தொல்காப்பியம் பெரிய நூலாக மலர்ந்து விரிந்தது எப்படி? ஒரு சுவையான கதை

கி.வா.ஜ

Article No.1974

Date: 5  July 2015

Written by London swaminathan

Uploaded from London at 7- 39

இலங்கையிலுள்ள மட்டக்கிளப்பு, புளியநகர் க.பூபால பிள்ளை 1920 ஆம் ஆண்டில் எழுதிய தமிழ் வரலாறு என்னும் நூலில் காணப்படும் செய்தி:

“தொல்காப்பியர் அல்லது திருணதூமாக்கினி என்பவர், அகத்தியர் மாணாக்கருள் முதன்மை பெற்று

விளங்கினர். இவர் இயற்றி தம் பெயர் நிறுத்திய தொல்காப்பியமென்னும் இலக்கணம் அஞ்ஞான்றார் யாவராலும் மிக்க விருப்புடன் கையாடப்பட்டு வந்தமையால் பலவிடங்களில் பரந்து னிலைத்தழிந்த மற்றைய நூல்கள் போல் அழியாமல் நிலைபெற்றது. இந்நூல் முத்தமிழியல் விரிக்கும் அகத்தியம் போன்று துறை விரித்தகலாமல் ஓதுவார்க்கெளிதில் அமைவர இயற்றப்பட்டு இலக்கணத்தை வரிசையிற் சுருக்கிக் காட்டும் பெருஞ் சிறப்பினையுடையது.

அந்நாட்களில் யாரொருவர் எந்த நூலை இயற்றினும் அதனைச் சங்கத்தில் அரங்கேற்றினாலன்றியும் பிறர் ஒப்புக்கொள்வதில்லை. அகத்தியர் இத்தொல்காப்பியத்தை அரங்கேற்றவிடாமல் பலவழியாலும் தடை செய்தனர். தொல்காப்பியருக் கீடாக கல்வித் திறமையும் அவர் மாட்டுப் பேரன்புமுடைய அதங்கோட்டாசான் என்பவரை இந்நூல் அரங்கேற்றத்திற்குச் செல்லாதிருக்கும்படி அகத்தியர் தடுத்தும் அவர் அமையாமல் தொல்காப்பியர் கேள்விப்படி சபைக்குச் சென்றிருந்து தம்மாசிரியராகிய அகத்தியர் மனங் களிப்ப ஆக்ஷேபணை செய்பவர் போலப் பற்பல வினாக்களையும் பொறித்து நண்பனுடைய நூலின் பெருமையை வியக்காமல் வியந்து விளங்கவைத்தனர்.

இந்நூலின்கண் ஆதியிலமைந்த சூத்திரங்களின் எண்ணிக்கை அறுநூறு. அதங்கோட்டாசனார் ஆசங்கித்துக் கடாவக் கடாவத் தொல்காப்பியர் முறையே விடைகளாக விளக்கியிருந்த புதிய சூத்திரங்கள் ஓராயிரத்தின் மேற்றிரண்டு என நூல் மிகவும் விரிந்தது.

நிலந்தருதிருவிற் பாண்டியன் சபையிலே அதங்கோட்டாசான் முன்னிலையில் இந்நூல் அரங்கேறியதாக பனம்பாரன் கொடுத்த சிறப்புப் பாயிரத்தால் விளங்கும். நிலந்தருதிருவிற் பாண்டியன் அரசுபுரிந்த காலம் எண்ணாயிரம் வருஷங்களின் முன்னாதலின் இந்நூல் வயதும் அத்துணைத்தென்க.

நச்சி

அகத்தியர் இந்நூலை வெறுத்தற் கிருந்த நியாயம், யாண்டுந் தலைமை பெருமை பெற்று விளங்கிய தமது அகத்தியத்தின் மகத்துவங் குன்றிவிடுமென் றெழுந்த ஐயத்தானும், பொறாமை யினானுமென்று சிலர் கூறுவர். மற்றுமோர் நியாயம், அகத்தியர் தாம் வதுவை செய்துகொண்ட லோபாமுத்திரையைத் தம்முட  னழைத்துச் செல்லாமல் தம்பின் வரும்படி கட்டளையிட்டுத் தாம் பொதிய மலைக்கு முந்திச் சென்றனெ ரென்றும் பின்னர் வந்த லோபாமுத்திரையுந் தொல்காப்பியரும் செல்வழியில் வையையாற்றைத் தாண்டும் பொழுது வெள்ளம் பெருக்கெடுத்தலும் லோபாமுத்திரை தயங்கித் தத்தளிக்க அதனைக் கண்ணுற்ற தொல்காப்பியர் குரு பத்தினியைத் தீண்டுவது தோஷமென்றெண்ணி ஒரு மூங்கில் கோலை அவள் பற்றும்படி கொடுத்துக் கரைசேர்த்துக் கொடுபோய் குரவரிடம் ஒப்புவித்தாரென்றும், அச்சமாசாரத்தை அகத்தியர் உள்ளது உண்மையை உணர்ந்து கொள்ளாமல் பேதுற நினைந்து கோபவயத்தாற் தொல்காப்பியரை நோக்கி உனக்கு முத்தி கெட்டாதொழியக் கடவதென்று சபிக்க, தொல்காப்பியர் மனங்கொதித்தும், குருவாதலின் அவரை நிந்திக்காமல், அவர் இயற்றிய அகத்தியம் வழங்காதொழியக் கடவதென்று எதிர்ச் சாபமிட்டனரென்றும், அதுமுதல் அவர் இருவர்க்குமிடையே பகை நேர்ந்திருந்ததென்றும் நச்சினார்க்கினியர் கூறுவர். இவர் கூற்று உண்மையென்று கொள்ளற்கேற்ற தடயங்கள் கானப்படவில்லையென்று அவருக்குப் பிந்திய காலத்தில் தோன்றியர் சிலர் சாதிக்கின்றனர்.”