சிவனுக்கு எதைக் கொடுத்தால் நமக்கு என்ன தருவார் ?- Part 7 (Post.14,456)

Written by London Swaminathan

Post No. 14,546

Date uploaded in London –  23 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பரஞ்சோதி முனிவர் சொல்லும் அதிசயச் செய்தி!

திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சிக் கட்டுரை-7 

திருவமுது நிவேதிப்போ ரவிழொன்றற்

     குகமொன்றாச் சிவலோ கத்தின்

மருவிநிறை போகமுடன் வைகுவர்தாம்

     பூலமுக வாச மீந்தோர்

பொருவரிய கடவுளராண் டொருநூறு

     கோடிசிவ புரத்து வாழ்வார்

ஒருபளித விளக்கிடுவோர் வெண்ணிறமுங்

     கண்ணுதலு முடைய ராவார்.

ஆலவாய்  ( மதுரை)ப் பெருமானுக்குத் திருவமுது படைப்போர்கள், ஒரு அவிழுக்கு ஒரு யுகத்துக்கு சிவ லோகத்திற் நிறைந்த போகத்துடன் வாழ்வார்கள்;  தாம்பூலமும் முகவாச மைந்தும் கொடுத்தவர்கள்,  ஒப்பில்லாத, கடவுளர் ஆண்டு ஒரு  நூறு கோடிதேவ ஆண்டுகள், சிவலோகத்தில் வாழ்வார்கள்;  ஒரு கற்பூர விளக்கு இடுபவர்கள்; வெண்மை நிறத்தையும் நெற்றிக்கண்ணையும் உடையராவார்கள்.

அவிழ் – பருக்கை ;

முக வாசமாவன : தக்கோலம், ஏலம், இலவங்கம், கர்ப்பூரம், சாதிஎன்பன.

கடவுளராண்டு – மக்கட்கு ஓராண்டு ஒருநாளாகக்

கணிக்கப்பட்ட ஆண்டு. பளித விளக்கு – கர்ப்பூர நீராஞ்சனம்.

கர்ப்பூர தீப வரலாறு ஆராய்ச்சிக்குரியது. விளக்கிடுவோர்

சிவசாரூபம் பெறுவர் என்றதாயிற்று.

நெற்றிக்கண்=ஞானக் கண்

*****

நறுந்திருமஞ் சனமெடுக்கக் குடமாட்ட

     மணிக்கலச நல்ல வாசம்

பெறுந்தகைய தூபக்கால் தீபக்கால்

     மணியின்ன பிறவுங் கங்குற்

றெறுங்கதிர்கான் மணிமாட மதுரைநா

     யகற்கீந்தோர் செய்த பாவம்

வெறுந்துகள்செய் தைம்பொறிக்கு விருந்தூட்டும்

     பெருங்காம வெள்ளத் தாழ்வார்.

    பொருள்:

 இருளை ஓட்டும், ஒளியை,வீசுகின்ற,  மணிகள் பதித்த

மாடங்களையுடைய மதுரை யிறைவனாகிய சோமசுந்தரக்

கடவுளுக்கு,  மணங்கலந்த திருமஞ்சன மெடுத்தற்குக் குடமும்,

அபிடேகிக்க இரத்தினக் கலசமும், இனிய மணத்தைத் தரும் தகுதியையுடைய தூபக்கால்களும்,  தீபக்காலும் மணியும் இவைபோல்வன பிறவும், கொடுத்தவர்கள், தாங்கள் செய்த பாவங்களை,  வெறுவிய பொடியாகச் செய்து,  ஐந்து இந்திரியங்களுக்கும் விருந்துண்பிக்கும், பெரிய இன்பவெள்ளத்துள் மூழ்குவார்கள்

     தூபமும் தீபமும் இடுதற்குரிய கலன்கள் தூபக்கால்தீபக்கால் எனப் பெறும் .

வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் – என்று திருப்பாவையில் ஆண்டாள் பாடியதையும் ஒப்பிடலாம்.

சங்கீர்த்திய நாராயண சப்த மாத்ரம் விமுகத துக்காஸ் சுகினோ பவந்து  என்று விஷ்ணு சஹஸ்ர நாமமும் கூறும் ; நாராயணன் என்ற மந்திரத்தைக் கேட்ட நொடியில் துக்கங்கள் மறைந்து போகும் என்பது பொருள்.

****

இயலிசைய பாடலினோ டாடலிவை

     செய்விப்போ ரிறுமாப் பெய்திப்

புயயலிசைய வியங்கலிப்ப மூவுலகுந்

     தொழவரசாய்ப் பொலங்கொம் பாடுஞ்

செயலிசைய வணங்கனையா ராடரங்கு

     கண்டின்பச் செல்வத் தாழ்வார்.

பொருள் –

கயலை ஒத்த கண்களையுடைய அங்கயற்கண்ணியின் (மீனாட்சியின்)  தலைவனாகிய சோமசுந்தரக் கடவுளின், சன்னிதானத்தில், பல (வாத்தியங்கள்)  இயங்களும்

 கல்லென்று ஒலிக்க, இயல் இசை  இலக்கணம் உடைய  பாடல்களோடு,  ஆடுபவர்கள், இசைக்கருவிகள் முழங்க

மூன்றுலகங்களும் வணங்குமாறு அரசராகி, தங்க  வர்ண அழகிகள் போன்ற தேவ மகளிரை ஒத்த பெண்கள், மேடையில் தோன்றுவதைக்  கண்டு, இன்பந்தரும் செல்வக் கடலுள் அழுந்துவார்கள் .

அதாவது அரசராகி தேவ லோக கன்னிகைகள் போன்ற அழகிகள் ஆடுவதைக் கண்டு இன்பம் அடைவார்கள்

^^^^^

இத்தகைய திருவால வாயுடையான்

     றிருமுன்ன ரியற்று மோமம்

மெய்த்தவமந் திரந்தான மின்னவணு

     வளவெனினு மேரு வாகும்

உத்தமமா மிவ்விலிங்கப் பெருமையெலாம்

     யாவரளந் துரைப்பர் வேத

வித்தகரே சிறிதறிந்த வாறுரைத்தே

     மினிப்பலகால் விளம்பு மாறென்.

     பொருள்

இத்தன்மையையுடைய திருவாலவாயையுடைய சோம சுந்தரக்

கடவுளின்,  சந்நிதானத்தில், செய்கின்ற,

 ஓமங்களும் உண்மைத்

தவங்களும் மந்திரங்களும் தானங்களும் இவை போல்வன பிறவும்,

அணுவின் அளவின ஆயினும், மகா மேருவின் அளவின ஆகும்;

சிறந்தது ஆகிய,  இந்த இலிங்க

மூர்த்தியின் பெருமைகள் அனைத்தையும், அளவிட்டுக் கூறவல்லார் யார் (ஒருவருமில்லை ),

 வேதங்களில் வல்ல முனிவாகளே,சிறிது அறிந்தபடி கூறினேம்

*****

மதுரை சிவ பெருமானின் பல பெயர்கள்

மான்மதசுந் தரன்கொடிய பழியஞ்சு

     சுந்தரனோர் மருங்கின் ஞானத்

தேன்மருவி யுறைசோம சுந்தரன்றேன்

     செவ்வழியாழ் செய்யப் பூத்த

கான்மருவு தடம்பொழில்* சூ ழாலவாய்ச்

     சுந்தரன்மீன் கணங்கள் சூழப்

பான்மதிசூழ் நான்மாடக் கூடனா

     யகன்மதுரா பதிக்கு வேந்தன்.

பொருள்: மான்மத சுந்தரன் என்றும், கொடுமையான பழியஞ்சிய சுந்தரன் என்றும், ஒரு பக்கத்தில், உமையம்மையார் விரும்பி உறைகின்ற சோமசுந்தரன் என்றும், வண்டுகள், செவ்வழிப் பண்ணைப் பாட, மலர்ந்த,  மணம் பொருந்திய,  பெரிய சோலைகள் சூழ்ந்த,

 ஆலவாய்ச் சுந்தரன் என்றும், உடுத் தொகுதிகள் சூழ,  வெள்ளி சந்திரன் வலம் வருகின்ற,நான் மாடக் கூடனாயகன் என்றும்,  மதுராபதி வேந்தன் என்றும் ………

****

சிரநாலோன் பரவரிய சமட்டிவிச்சா

     புரநாதன் சீவன் முத்தி

புரநாதன் பூவுலக சிவலோகா

     திபன்கன்னி புரேசன் யார்க்கும்

வரநாளுந் தருமூல மாடக் கூடல்

     விவைமுதலா மாடக் கூடல்

அரனாம மின்னமளப் பிலவாகு

     முலகுய்ய வவ்வி லிங்கம்.

