தொல்காப்பியரும் மநுவும் சொல்லும் எட்டு வகைத் திருமணங்கள் (Post No.5089)

Written by london swaminathan

 

Date: 8 JUNE 2018

 

Time uploaded in London –  22-09  (British Summer Time)

 

Post No. 5089

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

மநு நீதி நூல்- Part 19

 

மூன்றாம் அத்யாயத் தொடர்ச்சி

தொல்காப்பியரும் மநுவும் சொல்லும் எட்டு வகைத் திருமணங்கள்    (Post No.5089)

 

3-20 இக, பர சௌக்கியங்களைத் தரும் எட்டு வகைத் திருமணங்கள் பற்றிச் சொல்லுவேன்

 

3-21. பிராமம், தெய்வம், ஆருஷம் பிராஜாபத்யம், ஆசுரம், காந்தர்வம், இராட்சஸம், பைசாஸம்,  என எட்டு வகை.

3-22. இவைகளில் உயர்ந்தது எது, தாழ்ந்தது எது என்பதையும் எதனால் பிறந்த பிள்ளைகளில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று கற்பிக்கப்படுகிறது என்பதையும் கேளீர்.

 

3-23. பிராமணனுக்கு பிராமம் முதல் காந்தர்வம் வரை ஆறும், க்ஷத்ரியனுக்கு ஆசுரம் முதல் பைசாசம் வரையுள்ள நான்கும், ஏனைய இரு வகுப்பாருக்கு இராட்சஸம் தவிரவுள்ள ஏனைய மூன்றும் சரியான விவாகங்களாம்.

3-24. இவற்றில் பிராமணனுக்கு பிராமம் முதல் நான்கும், க்ஷத்ரியனுக்கு ராட்சஸமும் , ஏனைய இரு வகுப்பாருக்கு ஆசுரமும் சிறந்தவை.

 

3-25.பிராஜாபத்யம் முதல் பைசாஸம் வரையுள்ள ஐந்தில் மூன்று உயர்வு; பின்னிரண்டு தாழ்வு. பிராமண, க்ஷத்ரியர்களுக்கு ஆசுரம், பைசாசம் இரண்டும் பொருந்தா.

3-26 க்ஷத்ரியனுக்கு காந்தர்வமும் இராக்கதமும் உயர்வாகையால்                  இரண்டையுமோ ஒன்றையோ அவர்கள் ஏற்கலாம்.

 

3-27. வேத வித்தாகவும், நல்லொழுக்கமும் உடைய பிரம்மச்சாரியை வலியச் சென்று அழைத்து புத்தாடை கொடுத்து அலங்கரித்து பெண்ணைக் கொடுப்பது பிரம்ம விவாஹம்

 

3-28. வேள்வித் தீயின் முன்னிலையில் அதைச் செய்யும் புரோகிதனுக்குப் பெண்ணைக் கொடுப்பது தெய்வ மணம்

3-29. பெண்ணுக்கு வரதட்சிணை ( பசுவும் காளை மாடும்) வாங்கிக் கொண்டு ஒருவனுக்கு மணம் புரிவிப்பது ஆருஷம்.

3-30. ஒரு பிரம்மச்சாரியை அழைத்து, மரியாதை செய்து, நீங்கள் இருவரும் அறத்துடன் வாழ்க என்று வாழ்த்திப் பெண்னைக் கொடுப்பது  பிரஜாபத்யத் திருமணம்.

 

3-31. பெண்ணைப் பெற்றவன் சொல்லும் பொருளை எல்லாம் கொடுத்து, பெண்ணை விலைக்கு வாங்கி மணப்பது ஆசுரம் (அசுரத் திருமணம்)

3-32. ஆணும் பெண்ணும் தாங்களாகவே சந்தித்து மனம் ஒருமித்துப் புரியும் திருமணம் காந்தர்வம்

3-33. ஒரு பெண்ணின் உறவினர்களைக் கொன்று பெண்னை வலியக் கடத்திச் சென்று மணம் புரிவது இராக்சஸத் திருமணம்.

3-34. தூக்கத்திலும், மது போதையிலும், பித்துப் பிடித்தும் பெண்ணைப் பறிப்பது தாழ்ந்த முறை.

3-35. நீர் வார்த்துக் கரம் பிடித்துக் கல்யாணம் செய்வது பிராமணர்களுக்கு உகந்தது. மற்றவர்களுக்குத் தேவை இல்லை. அவர்கள் வாயினால் மந்திரம் சொல்லி மணம் புரியலாம்.

3-36. முனிவர்களே, இதுவரை விவாஹ முறைகளைக் கேட்டீர்கள்; இனி அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் குணப் பாகுபாடு பற்றிச் சொல்வேன்

3-37. பிரம்ம விவாகத்தினால் பிறக்கும் சாதுவான பிள்ளையின் மூலம், அவருக்கு முந்தைய  பத்துத் தலைமுறை நரகம் செல்வது தவிர்க்கப்படும்; பின்னால் பிறக்கப்போகும் பத்துத் தலைமுறையினரும் சாதுவான பிள்ளைகளாகப் பிறப்பார்கள்.

