான் உறையும் தெய்வத்துள் சேர்ந்தவர் தானே

‘தனது இனத்தை’ விட்டுக் கொடுப்பாரா என்ன?

 

கருத்துக்களைப் பெற்று மகிழ்கிறோம். அமிழ்தம் உண்டது போல இருக்கிறது!

**********

 

 

 

திருக்குறளில் மறுபிறப்புத் தத்துவம்! (Post No.3246)

7books

Written by S. NAGARAJAN

Date: 13 October 2016

Time uploaded in London: 6-11 AM

Post No.3246

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

ஹிந்துக்களின் மறுபிறப்புக் கொள்கை சங்க இலக்கியங்களில் நூற்றுக் கணக்கான இடங்களில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக திருக்குறளில் மறுபிறப்பு பற்றி கூறப்படுவதை ஆய்வு செய்கிறது இந்தக் கட்டுரை

திருக்குறளில் மறுபிறப்புத் தத்துவம்!

 

ச.நாகராஜன்

 

valluvar-4

கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதங்களிலிருந்து ஹிந்து மதத்தைப் பிரித்துக் காட்டும் சிறப்பியல்புகளில் முக்கியமான் ஒன்று மறு பிறப்பு தத்துவம்.

இதர மதங்கள் ஒரே ஒரு பிறப்பு தான் மனிதனுக்கு உண்டு என்றும் அதில் ஒன்று உய்ய வேண்டும் அல்லது எடர்னல் ஹெல்லில் (Eternal Hell) முடிவற்ற நரகத்தில் ஆழ்ந்து அமிழ வேண்டும் என்று போதிக்கின்றன.

ஆனால் நம்பிக்கை ஊட்டும் ஹிந்து  மதம் உன் செயல்களால் பிறப்புகள் அமைகின்றன. நல்ல வினை மூலம் நீ ஒரு கால கட்டத்தில் நிச்சயம் முக்தி பெற முடியும் என்று சூக்ஷ்மமான ஸ்விட்சை நம் கையிலேயே கொடுக்கிறது.

இதை பாரத தேசமெங்கும் உள்ள ஹிந்துக்கள் ஒப்புக் கொண்டு அதன் படி பாவ புண்ணியத்திற்குப் பயந்து வாழ்கின்றனர். தனக்கு ஒரு இழிவு நேரும் போதெல்லாம், ‘தெரிந்தோ தெரியாமலோ நான செய்த பாவம். அதனால் இதை நான் அனுபவிக்கிறேன்’ என்று மனத் தெளிவைப் பெறுகின்றனர். நல்லன வரும் போது பூர்வ ஜன்ம புண்ணிய்ம் என்று மகிழ்கின்றனர்.

நமது அற நூல்கள், மற்றும் இலக்கியங்கள் இந்த மறுபிறப்புத் தத்துவத்தை இடையறாது சுட்டிக் காட்டுகின்றன

இராமாயணம், மஹாபாரதம் ஆகிய இதிஹாஸங்களில் வரும் நூற்றுக் கணக்கான மறுபிறப்புத் தக்வல்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன

இந்த பாரதப் பண்பாடு தான் – பின்னால் ஹிந்துப் பண்பாடு என்று அறியப்படுவது –   பாரத தேசம் முழுவதும் பரவியிருந்த ஒரே பண்பாடு.

இதை சங்க இலக்கியங்களில் நூற்றுக் கணக்கான இடங்களில் காண முடிகிறது. இந்தப் பாரதப் பண்பாட்டின் ஒரு முக்கியமான அங்கமாகத் தான் தமிழர்களும் வாழ்ந்து வரலாறு படைத்திருக்கின்றனர்.

எடுத்துக் காட்டிற்குத் திருக்குறளை எடுத்துக் கொள்வோம்.

எழு பிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்    (குறள் 62)

பழி இல்லாத நல்ல பண்புள்ள மக்களை ஒருவர் பெற்றால அவரை ஏழு பிறப்பிலும் தீவினைப் பயன் தீண்டாது.

 

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமந் துடைத்தவர் நட்பு    (குறள் 107)

 

தமக்கு நேர்ந்த துன்பத்தினைத் துடைத்தவரின் நட்பினை பெரியோர் ஏழு பிறப்புகளிலும் தொடர்ந்து நினைத்துப் பார்ப்பர்.

 

ஒருமையுள் ஆமை போல ஐந்தடக்கலாற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து    (குறள் 126)

 

ஒரு பிறவியில் ஆமை போல் ஒருவன் ஐந்து புலன்களையும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் அது அவனுக்கு ஏழு பிறவிக்கும் பாதுகாவலாக வந்து அமையும்.

 

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி  ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து       (குறள் 398)

 

ஒரு பிறவியில் ஒருவர் கற்கும் கல்வி அறிவானது அவர் எடுக்கும் ஏழு பிறவிகளிலும் பாதுகாவலாக வந்து அமையும்.

 

புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் செய்யாது

இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்     (குறள் 538)

 

பெரியோரால் புகழ்ந்து போற்றிக் கூறப்பட்ட்வற்றின் படி செயல் பட வேண்டும். அப்படிச் செயல்படாதவர்க்கு ஏழு பிறவிகளிலும் நன்மை உண்டாகாது.

 

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்

தான்புக் கழுந்தும் அன்று        (குறள் 835)

 

முட்டாளான ஒருவன் ஒரு பிறவியிலேயே ஏழு பிறவிகளில் தான் அனுபவிக்க வேண்டிய நரகத் துன்பத்திற்கானவற்றைச் செய்து  முடிக்க வல்லவன்!