பொருள்:

நான்கு தலைகளையுடைய பிரமன்,  வணங்குதற்கரிய,

சமட்டி விச்சாபுர நாதன் என்றும்,  சீவன் முத்திபுர நாதன் என்றும்,  பூலோக சிவலோகாதிபன் என்றும்.  கன்னி புரேசன் என்றும்,  எவருக்கும், எப்போதும்,  வரம் தருகின்ற,  மூலலிங்கமென்றும், இவை முதலாக, நான்மாடக் கூடலில் எழுந்தருளி யிருக்கும் சோமசுந்தரக் கடவுளின்திருப்பெயர்கள், இன்னும்  அளவிறந்தனவாம்; அந்த  இலிங்கம் உய்யும் பொருட்டு முளைத்தெழுந்தது (அதாவது ஸ்வயம் பூ)

—SUBHAM—

TAGS- சிவன், நமக்கு என்ன தருவார் ?  பரஞ்சோதி முனிவர், அதிசயச் செய்தி, திருவிளையாடல் புராணம், ஆராய்ச்சிக் கட்டுரை-7

ஆயுர்வேதத்தை அங்கீகரிக்கும் ஆய்வு! (Post No.15,545)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,545

Date uploaded in London – –23 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மே 2025 ஹெல்த்கேர் இதழில் வெளியாகியள்ள கட்டுரை!

ஆயுர்வேதத்தை அங்கீகரிக்கும் ஆய்வு! 

ச. நாகராஜன் 

ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் நான்கும் ஹிந்துக்களின் புனிதமான நூல்களாகும்.

 ஆயுர்வேதமும், ஜோதிடமும் ஐந்தாவது வேதம் என்று அழைக்கப்படுகிறது.

 இதில் ஆயுர்வேதத்தை அறிவியல் பூர்வமான சிகிச்சை முறை என்று சொல்ல முடியாது என்று சில பகுத்தறிவுவாதிகள் அவ்வப்பொழுது கூறி வருவதோடு ஆயிரக்கணக்கான அல்லோபதி கட்டுரைகளில் ஓரிரண்டு கட்டுரைகளே ஆயுர்வேதத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றன என்றும் கூறுகின்றனர்.

 இதைப் போக்க கடந்த இருபது ஆண்டுகளாக,அறிவியல் பூர்வமான ஆய்வுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 சென்டர் ஃபார் செல்லுலர் அண்ட் மாலிகுலர் பயாலஜி (CENTRE FOR CELLULAR AND MOLECULAR BIOLOGY)  என்ற நிறுவனம் 1977லிருந்து ஹைதராபாத்தில் இயங்கி வருகிறது.

 ஐம்பூதங்களான நிலம், நீர், காற்று, தீ, வானம் ஆகியவற்றோடு வாத, பித்த, கபம் என்ற மூன்று தோஷங்களுமே மனிதனின் உடலமைப்பை நிர்ணயிக்கிறது என்கிறது ஆயுர்வேதம்.

 ஒவ்வொரு மனிதனும் மூன்று தோஷங்களில் ஏதேனும் ஒன்றே அவன் உடலில் பிரதானமாக இருக்கிறது; அதை நன்கு உணர்ந்து எந்த சிகிக்க்சை முறையும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அது கூறுகிறது.

 ஆகவே ப்ரக்ருதி என்று சொல்லப்படும் இந்த மூன்று தோஷங்களைப் பற்றிய ஆய்வை மேற்கண்ட ஹைதராபாத் நிறுவனம் மேற்கொண்டது.

20 வயதிலிருந்து 40 வயதிற்குள் இருக்கும் 3416 ஆரோக்கியமான ஆண்கள் இந்த சோதனைக்காகத் தேர்வு செய்யப்பட்டனர்.  அவர்களின் பிரகிருதியை பாரம்பரிய வழியில் வந்த மருத்துவர்கள் நிர்ணயித்தனர்.

 பிறகு இவர்கள் மீது ஆயுசாஃப்ட் என்ற ஒரு மென்பொருளைக் (A

software by name AYUSOFT) கொண்டு மீண்டும் ஆய்வு நடத்தப்பட்டது.

இறுதியில் ஒரு தோஷம் 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக பிரதானமாக உள்ள 262 பேர்கள் தேர்ந்தெடுக்கப்படனர். அவர்களின் 52 ஜெனிடிக் மார்கர்ஸ் எனப்படும் 52 மரபணு குறிப்பான்கள் அடையாளம் காணப்பட்டன. இவர்களிடம் எந்த தோஷம் அதிகமாக (பிரதானமாக) இருக்கிறது என்பதை இதன் அடிப்படையில் ஆராய முடிவு செய்யப்பட்டது. அத்தோடு மொழி மற்றும் வசிக்கும் இடத்தின் பின்னணியும் குறிக்கப்பட்டது.

 ஆய்வின் முடிவில் ஆய்வாளர்கள் பிஜிஎம் 1 (PGM 1) என்ற மரபணுவே பித்தத்துடன் தொடர்புள்ளதாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தனர்.

  இந்த ஆய்வைப் பற்றி இந்த நிறுவன இயக்குநரான டாக்டர் மோஹன் ராவ் விளக்கமாக எடுத்துரைத்தார். இந்த ஆய்வுக்கான தொகை மட்டும் ஒரு கோடியே இருபது லட்சம் ரூபாய் ஆகும்.

இந்த ஆய்வைத் தொடர்ந்து மேற்கொண்டு பல ஆய்வுகளை நடத்தி ஒவ்வொரு மரபணுவுக்கும் மூன்று தோஷங்களுடனான தொடர்பு கண்டுபிடிக்கப்படும் என்று நிறுவனம் அறிவித்தது.

உடலில் உள்ள திரி தோஷத்தின் அடிப்படையிலேயே ஆயுர்வேதம் உணவு முறை, பத்தியம், மருந்து,, மூலிகைகளைப் பயன்படுத்தும் முறை, மருந்த எந்த அளவில் எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதை நிர்ணயிக்கிறது.

 நமது முன்னோர்கள் சாத்வீகமான ஒரு மனிதனின் இரத்த அழுத்தம் சீராக இருப்பதாகவும், ராஜஸிக மனிதனின் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாகவும் தாமஸிக மனிதனின் ரத்த அழுத்தம் இடைப்பட்டதாக அலைபாயும் தன்மை கொண்டதாக இருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.

 நூற்றுக்கணக்கான மூலிகைகளை ஆராய்ந்து அவற்றிற்குள்ள தனிப்பட்ட மருத்துவ குணங்களையும் கண்டறிந்து எந்த வியாதிக்கு எதை எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று நிர்ணயித்தனர்.

 இந்த வகையில் வடலூர் வள்ளலார் மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கு ஏராளமான இரகசியங்களைத் தந்துள்ளார் என்பதை இங்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.

 தமிழக அரசின் பரிசு பெற்ற நூலான இராமலிங்க அடிகள் திருவரலாறு என்ற நூலில், மருத்துவக் குறிப்புகள், என்ற பகுதியில், மூலிகை குண அட்டவணை, சஞ்சீவி மூலிகைகள், மருத்துவக் குறிப்புகள் ஆகியவை உள்ளன. இதை எழுதியவர் சன்மார்க்க தேசிகன் என்னும் ஊரன் அடிகள் ஆவார்.

 இந்த நூலில் மூலிகை குண அட்டவணையில் 485 மூலிகைகள் பற்றியும் அவற்றின் குணங்களையும் வள்ளலார் விவரித்துள்ளது நம்மை பிரமிக்க வைக்கும்.

 எளிதில் கிடைக்கக்கூடிய மருத்துவ சரக்குகளின் மூலம் வாழ்வாங்கு வாழ முடியும் என்பதே ஐந்தாவது வேதமான ஆயுர்வேதத்தின் உயிர்நாடியான உபதேசம்.

 தக்க வல்லுநர்களை அணுகி அவர்களின் அறிவுரையைக் கொண்டு, ஆயுர்வேதத்தைப் பின்பற்றலாம்; ஆரோக்கியத்துடன் வாழ்வாங்கு வாழலாம்!

***

Pictures of 2500 Indian Stamps!- Part 45 (Post No.14,544)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 14,544

Date uploaded in London – –22 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

PART 45

Stamps posted today include 1992, 1996 STAMPS,

Pictures of 2500 Indian Stamps, Actress Nargis, Sikh Regiment, Anaesthesia,

K C Gajapathi, H P Poddar, Flowers 1996, Dr S R Ranaganathan, Bridge nd structural engineering, Temple, Bridge, Stupa, Para Field ambulance, Y M C A, Henry Gidney, Do or Die, Gandhi, PHAD Painting, Dwaram Venkataswamy Naidu, Violin, Dr D Kotnis, Sports stamps, Boxing, Discus, Hockey, Surfing, Rafting, Sking, Hang Gliding,  Sanchi Stupa, Megnath Chand, Dinanath Mangeshkar, Gymnastics, Olympics, Netaji, I N A., Jabalpur Telecomunication Centre, Yogiji Maharaj,  Vijay Singh Pathik, Udham Singh, Rani, Environment

–subham—

Tags– 

Stamps posted today include 1992, 1996 STAMPS, Part 45, 

Pictures of 2500 Indian Stamps, Actress Nargis, Sikh Regiment, Anaesthesia,

K C Gajapathi, H P Poddar, Flowers 1996, Dr S R Ranaganathan, Bridge nd structural engineering, Temple, Bridge, Stupa, Para Field ambulance, Y M C A, Henry Gidney, Do or Die, Gandhi, PHAD Painting, Dwaram Venkataswamy Naidu, Violin, Dr D Kotnis, Sports stamps, Boxing, Discus, Hockey, Surfing, Rafting, Sking, Hang Gliding,  Sanchi Stupa, Megnath Chand, Dinanath Mangeshkar, Gymnastics, Olympics, Netaji, I N A., Jabalpur Telecomunication Centre, Yogiji Maharaj,  Vijay Singh Pathik, Udham Singh, Rani, Environment

உ. வே. சா. செய்த தப்பு? சங்க இலக்கியத்தில் மல்லிகா நில்லிகா வினோதம்! (Post No.14,543)

Written by London Swaminathan

Post No. 14,543

Date uploaded in London –  22 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சங்க இலக்கியத்தில் 18 (10+8)   நூல்கள் உள்ளன அவற்றைப் பத்துப்பாட்டு (10+8)  எட்டுத்தொகை என்று பிரிப்பார்கள் ; அதில் எட்டுத் தொகையில் ஒன்று பரிபாடல்;  அந்த நூல் நமக்கு முழுவதாகக் கிடைக்கவில்லை; கிடைத்த பாடல்களில் வைகை நதி, முருகன், விஷ்ணு பற்றிய பாடல்கள் உள்ளன . அவற்றில் வைகை பற்றிய 11- ஆவது பாடலில் வைகை நதியில் குளிக்கும் அழகிகளின் சேட்டைகள் , விளையாட்டுகள் பற்றிப் புலவர் நல்லந்துவனார் பாடுகிறார்.

