Written by London swaminathan
Posted in English as well
Post No 964 Dated 8th April
சில வாரங்களுக்கு முன் வட இந்தியாவில் ஒரே பரபரப்பு! உத்தரப் பிரதேசத்தில் ஒரு சாமியாருக்கு கனவு. அந்தக் கனவில் ஒரு ராஜா தோன்றி அவர் ‘டன்’ கணக்கில் தங்கம் புதைத்து வைத்த இடத்தைச் சொல்லிவிட்டார். இதை சாமியாரும் எல்லோருக்கும் அறிவிக்கவே அவருக்கு நெருக்கமான மந்திரி எல்லோரையும் அகழ்வாராய்ச்சிக்கு அனுப்பிவைத்தார். ஆயிரக் கணக்கான மக்கள் கையில் கோடாரி மண் வெட்டிகளுடன் 11 நாட்கள் தோண்டினர். அவருடைய சீடருக்கு இன்னொரு கனவு வரவே அவர் கங்கை நதிக்கரையில் உள்ள வேறு ஒரு இடத்தைச் சொல்லவே அங்கும் தோண்டும் பணி துவங்கியது. தொல்பொருட் துறை, பூகர்ப்பவியல் நிபுணர்கள் எல்லோரும் ‘ஆமாம்சாமி’ போட்டதால் எல்லோருக்கும் நம்பிக்கை வலுத்தது. இறுதில் ஒன்றும் கிடைக்காமல் தங்கம் தேடும் பணியைக் கைவிட்டனர்.
சங்கத் தமிழ் இலக்கியத்தில், தங்கத்தை எங்கே ஒளித்துவைத்து வைத்திருக்கிறார்கள் என்று எழுதிவைக்கப்பட்டுள்ளது.– ஒன்று பாடலிபுத்திரத்தில் கங்கைக்கு அடியில் ஒரு சுரங்கத்தில் பொக்கிஷம், புதையல் வைக்கப்பட்டு இருக்கிறது.– இரண்டு, வேளிரின் பாழியில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது. இது பற்றிய சுவையான செய்தி அகநானூற்றில் இருக்கிறது. அதற்கு முன் காஞ்சி பரமாசார்யார் சொன்ன வேறு ஒரு தங்கப் புதையல் கதையைப் பார்ப்போம்:
வித்யாரண்யருக்கு கிடைத்த தங்கப் புதையல்
சென்னையில் 1957-59–ல் காஞ்சி பரமாசார்யாள் (1894-1994) நடத்திய சொற்பொழிவுகள்:
“வித்தியாரண்யர் ( கி.பி.1331-1386) நான்கு வேதத்துக்கும் சேர்த்து பாஷ்யம் (உரை) பண்ணியிருக்கிறார்……. இவரைப் பற்றி ஒரு கதை சொல்வர். சரித்திரத்தில் இதற்கு ஆதாரம் இருக்கிறதோ என்னவோ? இவர் பிரம்மச்சாரியாக இருந்த காலத்தில் மகாலெட்சுமியைக் குறித்து கடுமையான தபஸ் பண்ணினாராம். ஏகாக்கிர சித்தத்தோடு இவர் பண்ணுகிற தபஸைப் பார்த்து மகாலெட்சுமி பிரத்தியட்சமானாள். இவர் பரம ஏழையாக இருந்தவர். மகாலெட்சுமி, ‘’உனக்கு என்ன வேண்டும்’’ என்று கேட்டபோது, ‘’எனக்கு நிறைய செல்வத்தைக் கொடு; உலகத்தில் யாரிடத்திலும் இல்லாத ஐச்வர்யத்தை எனாக்குக் கொடு’’ என்று இவர் கேட்டாராம். மகாலெட்சுமி, ‘’அப்பா, உனக்கு இந்த ஜன்மத்தில் ஐச்வர்யம் கொடுப்பதற்கு இல்லையே; வேண்டுமானால் அடுத்த ஜன்மாவில் நிறைய ஐச்வர்யத்தை கொடுக்கிறேன்; இந்த ஜன்மாவில் கொடுக்க எனக்கு யோக்கியதை இல்லை’’ என்று சொன்னாளாம்.
அடுத்த ஜன்மாவில் தருகிறேன் என்று சொன்னவுடன் எப்படியாவது ஐச்வர்யத்தைப் பெற்றுவிடவேண்டும் என்று உடனே சந்நியாசம் வாங்கிக்கொண்டு, சந்நியாசம் வாங்கிக் கொண்டால் சாஸ்திரப்படி மறு ஜன்மமாகப் போய்விடாதா? ‘’நான் சந்நியாசம் வாங்கிக்கொண்டு விட்டேன். இப்போது ஐச்வர்யத்தை கொடு’’ என்றாராம். உடனே மகாலெட்சுமியும் சொர்ணத்தை வர்ஷித்தாளாம்.