 

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவார்

மற்றீண்டு வாரா நெறி           (குறள் 356)

 

கல்வி கேள்விகளால் மெய்ப்பொருளை உணர்ந்தோர் மீண்டும் இவ்வுலகில் பிறந்து துன்பம் அடையாத நெறியை அடைவ்ர்.

 

வீழ்நாள் ப்டாஅமை நன்று ஆற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்குங் கல்    (குறள் 38)

 

ஒவ்வொரு நாளையும் அறம் செய்யாமல் கழித்த நாளாக இல்லாமல் பார்த்துக் கொண்டு அறத்தை அன்றாடம் செய்து வந்தால் அதுவே ஒருவனுக்கு இனி பிறவி ஏற்படாதவாறு பிறவியை அடைக்கும் கல்லாகும்.

ஆக இப்படி வள்ளுவர் மறுபிறப்பிற்கு உரிய முறையில் தன் குறளில் முக்கியத்துவம் கொடுத்து சொல்ல வேண்டிய செய்திக்ளை எல்லாம் சொல்லி விட்டார்.

நமது வள்ளுவரை கிறிஸ்தவராகக் காட்ட முயற்சி செய்து எழுந்த நூல்களும் உண்டு.

அப்படிப்பட்ட முயற்சிகளை இந்த மறுபிறப்புத் தத்துவம் ஒன்றே தகர்த்து விடுகிறது.  அப்படிப்பட்ட முயற்சிகளை எள்ளி நகையாடும் போதே, வள்ளுவரைத் ‘தம்மவராக’ ஒவ்வொருவரும் காட்டும் அளவு தமிழ்க் குறள் உயர்ந்துள்ளது என்ற பெருமையை நினைத்து மனம் மகிழ்கிறோம்.

 

valluva-nayanar

எந்தக் காலத்திற்கும் பொருந்தும் ஹிந்துப்  பண்பாட்டை மிகச் சரியாக முத்திரைக் குறட்பாக்களினால் வலியுறுத்திய ஒரு தமிழ் மஹானைச் சிரம் தாழ்த்தி வணங்கிக்கொண்டே இருக்கலாம்.

அவர் குறளைப் படித்து அதன் படி வாழ்வதே வாழ்நாள் வழி அடைக்கும் கல்லாக அமையும், இல்லையா!

********

 

‘பிறவிப் பெருங்கடல்’ பற்றி நம்பியும், வள்ளுவரும் (Post No. 3144)

tallship

Written by London Swaminathan

Date: 11 September 2016

Time uploaded in London: 21-00

Post No.3144

Pictures are taken from various sources; thanks.

 

வள்ளுவர் ஒரு கடைந்தெடுத்த இந்து என்பதற்கு  அவர் பாடிய 10 கடவுள் வாழ்த்துப் பாடல்களே சான்று பகரும்.

 

முதல் பத்து குறள்களில், ஏழு குறள்களில் பாதாரவிந்தம் பற்றிக் குறிப்பிடுகிறார். மலர் அடி, தாள் என்று இறைவனின் பாத கமலங்களைப் பாடுகிறார். இது வேறு எந்த மதத்திலும் கிடையாது; இந்துமதத்தில் மட்டுமே உண்டு. யாருடைய பாதாரவிந்தம் (பாத+ அரவிந்தம்= மலர்+அடி) என்று பிற்காலத்தில் எவருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாதே என்பதற்காக முதல் வரியிலேயே “கடவுள் வாழ்த்து” என்று தலைப்பும் கொடுத்து விடுகிறார். கடவுள் வாழ்த்து என்பது தொல்காப்பிய சொற்கள்!  கடவுள் பற்றியோ கடவுளின் பாதாரவிந்தம் பற்றியோ புத்த, சமண மதங்கள் பேசுவதில்லை. இரண்டு மதங்களும் கடவுள் பற்றி கதைப்பதில்லை.

 

மேலும் பத்தாவது குறளில் வரும் “பிறவிப் பெருங்கடல்” என்பது “சம்சார சாகரம்” என்பதன் மொழி பெயர்ப்பு. இது கிருஷ்ண பரமாத்மாவின் சொற்கள் (கீதை 12-7)

 

அதுமட்டுமல்ல கண்ணன் முதல் ஆதி சங்கரர் வரை எல்லா சமஸ்கிருத நூல்களிலும் ‘பிறவிப் பெருங்கடல்’ காணப்படுகிறது.

ஆதிசங்கரர் நூற்றுக் கணக்கான இடங்களில் சம்சார சாகரம் (பிறவிப் பெருங்கடல்) பற்றிப் பாடுகிறார். அவர் பாடிய விவேக சூடாமணியில் மட்டும் 9, 35, 37, 44, 136 எண் பாடல்களில் இந்தச் சொற்களைக் காணலாம்.

 

கடவுள் பற்றி  வள்ளுவர் சொன்ன எல்லா சொற்றொடர்களையும் தேவார, திருவாசக திவ்வியப் பிரபந்தங்களில் காணலாம். கம்பனும் இச்சொற்களை எடுத்தாள்கிறான்.