அதில் நில்லிகாமல்லிகா என்ற வரிகள் அடுத்தடுத்து வருகின் றன ; இரண்டும் தமிழ்ச் சொற்கள் அல்ல ;

நில்லிகா என்பதற்கு உ.வே.சா முதலிய அறிஞர்கள் கூறும் விளக்கம் ஏற்புடையதாக இல்லை ; பூக்கள் பற்றிப் புலவர் பல விஷயங்களைச்  சொல்லும் பொழுது மல்லிகா மற்றும் அதற்கு முன்னாலும் பின்னாலும் பூக்கள் பற்றிச் சொல்லிவிட்டு நில்லிகா என்ற சொல்லுக்கு உ வே சா விநோதப் பொருள் கற்பிக்கிறார்நில்! என்று ஒரு பெண்ணை மற்றும் ஒருத்தி தடுத்தாளாம் அதுவே நில்லிகா ஆயிற்றாம் !  இதற்கு சிலப்பதிகாரத்திலிருந்து மட்டும் ஒரு உதாரணத்தை வேறு ஒரு புஸ்தகத்தில் காண முடிகிறது.

ஆனால் சம்ஸ்க்ருத அகராதியைப் பார்த்தால்மல்லிகா , நீ(ல்)லிகா   எல்லாவற்றுக்கும் பூக்களின்/ தாவரங்களின் பெயர்களே உள்ளன ; தமிழில் நெல்லி, மல்லி என்ற சொற்கள் எல்லாம் தாவரங்களையே குறிக்கின்றன. அதுபோல நீலி, நிலீ என்பனவற்றைச் செய்யுளின் பொருட்டு நில்லிகா என்று ஆக்க முடியும். நிலிகா என்ற தாவரம் நீல நிற அல்லது இண்டிகோ நிற அவுரி வகைத் தாவரம் ஆகும் ஆக இன்னும் ஒரு பெண் நீல நிறப்பூவினை வைத்திருந்தாள் என்று சொல்லுவதே பொருந்தும்.

பரிபாடல் வரிகளைப் படித்துவிட்டு நான் சொல்லும் பொருள் பொருந்துகிறதா என்று நீங்களே முடிவு செய்யுங்கள்   

*****

வையை–பரிபாடல் 11

பாடியவர் : நல்லந்துவனார்; இசையமைத்தவர் : நாகனார்.

(மழை பொழிய வையையில் நீர் பெருகி ஓடுதல் )

(மகளிர் செயல்கள்)

……………………………

ஆயிடை, மா இதழ் கொண்டு, ஓர் மட மாதர் நோக்கினாள்,

வேய் எழில் வென்று வெறுத்த தோள்; நோக்கி,

சாய் குழை பிண்டித் தளிர் காதில், தையினாள்; 95


பாய் குழை நீலம் பகலாகத் தையினாள்;

‘குவளைக் குழைக்காதின் கோலச் செவியின்

இவள் செரீஇ, நான்கு விழி படைத்தாள்‘ என்று

நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே,

கொற்றவை கோலம் கொண்டு, ஒர் பெண். 100


பவள வளை செறித்தாட் கண்டு, அணிந்தாள், பச்சைக்

குவளைப் பசுந் தண்டு கொண்டு.

கல்லகாரப் பூவால் கண்ணி தொடுத்தாளை,

நில்லிகா!‘ என்பாள்போல்நெய்தல் தொடுத்தாளே_____

மல்லிகா மாலை வளாய். 105

……………..

*****

பரிபாடல் 11

ஒருத்தி தன் மாவடு போன்ற கண்ணழகைக் காட்டினாள். ஒருத்தி மூங்கில் போன்ற தன் தோள் அழகைக் காட்டினாள். ஒருத்தி தன் காதுகளில் குவளை மொட்டுகளைச் சூடிக்கொண்டு நான்கு விழிகளை படைத்தவள் போலத் தோற்றமளித்தாள். ஒருத்தி நெற்றியில் கண் கொண்ட கொற்றவை போலத் திலகம் இட்டுக்கொண்டாள். ஒருத்தி பவள வளையல்களைத் தன் செறிந்த தொடைகளில் அணிந்துகொண்டாள். ஒருத்தி குவளைப் பூவின் தண்டை நடுவில் வைத்து, கல்லகாரம் என்னும் பூவால் மாலை தொடுத்தாள். செங்கழுநீர்ப் பூவினாற் கண்ணி தொடுத்த ஒருத்தியை நில்லென்று சொல்லுவாளைப்போல வேறொருத்தி  மல்லிகையோடு நெய்தற்பூவை விரவித் தொடுத்தாள் — என்பது உ.வே.சா தரும் பொருள்அவர்தான் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பரிபாடல் நூலினை வெளியிட்டார் . எல்லோரும் அவரது உரையைப் பின்பற்றியுள்ளனர்  11

என் கருத்து

நெய்தல் மலர் நிறமும் நீலம்தான்; நெய்தல் மலர் (நீலாம்பல்; Nymphaea nouchali) கடற்கரை நிலங்களில் மிகுதியாகப் பூக்கும்.

ஆகவே நில் என்று கொள்வதை விட  நீலாம்பல் போல் என்று பொருள் சொல்லலாம் அல்லது நிலிகா / கருநீலம் indigo, blueblack

அந்த இடத்தில் நில் என்ற வினைச் சொல்லைப் போட்டு  கஷ்டப்பட்டு அர்த்தம் செய்வதற்குப் பதிலாக ஏனைய வரிகளில் உள்ள பூக்களைப் போல ஒரு பூவின் பெயரே பொருந்தும்.

நல்லந்துவனார் பாடலில் திலகம் முதலிய ஸம்ஸ்க்ருதச் சொற்கள் வருவதையும் துர்கா தேவிக்கு மூன்று கண்கள் இருப்பதைக் குறிப்பிடுவதையும் கவனத்திற் கொள்ளவேண்டும்.

*****

இதோ ‘விஸ்டம்  லைப்ரரி’தரும் சொற்கள்:

Wisdomlib.org

“Nilika” (also spelled “Nīlikā”) has multiple meanings depending on the context. In Sanskrit, it can translate to “the blue one”. It can also refer to a specific plant, Blyxa octandra, sometimes associated with the indigo plant. Additionally, “Nilika” is a Sanskrit name for a lotus flower or the stem of a lotus bloom

****

Wisdomlib.orgSanskrit dictionary

[«previous (N) next»] — Nilika in Sanskrit glossary

Source: DDSA: The practical Sanskrit-English dictionary

Nīlikā (नीलिका).—

1) The indigo plant.

2) Moss (śaivāla); अपां तु नीलिकां विद्यात् (apāṃ tu nīlikāṃ vidyāt) Mahābhārata (Bombay) 12.283.52. See नीला (nīlā) also.

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Shabda-Sagara Sanskrit-English Dictionary

Nīlikā (नीलिका) or Nīlinī.—f.

(-kā) A plant, (Nyctanthes tristis;) a species with blue flowers. 2. The indigo plant. 3. A slight malady; black and blue marks in the body from bruises, &c. kan added to nīlī.

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Monier-Williams Sanskrit-English Dictionary

1) Nīlikā (नीलिका):—[from nīlaka > nīl] f. Blyxa Octandra, [Mahābhārata]

2) [v.s. …] a [particular] medicinal plant, [Suśruta]

3) [v.s. …] the indigo plant, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

4) [v.s. …] Nyctanthes Arbor Tristis, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

5) [v.s. …] Vitex Negundo, [cf. Lexicographers, esp. such as amarasiṃha, halāyudha, hemacandra, etc.]

6) [v.s. …] a kind of malady (black and blue marks in the face), [Suśruta]

7) [v.s. …] a [particular] disease of the lens of the eye (also likā-kāca, m.), [Suśruta]

8) [v.s. …] Name of a river, [Mahābhārata]

Source: Cologne Digital Sanskrit Dictionaries: Yates Sanskrit-English Dictionary

Nīlikā (नीलिका):—(kā) 1. f. A plant (Nyctanthes tristis); Indigo plant; marks of bruises; slight malady.

பாடலைப் ‘படி’ எடுத்தவர்கள் செய்த தவறு என்றே நான் கருதுகிறேன்.