நிலம் முழுக்க எங்கே பார்த்தாலும் ஒரே தங்கமாகத் தெரிந்தது; இவற்றைப் பார்த்தவுடன் வித்தியாரயர் அழ ஆரம்பித்துவிடாராம். அடடா! என்ன முட்டாள்தனமாகக் கேட்டோம். ஆசிரமம் வாங்கிகொண்டபின் நமக்கு தங்கம் எதற்காக? சந்நியாச ஆஸ்ரமத்தில் இதைத் தொடவும் கூடாதே. கேட்காமல் இருந்திருந்தால் மகாலெட்சுமி அடுத்த ஜன்மத்திலாவது வேண்டிய ஐச்வர்யத்தைக் கொடுப்பாளே. இனி அடுத்த ஜன்மாவிலும் அவள் கொடுக்கமாட்டாள். சந்நியாச ஆஸ்ரமத்தை வாங்கிக் கொண்டுவிட்ட நாம் இப்போது அவள் கொடுத்ததையும் தொட முடியாது என்று அழுதாராம்.
அப்போதுதான் மாலிக்காபூர் தென்னாட்டுக்குப் படையெடுத்டு வந்து, எல்லா ராஜ்யங்களும், எல்லாக் கோயில்களும் சிதறுண்டு போகும்படியாக எல்லாவற்றையும் ரணகளமாகப் பண்ணிவிட்டுப் போயிருந்தான். சரி, இந்த ஐச்வர்யத்தைக் கொண்டு, இவற்றையெல்லாம் ஒழுங்கு செய்வது என்று வித்தியாரண்யர் தீர்மானம் பண்ணிக் கொண்டாராம். ஆடு மேய்க்கிற வனுக்கு குறும்பன் என்று பெயர். அப்போது அங்கே ஹரிஹரன், புக்கன் என்ற இரண்டு பேர் —அண்ணன் தம்பி – ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு குறும்பர்களையும் அழைத்து, அந்த துங்கபத்திரை பிரதேசத்திலேயே, ஒரு ராஜ்யத்தை ஸ்தாபித்து அதற்கு ராஜாக்களாக அவர்களை ஏற்படுத்தினார். அந்த ராஜ்யந்தான் விஜய நகர சாம்ராஜ்யம்”.
மேற்கண்டது ஆசாரிய ஸ்வாமிகள் சென்னை உபந்நியாசங்கள் 1957-59, பாகம் 3-ல் உள்ளது.
தமிழர் கண்ட தங்கப் புதையல்
சங்க கலத்தில் வாழ்ந்த பரணர் என்ற பிராமணப் புலவரும் மாமுலனார் என்ற பிராமணப் புலவரும் ஏராளமான வரலாற்றுச் செய்திகளைப் பாடல்களிலேயே தருகின்றனர். மாமுலனார் வட நாட்டு விஷயங்களை அதிகம் சொல்லுவார். நந்த வம்சம் மற்றும் மௌரியர்கள் பற்றி அவர் பாடுவதைப் பார்க்கையில் அவர் மிகப் பழைய புலவர்களின் பட்டியலில் ஒருவர் என்றே எண்ண வேண்டி இருக்கிறது. அவரும் பரணரும் கூறும் ‘’தங்க’’ விஷயங்களைக் காண்போம்.
தொன்முது வேளிர் பாழியில் குவித்து வைத்த தங்கம் பற்றி பரணர் ( அகநானூறு 258) பாடுகிறார்:
நன்னன் உதியன் அருங்கடிப் பாழி
தொல்முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
பொன்னினும் அருமைநற்கு அறிந்தும், அன்னோள்
துன்னலம் மாதோ எனினும் அஃதுஒல்லாய் —
பொருள்:- அரிய காவலை உடையது நன்னன் உதியன் என்பவனின் பாழிச் சிலம்பு தொன்மை மிக்க வேளிர்கள் தேடி வைத்த பொன் அங்கே பாதுகாவல் செய்து வைக்கப்பட்ள்ளது. அதனைவிட அரியவள் தலைவி என்பதை நீ நன்றாக அறிவாய். அறிந்திருந்தும் அவளை நாம் நெருங்க மாட்டோம் என்று யான் கூறிய பின்னும் என்கூற்றிற்கு உடன்படாது போனாய்……
இதில் தெரிவது என்னவென்றால்
வேளிர்கள் நிறைய தங்கத்தைக் குவித்துவைத்தனர்.
அதற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
அதை அடைவதைவிடக் கடினம் என்னுடைய காதலி.
மாமுலனார் தரும் தகவல் இதை விட வியப்பானது.