 

இரண்டே பாடல்களை மட்டும் பார்ப்போம்–

பிறவிஎனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
துறவிஎனுந் தோற்றோணி கண்டீர் – நிறைஉலகில்
பொன்மாலை மார்பன்புனற் காழிச் சம்பந்தன்
தன்மாலை ஞானத் தமிழ்.
—நம்பியாண்டார் நம்பி 11-11 ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக் கோவை

high-sea-e

பிறவிப் பெருங்கடலைப் பார்ப்பதற்கு முன் வேறு இரண்டு விஷயங்களையும் கவனியுங்கள். தமிழுக்கு எத்தனை பெயர்கள்? என்ற எனது கட்டுரையில் ஞானத்தமிழ் என்பதற்கு மூன்று பாடல்களைக் காட்டியிருந்தேன் அதில் ஒன்றுதான் நம்பியின் பாடல். ஆக, ஞானத் தமிழ் என்ற அடைமொழி சுவைத்துப் பருகவேண்டியது. அதைவிட அருமையான உவமை ஒன்றையும் கவனித்தல் வேண்டும். பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்கு ஞான சம்பந்ததர் பாடிய பாடல்கள் கப்பல் போல உதவும் என்கிறார். கடலைக் கடக்க கப்பல் தேவை; பிறவிக்கடலைக் கடக்க சம்பந்தர் தேவாரம் தேவை. அருமையான உவமை. அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டியது வள்ளுவர் பயன்படுத்தும் பிறவிப் பெருங்கடலை நம்பியும் பயன் படுத்துவதாகும்.

 

கடவுள் வாழ்த்தின் மூன்றாவது குறளில் மலர்மிசை ஏகினான் என்ற அடைமொழியை கடவுளுக்குச் சூட்டுகிறான் வள்ளுவன். தாமரை மலர் மீது வீற்றிருப்பவன் பிரம்மா. கடவுள் என்பதால் புத்தரையோ மஹாவீரரையோ அவன் குறிக்க முடியாது. மற்ற மதத்தினருக்கு உருவ வழிபாடு ஒவ்வாது; ஆகையால் அவர்கள் இ ந்தப் பத்துக் குறட்பாக்களையும் ஒதுக்கி விடுவர்.

மலர்மிசை ஏகினான் யார் என்று கம்பனும் புகல்வான்:-

 

கிஷ்கிந்தா காண்ட நட்புக் கோட் படலப் பாடல் ஒன்றில் அருங்கமலத்து அண்ணல் என்று பிரம்மாவை அழைக்கிறான் கம்பன்.

மராமரப் படலத்தில் வரும் பாடலைப் பாருங்கள்:-

 

கலைகொண்டு ஓங்கிய மதியமும் கதிரவந்தானும்

தலைகண்டு ஓடுதற்கு அருந்தவம் தொடங்குறும் சாரல்

மலைகண்டோம் என்பது அல்லது மலர்மிசை அயற்கும்

இலைகண்டோம் எனத் தெரிப்ப அருந்தரத்தன ஏழும்.

 

பொருள்

ஏழு மராமரங்களின் பெருமையை கம்பன் சொல்கிறான்:

அவற்றின் உயரம் சூரியனும் சந்திரனும் அவற்றின் உச்சியைத் தாண்டிச் செல்ல தவம் செய்ய வேண்டும்; தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மாவும் அவற்றின் நுனியின் உள்ள இலையைப் பார்த்தேன் என்று சொல்லமுடியாத அளவுக்கு உயரமானவை.

 

இங்கே நாம் கவனிக்க வேண்டிய சொற்கள் மலர்மிசை அயன் = தாமரையில் அமர்ந்திருக்கும் பிரம்மா! வள்ளுவன் சொன்ன மலர்மிசை ஏகினான் பிரம்மா என்பதற்கு வேறு சான்றும் வேண்டுமோ?

–Subam–

 

பேடி/அலி: வள்ளுவனும் காளிதாசனும் சொல்லும் உவமை (Post No.3112)

valluvar-4

Written by London Swaminathan

 

Date: 2 September 2016

 

Time uploaded in London: 6-33 AM

 

Post No.3112

 

 

இந்தியாவின் இரு பெரும் புலவர்கள் ஒரே உவமையைப் பயன் படுத்துவதை ஒப்பிட்டுப் பார்க்கையில் இலக்கிய இன்பம் பொங்கும். நாம் கற்றதை நினைவில் வைத்துக்கொள்ளவும் உதவும்.

 

ஆண்மை இல்லாதவனை அலி அல்லது பேடி என்பர்; உடலில் குறை இருந்தாலும் சரி, மனதில் வீரமினமை இருந்தாலும் பேடி -தான்.

 

பேடித்தனத்தை அடையாதே (க்லைப்யம் மாஸ்மகம:– பகவத் கீதை 2-3) என்று அர்ஜுனனை கிருஷ்ணன் கண்டிப்பதையும் நாம் அறிவோம்.

 

பெண்ணாகவும் ஆணாகவும் விளங்கிய சிகண்டியுடன் சண்டை போட மறுத்து, உயிர் துறந்த மாபாரதப் பிதாமஹர் பீஷ்மரை நாம் அறிவோம்.

 

வள்ளுவனுக்கும், அவனுக்கு முன் வாழ்ந்த காளிதாசனுக்கும் மஹாபாரதக் கதை நினைவுக்கு வந்தது போலும்!