இண்டிகோ தாவரங்கள் அவுரி  என்று வழங்கப்படுகின்றன. ஆனந்தவிகடன் தமிழ் அகராதி அவுரி என்பதற்கு நீலிச் செடிநீலிப்பூ நீலம் என்று பொருள் தருகிறது; ஆகவே நில் என்பதை நீலிச் செடி, நீலிப்பூ என்ற பொருள் வரும்படி திருத்த வேண்டும் .

****

எனது ஏனைய ஐயப்பாடுகள் !

முன்னரே தொல்காப்பியர் பயன்படுத்தும் அபூர்வ சொல் நிம்பிரி (பொறாமை), , அகநானூறுசிலப்பதிகாரம் பயன்படுத்தும் தொழுனை (யமுனை)  நதி முதலிய சொற்களுக்கு விளக்கம் இல்லாமை குறித்து எழுதினேன். தமிழில் இருதயத்துக்கு சொல் இல்லை; ஆனால் குருதி/ ரத்தம் என்ற சொல் உள்ளதால் குருத்து என்பதே இருதயம்அது ஹ்ருத் என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல்லுடன் தொடர்புடையதுஅதுவே ஐரோப்பிய மொழிகளில் ஹார்ட் HEART என்று ஆயிற்று என்றும் எழுதினேன். மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் இதற்கு மேலும் விளக்கம் சொல்லலாம் .

—subham—

Tags- சங்க இலக்கியம், மல்லிகா, நில்லிகா  வினோதம்,  பரிபாடல் , பாடல் எண் 11, உ வே சா.,  தப்பு ?

சர்ட்ஸீ: கடலிலிருந்து வெடித்த எரிமலையால் உண்டான தீவு! (Post.14,542)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,542

Date uploaded in London – –22 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

3-4-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை.

உலகின் அதிசய இடங்கள்! 

சர்ட்ஸீ: கடலிலிருந்து வெடித்த எரிமலையால் உண்டான தீவு! (Surtsey island) 

ச. நாகராஜன்       

ஆச்சரியகரமான ஒரு சம்பவம் அது. 

1963ம் வருடம் நவம்பர் மாதம் 14ம் தேதி.

ஐலிஃபெர் II (Islefur II) என்ற மீன் பிடிக்கும் படகு ஒன்று ஐஸ்லாந்தில் கெய்ர்பக்லாஸ்கருக்கு மேற்கே கடலில் மெதுவாகச் சென்று கொண்டிருந்தது. திடீரென்று படகின் மீது ஒரு பெரிய அலை வந்து மோதி படகை நிலைகுலைய வைத்தது. ஒரு வழியாக படகை அதிலிருந்து மீட்ட குழு திடீரென்று தென்மேற்கே ஒரு பெரும் புகை மண்டலத்தைக் கண்டு அதிர்ந்தது.

படகின் காப்டன் அங்கே ஒரு கப்பல் தீப்பிடித்து எரிகிறது என்று நினைத்தார். உடனே கடற்படைக்குத் தகவல் தெரிவித்து உதவிக்கு விரைந்து வருமாறு செய்தி அனுப்பினார்.

மீன்பிடி படகு அந்த புகை மண்டலத்தை நெருங்கியபோது தான் அதிர்ச்சியூட்டும் ஒரு தகவலை அவர்கள் அறிய நேர்ந்தது.

புகை மண்டலத்திற்கு காரணம் கப்பல் தீப்பிடித்து எரியவில்லை. கடலுக்கு அடியிலிருந்த எரிமலை ஒன்று வெடித்து அதனால் ஏற்பட்ட புகைமண்டலம் தான் அது என்பதை அவர்கள் உணர்ந்தனர்.

உடனே தப்பித்தோம் பிழைத்தோம் என்று படகைத் திருப்பி வேகமாகச் செலுத்தினர். கடற்படைக்கும் தகவல் அனுப்பினர்.

மூன்றே மூன்று மணி நேரத்திற்குள் 12000 அடி உயரத்திற்கு அந்தப் புகை வானளாவ எழுந்து சாம்பலைக் கக்கியது. கடலுக்கு 426 அடி கீழேயிருந்து ஒரு சதுர மைல் கடல் பரப்பிலிருந்து அந்த எரிமலை வெடித்திருக்கிறது.

கடலே அல்லோலகல்லோலப்பட்டது. அலைகள் சீறியெழ தொலைதூரத்தில் சென்று கொண்டிருந்த படகுகளில் இருந்தோர் எல்லாம்’ ஐயோ அப்பா’ என்று கூக்குரலிட்டு வேகமாக கரையை நோக்கிப் படகைச் செலுத்தினர்.

 சில சமயம் இப்படிப்பட்ட வெடிப்பு 50000 அடி உயரம் வரை புகையைக் கக்குமாம்!

 அங்கு சென்ற விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியைப் பாதுகாப்புடன் மேற்கொண்டனர்.

 என்ன ஆச்சரியம், கடலுக்குள்ளிருந்து ஒரு திவு வெளிப்பட்டிருந்தது. நான்கு வாரங்களில் எல்லா பத்திரிகையாளர்களும் அங்கு திரண்டனர்.

 ஐஸ்லாந்து அரசு இதை ஆராய ஒரு கமிட்டியை உடனடியாக நியமித்தது. இந்தப் புதிய தீவுக்கு சர்ட்ஸீ (Surtsey)  என்று பெயரைச் சூட்டினர்..

 1964 பிப்ரவரியில் இன்னொரு எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டு அது குழம்பைக் கக்கியது.

 நன்கு உருவாகி விட்டிருந்த சர்ட்ஸீ தீவு கடல் மட்டத்திற்கு 500 அடிக்கும் மேலே உருவாகி இருந்தது.

 கடலுக்கடியில் பத்தாயிரம் மைல் நீளம் நீண்டுள்ள மிட்-அட்லாண்டிக் மலைத்தொடரில் இப்படிப்பட்ட வெடிப்புகள் அவ்வப்பொழுது ஏற்படுவதுண்டு.

 இந்த சர்ட்ஸீ தீவு விஞ்ஞானிகளுக்கு ஒரு வரபிரசாதமாக அமைந்தது.

இங்கு அவர்கள் தங்களுடைய பெரிய லாபரட்டரியை அமைத்து கடல் வாழ் மிருகங்களைப் பற்றியும் கடல் தாவரங்களைப் பற்றியும் ஆராய ஆரம்பித்தனர்.

 விசேஷமான பாதுகாப்பு உடை அணிந்த விஞ்ஞானிகள் மட்டுமே இங்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

 ஃபல்மர் என்ற ஒரு புதுப் பறவை இங்கு வந்து குடி கொண்டது. மேவீட் என்ற ஒரு புதுவகைத் தாவரம் இங்கு வளர ஆரம்பித்தது. மெதுவாக கடல் வாழ் உயிரினங்கள் இங்கு வர ஆரம்பிக்க இந்த சர்ட்ஸீ தீவு உயிரினங்களைக் கொண்ட ஒரு தீவாக இப்போது மாறி விட்டது! 

ஆச்சரியமூட்டும் சர்ட்ஸீ தீவு படைப்பு விசித்திரங்களுள் ஒன்று!

***

Pictures of 2500 Indian Stamps!- Part 44 (Post No.14,541)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 14,541

Date uploaded in London – –21 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

PART 44 

Stamps posted today include 1996, 1995 STAMPS,

FOUR MORE PAINTINGS, TWO BIRDS, JUNGLE COCK,MOUNTAIN GOAT, OLYMPI

CS SPIRIT, NATH PAI, MORARJI DESAI, ABAI KONUNBAEV, MUHAMMAD ISMAIL SAHIB, OLYMPIC TORCH, J D SAMAH, 1997 INDPEX, PANDIT K DUBEY, PHEROZ SHAH,  GRENADIERS, VIJAY DIVAS, VIVEKANANDA ROCK MEMORIAL, RAIL MUSEUM, V S N L, CHEMBAI VAIDYANATHA BHAGAVATHAR, FOUR FAMOUS CRICKET PLAYERS, FIELD MARSHAL CARIAPPA, KIDWAY, RUIKAR, CK NAYUDU, DEODHAR, VIJAY MERCHANT, VINOO MANKAD, AHILYABAI HOLKAR, SCIENCE CONGRESS, ALPHONSA, CHILDRENS DAY, 

–subham—

Tags– Pictures of 2500 Indian Stamps, Part 44, year 1995 , 1996,

FOUR MORE PAINTINGS, TWO BIRDS, JUNGLE COCK,MOUNTAIN GOAT, OLYMPI

CS SPIRIT, NATH PAI, MORARJI DESAI, ABAI KONUNBAEV, MUHAMMAD ISMAIL SAHIB, OLYMPIC TORCH, J D SAMAH, 1997 INDPEX, PANDIT K DUBEY, PHEROZ SHAH,  GRENADIERS, VIJAY DIVAS, VIVEKANANDA ROCK MEMORIAL, RAIL MUSEUM, V S N L, CHEMBAI VAIDYANATHA BHAGAVATHAR, FOUR FAMOUS CRICKET PLAYERS, FIELD MARSHAL CARIAPPA, KIDWAY, RUIKAR, CK NAYUDU, DEODHAR, VIJAY MERCHANT, VINOO MANKAD, AHILYABAI HOLKAR, SCIENCE CONGRESS, ALPHONSA, CHILDRENS DAY, RAJARAJA CHOLA ETC.

