WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,683
Date uploaded in London – – 23 FEBRUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மஹரிஷி ஔத்தாலகியும் யமலோகம் கண்ட நசிகேதனும்!
ச.நாகராஜன்
யமலோகத்தை நேரில் பார்த்து விட்டு பூமிக்கு யாராவது திரும்பி வர முடியுமா?
முடியும்.
இதை நிரூபித்த ஒரு மஹரிஷி தான் நசிகேதர்.
நசிகேதர் ஔத்தாலகி என்னும் பெரும் தவ வலிமை வாய்ந்தவருடைய மகன்.
ஔத்தாலகி விரத தீக்ஷை எடுத்துக் கொண்டு தன் மகன் நசிகேதனைப் பார்த்து,
‘நீ எனக்குப் பணி விடை செய்’ என்றார். அந்த விரத தீக்ஷை முடிந்தது.
தீக்ஷை முடிந்தவுடன் அவர் தன் மகனைப் பார்த்து, “நான் ஸ்நானத்திலும், வேதாத்யயனத்திலும்,
கவனமாக இருந்ததால், ஸமித்துக்களையும், தர்ப்பங்களையும், புஷ்பங்களையும், ஜலம் நிரம்பிய பாத்திரத்தையும் திருப்பி எடுத்துக் கொண்டு வர மறந்து விட்டேன். ஆகவே நீ ஆற்றங்கரையில் இருக்கும் அவற்றை’ உடனே எடுத்து வா” என்றார்.
நசிகேதனும் உடனே ஆற்றங்கரை நோக்கிக் கிளம்பினார்.
ஆனால் ஆற்றின் வேகத்தினால் அவை எல்லாம் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டிருப்பதைக் கண்டு’ திடுக்கிட்டார்.
திரும்பி வந்து தன் தந்தையிடம், “அவற்றையெல்லாம் அங்கே காணவில்லை” என்றார்.
இதைக் கேட்டு பசியும் தாகமும் கொண்டிருந்த ஔத்தாலகி மஹரிஷி மிகவும் கோபப்பட்டார்.
கோபத்தில், “நீ எமனைப் பார்” என்று கூறி விட்டார்.
இந்த சாபத்தினால் மிகவும் துக்கப்பட்ட நசிகேதர், “தந்தையே! எனக்கு அருள் புரிவீராக” என்று வேண்டினார்.
அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே தரையில் அவர் விழுந்தார்.
அதைக் கண்ட ஔத்தாலகி ‘அடடா! என்ன செய்தேன்’ என்று ஓ வென்று புலம்பினார்.
அந்தப் பகலும் இரவும் கழிந்தன.
அவரது கண்ணீர் தர்ப்பப் படுக்கையில் கிடந்திருந்த நசிகேதர் மீது விழுந்தது.
நசிகேதர் மழையினால் நனைந்த பயிர் போலச் செழித்தார். எழுந்தார்.
துக்கம் தெளிந்து தேவ லோகத்துச் சந்தனம் அணிந்தவர் போல மறுபடியும் உயிர் தந்த
தனது புதல்வரைக் கண்ட ஔத்தாலகி, “மைந்தனே! உனது நற்கருமத்தினால் நல்ல லோகங்கள் ஜெயிக்கப்பட்டனவா? நல்ல வேளை, திரும்பி வந்தாய், உனது தேகம் மானிட தேகமாக இல்லையே!” என்றார்.
இதைக் கேட்ட நசிகேதர் அனைத்து மஹரிஷிகளும் கூடி இருக்க, அங்கே தனக்கு நடந்ததை விவரிக்கலானார் இப்படி:
“ உங்களது கட்டளையை நிறைவேற்றுவதற்காக உடனே யம லோகம் சென்றேன். அங்கே விசாலமானதும் அழகான ஒளியுள்ளதும் ஒரு யோஜனை நீளமுள்ளதுமான பொன் மாடிகள் ஆயிரக்கணக்கில் நிரம்பிய யம ஸபையைக் கண்டேன். நான் வருவதைக் கண்டதும் யமன் என்னை எதிர் கொண்டழைத்து வீட்டை என்னிடம் ஒப்படைத்தான். ஆஸனம் தந்தான். உமக்காக அர்க்கியம் முதலிய பூஜைகளாலும் என்னை அவன் பூஜித்தான்.
யம ஸபையில் உள்ளவர்களால் சூழப்பட்டும் பூஜிக்கப்பட்டுமிருந்த நான் அந்த யமனை நோக்கி, “ தர்மராஜனே! நான் உன் தேசத்திற்கு வந்திருக்கிறேன். நான் எந்த லோகங்களுக்குத் தகுந்தவனோ அவற்றை எனக்குக் காண்பி” என்றேன்.