 

இதோ காளிதாசன் கவிதை:–

 

கதஸ்ரியம் வைரி வராபிபூதாம்

தசாம் சுதீனாமபிதோ ததானாம்

நாரீமவீராமிவ தாமவேக்ஷ்ய ச

வாடமந்த: கருணாபரோபூத்

–குமார சம்பவம் 13-36

 

இந்திரனின் தலைநகரான அமராவதிக்குள் குமாரன் (முருகன்) புகுந்தபோது அது பேடியை மணந்த அழகி போலப் பொலிவிழந்து காணப்பட்டது. உடனே முருகப்பெருமானுக்கு கருணை பிறந்தது.

 

வள்ளுவன் சொல்லுவான்:–

கல்லாதான் சொற்காமுறுதல் முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காமுற்றற்று — திருக்குறள் 402

 

அதாவது, படிக்காத ஒருவன் அறிஞர் சபையில் பேச முற்படுவது, இயல்பாகவே தனங்கள் இரண்டும் இல்லாத பெண் ஒருத்தி காம சுகம் அனுபவிக்க விரும்பியது போல் ஆகும்.

 

இதை விட பேடி என்ற சொல் லையே வேறு இரண்டு சொற்களிலும் காணலாம்:–

 

பகையகத்து பேடி கை வாள் ஒள்வாள் அவையகத்து

அஞ்சும் அவன் கற்ற நூல்– திருக்குறள் 727

 

சபையில் பேச அஞ்சும் ஒருவன், போர்க்களத்தில் பேடியின் கையில் கிடைத்த வாள் போன்றதே.

 

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடி கை

வாளாண்மை போலக் கெடும்– திருக்குறள் 614

 

முயற்சி இல்லாத ஒருவன் பிறருக்கு உதவ முன் வருவது பேடியின் கையில் கிடைத்த வாள் போன்றதே (பயனற்றது).

 

நல்ல உவமை! வள்ளுவன் வாய்மொழி வளர்க! காளி புகழ் ஓங்குக!!

 

-Subam-

 

ஒரே சமயத்தில் இரு இடங்களில் இருக்கலாம்! (Post No.2612)

Microsoft-HoloLens-Skype-RGB

Written by S Nagarajan (written for Bhagya Magazine)

 

Date: 9 March 2016

 

Post No. 2612

 

Time uploaded in London :–  6-25 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

பாக்யா அறிவியல் துளிகள் தொடரில் 11-3-2016 தேதியிட்ட இதழில் வெளியான கட்டுரை
இனி யார் வேண்டுமானாலும் ஒரே சமயத்தில் இரு இடங்களில் இருக்கலாம்!

ச.நாகராஜன்

 

“நமது தொழில்நுட்பம் மனிதகுலத்தையும் மீறி விட்டது” – ஐன்ஸ்டீன்

 

18ஆம் தேதி,  பிப்ரவரி மாதம், ஆண்டு 2016.

இடம் : TED2016 மாநாடு வான்கூவர், கனடாவில் உள்ள ஒரு அரங்கம்.

இங்கு உலகின் அதிசயமான அறிவியல் நிகழ்வு ஒன்று நடந்தது.

ஹாலோ லென்ஸ் என்ற புதிய லென்ஸ் ஒன்றைத் தயாரித்த அலெக்ஸ் கிப்மேன் என்பவர்,  நாஸா விஞ்ஞானியான ஜெஃப் நோரிஸை டெலிபோர்ட் செய்து கனடா அரங்கத்தில்  செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் அவரை நிற்க வைத்துக் காண்பித்தார்.

“ஆஹா, அந்த லென்ஸ் வேலை செய்கிறது” என்று உற்சாகமாக உரக்கக் கூவினார் .அலெக்ஸ்.

 

நாஸா விஞ்ஞானி நோரிஸ் அப்போது ஒரே சமயத்தில் நிஜமாக மூன்று இடங்களில் இருந்தார்.

 

முதலாவதாக அவர் தனது அறையிலேயே இருந்தார். ஹாலோகிராம் முறைப்படி ஒரு இடம் விட்டு இன்னொரு இடம் மாற்றப்படவே அவர் கனடாவில் உள்ள அரங்கத்தில் இருந்தார். அந்த அரங்கத்திலும் பல லட்சம் மைல்களுக்கு அப்பால் உள்ள செவ்வாய் கிரக பரப்பு அமைக்கப்பட்டிருந்ததால் அந்தப் பரப்பின் மீது அவர் நின்று கொண்டிருந்தார்.

 

ஆக, ஒரே சமயத்தில் மூன்று இடங்களில் அறிவியல் சாதனை மூலம் நோரிஸ் இருந்தார். இந்த நிகழ்வுக்குப் பெயர் ஹாலோகிராபிக்       ட்ரான்ஸ்போர்டேஷன் என்று பெயர்!

 

முதன் முறையாக உலகில் இது நிகழ்த்திக் காட்டப்பட்டுள்ளது.

ஹாலோகிராபி என்ற இந்த புதிய உத்தியானது ஒரு பொருளின் மீது பட்ட ஒளியைப் பதிவு செய்து கொண்டு அதை இன்னொரு இடத்தில் மூன்று பரிமாணமும் கொண்டதாக வழங்குகின்ற புது அறிவியல் உத்தியாகும்.

ஸ்டார் வார்ஸ் படத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போகும் கதாபாத்திரங்களை திரையில் கண்டு களித்திருக்கிறோம். அதை உண்மையாக நடத்திக் காண்பித்தார் அலெக்ஸ்.

இது இனி உலகத்தையே மாற்றப் போகும் ஒரு உத்தியின் ஆரம்ப விழா.