யாரையும் வெறுக்காதே: குருபாததாசர் அறிவுரை -10 (Post No.14,540)

Written by London Swaminathan

Post No. 14,540

Date uploaded in London –  21 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை-10

பரமசிவன் கழுத்தில் பாம்பு உளது; அதற்கு யார் பகைவன்? விஷ்ணுவுக்கு வாகனமாக இருக்கும் கருடன் ; இருவரும் இறைவனிடத்தில் இருந்தாலும் பகைமை அகன்றதா?

இல்லை; ஏன்?

எல்லாம் இயற்கை விதிப்படி நடக்கிறது ; ஆகையால் யாரையும் வெறுக்காமல், வருவதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று குமரேச சதகத்தில் குருபாத தாசர் நமக்கு அட்வைஸ் ADVICE தருகிறார்.

          20. விடாத குறை

தேசுபெறு மேருப்ர தட்சணஞ் செய்துமதி

     தேகவடு நீங்கவில்லை

திருமால் உறங்கிடும் சேடனுக்கு வணன்

     செறும்பகை ஒழிந்த தில்லை

ஈசன் கழுத்திலுறு பாம்பினுக்கி ரைவே

     றிலாமலே வாயுவாகும்

இனியகண் ஆகிவரு பரிதியா னவனுக்

     கிராகுவோ கனவிரோதி

ஆசிலாப் பெரியோ ரிடத்தினில் அடுக்கினும்

     அமைத்தபடி அன்றிவருமோ

அவரவர்கள னுபோகம் அனுபவித் திடல்வேண்டும்

     அல்லால் வெறுப்பதெவரை

வாசவனும் உம்பரனை வரும்விசய சயஎன்று

     வந்துதொழு தேத்துசரணா

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.

பொருள்

இந்திரனும் பிற வானவரும்  வந்து,

‘வெல்க! வெல்க’ என்று வணங்கித் துதிக்குந் திருவடிகளை உ டையவனே!மயிலேறி………குமரேசனே!

ஒளிவீசும் மேருமலையை வலமாக வந்தும் திங்களின் /சந்திரனின் களங்கம் ஒழியவில்லை; திருமால் துயிலப் படுக்கையாக இருக்கும் ஆதிசேடன் என்னும் பாம்புக்கும் தன் குலப் பகையான கருடனின் பகைமை நீங்கவில்லை;  சிவபிரான் கழுத்திலே இருக்கும் பாம்புக்குக் காற்றையன்றி வேறு உணவு இல்லை;

சிவபிரானுக்கு இனிய வலக்கண்ணாகிய கதிரவனுக்கு அற்பனான இராகுவே பெரும்  பகைவன்   (சூரிய கிரகணம் );  குற்றமற்ற பெரியோரைப் புகலாக அடைந்தாலும் ஊழாக

அமைத்தவாறே அன்றி வேறு வருமோ? அவரவருடைய

பயனை அவரவர்களே நுகர்தல்  வேண்டும் அல்லாமல் யாரையும் வெறுத்தல் கூடாது.

     (விளக்கவுரை) மேருமலையைக் கதிரவனுந் திங்களும் பிற கோள்களும் வலம்வருவதாகப் புராணங்கள் கூறும். ஆதிசேடன் என்னும் பாம்பு திருமாலுக்குத் துயிலும் அணையாக உள்ளது என்றும் புராணங்கள் கூறும்.

இராகு என்னும் பாம்பு கதிரவனைப் பகைத்த கதை:-

பாற்கடலிலிருந்து அமுதம் வந்தது. அதைக் கடைந்த அவுணரும்

அமரரும் பங்குபெற விரும்பிச் சூழ்ந்தனர். அவுணர்களுக்குக் கொடாமல்அமரருக்கு மட்டும் அமுதத்தை அளிக்கத் திருமால் விரும்பினார்; மனத்தை மயங்கி மோகிக்கச் செய்யும்

மோகினி வடிவம் எடுத்தார். அவுணர்கள் அமுதத்தை விட்டு அவளை விரும்பிச் சூழ்ந்தனர். மோகினியானவள் அமரருக்கு மட்டும் அமுதம் பங்கிட்டாள். மயங்கிய அவுணர் உணர்வின்றி நின்றுவிட்டனர். அவர்களில் ஒருவன் மட்டும் உணர்வு பெற்று அமரருடன் கலந்து அமுதம் பெற்றான். அவன் அவுணன் என இரவியும் திங்களும் மோகினியிடம் விளம்பினர். மோகினி அகப்பையாலே அந்த அவுணனைப் பிளந்தாள். அவன் இரு

கூறினான். எனினும் அமுதம் உண்டதனால் இறக்கவில்லை. இருகூறும்  இராகு கேது என்னும் பெயருடன் சூரியனையும் சந்திரனையும் ஆண்டுதோறும் விழுங்குவதென்று (கிரகணங்கள்)  தவத்தின்மூலம் வரம்பெற்ற பாம்பாகின. இவ்வாறு புராணம்

கூறும்.

     (கருத்து) அவரவர் வினைப்பயனை அவரவர்களே நுகர்ந்து கழித்தல் வேண்டும்.                                             ****

வால்மீகி ராமாயணத்திலும், சிலப்பதிகாரத்திலும், திருக்குறளிலும் விதி பற்றி கூறப்பட்டுள்ளது

வால்மீகி  (அயோத்யா காண்டம்) கூறுகிறார் :

ந அத்ர கஸ்சித் யதா பாவம் ப்ராணீ சமபிவர்ததே

தேன தஸ்மின் ந சாமர்த்யம் ப்ரேதஸ்ய அஸ்த்ய அனுசோசத:

न अत्र कश्चिद् यथा भावम् प्राणी समभिवर्तते |

तेन तस्मिन् न सामर्थ्यम् प्रेतस्य अस्त्य् अनुशोचतः || २-१०५-२८

ஒருவனுடைய தலைவிதியிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது. மற்றவர் இறக்கும்போது அழுவதால் ஒருவன் தனது மரணத்திலிருந்து தப்பிக்க முடியாது.

xxxxx

யதா ஹி சார்தம் கக்சந்தம் ப்ரூயாத் கஸ்சித் ப்தி ஸ்தித:

அஹம் அப்ய ஆகமிஷ்யாமி ப்ருஷ்டதோ பவதாம் இதி

ஏவம் பூர்வைர் கதோ மார்க: பித்ரு பைதாமஹோ த்ருவ:

தம் ஆபன்ன: கதம் சோசேத் யஸ்ய ந அஸ்தி வ்யதிக்ரம:

यथा हि सार्थम् गग्च्छन्तम् ब्रूयात् कश्चित् पथि स्थितः |

अहम् अप्य् आगमिष्यामि पृष्ठतो भवताम् इति || २-१०५-२९

एवम् पूर्वैर् गतो मार्गः पितृ पैतामहो ध्रुवः |

तम् आपन्नः कथम् शोचेद् यस्य न अस्ति व्यतिक्रमः || २-१०५-३०

வண்டியில் போகும் பயணிகளைப் பார்த்து நானும் பின்னால் வருகிறேன் என்று சொல்லுவதைப் போல நாமும் நமது முன்னோர் சென்ற வழியில் செல்கிறோம்; அது திரும்பிவராத  பயணம். அதில் சேர்ந்த பின்னர், புகார் செய்வதற்கு என்ன இருக்கிறது?

xxxx

வயஸ: பதமானஸ்ய ஸ்ரோதசோ வா அநிவர்தின:

ஆத்மா சுகே நியோக்தவ்ய: சுக பாஜ: ப்ரஜா: ஸ்ம்ருதா:

वयसः पतमानस्य स्रोतसो वा अनिवर्तिनः |

आत्मा सुखे नियोक्तव्यः सुख भाजः प्रजाः स्मृताः || २-१०५-३१

ஓடும் நதியின் நீர் திரும்பி வருவதில்லை; அதுபோலத்தான் நம் வாழ்நாளும். ஒவ்வொருவரும் அற வழியில் இன்பம் அடைய முயல வேண்டும்; எல்லோரும் விரும்புவது சந்தோஷத்தைத்தானே.

*****

விதியை வெல்ல முடியும்      

ஆயினும் கடுமையான , தீவிர பிரார்த்தனையால், பக்தியால் விதியை வெல்லலாம் . இதைத் திருமூலரும் அப்பரும், சமப்ந்தரும்  அருணகிரிநாதரும் சொல்கிறார்கள் .

கந்தர் அலங்காரம் பாடல் 38

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த

கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு

தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்

தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

பொருள்

நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்?

அடியேனைத் தேடிவந்த கோள்/ கிரகம்  தான் என்ன செய்யும்? கொடிய இயமனால்தான் (எமன்) என்ன செய்யமுடியும்? குமரக்கடவுளின் இரண்டு திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடப்ப மலர் மாலையும் அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே.

திருமூலர் சொல்கிறார்:

கடவுள் அருளால் முன்னை வினையின் முடிச்சை அவிழ்க்கலாம்-

தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்

பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்

சென்னியில் வைத்த சிவன் அருளாலன்றே

— திருமந்திரத்தில் திருமூலர் 

பொருள்:

தன்னை உணர்ந்து அறிந்தவர்கள் தத்துவ ஞானிகள். இந்த மெய்ஞானிகள், பூர்வ ஜன்ம தீவினைப் பயனை தவிர்ப்பர். இனி வரும் வினைகளையும் தகர்த்து விடுவர்; அதாவது வினைக்கான கர்மங்களைச் செய்ய மாட்டார்கள். இவை அனைத்தும் சிவன் அருளாலே கிட்டுவதாகும். அதாவது இறைவன் அருள் இருந்தால் விதியை வெல்லலாம்.