3-38. தெய்வ விவாஹத்தில் பிறக்கும் குழந்தைகளின் பின் பிறக்கும் 7 தலைமுறைகள் கடைத்தேறுவர். ஆருஷத் திருமணம் மூலம் பிறக்கும் குழந்தைகளின் முன், பின்னுள்ள மூன்று, மூன்று தலைமுறைகள் பயனடைவர். பிரஜாபா பத்யப் பிள்ளைகளின் முன் ஆறு பின் ஆறு தலை முறைகள் கடைத்தேறுவர்.

 

3-39. பிராமம் முதலான நான்கினால் பிறக்கும் பிள்ளைகளே பிரம்ம தேஜஸ் உடையவர்கள்

3-40.இவர்கள் அழகு, வலிமை, செல்வம், அறம், புகழ், அனுபவம், கவர்ச்சி ஆகியவற்றுட 100 ஆண்டுகள் வாழ்வர்.

 

3-41. ஏனைய நான்கு வகை விவாஹத்தினால் பிறப்போர் பொய், கொலை,சூது வாது, தர்ம/வேத/யாக நிந்தனை உடையோராய் இருப்பர்.

3-42. நல்ல திருமண முறைகளால் பிறப்போர் சாதுக்களாகவும், ஏனைய முறைகளால் பிறப்போர் கெட்ட நடத்தையும் உடையவராய் இருப்பர். ஆகையால் தாழ்ந்த திருமண முறைகளை அணுகக் கூடாது.

 


எனது கருத்துகள்

தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் எண்வகைத் திருமணம் பற்றி வருகிறது. மநு சொன்னதை தொல்காப்பியரும் சொல்லுவதால் இமயம் முதல் குமரி வரை இந்த வழக்கம் இருந்தது தெரிகிறது

 

எட்டு வகை திருமணம்

தொல்காப்பியம் சொல்வதாவது:-

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

காமக்கூட்டம் காணுங்காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே.

தொல்.பொருளதிகாம்– 1038

 

 

 

மேலும் இந்த வகைத் திருமணங்கள் இந்தியாவுக்கு வெளியே இல்லாததால் இந்துக்கள் இங்கேயே பிறந்து வளர்ந்து உருவாக்கிய கலாசாரம் இது என்பது தெரிகிறது; ஒரு இனத்தினர் வெளியிலிருந்து வந்திருந்தால் அங்கே இதன் மிச்ச சொச்சங்களாவது இருந்திருக்கும்.

 

மேலும் இந்த ஸ்லோகங்களில் பத்து தலை முறை, 100 ஆண்டுகள் முதலிய டெஸிமல் (Decimal system) முறைகள் வருவது ரிக்வேத காலம் முதல் உள்ள எண்கள். இதுவும் வெளிநாடுகளில் 2000 ஆண்டுகளுக்கு முன் இல்லை. ஆகவே இந்துக்கள் இந்த நாட்டில் உருவாக்கிய முறையே இவை.

 

முன்காலத்தில் பெண்களுக்கு ஆண்கள் வரதட்சிணை கொடுத்தது சங்கத் தமிழ் இலக்கியத்திலும் உளது.

எட்டு வகைத் திருமணங்களில் சில—- அக நானூற்றுப் பாடல்கள், சிலப்பதிகாரத்தில் தீ வலம் செய்து நடந்த திருமணங்கள், பாரி மகளிரை அசுர முறையில் மூவேந்தர் கவர முயன்றது முதலிய பல வகைத் திருமணங்களில் காண்கிறோம்.

 

அமைதியான முறையில் நடக்கும் கல்யாணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகள் நல்லபடியாக வாழ்வதை இன்றைய உளவியல் நிபுணர்களும் (Psychologists) உறுதி செய்கின்றனர். காதல் திருமணங்கள் மட்டுமே உள்ள வெளிநாடுகளில் உலகிலேயே அதிக அளவு விவாஹ ரத்து இருப்பதையும் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. பெற்றோர்கள் நடத்தி வைக்கும் கல்யாணங்களில் விவாஹ ரத்து குறைவு.

எட்டு வகையான திருமணங்களை அங்கீகரித்தது உலகில் அதிக கருத்து சுதந்திரம் உள்ள அமைப்பு இந்து அமைப்பு என்பதைக் காட்டுகிறது.

 

உலகிலேயே எங்கும் காண முடியாத0—- பெண்களுக்கு அதிக உரிமை தரும்—- ஸ்வயம்வரம் என்பது இந்தியாவில் மட்டுமே இருந்தது. இந்துக்கள் வெளியில் இருந்து வந்திருந்தால் இதன் தாக்கம் அங்கேயும் இருந்திருக்கும். இத்தகைய ஸ்வயம்வரம் புராண இதிஹாச காலத்தில் இந்தியாவில் இருந்தது. வேறு எந்த கலாசாரத்திலும் இல்லை. ஆக இந்த ஸ்லோகங்கள் அனைத்தும் ஆரிய- திராவிட வாதத்துக்கு ஆப்பு வைக்கிறது.

 

-சுபம்-