 

இனி யார் வேண்டுமானாலும் தான் இருந்த இடத்தை விட்டு நகராமல் இன்னொரு இடத்தில் காட்சி தரலாம்!

holo lens

மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் புதிய சாதனம் உலகில் பெரும் புரட்சியைச் செய்யப் போகும் ஒன்று. இதுவரை தொலைபேசியின் மூலமாக பேசுகின்ற போது ஒருவருக்கு அருகில் இன்னொருவர் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. இனி நிஜமாகவே இன்னொரு இடத்தில் நமக்கு வேண்டியவர் அருகில் மூன்று பரிமாணமாக  இருப்பது போல  யார் வேண்டுமானாலும் தோன்றலாம்

இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் ஒரு சிறிய லென்ஸ், ஏராளமான சென்ஸர்கள், ஒரு ஹாலோகிராபிக் யூனிட் ஆகியவை உள்ளன.

நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் அதே கணத்தில் உள்ளது உள்ளபடியே இன்னொரு இடத்தில் காட்சி தர வைக்கும் இது நாளைய அற்புதம்!

 

இதன் ஒரு பகுதி இப்போதே பல இடங்களில் அனுபவத்துடன் உணரப்படுகிறது. இதற்கு தேவையானது ஒரு ஹெட் செட் தான்!

எடுத்துக்காட்டாகச் சொல்வது என்றால் வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தில் உள்ள மருத்துவ மாணவர்கள் ஹாலோலென்ஸ் மூலமாக மனித உடலை அங்கம் அங்கமாகப் பார்த்து மருத்துவத்தைப் பயில்கிறார்கள். வால்வோ நிறுவனம் ஹாலோ லென்ஸைத் பயன்படுத்த மைக்ரோசாப்டுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் அந்த நிறுவனம் புதிய வடிவமைப்பு கார்களை அறிமுகப்படுத்தப்போகிது. நாஸாவோ இந்தத் தொழில்நுட்பத்தை விண்வெளிப் பயணங்களுக்குப் பயன்படுத்த இருக்கிறது.

 

 

இந்த புதிய தொழில்நுட்பத்தினால் என்னவெல்லாம் நீங்கள் செய்ய முடியும்?

வீட்டில் இருந்து கொண்டே இமய மலை உச்சியில் இருப்பது போலக் காண்பிக்க முடியும். உங்கள் வீட்டில் உள்ள காட்சிகளை தத்ரூபமாக அதே கணத்தில் இன்னொரு இடத்தில் டெலிபோர்ட் செய்ய முடியும்.

ஆக இனி யார் வேண்டுமானாலும் ஒரே சமயத்தில் இரு இடங்களில் தோன்றலாம்!

 

பூமியின் மேலே நிலை கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள் இப்போதே ஹெட் செட் மாட்டிக் கொண்டு பூமியில் உள்ளவர்களுடன் மாயாஜாலக் காட்சி பாணியில் தொடர்பு கொள்ளப் போகின்றனர்.

 

இதன் உடனடிப் பயபாட்டைப் பற்றி மைக்ரோசாப்ட் ஒரு விளக்கப்படத்தை வெளியிட்டுள்ளது.அதில் கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள சாதனத்தின் மூலமாக ஏற்படும் பயன்கள் விளக்கப்பட்டுள்ளன.

 

பெண்மணி ஒருவருக்கு ஒரு சிறிய பிரச்சினை! அவரது வீட்டில் சமையலறையில் உள்ள நீர்த்தொட்டி ஒழுகுகிறது. ஹெட்செட்டை மாட்டிக் கொண்டுள்ள அந்தப் பெண்மணி தனது நீர்த்தொட்டியை ஹாலோகிராம் மூலமாக இன்னொரு நகரத்தில் உள்ள ஒரு தொழில்நுடப நிபுணரிடம் காண்பிக்கிறார். அவர் உடனே எந்த இடத்தில் எந்த பைப்பை எப்படி செருக வேண்டும் என்று இடத்தைக் குறியிட்டுக் காட்டுகிறார். அந்தக் கணமே ஒழுகல் பிரச்சினை தீர்க்கப்படுகிறது. 3 டி எபெக்டினால் பிரச்சினையைப் புரிந்து கொள்வதும் சுலபம்; தீர்ப்பதும் சுலபம். ஹாலோஸ்டுடியோ என்ற கணினியின் புதிய அமைப்பில் இனி நாம் அனுபவிக்கப்போவது பல புதிய விந்தைகளை!

 

உலகம் மாறுகிறது – வேகமாக! விசித்திரமாக!!மாறுதலின் அங்கமாக மாறுங்கள்! மாயாஜாலம் புரியுங்கள்!! மகிழுங்கள்!!!

abdul kalam

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

மறைந்த பாரத ஜனாதிபதியும் மாபெரும் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ஐ எஸ் ஆர் ஓவில் (ISRO), ஆரம்ப காலத்தில், வேலை பார்த்த போது ஒரு சர்ச்சில் தான் விஞ்ஞானிகள் அனைவரும் பணிகளைச் செய்து வந்தனர். அருகில் இருந்த பீச் தான் அவர்களது ராக்கெட் ஏவு தளம். ராக்கெட்டின் பாகங்களோ சைக்கிளில் தான் கொண்டு செல்லப்பட்டன!