****

சம்பந்தரும் நவக்கிரகங்களும் ஒரு தீயதையும் செய்ய முடியாது என்று பாடுகிறார்

கோளறு திருப்பதிகம்

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்   

  மிகநல்ல வீணை தடவி   

மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்   

  உளமே புகுந்த அதனால்   

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி   

  சனிபாம்பி ரண்டு முடனே   

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல   

  அடியா ரவர்க்கு மிகவே. 

*****

அப்பரும் எமனும் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் ;

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் 

நரகத்தி லிடர்ப்படோ ம் நடலை யில்லோம் 

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் 

இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை 

தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான 

சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற் 

கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் 

கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே.    6.98.1  

****

ஆகவே குருபாதர் சொன்னது பாமர மக்களின் துயரம்; பின்னோர் சொன்னது, இறைவனை நம்புவோரின் அனுபவ முடிவு !

நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு மறை தீர்ப்பு

அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம் (மகா கவி பாரதி)

—SUBHAM—

TAGS– நம்பினார் கெடுவதில்லை, நாமார்க்குங் குடியல்லோம், வேயுறு தோளிபங்கன்,முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள், யாரையும் வெறுக்காதே,  குருபாததாசர் அறிவுரை –10 ,குமரேச சதகம்,  ஆராய்ச்சிக் கட்டுரை-10, விதி

மலைகளில் மேரு, மனிதர்களில் பிராமணர் உயர்வு: பரஞ்சோதி முனிவர்-6 (Post.14,539)

Written by London Swaminathan

Post No. 14,539

Date uploaded in London –  21 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மலைகளில் சிறந்தது மேரு, மனிதர்களில் சிறந்தோர் பிராமணர்: பரஞ்சோதி முனிவர்-6

பரஞ்சோதி முனிவர் சொல்லும் அதிசயச் செய்தி!

திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சிக் கட்டுரை-6

திருவிளையாடல் புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர் ஒவ்வொரு பகுதியிலும் ஏதேனும் புதிய செய்திகளையோ , மேற்கோள்களையோ நமக்கு அளிக்கிறார்; மூர்த்தி விசேஷப் பகுதியில் உயர்ந்தது எது என்று சொல்லி விட்டு சிவனை எந்த நேரத்தில் தரிசித்தால் நல்லது ? என்ன என்ன கிடைக்கும்? என்று ஒரு பட்டியல் தருகிறார் . பின்னர் எதை எதைக் கொண்டு பூஜித்தால் என்ன என்ன பலன் கிடைக்கும்  என்று இன்னும் ஒரு பட்டியல் தருகிறார்; இறுதியில் மதுரையிலுள்ள சிவ பெருமானுக்கு என்ன என்ன பெயர்கள் என்ற பட்டியலையும் தருகிறார் .

இதோ அந்த செய்திகள்.

பட்டியல்  1

பொருப்பினுட் டலைமை யெய்தும் பொன்னெடுங் குடூமி

                                        மேரு

தருக்களிற் றலைமை சாருந் தண்ணறுந் தெய்வ தாரு

விருப்புறு வேள்வி தம்முண் மேம்படும் புரவி மேதம்

அருட்படு தானந் தம்முள் விழமிதா மன்ன தானம்.

பொருள்

நீண்ட சிகரங்களையுடைய மலைகளுக்குள்  ,

பொன்னாகிய மேரு மலையானது முதன்மை உடையது;

 மரங்களுள் குளிர்ந்த கற்பகத்தரு. முதன்மை பெறும். ;  வேள்விகளுள், அஸ்வமேத யாகம் உயர்வாகும்;

 தானங்களுள், அன்னதானம் சிறந்ததாகும்

****

மனிதரி லுயர்ந்தோ ராதி மறையவர் தேவர் தம்மிற்

பனிதரு திங்கள் வேணிப் பகவனே யுயர்ந்தோன்

                                  வேட்டோர்க்

கினிதருள் விரதந் தம்மு ளதிகமா மிந்து வாரம்

புனிதமந் திரங்க டம்முட் போதவைந் தெழுத்து மேலாம்.

பொருள்

மக்களுள் முதன்மையான மறையவர் மேலோராவர்; தேவர்களுள்,  குளிர்ந்த சந்திரனை யணிந்த சடையை யுடைய, சிவபெருமானே

உயர்ந்தவன்; விரும்பினவர்களுக்கு, நலத்தைச் செய்கின்ற,  விரதங்களுள், சோமவார விரதம் சிறந்தது ஆகும்;  தூய மந்திரங்களுள், ஞானத்திற்கு ஏதுவாகிய திருவைந்தெழுத்தாகிய நமசிவாய  மந்திரம் மேன்மையுடைய தாகும்’

*****

மின்மைசான் மணியிற் சிந்தா மணிவரம் விழுப்ப நல்கும்

தன்மைசா லறங்க டம்மின் மிகுஞ்சிவ தரும மென்ப

இன்மைசா னெறிநின் றோருக் கேற்குநற் கலங்க* டம்மின்

நன்மைசான் றவரே முக்க ணாதனுக் கன்பு பூண்டோர்.

பொருள் 

ரத்தினங்களில் சிந்தாமணி மேன்மையானது; உயர்வைக் கொடுக்குந் தருமங்களுள், சிவதருமம் உயர்ந்தது; இல்லற    நெறியில் நின்ற நல்லவர் – முக்கண் இறைவனிடத்தில்  (சிவன்)  அன்பு பூண்டவரே. (சிந்தாமணி – சிந்தித்தவற்றைத் தரும் மணி)

****

தீயவாங சுவைப்*பா லாவிற் றேவரா வதிகம் பல்வே

றாயமா தீர்த்தந் தம்மு ளதிகமாஞ் சுவண கஞ்சம்

மாயமா சறுக்க வெல்லாத் தலத்திலும் வதிந்து மன்னுந்

தூயவா னவரிற் சோம சுந்தரன் சிறந்தோ னாகும்.

பொருள்

இனிமையான  சுவையையுள்ள  பாலையுடைய பசுக்களுள்,

காமதேனு உயர்ந்தது;  பல வேறு வகையாகிய,  தீர்த்தங்களுள்,  பொற்றாமரை சிறந்தது; பந்தமாகிய பற்றினை நீக்கவல்ல   சிவலிங்க மூர்த்திகளுள், சோம சுந்தரக் கடவுள் சிறந்தவன் .

****

இத்தனிச் சுடரை நேர்கண் டிறைஞ்சினோர் பாவ

                                     மெல்லாங்

கொத்தழற் பொறிவாய்ப் பட்ட பஞ்சுபோற் கோப மூள

மெய்த்தவஞ் சிதையு மாபோன் மருந்தினால் வீயு

                                    நோய்போல்

உத்தம குணங்க ளெல்லா முலோபத்தா லழியு மாபோல்.

     ****

எந்த நேரத்தில் சிவ பெருமானை வழிபடவேண்டும்?

புலரியிற் சீவன் முத்தி புரேசனைக் காணப் பெற்றால்

அலைகட னான்குட் பட்ட வவனிமா தானஞ் செய்த

பலனுறுங் கதிகா லுச்சி வைகலிற் பணியப் பெற்றால்

கலைஞர்பா பத்துக் கபிலைமா தானப் பேறாம்.

 பொருள்

விடியற்காலையில்,  சோமசுந்தரக் கடவுளை, தரிசனம் செய்தால்,  பெரிய பூமியைத் தானம் கொடுத்த  பலன் கிடைக்கும் ; உச்சிப் போதில்,  வணங்கினால் வேதம் முதலிய கலைகளை யுணர்ந்த அறிஞர்களுக்கு  ஆயிரம் பசுக்களைத் தானஞ் செய்தபலன் கிடைக்கும்.

****

விண்ணிடைப் பரிதிப் புத்தேள் மேலைநீர் குளிக்கு

                                     மெல்லை

அண்ணலை வணங்கிற் கோடி யானினத் தானப் பேறாம்

பண்ணவர் பரவும் பாதி யிருள்வயிற் பணியப் பெற்றால்

வண்ணவெம் புரவி மேத மகம்புரி பெரும்பே றெய்தும்.

  பொருள்

சூரிய தேவன், மேலைக் கடலில் மூழ்கும் அந்திப்பொழுதில்,  சோமசுந்தரக் கடவுளைப் பணிந்தால்,  கோடி பசுக்கூட்டங்களைத் தானஞ்செய்த பயன் எய்தும்; தேவர்கள் வணங்கும் அரையிருளில்,  (அர்த்தஜாம பூஜை) வணங்கினால் அஸ்வமேத  வேள்வியைச் செய்த பலன் கிடைக்கும்     

*****

சிவன் பெயரைக் கேட்டால், சொன்னால்……..

அறவுருவ னாலவா யானாமஞ்

     செவிமடுத்தா லடைந்த பத்துப்

பிறவிவினை யறுநினைந்தா னூறுபெரும்

     பவப்பாவப் பிணிபோங் கூடல்

இறைவனையின் றிறைஞ்சுதுமென் றெழுந்து

     மனைப்புறம்போந் தாலீரைஞ் ஞூறு

மறமுறுவெம் பவத்திழைத்த பாதகவல்

     வினையனைத்து மாயு மன்னோ.