புகையின் பொங்கி, வியல்விசும்பு உகந்து
பனிஊர் அழற்கொடி கடுப்பத் தோன்றும்
இமயச் செவ்வரை மானும் கொல்லோ?
பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலி குழீஇக் கங்கை
நீர்முதல் கரந்த நிதியம் கொல்லோ?
எவன்கொல்? வாழி, தோழி !
பொருள்:– தோழி வாழ்க! அகன்ற வானிலே உயர்ந்து எழு புகையினைப் போல் விளங்கிப் பனி தவழும் தீச்சுடரைப் போல் தோன்றும் இமய மலை போன்றதோ! அல்லது பலவகைப் பட்ட புகழும் மிக்க போர் வெல்லும் நந்தர் என்பவரின் சிறந்த பாடலிபுத்திரத்தில் திரண்டிருந்து பின் கங்கையின் நீர் அடியில் மறைந்து போன செல்வமோ! அவ்விரண்டும் இல்லையென்றால் நம்மைவிட்டுப் பிரிந்து போனதற்குக் காரணம் யாதோ!
Gold Coins of Guptas
தலைவி பேசுவது போல அமைந்த இந்தப் பாடலில் நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் பாடலிபுரத்தை ஆண்ட நந்த வம்ச அரசர் கங்கை ஆற்றின் அடியில் சுரங்கம் அமைத்து பெருஞ் செல்வத்தை மறைத்து வைத்திருந்தனர். பின்னர் அது காணாமற் போனதால் குழீஇக் கரந்த நிதியம்’ என்று சொல்லப்பட்டது.
‘’நிதி’’ என்ற சம்ஸ்கிருதச் சொல்— தங்கம், நவரத்னங்கள் போன்ற எல்லாச் செல்வத்தையும் குறிக்கும்.
பாடலிபுத்திரம் என்பது இப்போது பீஹார் மாநிலத் தலை நகரான பாட்னா நகரம் ஆகும்
இதே புலவர் இன்னொரு பாடலில் (அகம் 251) நந்தனின் செல்வம் பற்றிப் பாடுகிறார். இதற்கு உரை எழுதியவர்கள், மஹாபத்ம நந்தன் (கி,மு. 345-329) என்று மன்னர் பெயரையும் குறிப்பிட்டுள்ளனர்.
Picture of Golden Tower of Tirupati Balaji Temple
நாம்படர் கூரும் அருந்துயர் கேட்பின்,
நந்தன் வெறுக்கை எய்தினும் மற்றவண்
தங்கலர் வாழி, தோழி ! வெல்கொடித்
துனைகால் அன்ன புனை தேர்க் கோசர்
தொல் மூதாலத்து அரும்பணைப் பொதியில்…………….
பொருள்: தோழி, வாழ்வாயாக! வெற்றிச் சிறப்புமிக்க கொடியினையும் காற்றைப் போன்று வேகமான அலங்கரிக்கப்பட்ட தேரினையும் உடையவர்கள் கோசர்கள். அவர்கள் பகைத்து எழுந்தனர். பழைய ஆலமரத்தின் கிளைகளுக்கு அடியில் போர் முரசங்களைக் குறுந்தடியினால் அடிக்கின்றனர். மகாபத்ம நந்தன் என்னும் பாடலிபுத்திரத்து மன்னனுடைய செல்வத்தையே அவர் பெற்றாரெனினும் அதற்கு மகிழ்ந்து அங்கேயே தங்கிவிடுபவர் அல்லர் ( என் காதலர்).
2000 ஆண்டுகளுக்கு முன்னர். கங்கை நதி, பாட்னா நகரம், நந்த வம்சம், மௌரிய மன்னர்கள் ஆகியோர் பற்றி நம் புலவர்கள் பாடியது மிகவும் வியப்பான விஷயம். தமிழர்கள் போரின் பொருட்டும், வணிகத்தின் பொருட்டும் கங்கை நதி, இமயம் வரை சென்றதையும் இதில் அறிகிறோம். நந்தர்களின் செல்வம் குறித்தும் அறிகிறோம். அவர்கள் புகழ் தென்னாடு வரை பரவி இருந்தது.
இப்பொழுது கங்கை நதிக்கடியில் சுரங்கத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது ‘’வைக்கற்போரில் ஊசியைத் தேடியது போலாகும்’’. அந்த செல்வமும், தமிழர்கள் பாழியிலும் மறைத்து வைத்த செல்வமும் யார் கையில் போய்ச் சேர்ந்ததோ? மாலிக்காபூர் தென்னகக் கோவில்களில் இருந்து ‘’டன்’’ கணக்கில் தங்கம் கொண்டு சென்றதை வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர்.
contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.