 

அவர் இயக்குநராக இருக்கும் போது தான் ஸ்பேஸ் லாஞ்ச் வெஹிகிள் எனப்படும் எஸ் எல் வி (SLV II) ரக ராக்கெட்டுகள் தயாரிக்கபட்டன. இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் அட்வான்ஸ்ட் மிஸைல் திட்டம் துவங்கப்பட வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தி அதில் அவர் வெற்றியும் பெற்றார்.

ஒரு முறை ஒரு விழாவில் கலந்து கொள்ளச் சென்ற போது அங்கிருந்த மாணவர்கள் அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பினர். அவர்கள் விருப்பப்படியே ஒவ்வொருவரும் தனித் தனியே தன்னுடன் போட்டோ எடுக்க அவர் அனுமதித்தார். விழா துவங்கும் நேரம் நெருங்கவே அமைப்பாளர் கலாம் அவர்களை நோக்கி, ‘விழாவிற்குப் போகவேண்டும் என்று துரிதப் படுத்திநார்.

அவரை அமைதிப் படுத்திய கலாம் இந்த போட்டோ செஷன் முடிந்தால் தான் விழா துவங்கும் எந்று தீர்க்கமாக அறிவித்து விட்டார்.

 

எல்லா மாணவர்களுடனும் போட்டோ எடுத்து முடிந்த பின்னரே விழா துவங்கப்பட்டது.

 

மாணவர்கள் மீது அவ்வளவு பாசம் கொண்ட மாபெரும் மனிதர் அவர்!

*******

 

வள்ளுவரின் சுடும் குறள்கள்! (Post No. 2469)

punul valluvar

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 8 January 2016

 

Post No. 2469

 

Time uploaded in London :–  5-16 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

திருக்குறள் தெளிவு

 

வள்ளுவரின் சுடும் குறள்கள்!

 

.நாகராஜன்

 

சுடும் குறள்கள் ஐந்து

 

வள்ளுவரின் சில குறள்கள் நம்மைக் குளிர்விக்கும். சில அறிவுரை தரும். சில கேள்விகளைக் கேட்கும். சில கேள்விகளைக் கேட்டு பதிலும் தரும்.

இன்னும் சில குறள்களோ  சுடும்

 

என்ன சுடுமா? ஆம், சுடும் குறள்கள் அனைத்தையும் இங்கு பார்ப்போம்.

 

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை    உள்ளினும் உள்ளம் சுடும்   (குறள் 799)

 

 

ஒருவனின் உள்ளம் எப்போது சுடும்?

பதில் தருகிறார் வள்ளுவர்.

மரணம் வரும் போது நினைத்தால் கூட (அடுங்காலை) உள்ளம் சுடும் – ஒரு கேடு நமக்கு வரும் போது உதவாமல் ந்ம்மைக் கைவிடுபவரின் நட்பை மரண நேரத்தில் நினைத்தால் கூட உள்ளம் சுடும்!

 

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்                உள்ளினும் உள்ளம் சுடும்    (குறள் 1207)

 

 

எனது காதலனை மறக்காமல் இடை விடாது நினைத்துக் கொண்டிருக்கும் போதே இந்த உள்ளம் சுடுகிறதே, ஒரு வேளை நினைக்காமல் மறக்க நேர்ந்தால் நான் என்ன ஆவேன்?

 

காதல் பற்றிய உணர்வை ஒரு பெண் சொல்லுகின்ற குறளில் உள்ளம் ஏன் சுடுகிறது என்பதை அறிய சுவையாக இருக்கிறது.

valluvar iyengar

தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்                  தன்னெஞ்சே தன்னைச் சுடும்       (குறள் 293)

 

 

உன் நெஞ்சம் தானாகவே உன்னைச் சுடும் என்ற எச்சரிக்கைக் குறள் இது. எப்போது சுடும்?

தன் நெஞ்சம் அறிந்த உண்மையைக் கூறாமல் பொய் கூறினால் தன் நெஞ்சே தன்னைச் சுடும்.

அந்தச் சூடு இருக்க, தனியே வேறு இறந்த பிறகு மயானத்தில் சுட வேண்டாம். இறந்த பின் சுடுவது சில மணி நேரமே. ஆனால் நெஞ்சம் சுடுவதோ வாழ்நாள் இருக்கும் வரைக்கும்!

 

 

சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்           ஏமப் புணையைச் சுடும்    (குறள் 306)

 

 

சேர்ந்தவுடன் ஒருவரை அழிக்கும் அபூர்வப் பொருள் உள்ளது. அது தான் நெருப்பு. சேர்ந்தாரைக் கொல்லி – நெருப்பு.

ஏமப்புணை என்பது நமக்குத் துணையாக இருக்கும் பாதுகாவலர்.

நெருப்பு பரவினால் அனைத்தையும் அல்லவா சுட்டெரிக்கும்.

 

சினம் அதாவது கோபம் நெருப்பு போன்றது. அது கோபப்பட்டவரை மட்டும் அது அழிக்காது. உடன் துணையாக இருக்கும் பாதுகாவலரையும் சுடும்.

சேர்ந்தாரைக் கொல்லி உடன் இருந்தாரையும் அல்லவா சுட்டு விடும்! ஜாக்கிரதை!