பொருள்

தரும  வடிவினனாகிய திருவாலவாய்க் கடவுளின்

பெயரைச் செவியிற் கேட்டால்,10 பிறப்புக் களிலெய்திய வினைகள் கெடும்; சிந்தித்தால், 100 பிறவிகளிற் செய்த,

பெரிய பாவமாகிய நோய் ஒழியும்;

மதுரையில் எழுந்தருளிய கோவிலுக்கு  வந்தால்,

1000 கொடிய பிறவிகளிற் செய்த வினைகளெல்லாம் அழியும் .

****

புழைக்கைவரை தொலைத்தானைத் தரிசித்தோ

     ராயிரவாம் புரவி வேள்வி

தழைத்தபெரும் பயன்பெறுவ ருருத்திரசூத்*

     தம்மதனாற் றவவா னோர்கள்

தொழற்கரியான் றனைத்துதித்தோர் கணத்துக்கா

     யிரராச சூய யாகம்

இழைத்தபெரும் பயன்பெறுவர் சமட்டிவடி

     வாகியவவ் விலிங்கந் தன்னை.

பொருள்

 யானையைத் தொலைத்த (கஜ சம்ஹாரம்) சோம சுந்தரக் கடவுளை, தரிசித்தோர்  ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார்கள் ; தவத்தினையுடைய தேவர்களும், வணங்குதற்கு அரியவனை, ருத்திர சூத்த மந்திரத்தால் துதித்து வணங்கியவர்கள்,

ஆயிரம் இராச சூய வேள்வி செய்தலால் வரும்,

பெரிய பயனை அடைவர்; சமட்டி உருவமாகிய அந்தச் சிவலிங்கத்தை வணங்குவோருக்கு கிடைக்கும் பலன்கள் இவை;

ருத்ரம் -சமகம் என்ற மந்திரங்கள் யஜுர் வேதத்தில் உள்ளன. சிவனுக்கு அபிஷேகம் செய்கையில் இந்த மந்த்ரத்தை ஓதுவது வழக்கம்.

****

அங்கையள வாகியநன் னீராட்டிப்

     பூசித்தோ ரளவி லேனைத்

துங்கதலத் துறையிலிங்க மூர்த்திகளைச்

     சிவாகமநூல் சொன்ன வாற்றான்

மங்கலமா கியமுகம னீரெட்டும்

     வழுவாது வாசந் தோய்ந்த

செங்கனக மணிக்கலசப் புனலாட்டி

     மாபூசை செய்தோ ராவார்.

பொருள்

உள்ளங்கையிலடங்கும் அளவு நீரால் திருமஞ்சனம் செய்து, பூசித்தவர்கள், மற்றைய உயர்ந்த தலங்களில் எழுந்தருளிய, சிவலிங்க மூர்த்திகளை, சிவாகமம் கூறியபடி மங்கலமான சோடச (16)  உபசாரங்களும் தவறாமல், சிவந்த பொன்னாற் செய்த இரத்தின கலசத்தில் நிறைந்த, மணம் உடைய  நீரால் அபிடேகம் செய்து   பெரிய பூசை செய்தவர்கள் ஆவார்கள் .    

சோடச வுபசாரங்களாவன  16— : ஆவாகனம், தாபனம்,

சந்நிதானம், சந்நிரோதனம், அவகுண்டனம், தேனுமுத்திரை,

பாத்தியம், ஆசமனீயம், அர்க்கியம், புட்பதானம், தூபம், தீபம்,

நைவேத்தியம், பானீயம், ஆராத்திரிகை, ஜப சமர்ப்பணை

என்பன.

*****

அவ்வண்ணஞ் சுந்தரனை யைந்தமுத

     மானுதவு மைந்து தீந்தேன்

செவ்வண்ணக் கனிசாந்தச் சேறுமுதன்

     மட்டித்துத் தேவர் தேறா

மெய்வண்ணங் குளிரவிரைப் புனலாட்டி

     மாபூசை விதியாற் செய்தோர்

மைவண்ண வினைநீந்தி யறமுதனாற்

     பொருளடைந்து மன்னி வாழ்வார்.

பொருள்

ஆகமத்திற் கூறியவண்ணம் சோமசுந்தரக் கடவுளை,  பசுக்களால் அளிக்கப்பெற்ற பஞ்ச கவ்வியமும்,  மதுரமாகிய தேனும்  சிவந்த நிறத்தை யுடைய பழங்களும், சந்தனக் குழம்பும் அப்பி, தேவர்களும் அறியாத அழகிய  திருமேனி குளிருமாறு, மணமுடைய நீரால் அபிடேகித்து,  பெரிய பூசையை விதிப்படி செய்தவர்கள், கரிய தீவினைக்  கடலைக் கடந்து, அற முதலிய நான்கு பயனையும்பெற்று, நிலைபெற்று வாழ்வார்கள் .

நான்கு பயன்கள் – தர்ம அர்த்த காம மோக்ஷம் = அறம், பொருள் ,இன்பம், வீடு;

பஞ்ச கவ்வியம் – பால் தயிர், கோமயம் , நெய் , பசு மூத்திரம்

அமுதம் ஐந்து/ பஞ்சாமிர்தம்  : பால், நெய், தேன், சருக்கரை, பழம்;

*****

அழகிகளுடன் விளையாடும் பாக்கியம் !

நல்லவகை முகமனீ ரெட்டுள்ளும்

     வடித்தவிரை நன்னீ ராட்ட

வல்லவர்நூ றாயிரயமா மேதமகப்

     பயன்பெறுவர் வாச நானம்

எல்லவிர்குங் குமஞ்சாந்த மிவைபலவு

     மட்டித்தோ ரெழிலார் தெய்வ

முல்லைநகை யாரோடும் விரைக்கலவை

     குளித்தின்ப மூழ்கி வாழ்வார்.

  பொருள்

பதினாறு ( சோடச) உபசாரங்களுள்ளும்,  மணமுள்ள நல்லநீரால் திருமஞ்சனம் செய்வோர் நூறாயிரம் / லட்சம்  அஸ்வமேத  யாகத்தைச் செய்த பயனை அடைவர்;  மணம் பொருந்திய கத்தூரி,   குங்குமப்பூ, சந்தனம்  ஆகிய வற்றை   சாத்தினோர்கள், அழகு நிறைந்த, முல்லை யரும்பு போலும்  பற்களை  உ டைய   தெய்வப் பெண்களோடு   இன்பக்கடலுள் திளைத்து வாழ்வார்கள் .   

( விரை நன்னீர் – பனிநீருமாம் )

*****

நன்மலரொன் றாலவா யான்முடிமேற்

     சாத்தினா னயந்து நூறு

பொன்மலர்கொண் டயற்பதியிற் பூசித்த

     பயனெய்தும் புனித போகத்

தன்மைதரு சுந்தரற்குத் தூபமொரு

     காற்கொடுப்போர் தமக்குத் தாங்கள்

சொன்மனமெய் யுறச்செய்த குற்றமா

     யிரம்பொ றுப்பன் சுருதி நாதன்.

 பொருள் 

மதுரையிலுள்ள சிவ பெருமான் திருமுடிமேல், நல்ல மலர் ஒன்றைச் சாத்தினால்,  பிற தலங்களிற் நூறு பொன்னாலாகிய மலர்களைக் கொண்டு,  பூசித்த பயன் பெறலாம் ;

 சிவபோகத் தன்மையைத் தந்தருளும் சோமசுந்தரக் கடவுளுக்கு, ஒருமுறை தூபம் கொடுப்பவர்களின், ஆயிரங் குற்றங்களை வேதத் தலைவனாகிய சோமசுந்தரக் கடவுள் பொறுத்தருள்வான் .

மனம், வாக்குக் காயங்கள் ஆகியவற்றால் செய்த பாவங்கள் போகும்

—-subham—-

TAGS—மலை, சிறந்தது மேரு,  மனிதர், சிறந்தோர் பிராமணர்,   பரஞ்சோதி முனிவர் பட்டியல் ,திருவிளையாடல் புராணம்,  ஆராய்ச்சிக் கட்டுரை-6

அமெரிக்க டாக்டர்களை வியக்க வைத்த தலாய்லாமாவின் வைத்தியர்! (Post No.14,538)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,538

Date uploaded in London – –21 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

2-4-24 கல்கிஆன்லைன் இதழில் வெளிவந்துள்ள கட்டுரை!

அமெரிக்க டாக்டர்களை வியக்க வைத்த தலாய்லாமாவின் பிரத்யேக வைத்தியர்!

ச. நாகராஜன் 

பூஜ்ய ஶ்ரீ பதினான்காம் தலாய் லாமா பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை அமெரிக்காவுக்கு விஜயம் செய்தார்.

அமெரிக்க ஹெல்த் டிபார்ட்மெண்டைச் சேர்ந்தவர்கள் அவரது பிரத்யேக வைத்தியரான யேஷி டொண்டென் (Yeshi Dhonden) என்பவரை கொஞ்ச நேரம் தங்களுக்காக ஒதுக்கினால் அவரிடமிருந்து புதிதாக சிலவற்றைத் தங்கள் டாக்டர்கள் கற்றுக் கொள்ள முடியும் என்று கூறினர். 