உடனே யமன். “ ஓ! சாந்தனே! நீ இறந்து போகவில்லை. சிறந்த தவமுடைய உமது தந்தை, ‘யமனைப் பார்’ என்று சொன்னார். அதைப் பொய் ஆக்குவது முடியாது. அன்பனே! நீ என்னைப் பார்த்தாய்! திரும்பிச் செல். உன் தேகத்தை உனக்குத் தந்த உன் தந்தை இப்போது அழுது கொண்டிருக்கிறார். அன்புள்ள விருந்தினனாக, எனக்கு நீ ஆகி விட்டாய். ! நீ வேண்டுவதைக் கேள். தருகிறேன்” என்றான்.
உடனே நான், “திரும்பிச் செல்ல முடியாத உலகத்திற்கு நான் வந்திருக்கிறேன். நான் உன்னிடம் வரம் பெறத் தகுந்தவனாக இருந்தால் வேண்டிய அனைத்தும் நிரம்பிய புண்ய லோகங்களைக் காண விரும்புகிறேன்.
என்றேன்.
உடனே யமன், நல்ல நிறங்கள் கொண்ட ஒளியுள்ள குதிரைகள் பூட்டிய ரதத்தில் என்னை ஏற்றி தன்னுடைய யமலோகம் மற்றும் புண்ய லோகங்களை எனக்குக் காண்பித்தான்.
அந்த உலகங்களில் பல உருவங்களும் நிறங்களும் உள்ளவையும், எல்லா ரத்தினங்கள் பொருந்தியவையும் , சந்திர மண்டலம் போலப் பிரகாசிப்பவையும், சலங்கைகளின் மாலைகள் கட்டப்பட்டவையும் அநேக நூற்றுக்கணக்கான அடுக்கு மாடி கட்டிடங்களையும், உள்ளே வாவிகளும் தோட்டங்களும் அடங்கியவையும், வைடூரியக் கற்களினால் சூரியன் போல விளங்குபவையும், வெள்ளி, பொன்மயமானவையும், இளஞ்சூரியன் நிறம் உள்ளவையும், நிற்பவையும், நடப்பவையும் ஆகிய தேஜோமயமான மஹாத்மாக்களின் வீடுகளைக் கண்டேன்.
அந்த வீடுகளில் மலைகளாகக் குவிந்திருந்த பக்ஷணங்களும், போஜன வகைகளும், ஆடைகளும், படுக்கைகளும், வேண்டிய அளவு கனிகள் தரும் மரங்களும் இருக்கக் கண்டேன்.
நதிகளும், வீதிகளும், குளங்களும், ஸபைகளும், குதிரைகள் பூட்டப்பட்டு ஒலிக்கும் ரதங்களும் ஆயிரக்கணக்கில் எங்கும் இருக்கக் கண்டேன். பால் பெருகும் நதிகளையும் அவை உண்டாகும் மலைகளையும் ,நெய்யையும், தெளிந்த தண்ணீரையும் யமனுக்கு விருப்பமான அநேக இடங்களையும் முன் பாராத மற்றும் பலவற்றையும் கண்டேன். யமனிடம், “என்றும் வற்றாமல் ஓடுகின்ற இந்தப் பாலாறுகளும் நெய்யாறுகளும் யார் புசிப்பதர்காக அமைந்துள்ளன” என்று நான் கேட்டேன்.
உடனே யமன் தானத்தின் பெருமைகளை எனக்குச் சொல்லலானான்.
அதைக் கேட்டு விட்டு அவனிடம் விடை பெற்று இதோ திரும்பி வந்திருக்கிறேன்.”
இவ்வாறு சொன்ன நசிகேதன் தந்தையை வணங்கினான்.
இந்த வரலாற்றில் யமன் நசிகேதனுக்கு பசுக்களைத் தானம் செய்வதால் ஏற்படும் பலன்களை மிக விரிவாகச் சொல்வதைக் காணலாம்.
பசு தானம் செய்ய முடியாதவர்கள் நெய்யைத் தானம் செய்யலாம்.
அது முடியாதவர்கள் எள்ளைத் தானம் செய்யலாம்.
அதுவும் முடியாதவர்கள் ஜலத்தைத் தானம் செய்யலாம்.
இப்படி பல விவரங்கள் மஹாபாரதத்தில் அநுசாஸன பர்வத்தில் நூற்றாறாவது அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது.
இந்த அத்தியாயத்தின் சுருக்கமே இங்கு தரப்பட்டுள்ளது.
tags- tags- நசிகேதன், ஔத்தாலகி,யம லோகம்