 

 

tirukkural seminar

குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்             நாணின்மை நின்றக் கடை    (குறள் 1019)

 

ஒருவன் தான் கொண்ட கொள்கை தவறினால் (கொள்கை பிழைப்பின்) அது அவனுடைய குலத்தைச் சுடும்; அழிக்கும். ஆனால் செய்யத் தகாத செயல்களைச் செய்வதில் வெட்கப் படாவிட்டால் (நாணின்மை நின்றக் கடை) எல்லா நன்மையையும் அது அழிக்கும் (நலம் சுடும்)

 

ஐந்தும் சுடும் குறள்கள்.

 

ஒன்று உன் உள்ளத்தைச் சுட்டே உன்னை சாகும் வரைக்கும் எரிக்கும் என்கிறது — நெஞ்சம் அறிந்து பொய் சொல்லாதே

அடுத்தது மரண சமயத்தில் நினைத்தால் கூட உள்ளம் சுடும் என்கிறது -ஆபத்துக் காலத்தில் கைவிட்ட நண்பனை நினைத்தால்!

 

இன்னொன்று காதலியின் உணர்வைப் படம் பிடித்துக் காட்டுகிறது. சதா ‘அவன்’ நினைவாக இருக்கும் போதே சுடுகிறதே, மறந்தேன் என்றால், ஐயையோ… அந்த நிலையை நினைக்கவும் முடியுமா?

 

அடுத்தது கொள்கையை விட்டு விட்டால் குலம் அழியும்; வெட்கப்பட வேண்டிய செயல்களை விடாவிட்டால் எல்லா நன்மையும் அழியும் என்கிறது.

 

இன்னொன்று, கோபப்படாதே. கோபம் சேர்ந்தவரை அழிக்கும் சேர்ந்தாரைக் கொல்லி. அது உன்னை மட்டும் அழிக்காது, உன் துணையையும் அழித்து விடும் என்கிறது.

 

 

அபூர்வமான சுடும் குறள்கள் நெஞ்சத்திற்கு இதமான உண்மைகளை அல்லவா கூறுகிறது!

 

valluvar gold

 

சுடுவதை ஒப்பிடும் குறள்கள் நான்கு

 

 

சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்                 சுடச்சுட நோற்கிற்பவர்க்கு  (குறள் 267)

 

தவம் செய்கிறான் ஒருவன் அவனது தவம் மேம்பட மேம்பட ஒளி மயம் ஆவான். எது போல? சுடச் சுட  மாசு நீங்கி ஒளிரும் பொன் போல! தவம் மாசைக் களையும். மாயையை அழிக்கும். ஒளியைத் தரும்!

 

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல                        விடிற் கடல் ஆற்றுமோ தீ    (குறள் 1159)

 

 

நெருப்பு தன்னைத் தொட்டவரை மட்டும் தான் சுடும். ஆனால் இந்த காம நோய் இருக்கிறதே, விட்டு நீங்கியவரை கூட சுடுகிறதே, அந்த நெருப்புக்கு இந்த ஆற்றல் இல்லையே!

நெருப்புக்கும் காம நோய்க்கும் உள்ள வேற்றுமை தெரிந்து விடுகிறது! எப்போதும் உடலை தகிக்க வைப்பது காமம்!

 

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்              பெரியார்ப் பிழைத்தொழுகுவார்   (குறள் 896)

 

தீயினால் சுடப்பட்டால் கூட ஒரு வேளை உயிர் தப்பி வாழ ஒருவனுக்கு வழி உண்டு. (எரியால் சுடப்படினும் உய்வுண்டாம்)

ஆனால் ஒருவன் பெரியோரிடத்தில் குற்றம் செய்து விட்டாலோ உய்வதற்கு வழியே இல்லை.

பெரியோரிடம் தவறு இழைக்காதே!

 

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே                  நாவினால் சுட்ட வடு  (குறள் 129)

 

 

தீயினால் சுட்ட புண் கூட ஆறி விடும். ஆனால் நாவினால் ஒருவனைச் சுட்டு விட்டால் அது அவன் நினைவில் நீங்காத வடுவாக அல்லவா நிலைத்து நிற்கும். நாவினால் யாரையும் சுடாதே!

 

எப்படி இருக்கிறது ஐந்து சுடும் குறள்களும் நான்கு சுடுவது பற்றி ஒப்பிடும் குறள்களும்.

 

நவ (9) குறள்களும் நவமான (புதிதாக இருக்கும்) குறள்கள் – இன்று நோக்கினாலும், என்று நோக்கினாலும்!

*******

அற்புத உவமை- சேர்ந்தாரைக் கொல்லி: அக்னி பகவான்!

wildfires-

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1350; தேதி அக்டோபர் 16, 2014.

காட்டுத் தீ பற்றிய ஒரு அற்புதமான உவமையை ரிக் வேதம் முதல் திருக்குறள், கம்பன் வரை பலரும் பயன் படுத்தும் அழகை, வேதத்திலும் புறநானூற்றிலும் திருக்குறளிலும், கம்பனிலும் காண முடியும். முதலில் வள்ளுவர் காட்டுத் தீ பற்றி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்:-

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புனையைச் சுடும் – திருக்குறள் -306

சினமென்னும் தன்னைச் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு அவனை அழிப்பதுடன் அவனுக்குத் துணையாக நின்ற பாதுகாவலரையும் அழிக்கும்.

இதில் தீ என்பதற்கு அவர் பயன்படுத்தும் சொல் ‘’சேர்ந்தாரைக் கொல்லி’’. இது ஆஸ்ரயாச: என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். வடமொழி நூல்களில் பல்வேறு இடங்களில் காணப்படும் சொல் இது.