தலாய்லாமாவும் டொண்டெனும் அதற்கு இசைந்தனர். 

பின்னர் என்ன நடந்தது என்பதை ரிச்சர்ட் செல்ஜெர் என்பவர் தனது புத்தகமான மார்டல் லெஸன்ஸ்: நோட்ஸ் ஆன் தி ஆர்ட் ஆஃப் சர்ஜரி”

(Richard Slezer’s book “Mortal Lessons: Notes on the Art of Surgery” – New York, Simon & Shuster, 1976) என்ற புத்தகத்தில் விவரித்துள்ளார்.

இதில் ஒரு சுவையான பகுதியை பிரபல பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட் பிரசுரித்தது.

அப்போது செல்ஜெர் யேல் பல்கலைக்கழகத்தில் சர்ஜரி பிரிவின் தலைமைப் பொறுப்பை வகித்து வந்தார்.

மருத்துவமனையில் இருந்த அறிவிப்புப் பலகையில், “ஜூன் 10ம் தேதி காலை ஆறு மணிக்கு யேஷி டொண்டென் மருத்துவ மனைக்கு வருகை புரிந்து சுற்றிப் பார்ப்பார்” என்ற அறிவிப்போடு யேஷி டொண்டென் பூஜ்ய ஶ்ரீ தலாய்லாமாவின் பிரத்யேக வைத்தியர் ஆவார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

யேஷி டொண்டென் சுற்றிப் பார்க்கும் வார்டு அருகில் வெள்ளைக் கோட்டு அணிந்த ஏராளமான டாக்டர்கள் காத்திருக்க அவர்களுடன் செல்ஜரும் சேர்ந்து கொண்டார்.

அங்குள்ளவர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு நோயாளியை டொண்டென் சோதனை செய்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே எந்த நோய்க்கு அந்த நோயாளி சிகிச்சை பெற்று வருகிறார் என்பது பற்றி டொண்டெனுக்குத் தெரிவிக்கவில்லை. அவர் நோயாளியை சோதிக்கும் போது அனைத்து டாக்டர்களும் அவர் அருகில் இருக்க வேண்டும் என்பதும் தீர்மானிக்கப்பட்டது.

 நோயாளியைச் சோதித்த பின்னர் அனைவரும் இந்த கேஸைப் பற்றி விவாதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

 குறிப்பிட்ட நோயாளியை சீக்கிரமே எழ வைத்து அந்தப் பெண்மணியிடம் வெளிநாட்டு மருத்துவர் ஒருவர் அவரைச் சோதிக்கப் போவதாகவும் புதிதாக சோதனைக்குச் சிறுநீர் வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.

 டொண்டென் சரியாக குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த நோயாளிப் பெண்மணியிடம் வந்தார். படுக்கைக்கு அருகில் வந்து நின்ற அவர் அந்தப் பெண்மணியையே நெடுநேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

 அவரது பார்வை மல்லாந்து படுத்திருந்த அந்தப் பெண்மணிக்கு மேலே பதிந்திருந்தது. அவளின் உடல் பாகங்களை அவர் பார்க்கவே இல்லை.

பின்னர் அந்தப் பெண்மணியின் கைகளை தன் இரு கரங்களாலும் தூக்கினார். பின்னர் சற்று குனிந்து தன் தலையை தனது கழுத்திலிருக்கும் துணி வரை தாழ்த்தினார்.

அந்தப் பெண்மணியின் நாடித்துடிப்பைக் கண்ணை மூடிக் கொண்டு சோதித்தார்.

 பிறகு நோயாளியின் கையை மெதுவாகக் கீழே வைத்தார். மொழிபெயர்ப்பாளரிடம் அவர் ஏதோ சொல்ல ஒரு சின்ன கிண்ணத்தையும் இரண்டு குச்சிகளையும் அவர் கொண்டு வந்தார்.

 சோதனைக்காக இருந்த சிறுநீரில் கொஞ்சம் கிண்ணத்தில் விடப்பட்டது.

 இரு குச்சிகளை வைத்து அதைக் கிளறினார் டொண்டென். பின்னர் அந்த சிறுநீர் அருகே முகத்தைக் கொண்டு சென்ற அவர் அந்த கிண்ணத்திலிருந்து வந்த நாற்றத்தைச் சற்றே முகர்ந்தார்.

 அவ்வளவு தான், வார்டைச் சுற்றிப் பார்த்ததுடன் தனது விஜயத்தை முடித்துக் கொண்ட அவர் ஹாலுக்கு வந்தார்.

 அனைவரும் அங்கு ஆவலுடன் அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்கத் தயாராக இருந்தனர்.

“என்ன வியாதி என்று சொல்ல முடியுமா?” என்று ஒரு பேராசிரியர் கேட்க உடனே டொண்டென், “Congenial Heart Disease”

“Intervertivular Septal Defect ( a hole in the wall between the left and right chmbers of the heart) with resultant heart failure என்றார்.

 இடது மற்றும் வலது பக்க இதயப் பகுதிகளுக்கு இடையில் உள்ள சுவர் பகுதியில் ஒரு ஓட்டையால் ஏற்பட்ட இதய இயக்க நிறுத்தத்தால் நோயாளி பாதிக்கப்பட்டுள்ளார் என்றார் அவர்.

 மற்றவர்கள் கேட்காத இதயத்தின் ஒலியை டொண்டென் மட்டும் எப்படிக் கேட்டார்?

எப்படி இவ்வளவு துல்லியமாக என்ன வியாதி என்பதை அவர் சொன்னார்?

அனைத்து அமெரிக்க டாக்டர்களும் பிரமித்து நின்றனர்.

 எவ்வளவோ நவீனக் கருவிகளை வைத்து நிறைய சோதனைகள் செய்து நிர்ணயிக்கும் ஒரு வியாதியை எப்படி டொண்டெனால் இப்படிக் ஒரு கருவியும் இல்லாமல் கணிக்க முடிந்தது?

இதை அறிவியல்பூர்வமற்றது என்று சொல்ல முடியுமா, என்ன? 

இது தவிர தலாய்லாமா அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு தனது நல்ல ஆதரவைத் தந்து பல சோதனைகளைச் செய்யச் சொல்லி இருக்கிறார்.

 தியானம் பற்றிய சோதனைகளின் முடிவைக் கண்டு அறிவியல் நிபுணர்கள் ஆச்சரியப்பட்டு அதை அப்படியே ஆவணப்படுத்தியுள்ளனர்.

***

Pictures of 2500 Indian Stamps!- Part 43 (Post No.14,537)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 14,537

Date uploaded in London – –20 May 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 Pictures of 2500 Indian Stamps!- Part 43 (Post No.14,537)

PART 43

Stamps posted today include 1994, 1995 STAMPS,

SATYAJIT RAY, BARODA MUSEUM, RIGHT HAND ORNAMENT, GUINDY COLEGE, KING RAJARAJA CHOLA, THANJAVUR TAMIL SEMINAR, 100 YEARS OF CINEMA, YOUTH YEAR, PRITHIVIRAJ KAPOOR, TEXTILE PATTERN, CHOTURAM,K L SAIGAL, R S RUIKAR, RADIO COMMUNICATION,DELHI DEVELOPMENT AUTHORITY, FIFTY YEARS ON UNITED NATIONS, HANDSHAKE, COLLONADE BOOK COVER, BHARTI BHAVAN LIBRARY, ASIAN PACIFIC POSTAL TRAINING, LOUIS PASTEUR, LA MARTIENERE COLLEGE, FAO, FOOD GRAINS, GANDHI IN SOUTH AFRICA, MUTHURAMALINGA THEVAR, CHILDREN S DAY, SITAR, JAT WAR MEMORIAL RAJAPUTANA RIFLES, SANT TUKDOJI MAHARAJ, GIANI ZAIL SINGH, DURGAH ALA AZARAT, TATA INSTITUE, KASTURBAI GANDHI, SECTIONED HEART, CARDIAC SURGERY, ASIT KUMAR  HALDAR, PRITHIVI THEATRE

–subham—

Tags– Pictures of 2500 Indian Stamps, Part 43, year 1995 , 1994, SATYAJITRAY, BARODA MUSEUM, RIGHT HAND ORNAMENT, GUINDY COLEGE, KING RAJARAJA CHOLA, THANJAVUR TAMIL SEMINAR, 100 YEARS OF CINEMA, YOUTH YEAR, PRITHIVIRAJ KAPOOR, TEXTILE PATTERN, CHOTURAM,K L SAIGAL, R S RUIKAR, RADIO COMMUNICATION,DELHI DEVELOPMENT AUTHORITY, FIFTY YEARS ON UNITED NATIONS, HANDSHAKE, COLLONADE BOOK COVER, BHARTI BHAVAN LIBRARY, ASIAN PACIFIC POSTAL TRAINING, LOUIS PASTEUR, LA MARTIENERE COLLEGE, FAO, FOOD GRAINS, GANDHI IN SOUTH AFRICA, MUTHURAMALINGA THEVAR, CHILDREN S DAY, SITAR, JAT WAR MEMORIAL RAJAPUTANA RIFLES, SANT TUKDOJI MAHARAJ, GIANI ZAIL SINGH, DURGAH ALA AZARAT, TATA INSTITUE, KASTURBAI GANDHI, SECTIONED HEART, CARDIAC SURGERY, SITAR, ROENTGEN,