ரிக்வேதம்:–10-79-4

இது ரிக்வேதத்தில்தான் முதல் முதலில் வருகிறது. குறைந்தது 4000 ஆண்டுகளுக்கு முந்தையது ரிக்வேதம். பாலகங்காதர திலகர், வானவியல் ஆராய்ச்சி மூலம், 8000 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் ஜெர்மன் அறிஞர் ஜாகோபி 6000 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் காட்டியுள்ளனர்.

அக்னி பற்றிய பாடலில் வரும் வரிகள் (ரிக்வேதம்:10—79—4)

“இந்தப் புனித விதியை உனக்குச் சொல்கிறேன். பூமியும் வானமும்; –பிறந்த குழந்தை — தந்தை, தாயையே விழுங்கிவிட்டது.
இந்தக் கடவுள் பற்றி முழுதும் நான் அறியேன். நான் சாதரண மானுடன்– ஆனால் அக்னி பகவானுக்குத் தெரியும். அவர் எல்லாம் அறிந்தவர்.”

இதில் கவனிக்க வேண்டியது பிறந்த குழந்தை—தாய் தந்தையரையே விழுங்கிவிட்டது. அதாவது தீயானது பிறக்கும் இடம் — காடுகளில் இரண்டு மரங்கள் உராயும் போது — மரத்தில் பிறக்கும். அவைதான் தாய் தந்தையர்கள் – அப்படிப் பிறந்தவுடன் தன்னையும் அந்த மரங்களையும் எரித்து அழிப்பதையே தாய்,தந்தையரை விழுங்கிவிட்டது என்கிறார் ஒரு வேத கால ரிஷி. இதைத் தமிழ் நாட்டில் வாழ்ந்த கம்பன் வரை பலரும் பயன்படுத்துவது பாரத நாட்டின் சிந்தனையும் செயல்பாடும் ஒன்றே — உவமைகளில் கூட – ஒன்றே என்று காட்டுகிறது.
burning firewood

ஆஸ்ரயாச: = சேர்ந்தாரைக்கொல்லி

அமரகோசம் என்னும் புகழ்பெற்ற சம்ஸ்கிருத நிகண்டில் அக்னி பகவானுக்கு உள்ள 34 பெயர்களில் ஒன்று ஆஸ்ரயாச:. இதன் பொருள் சேர்ந்தாரைக் கொல்லி என்பதாகும். அதாவது தன்னுடன் சேர்ந்தாரையும் சேர்த்து அழிப்பது அக்னி. இதை 4000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பலரும் உவமையாகப் பயன்படுதுவது படித்துச் சுவைக்கத்தக்கது.

புறநானூற்றில் மருதன் இளநாகன்:–

நுதிவேல் கொண்டு நுதல்வியர் தொடையாக்
கடிய கூறும் வேந்தே; தந்தையும்
நெடிய அல்லது பணிந்து மொழியலனே;
இஃது இவர் படிவம் ஆயின், வைஎயிற்று,
அரிமதர்க் மழைக்கண், அம்மா அரிவை
மரம்படு சிறு தீப் போல
அணங்காயினள்,, தான் பிறந்த ஊர்க்கே.
—மருதன் இளநாகன் பாடல் 349 புறம்

பொருள்:–அரசனோ கோபக் கனல் பொங்கப் பேசுகிறான். நெற்றியில் வழியும் வேர்வையை கூரான ஈட்டியால் வழிக்கிறான். பெண்ணைப் பெற்ற அப்பனோ கொஞ்சமும் விட்டுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. இவளோ அழகி; கூரான பற்கள், குளிர்ந்த கண்கள், மா நிறம் —- காட்டில் ஒரு மரத்தில் தோன்றிய தீ, அந்த மரத்தை அழிப்பதோடு நிற்காமல் அந்தக் காட்டையே அழிப்பது போல இந்தப் பெண்ணால் ஊருக்கே கேடு வரப்போகிறது.

மரம்படு சிறு தீப்போல அணங்கு ஆயினள் – என்பது அழகான உவமை.

fire

கம்பராமாயணத்தில்
மூங்கிலிற் பிறந்து முழங்கு தீ மூங்கில்
முதலற முருக்குமாப் போலத்
தாங்கரும் சினத் தீ தன்னுள்ளே பிறந்து
தன்னுறு கிளையெல்லாம் தகிக்கும்;
ஆங்கதன் வெம்மை அறிந்தவர் கமையால்
அதனையுள் அடக்கவும் அடங்காது
ஓங்கிய கோபத்தீயினை ஒக்கும்
உட்பகை உலகில் வேறுண்டோ ?
உத்தரகாண்டம் – இலவிணன் -29

வள்ளுவனைப் போல, கம்பன் கோபத் தீயை, மரத் தீக்கு ஒப்பிடுகிறான். ஒருவன் அடையும் கோபம் அவனை மட்டும் அழிக்காது அவனைச் சார்ந்து நின்றாரையும் அவனுக்கு ஆதரவு கொடுத்தாரையும் சேர்ந்து அழித்துவிடும்.

உதவிய நூல்கள்:– திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு, பதிப்பாசிரியர் கி.வா.ஜகந்நாதன், ரிக்வேதம்-ஆங்கில மொழிபெயர்ப்பு, ரால்ப் டி.எச்.கிரிப்பித், புறநானூறு-வர்த்தமானன் பதிப்பகம், அமரகோசம், கம்பராமாயணம்.